விபி-கிராம்-ஜியும் வளர்ந்த பாரதமும்

$articleData->title

விபி-கிராம்-ஜி சட்டம்

ரு உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. விபி-கிராம்-ஜி சட்டம் நிறைவேற்றுவது தொடர்பாக மாநில அரசுகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் ஒன்றிய அரசு கலந்தாலோசித்து கருத்துகளை கேட்டு அதனடிப்படையில்தான் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆங்கில இந்து நாளேட்டில் டிசம்பர் 24 அன்று கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில், அவர் குறிப்பிட்ட அந்த உரையாடல்கள், கூட்டக் குறிப்புகள் இவற்றை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தர வேண்டுமென்று சமூக ஆர்வலர் திரு சக்ராதர் புத்தா  கேட்டிருந்தார். அந்தத் தகவல்களை தரமுடியாது என்று ஒன்றிய அரசு மறுத்துள்ளது. இந்தச் செய்தி, 26-02-2026 நாளிட்ட அதே ஆங்கில ஏட்டில் வெளிவந்துள்ளது. அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள காரணம், புதிய சட்டம் இன்னும் எந்த மாநிலத்திலும்\யூனியன் பிரதேசத்திலும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அதற்கான விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்படும் விவரங்களை வெளியிடுவது சரியாக இருக்காது என்று கூறுகிறது. புதிய சட்டம் இயற்றுவதற்கு முன்பு நடந்த தகவல் பரிமாற்றங்களைதான் அந்த சமூக ஆர்வலர் கேட்டிருக்கிறார். புதிய சட்டம் செயல்படுத்துவதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதை காரணம் காட்டி எப்படி அதை மறுக்க முடியும்? மோசடி ஒன்றிய அரசு, சவுகானை காப்பாற்றுவதாக நினைத்து அவரையே காட்டிக் கொடுத்து விட்டது என்றே கூறமுடியும். உறைக்குள் இருந்த உண்மையை ஊருக்கு நடுவே உளறிவிட்டது என்றே தோன்றுகிறது.

இதில் கோடான கோடி கிராமப்புர ஏழைகளுக்கு மிகவும் கவலைக்குரிய செய்தி, பழைய சட்டம் கொல்லப்பட்டு விட்டது. புதிய சட்டம் எழுந்து நடக்க வில்லை. படுத்த படுக்கையாக கிடக்கிறது. டிசம்பர் 18 அன்று நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு டிசம்பர் 20 அன்றே ஜனாதிபதி முர்மு ஒப்புதல் வழங்கிவிட்டார். ஆனால் அது எப்போது செயலுக்கு வரும்? ஏழைகளுக்கு வேலை கிடைக்கும் என்பதை அரசு இன்னும் அறிவிக்கவில்லை. நிதி ஆண்டு, மார்ச் 31 ல் முடிவடைகிறது. புதிய சட்டம், ஏப்ரல் 1லிருந்து நடைமுறைக்கு வரும் என்ற உறுதியையும் இன்னும் மோடி அரசாங்கம் வழங்கவில்லை. மாநில அரசுகள் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆறு மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளலாம் என்று இருப்பதால் செப்டம்பர் வரை திட்டம் செயலுக்கு வருமா என்பது கேள்விக்குறியே! ஆக மோடியின் ‘தாரக மந்திரம்’, முதல் பக்க விளம்பரம் செய்தாலும் 125 நாள் கிராமப்புர வேலைத் திட்டம் திரிசங்கு சொர்க்கத்தில் இருப்பதாகவேப்படுகிறது.

ஆனால், அதற்குள்ளாகவே குருமூர்த்தியின் துக்ளக், இந்தச் சட்டத்தை வானளாவ புகழ்ந்து கட்டுக்கதை எழுதியுள்ளது. ‘’போலி காந்திகளின் வெற்று அரசியல்’’ என தலைப்பிட்டு 14-01-2026 நாளிட்ட துக்ளக், தலையங்கம் தீட்டியுள்ளது. மோடி ஆட்சி கடந்த 11 ஆண்டுகளில் கிராமப்புர மக்களுக்கு நேரடியாக ரூ.44 லட்சம் கோடியை கொண்டு சேர்த்திருப்பதாகவும் அதனால் “கிராமப்புர பொருளாதாரம் அடியோடு மாறிவிட்டதாகவும் அதைப் பார்த்து உலகமே மூக்கில் விரலை வைப்பதாகவும்” குருமூர்த்தி எழுதுகிறார். ஒரு ஆண்டில், பணமாக ரூ.6.7 லட்சம் கோடியும் இலவச தானியம் மூலமாக ரூ.1.6 லட்சம் கோடியும் மொத்தமாக ரூ. 8.3 லட்சம் கோடி கிடைத்திருப்பதாகவும் சொல்கிறார். மேலே சொன்ன (ரூ.44 லட்சம் கோடி) கணக்குப்படி ஆண்டுக்கு ரூ.4 லட்சம் கோடிதான் வருகிறது. ஆனாலும் ஆண்டுகளுக்கு ரூ.8.3 லட்சம் கோடி கிடைத்து விட்டதாக கணக்கு சொல்கிறார் குருமூர்த்தி! கூடுதலாக ரூ.4.3 லட்சம் கோடி எப்படி வருகிறது என்பதை விளக்குவதற்கு அவர் கவலைப்படவில்லை. ஆடிட்டர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள்போலும்! மேலும் அவர் கூறும்போது, 2025-26 ல் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின் மூலம் ரூ. 86,000 கோடி மட்டுமே கிடைத்திருக்கிறது. ஆனால் மோடியின் திட்டங்களால் இதைவிட 10 மடங்கு கூடுதலாக (ரூ.8.3 லட்சம் கோடி) கிடைத்துள்ளதாகவும் வாதாடுகிறார். ஆக, அவர் சொல்லாமல் சொல்லும் கருத்து, “என்றும் இல்லாதவகையில் கிராமப்புர மக்களின் கைகளில் லட்சக்கணக்கான கோடி ரொக்கம் இருக்கும்போது” எதற்கு இந்த கிராமப்புர வேலை உறுதிச் சட்டம்? இதைத்தான் 2014 லிலேயே மோடி சொன்னார். 2026ல் குருமூர்த்தி சொல்கிறார்.

துக்ளக்கிற்கு சில கேள்விகள்

கேள்விகள் கேட்பதற்கு முன்னால் சில விவரங்கள். 2006-2007 முதல் 2024-25 வரை, கடந்த 19 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் மூலம் 1,150 கோடி மனித நாட்கள் வேலை உருவாக்கப்பட்டுள்ளது. இது தேசிய அளவில் 14%. இதுவரை 9.9 கோடி குடும்பங்களிலிருந்து 15.8 கோடி கிராமப்புர தொழிலாளர் வேலை செய்துள்ளனர். ஆண்டுக்கு சராசரியாக ரூ. 10000 ஈட்டியுள்ளர். அகில இந்திய அளவில் ஒப்பிட்டால்  பெண்கள் 58% வேலை செய்துள்ளனர். தமிழ்நாடு அளவில் பார்த்தால் 85%. தாழ்த்தப்பட்ட மக்கள் 30%. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டம் மூலம் 2025வரை ரூ.1.27 லட்சம் கோடி  செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு தொடர்ந்து முதல் இரண்டு இடங்களில் உள்ளது.

இத் திட்டம் செயல்படுத்தப்பட்டதன் விளைவாக சில தொடக்க கட்ட சமூக விளைவுகள் ஏற்பட்டுள்ளன. பெண்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பெண்கள் கைகளில் காசு புழக்கமும் அவர்கள் சொல்வது கேட்கப்படுவதும் அதிகரித்துள்ளது. கூலியில் பேரம் பேசுவதும் கூட அதிகரித்துள்ளது. இது, பொருளாதார குடியுரிமை என்றும் கூறப்படுகிறது. சாதி, ஆணாதிக்க இறுக்கங்களும் சற்றே தளர்ந்துள்ளன.

கிராமப்புர தமிழ்நாட்டின் மற்றொரு பக்கத்தை, குருமூர்த்தி பார்க்க மறுக்கும் பக்கத்தை பார்க்க வேண்டும். 2006-2007 முதல் 2024-25 வரை நுண்கடன் நிறுவனங்கள் ரூ. 3.5 லட்சம் கோடி கடன் கொடுத்துள்ளன. இது ஊரக வேலைத் திட்ட நிதியைவிட 2.5 மடங்கு அதிகம். தமிழ்நாட்டில் 65%க்கும் மேற்பட்ட கிராமப்புர குடும்பங்கள் நுண்கடன் வாங்கியுள்ளன. கடன் பெற்ற  இவர்கள் திருப்பிச் செலுத்தும் தொகை ரூ. 5 லட்சம் கோடி. இந்த நிறுவனங்கள் 26% வரை வட்டி வசூலிக்கின்றன.

குருமூர்த்தி சொல்லும் 4 லட்சம் கோடி கணக்குப்படி பார்த்தால் தமிழ்நாட்டிலுள்ள ஒரு கிராமப்புர குடும்பத்திற்கு ஒன்றிய அரசிடமிருந்து சராசரியாக ஆண்டுக்கு ரூ. 16000 முதல் ரூ.20000 வந்து சேர்கிறது. ஆனால் கிராமப்புர குடும்பத்தின் ஆண்டு கடன் தொகை ரூ. 87000. இந்தக் கடன் தொகை ஒன்றிய, மாநில அரசுகள் செலவு செய்யும் தொகையை விட 4-5 மடங்கு அதிகம். தேசிய ஊரக வேலைத்திட்ட நிதி ஒதுக்கீட்டை விட 8-9 மடங்கு அதிகம். நுண்கடன் நிறுவனங்களிடம் பெறும் ஒரு ரூபாய்க்கு நான்கு ரூபாய் திருப்பித்தந்து கொண்டிருக்கிறார்கள். மொத்தமுள்ள கிராமப்புர குடும்பத்திற்கும் கணக்கிட்டால் ரூ. 6.256 லட்சம் கோடி வெளியேறுகிறது. கிராமப்புர மக்கள் கைகளில் “லட்சக்கணக்கான கோடி ரொக்கம் இருக்கிறது” என்று சொல்கிறாரே குருமூர்த்தி, அந்தப் பணம் எங்கே போனது? யாரிடம் சென்றது? மோடி ஆட்சியில், 11 ஆண்டுகளில் இவ்வளவு பணம் கொட்டப்பட்டும் ஏன் கிராமப்புர ஏழைகள் சொல்லொணா துயரத்தில்,  கடன் சங்கிலியில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர்? ஓரளவு பொருளாதார உரிமை பெற்றிருந்த கிராமப்புர ஏழைகள் நிதி மூலதன சங்கிலியால் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள் ஏன்? குழுக் கடன் கட்டுவதற்காகவே தேசிய ஊரக வேலைத்திட்டத்தை எதிர்பார்த்து நிற்கிறார்கள் எதனால்? மோடி கொடுப்பதாக சொல்லும் லட்சக் கணக்கான கோடி பணம் கிராமப்புர மக்கள் கொட்டிக் கொடுக்கும் பல லட்சம் கோடி வட்டியாக தனியார் நிதி மூலதனத்தை கொழுக்க வைப்பது குருமூர்த்திக்கு தெரியுமா? தெரியாதா? இதுதான் வளர்ந்த பாரதமா? குரூமூர்த்தியின் எஜமானர்கள் மோடி-அமித்ஷாவும், அதானி-அம்பானிகளும்தான் சொல்ல வேண்டும்.

08 March, 2026