வெனிசுலா மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்! ஜனவரி 3 அன்று அதிகாலையில், ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழுள்ள அமெரிக்கா, வெனிசுலா மக்களுக்கு எதிராக ஒரு கிரிமினல் ஆக்கிரமிப்புப் போரைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. தலைநகர் கராகஸைக் குறிவைத்து கொடூரமான குண்டுவீச்சும் இராணுவப் படையெடுப்பும் நடத்தப்பட்டதை செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு வெனிசுலாவிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதாக டொனால்ட் ட்ரம்ப்பின் சமூக ஊடகப் பதிவு ஒன்று தெரிவிக்கிறது.
இந்தப் போர் வெனிசுலாவிற்கு எதிரானது மட்டுமல்ல; ஏகாதிபத்தியக் கட்டளைகளிலிருந்து விடுபட்டு தங்கள் சொந்த எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போராடும், இப்பிராந்தியத்திலும் உலகெங்கிலும் உள்ள எல்லா மக்களுக்கும் எதிரான ஒரு வெளிப்படையான அச்சுறுத்தலாகும்.
ஈராக் மீதான படையெடுப்பை, அதன் எண்ணெய் வளத்தை கைப்பற்றியதை, அதன் மக்களை கொன்று குவித்ததை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட அதே பொய்கள், இப்போது உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்ட நாடான வெனிசுலாவைக் கொள்ளையடிப்பதற்கும் அதிபர் மதுரோவுக்கு எதிரான ஆட்சி மாற்ற நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்கும் "போதைப்பொருள் பயங்கரவாதம்" என்று அழைப்பதன் மூலம் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
வெனிசுலா மக்கள் மீதான ட்ரம்ப்பின் போர், அமெரிக்க ஆதரவு காலனிய கட்டளையைத் திணிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்க ஆதரவு கைக்கூலிகளின் ஆட்சியைத் தூக்கியெறிந்து, நாட்டின் எண்ணெய் வளத்தை மக்களிடம் திருப்பிக் கொடுத்த பொலிவேரியப் புரட்சியை நசுக்க இது முயல்கிறது. இப்போர், அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள் வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கும், ஏகாதிபத்திய நலன்களுக்குச் சேவை செய்ய ஒரு கைப்பொம்மை அரசாங்கத்தை நிறுவுவதற்குமானது.
இந்தப் போர், லத்தீன் அமெரிக்கா, கரீபியன் தீவுகள் முழுவதும் தேர்தல்களில் தில்லுமுல்லு செய்தல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கவிழ்த்தல், மக்கள் இயக்கங்களை ஒடுக்குதல், இரத்தக்களரியைக் கட்டவிழ்த்துவிட்டு பேரழிவை உண்டாக்குதல் ஆகிய இரத்தக்களரி மிகுந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு வரலாற்றின் அண்மைய அத்தியாயமாகும். குவாதமாலா முதல் சிலி வரை, கிரெனடா முதல் பனாமா வரை, லத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தைத் தனது "சொந்தக் கொல்லைப்புறமாக" கருதும், ட்ரம்ப் வலுப்படுத்த முயலும் - அமெரிக்காவின் 'மன்ரோ கோட்பாடு' எப்போதும் அடக்குமுறை, சுரண்டல், ஒடுக்குமுறை ஆகியவற்றையே குறிக்கிறது. இது அப்பிராந்திய மக்களின் இறையாளுமை மற்றும் சுயநிர்ணய உரிமையை மறுக்கிறது.
ஏகாதிபத்தியத் தலையீட்டிலிருந்து விடுபட்டு, தங்கள் இறையாளுமையைப் பாதுகாக்கவும் தங்கள் சொந்த அரசியல், பொருளாதாரப் பாதையைத் தீர்மானிப்பதற்கான உரிமையைப் பாதுகாக்கவும் போராடும் வெனிசுலா மக்களுடன் உறுதியான தோழமையுடன் துணை நிற்போம்.
இந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கும், ட்ரம்ப் ஆட்சியின் கீழ் புதிய காலனிய அடிமைத்தன ஒழுங்கைத் திணிப்பதற்கான முயற்சிகளுக்கும் எதிராக அணிதிரளுமாறு உலகெங்கிலும் உள்ள அனைத்து ஜனநாயக மற்றும் அமைதியை விரும்பும் சக்திகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.
மத்தியக் குழு,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன்
