மோடி ஆட்சி கொண்டுவந்துள்ள வி பி கிராம் ஜி சட்டம் வேண்டாம், பழைய ம.கா.தே.ஊ.வே.உறுதிச் சட்டமே வேண்டும் என்று கோரி 2026 ஜனவரி 23 அன்று மயிலாடுதுறையில் அனைத்திந்திய விவசாய கிராமப்புர தொழிலாளர் சங்கமும், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகமும் இணைந்து பெருந்திரள் கருத்தரங்கத்தை நடத்தியது.
பெரும் எண்ணிக்கையில் கிராமப்புர தொழிலாளர் நிறைந்த, தீவிரமான வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடும் காவிரி சமவெளிப்பகுதியான மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களிலிருந்து பெண் தொழிலாளர் கலந்து கொண்டனர்.
சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் என்.குணசேகரன் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் மாநிலத்தின் வேறு பல மாவட்டங்களிலிருந்தும் கிராமப்புர தொழிலாளர் முன்னணிகள் கலந்து கொண்டனர். அவிகிதொச அகில இந்திய தலைவரும் பீகார் சட்டப்பேரவை மேனாள் உறுப்பினருமான தோழர் சத்யதேவ் ராம், அகில இந்திய பொதுச் செயலாளர் திரேந்தர் ஜா, மாநிலத் தலைவர் தோழர் பாலசுந்தரம், இகக (மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வீ.சங்கர், மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். கருத்தரங்கின் துவக்கத்தில், கட்சியின் நீண்டகால முன்னணி ஊழியர்களுள் ஒருவரும் ஏஅய்சிசிடியு தலைவர்களுள் ஒருவருமான தோழர் அந்தோணிராஜ், தோழர் மகேந்திரன் (புதுக்கோட்டை), ஜவகர் (சென்னை) மறைவுக்கு கூட்டம் அஞ்சலி செலுத்தியது. 1982, இந்தியாவின் முதல் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் தியாகிகளான அஞ்சான் , நாகூரான் , ஞானசேகரன் உள்ளிட்டோரையும் மொழிப்போர் தியாகிகளையும் கூட்டம் நினைவு கூர்ந்தது.
கருத்தரங்கின் முதல் நிகழ்வாக, சங்கத்தின் மத்திய அமைப்பு வெளியிட்டிருந்த, விபி-கிராம்-ஜி சட்டம் வேண்டாம், வேலை உரிமை வேண்டும் என்ற வெளியீட்டின் தமிழ்ப் பதிப்பை அ. இ. தலைவர் சத்யதேவ்ராம் வெளியிட கள்ளக்குறிச்சி இகக (மா லெ) மாவட்டச் செயலாளர் கலியமூர்த்தி பெற்று கொண்டார்.
கருத்தரங்கில் பேசிய மாநிலத் தலைவர் தோழர் பாலசுந்தரம், நாட்டின் ஏழைகள், கிராமப்புர வறியவர்கள் மீது மோடி அரசு நேரடியாக போர் தொடுத்துள்ளது. அந்தப் போரை நாம் நேருக்கு நேர் எதிர்கொண்டாக வேண்டும். மோடி ஆட்சிக்கு பாடம் புகட்டியாக வேண்டுமென்று கூறினார்.
இந்த தொழிலாளர் விரோத சட்டத்தை எதிர்த்து முதலில் நாம்தான் குரல் கொடுத்தோம். அதன் விளைவாக டிசம்பர் 24 அன்று இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தின. நாம் தொடர்ந்து போராடியாக வேண்டும் என்றார்.
கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பேசும் போது, அவிகிதொசவும், கட்சியும் விபி-கிராம்-ஜி சட்டத்திற்கு எதிராக, திமுக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென ஈ-மெயில் இயக்கம் நடத்தியது. அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது போதாது. தெருவெங்கும் ஊர்தோறும், நாம் வலுவான இயக்கம் நடத்தியதாக வேண்டும். மோடியை பின்னுக்குத் தள்ளும் வரை ஓயக்கூடாது என்று வலியுறுத்தினார்.
இறுதியாக பேசிய சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் திரேந்தர், பெண்கள் விரோத, தலித், பழங்குடி விரோத, மாற்றுத்திறனாளிகள் விரோத இந்தச் சட்டம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானது. பழைய சட்டத்தில் இருந்த சட்டப்படி வேலை பெறும் உரிமையை பறிக்கிற வி. பி. கிராம் ஜி சட்டத்தை எதிர்த்து வீடுகளில் தொடங்கி கிராமம், ஊராட்சி, ஒன்றியம், மாவட்டம், மாநிலம் என இந்தியா முழுவதும் ஒன்றுபட்டு போராடி இந்தச் சட்டத்தை முறியடிக்க வேண்டும் என்று கூறினார்.
இந்தக் கருத்தரங்கில் பெரும்பகுதி பெண்கள் கலந்திருப்பது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தருகிறது. நாடெங்கும் பெண்கள் போராட்ட சக்தியாக எழுந்து வருகிறார்கள்.
அனைவருக்கும் வீடு, வீட்டு மனை, கடன் தள்ளுபடி, வேலைவாய்ப்பு அடிப்படை உரிமை, கட்டணமில்லாக் கல்வி, தரமான கட்டணமில்லா மருத்துவம் ஆகிய 5 அடிப்படை கோரிக்கைகளுக்காக போராட வேண்டும்.
கிராமப்புர வறியவர்கள் அனைவருக்கும் சமத்துவம், ஜனநாயகம் கிடைக்க வேண்டும்.
இவற்றை உறுதிபடுத்திட வேண்டி ஊராட்சி தொடங்கி மாநிலந்தழுவிய, நாடு தழுவிய இயக்கங்களை நடத்த அழைப்பு விடுத்தார்.
இறுதியாக தோழர் இளங்கோவன் தீர்மானங்களை முன்மொழிய அவை அரங்கின் பலத்த கரவொலியோடு நிறைவேறின.
அடுத்தநாள் விரிவடைந்த மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கொடூரமான தாக்குதலை எதிர்கொள்ள விரிவான, பலமான அமைப்பு வேண்டும். மாற்றுவழி ஏதுமில்லை. விரிவான மக்களிடம் செல்ல விரிவான ஊராட்சிகளுக்கு செல்ல வேண்டும். ஏராளமான ஒன்றியங்களுக்குச் செல்ல வேண்டும். தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டும். இம்முறை, 5 லட்சம் உறுப்பினர் எண்ணிக்கையை சாதித்துக் காட்ட வேண்டும்.
ஊராட்சி, ஒன்றிய, மாவட்ட, மாநில மாநாடுகளை வெற்றிகரமாக முடித்து இந்த ஆண்டு நவம்பரில் ஜார்கண்டில் நடைபெறவுள்ள அகில இந்திய மாநாட்டுக்குத் தயாராவது என்று கூட்டம் முடிவு செய்தது. மேலும் பிப்ரவரியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தொகுதி அரசியல் அணிதிரட்டலில் அவிகிதொச, பெண்கள் கழக அணி திரட்டல் பெரும்பான்மையாக இருக்கப் பாடுபடுவதென்றும் கூட்டம் முடிவு செய்தது.
பெருந்திரள் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
பிப்ரவரி 12 அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம்!
கிராமப்புர தொழிலாளர் விரோத விபி - கிராம் - ஜி சட்டம், தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகள், விவசாயிகள் விரோத விதைகள் சட்டம் 2025, நாட்டு வளங்கள் அனைத்தையும் அதானி, அம்பானி போன்ற பெருங்குழும முதலாளிகளிடம் ஒப்படைக்கும் வகையில் மின்சார திருத்தச் சட்டம் 2025, அணுமின்சார உற்பத்தியை தனியாரிடம் ஒப்படைக்கும் சட்டம் உள்ளிட்ட அடுக்கடுக்கான மக்கள் விரோத சட்டங்களை மோடி அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. இவற்றின் மூலம், மக்களின் வாழ்வாதாரம், நாட்டின் அரசமைப்புச் சட்டம், ஜனநாயகம் அனைத்தையும் ஒழித்துக் கட்ட முனையும் பாசிச மோடி ஆட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் தொழிற்சங்கங்கள், விவசாய தொழிலாளர் அமைப்புகள், விவசாயிகள் அமைப்புகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ள பிப்ரவரி 12 வேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வது என அவிகிதொச, அஇமுபெக நடத்தும் இக் கருத்தரங்கம் முடிவு செய்கிறது. 1982 பொது வேலைநிறுத்தத்தில் தியாகிகளான தோழர்கள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் போராட்ட மரபின் தொடர்ச்சியாக கிராமப்புர தொழிலாளர் இந்த வேலைநிறுத்தத்தில் முன்னணியில் நின்று வெற்றி பெறச் செய்வதென உறுதி ஏற்கிறது. அனைத்து தரப்பு மக்களும் பங்கெடுக்க கருத்தரங்கம் அழைப்பு விடுக்கிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்
இருபது ஆண்டுகளாக கிராமப்புர வறிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்த, கொரோனா போன்ற துயரமான சமயங்களில் பசி போக்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை ஒழித்துக் கட்ட மோடி ஆட்சி விபி-கிராம்-ஜி என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இச்சட்டத்தை முழுவதுமாக இக்கருத்தரங்கம் நிராகரிக்கிறது. பழைய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை, மேம்படுத்தி - 200 நாள்கள் வேலை, 700 ரூபாய் நாட்கூலியும், விவசாயத்துக்கும் பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்தியும் - மீண்டும் சட்டமாக்க வேண்டுமென கருத்தரங்கம் வலியுறுத்துகிறது. இந்தக் கோரிக்கை நிறைவேறும் வரை, ஊராட்சி தொடங்கி ஒன்றியம், மாவட்டம், மாநிலம் வரை தொடர் பரப்புரை, கிளர்ச்சிகளை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வீட்டுமனை, வீடு உரிமையை அடிப்படை உரிமையாக்கி சட்டமியற்ற வேண்டும்
தமிழ்நாடு முழுவதும் கிராமப்புர மக்கள் வீட்டுமனை, வீடு கேட்டு நடத்தும் போராட்டத்தை அவிகிதொச நடத்தி வருகிறது. நாடுமுழுவதும் உள்ள கிராமப்புர மக்களின் வீட்டுமனை, வீடு உரிமையை அடிப்படை உரிமையாக்கி ஒன்றிய மோடி அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டுமென வலியுறுத்தி தொடர் இயக்கம் நடத்த கருத்தரங்கம் முடிவு செய்கிறது.
நாடு முழுவதும் குறைந்தபட்ச கூலிச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்
கிராமப்புர விவசாய வேலைவாய்ப்பு சுருங்கி வரும் நிலையில், வெவ்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு கூலி நிலைமையும் பெண்களுக்கு மிக குறைவான கூலியும் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மிக மோசமாக பாதிக்கிறது. மிகக் கடுமையான ஏற்றத்தாழ்வை உருவாக்கி வருகிறது. விவசாய, கிராமப்புர தொழிலாளர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் ஒன்றிய அரசாங்கம், நாடுமுழுவதும் தற்போதுள்ள நிலைமையில் குறைந்தபட்ச நாள் கூலி ரூ 700 ஆக அறிவித்து செயல்படுத்திட வேண்டும். அவ்வப்போதுள்ள விலைவாசி உயர்வு, வாழ்வாதாரத் தேவைக்கு ஏற்ப கூலி உயர்வை உயர்த்தி அறிவிக்க வேண்டுமெனவும் கருத்தரங்கு வலியுறுத்துகிறது. இதற்கென சிறப்புச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.
மிகுந்த கடன் துயரத்திலும் தாள முடியாத விவசாய நெருக்கடியிலும் சிக்கியுள்ள விவசாயிகளது சுமையை ஈடுகட்டும் வகையில் கூலி உயர்வை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில், நுண் கடன் நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடிக்கு மேல் கடன் அளித்து ரூ 35,000 கோடிக்கு மேல் வட்டியாக பெண்களிடமிருந்து, கிராமப்புர தொழிலாளரிடமிருந்து சுரண்டி வருகின்றன. அதுபோல், தமிழக விவசாயிகள் 74% பேர் கடனாளிகளாக உள்ளனர். இவர்களை கடன் சங்கிலியில் இருந்து விடுதலை செய்யும் விதமாக ஒன்றிய, மாநில ஆட்சிகள் கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும். வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திட வேண்டுமென கருத்தரங்கம் வலியுறுத்துவதோடு இதற்காக தொடர் இயக்கம் நடத்துவதென்றும் முடிவு செய்கிறது.
சட்டப்பேரவையில் விபி- கிராம்- ஜி சட்டத்திற்கு தீர்மானம் கொண்டு வந்துள்ளதற்கு வரவேற்பு
அவிகிதொச உள்ளிட்ட விவசாய தொழிலாளர் அமைப்புகள், இகக (மாலெ) உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் விபி-கிராம்- ஜி சட்டம் வேண்டாம்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டம் வேண்டும் என இயக்கம் நடத்திவரும் நிலையில் விபி-கிராம்-ஜி சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக ஆட்சி சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை இக் கருத்தரங்கம் முழு மனதாக வரவேற்கிறது. அதேபோல் தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளுக்கு எதிராகவும் நடப்புக் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்றும் திமுக அரசை இக்கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.
தூய்மைப் பணியாளர் போராட்டம் மிகப்பெரும் வெற்றி
சென்னை மாநகராட்சி 5,6 மண்டலங்களைச் சேர்ந்த 2000 தொழிலாளர் மாதக் கணக்கில் போராடி, 57 நாட்களுக்கு மேலாக உண்ணாநிலை உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளனர். தனியார்மயப்படுத்தி, தூக்கியெறிந்த மாநகராட்சி நிர்வாகமும் அதற்கு துணையாக இருந்த அரசாங்கமும் போராட்டத்திற்குப் பணிந்து தொழிலாளரை மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. உறுதிமிக்க, முன்னுதாரணமிக்க வெற்றிகரமான போராட்டத்தை கருத்தரங்கம் முழு மனதாக வாழ்த்தி பாராட்டுகிறது.
அதிமுக-பாஜக கூட்டணியை தோற்கடிக்க அழைப்பு
தமிழ்நாட்டுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராக, இல்லாத ஒரு திருப்பரங்குன்றம் பிரச்சனையை மதவெறி அரசியலுக்குப் பயன்படுத்தி தமிழ்நாட்டின் சமூகநீதி, மதச்சார்பின்மை மரபுகளுக்கு எதிராக மக்களை பிளவுபடுத்த பாஜக வெறித்தனமாக முயன்று வருகிறது. இந்தப் பின்னணியில், தமிழ்நாட்டின் சனாதன எதிர்ப்பு மரபை பின்பற்றி துணிச்சலுடன் பேசிய துணை முதல்வர் உதயநிதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற அமைச்சர் பியூஷ் கோயலின் கருத்தை கருத்தரங்கு நிராகரிக்கிறது, வன்மையாகக் கண்டிக்கிறது.
அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான ஜனநாயகத்துக்கு ஆபத்தான பாசிச பாஜகவுடன் தமிழக மக்களின் விருப்பத்திற்கு எதிராக அஇஅதிமுக கூட்டணி வைத்துள்ளது. மக்கள் விரோத இந்த பாஜக- அஇஅதிமுக கூட்டணியை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்கடிக்க உறுதி ஏற்கிறது. இந்த நோக்கத்திற்காக கிராமப்புர வறியவர்கள், தொழிலாளரை தேர்தல் இயக்கத்தில் தீவிரமாக அணிதிரட்ட உறுதி ஏற்கிறது. தமிழக மக்களும் இந்த மக்கள் விரோத கூட்டணியை தோற்கடித்து பாஜகவை தமிழ்நாட்டில் காலூன்ற விடாமல் தடுக்க வேண்டுமென்றும் அழைப்பு விடுக்கிறது.
