எங்களுக்கு மன்னர்கள் வேண்டாம், கிரீடத்தை கீழே போடு, கோமாளியே!

$articleData->title

எங்களுக்கு மன்னர்கள் வேண்டாம், கிரீடத்தை கீழே போடு, கோமாளியே!

ஐக்கிய அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் 2025 ஜனவரியில் இரண்டாவது முறையாக பதவியேற்றது முதல்  அவருக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் இதுவரை அமெரிக்கா கண்டிராத வகையில் ‘அமெரிக்காவிற்கு மன்னர்கள் வேண்டாம்’ என்று மக்கள் பல லட்சக்க்கணக்கானவர்கள் வீதிகளில் திரண்டார்கள். இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு பாலஸ்தீனத்தில் இனப் படுகொலை நடத்தியதை, அமெரிக்க மக்களே ட்ரம்ப் அரசாங்கத்தை, வன்மையாகக் கண்டித்தார்கள்.  வெனிசுலாவின்  அதிபர் மதுரோவையும் அவர் துணைவியாரையும் அடாவடியாகக் கைது செய்து வைத்துள்ள டொனால்ட் ட்ரம்ப், இப்போது இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு ஈரான் மீது பேரழிவுமிக்கப் போர் தொடுத்து, அமெரிக்க வீரர்களையும் அமெரிக்கப் பொருளாதாரத்தையும் சீர்குலைத்து எங்கள் வாழ்க்கையை ஆபத்திற்குள்ளாக்கி வருகிறார்  என்று அமெரிக்க மக்கள் குற்றம் சுமத்தி ட்ரம்ப்பிற்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள்.

‘அமெரிக்காவிற்கு அரசர்கள் வேண்டாம், ஜனநாயகம் வேண்டும், மன்னர் பரம்பரை வேண்டாம்’, ’கீரிடத்தை கீழே போடு, கோமாளியே’, ஆட்சியும் அதிகாரமும் மக்களுக்கே, மன்னர்களுக்கும் அவர்களின் கோடீஸ்வரக் கூட்டாளிகளுக்கும் அல்ல’ என முழங்கி பதாகைகளை உயர்த்திப் பிடித்து, கடந்த மார்ச் 28 அன்று மட்டும் ஒரே நாளில் சுமார் 80 லட்சம் பேர் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் அணிதிரண்டுள்ளார்கள். இந்தியாவில் மோடியும் அமித்ஷாவும் சொல்வது போலவே மோடியின் பெரியண்ணன் ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ பேச்சாளர் அபிகையில் ஜாக்ஸன், ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்க மக்கள் ஆர்த்தெழுந்து நடத்தும் இந்தப் போராட்டத்தினை, இடதுசாரிகள் பணம் கொடுத்து நடத்துகிறார்கள், மக்கள் ஆதரவு கொஞ்சம் கூட இல்லை என்றும் ட்ரம்ப் நடத்தும் மனக்குழப்ப சிகிச்சையிலுள்ள செய்தியாளர்கள்தான் இந்த போராட்டச் செய்திகளை வெளியிடுகிறார்கள் என்று கோயபல்ஸ் பொய்யாக வெட்கமில்லாமல் அறிக்கை விடுகிறார்.  

கடந்த ஓர் ஆண்டில் ட்ரம்ப்பிற்கு எதிரான மூன்றாவது பெரிய போராட்டம் இது என்று இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தும் அமைப்பாளர்கள் கூறுகிறார்கள். பேரழிவுமிக்க போருக்கு எதிரான அமெரிக்க மக்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பாரிஸிலும் லண்டனிலும் லிஸ்பெனிலும் ரோமிலும் இன்னும் பல்வேறு நகரங்களிலும் ஒருமைப்பாடு தெரிவித்து போராட்டங்கள் நடத்துகின்றார்கள். கடந்த ஜூன், அக்டோபர்  மாதங்களில் நடைபெற்ற போராட்டங்களைக் காட்டிலும் இந்த ‘மன்னர்கள் வேண்டாம்’ இயக்கத்தில் அதிகமான மக்கள் பங்கெடுத்துள்ளார்கள். ஜூனில்  5 மில்லியன் மக்கள் திரண்டனர் என்றும் அக்டோபரில் 7 மில்லியன் மக்கள் திரண்டனர் என்றும் தற்போது அது 8 மில்லியனையும் தாண்டிவிட்டது என்கிறார்கள்.  ‘மன்னர்கள் வேண்டாம்‘ போராட்டத்தை இன்விசிபிள், 50501, மூவ் ஆன், பப்ளிக் சிட்டிசன், அமெரிக்க குடியுரிமைகள் சங்கம் உள்ளிட்ட சர்வாதிகாரத்திற்கு எதிரான முற்போக்கு அமைப்புகள் ஒன்றிணைந்து முன்னெடுத்துச் செல்கின்றன. இவர்களுடன் தொழிற்சங்கங்கள், கறுப்பின மக்களுக்கான இயக்கம் போன்றவைகளும் கைகோர்த்துக்  கொண்டுள்ளன.

அமைப்பாக்கப்பட்ட வகையில், வன்முறையற்ற, உறுதிமிக்க மக்கள் சக்தியின் மூலம் ஒரு சர்வாதிகாரியிடமிருந்து ஜனநாயகத்தைக் காக்கப் போராடுகிறோம் என்கிறார்கள்  மன்னர்கள் வேண்டாம் இயக்கத்தினர்.  இப்போராட்டம் அமெரிக்கா முழுவதும் பரவிவிட்டுள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தின் வெளிநாட்டு இராணுவ நிலைப்பாடு, குறிப்பாக ஈரான் மீதான போர், அதனால் உள்நாட்டில் உயர்ந்து போகும் வாழ்க்கைச் செலவுகள், வாக்காளர் மீதான ஒடுக்குமுறை, குடியுரிமைப் பாதுகாப்புகளைத் திரும்பப் பெறுதல் ஆகியவற்றுக்கு எதிரான மிகக் குறிப்பாக ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றம் மற்றும் சுங்கவரி அமலாக்கத்துறைக்கு (Immigration and Customs Enforcement – ICE) எதிரான இயக்கமாகவும் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்தத் துறையின் மோசமான நடவடிக்கைகளில் இரண்டு பேர் இவ்வாண்டு ஆரம்பத்தில் கொல்லப்பட்டார்கள்.

அமெரிக்காவின் இரட்டை நகரங்களான மின்னிபோலிஸிலும்  செயின்ட் பால் நகரத்திலும்தான் ‘மன்னர்கள் வேண்டாம்’ பேரணி முதலில் துவங்கியது.  செயின்ட் பாலில் முதன்முதலாகத் துவங்கிய பேரணியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து  கொண்டனர். இது அரசின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. செயின்ட் பால் நகரத்தில் செனேட்டர் பெர்னி சாண்டர்ஸ், திரைக் கலைஞரும் சமூக செயற்பாட்டாளருமான ஜேன் பாண்டா, இசையமைப்பாளர்கள் ஜோன் பேஷ் மற்றும் மேக்கி ரோஜ்ஜர்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் பேரணியில் கலந்து கொண்டனர். ட்ரம்ப் ஆட்சியின் குடியேற்ற அமலாக்கக் கொள்கைகளை கூர்மையாக விமர்சித்து ‘மின்னபோலிஸ் தெருக்களில்‘ என்கிற பாடலை புரூஸ் ஸ்பிரிங்டீன் பாடினார். பிரபல நடிகர் ராபர்ட் டி நிரோ பேச்சு ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டு பேரணியில் ஒலிபரப்பப்பட்டது. ட்ரம்ப் ஆட்சியின் அரசியல் சூழலால் அழுத்தத்திற்குள்ளாகி இருந்த எனக்கு, பல லட்சக்கணக்கானவர்கள் அணிதிரண்டிருப்பதைப் பார்த்து நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார். அதோடு மின்னசோடர்கள் குடியேற்ற, சுங்க அமலாக்கக் கொள்கையை நகரத்திலிருந்து வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று புகழ்ந்தார்.

போராட்டக்காரர்கள் அமெரிக்க குடியரசுத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப், துணைக் குடியரசுத் தலைவர்  ஜே.டி.வான்ஸ் மற்றும் அவர் நிர்வாகத்திலுள்ள அதிகாரிகளின் கொடுப்பாவிகளை எரித்தார்கள். அவர்கள் ஆட்சியை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கைது செய்யப்பட வேண்டும் என்று முழங்கினார்கள். வாஷிங்டன்னில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு ஆப்ரகாம் லிங்கன் நினைவிடம் நோக்கி ஊர்வலமாகச் சென்றார்கள். ‘கிரீடத்தைக் கீழே போடு, கோமாளியே’, ‘ஆட்சி மாற்றம் இங்கிருந்து தொடங்கட்டும்’ என்ற பதாகைகளுடன் தேசிய பேரங்காடிக்குள் சென்று மணியடித்து, முரசு கொட்டி, ‘வேண்டாம் மன்னர்கள்’ முழக்கமிட்டார்கள். வெனிசுலாவிலும் ஈரானிலும் ஆட்சியாளர்களை மாற்றுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் டொனால்ட்டிற்கு ‘நீ முதலில் ஆட்சியை விட்டு கீழே இறங்கு’ என்கிறார் அமெரிக்க மக்கள்.

நியுயார்க்கில் ஆயிரக் கணக்கானவர்கள் டைம்ஸ் சதுக்கத்தைச் சூழ்ந்தார்கள். மிட்டவுன் மன்காட்டனை நோக்கி பேரணி சென்றார்கள். முக்கிய தெருக்களையெல்லாம் காவல்துறை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஐந்து முக்கிய நகர்ப்புரத்தில் மட்டுமே ஒரு லட்சம் பேர் திரண்டனர். போராட்டங்கள் நடத்துவதற்கு பொதுமக்கள் அச்சப்பட வேண்டும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கிறார் ட்ரம்ப். ஆனால், அமெரிக்க மக்கள், ஆட்சியாளர்களுக்கு ட்ரம்ப்பிற்கு நீங்கள் நினைப்பது நடக்காது என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள். ‘மன்னர்கள் வேண்டாம்’ இயக்கம் வெறும் பரப்புரையாக இல்லாமல் ட்ரம்ப்பிற்கு எதிரான  நீடித்த போராட்டமாக  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்,  ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி பெற வேண்டும் என்று அமெரிக்க மக்கள் நாள்தோறும் இயேசு கிறிஸ்துவிடம் பிரார்த்திக்க வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஹெக்ஸெத் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு 14ம் போப் லியோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். போப் லியோ அமெரிக்காவில் பிறந்தவர். அமெரிக்காவில் இருந்து முதல் முறையாக போப் ஆக தேர்வு செய்யப்பட்டவர். அவரே, ஈரான் மீதான அமெரிக்காவின் போரினால் நடக்கும் மரணங்களும் வேதனைகளும் ஒட்டுமொத்த மனித குலத்திற்கு அவமானம் என்று கூறியுள்ளார். அவர் மேலும் பெரும்பான்மையான மக்கள் வேதனைகளை அனுபவிக்கும் போது அதைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது. அமெரிக்காவில்  போரை வெளிப்படையாக மத ரீதியாக இணைப்பது இயேசுவின் வழிக்கு முரணானது. பிறரை ஆதிக்கம் செலுத்தும் ஆசையை விடுத்து, பிறருக்கு எப்படி வாழ்வளிப்பது என்ற நோக்கமே இயேசுவின் வழி என்று கூறியுள்ளார். அதாவது ஆட்சியாளர்களே உங்களின் முதலாளித்துவ,  ஏகாதிபத்திய ஆதிக்க மற்றும் ஆக்கிரமிப்பு அரசியல் கொள்கைக்கு ஆண்டவனைத் துணைக்கு அழைக்காதீர்கள்  என்கிறார்.  ஆயுதங்களைக் கீழே போடுங்கள் அமைதிக்கான பேச்சுவார்த்தையை நடத்துங்கள் என்று போப் லியோ ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஹர்மூஸ் நீர் வழிப்பாதையை ஈரான் மூடிவிட்டதாலும் அமெரிக்கா நினைத்ததற்கு மாறாக ஈரானின் பதிலடி இருப்பதாலும் ட்ரம்ப் தன் தோல்வி முகத்தை ஒப்புக் கொள்வதற்கு மாறாக, வாய்ச் சவடால் விட்டுக் கொண்டிருக்கிறார். ஈரானுக்கு கொடுத்த 10 நாள் கெடு முடிய இன்னும் 48 மணி நேரமே உள்ளது. அதற்குள் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும், ஹர்மூஸ் நீர்வழிப் பாதையைத் திறந்துவிட வேண்டும் இல்லையென்றால் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்கிறார். ஈரானோ நாங்கள் அமெரிக்காவுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை என்றும் நாங்கள் அமைதியாகத்தான் இருந்தோம், நாங்களாக போரைத் தொடங்கவில்லை, நாங்கள் எதற்கும் தயாராவே இருக்கிறோம் என்கிறது.

 ட்ரம்ப் ஈரானிடமிருந்து மட்டுமல்ல, அமெரிக்க மக்களிடமும் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார். அதைத்தான் அங்கு நடக்கும் ‘மன்னர்கள் வேண்டாம்’ போராட்டம் தெளிவாகக்காட்டுகிறது. அவரது மகுடம் தரையில் விழும் நாள் வெகு தொலைவில் இல்லை. 

ட்ரம்ப்பிற்கு எதிராக அமெரிக்காவில் நடக்கும் ‘மன்னர்கள் வேண்டாம்’ இயக்கம் போலவே பல்வேறு நாடுகளிலும் மக்கள் போருக்கு எதிராக அணி திரண்டு வருகிறார்கள். மிகவும் முக்கியமாக இனவெறி பிடித்த நெதன்யாகுவிற்கும் எதிராக, போர் வேண்டாம் என முழங்கி இஸ்ரேல் மக்கள் ஆயிரக்கணக்கில் சாலைகளில் அணிதிரளத் தொடங்கியுள்ளார்கள்.

‘மன்னர்கள் வேண்டாம்’ இயக்கமானது ட்ரம்ப்பிற்கு மட்டுமல்ல, ட்ரம்ப்பிடம் சரணடைந்து நம் இந்திய நாட்டை அடகு வைத்துவிட்ட, குழந்தைகளையும் பெண்களையும் கொன்று குவிக்கும் நெதன்யாகுவின் இஸ்ரேல் என் தந்தை நாடு என்று வெட்கமே இல்லாமல் பேசிய, மோடி-அமித்ஷா கூட்டத்திற்கும் ஓர் எச்சரிக்கையாகும். இது நாள் வரை தொடர்ந்து  வந்த இந்தியாவின் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையை மாற்றி, நட்பு நாடான ஈரானுக்கு எதிராக  அமெரிக்க-இஸ்ரேல் கூட்டாக நடத்தும் போரைக் கண்டிக்காமல், இந்திய மக்களுக்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாட்டையும் விலை உயர்வையும் தேவையில்லாமல் உருவாக்கி வைத்துள்ள மோடி, கொரோனா காலத்தைப் போல மக்கள் இப்போதைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று வெட்கமில்லாமல் சொல்லும் மோடி, குஜராத், ஜாம் நகரில் உலகிலேயே மிகப் பெரிய எண்ணை சுத்திகரிப்பு கிடங்கை வைத்துள்ள அம்பானியிடமிருந்து இந்திய மக்களுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசல், எரிவாயு கொடுக்க செய்ய நடவடிக்கை மேற்கொள்ளத் தயாரில்லை. அம்பானி கொள்ளையடிக்க இந்திய மக்கள் சோதனைக் காலத்தை சமாளிக்க வேண்டும் என்கிறார். மாநில முதல்வர்கள் டீம் இந்தியாவாகச் செயல்பட வேண்டும் என்கிறார். 

‘அமெரிக்கா எங்களுக்கானது ட்ரம்பிற்கும் அவரது கோடீஸ்வர கூட்டாளிகளுக்குமானது அல்ல’ என்று அமெரிக்கா முழுவதும் மக்கள் திரண்டு முழங்குகிறார்களோ அதைப் போல, ‘இந்திய நாடு எங்களுக்கானது மோடி-அமித்ஷா- அவர்களின் கொள்ளைக்கார கோடீஸ்வர நண்பர்கள் அதானி, அம்பானிகளுக்கானது அல்ல‘ என்று, இந்தியாவெங்கும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் மக்கள் மோடியைப் பார்த்து, ‘பிற்போக்கு பழம்பெருமை பேசி, மதவெறியைத் தூண்டி, சிறுபான்மை மக்களை கொன்றொழித்து, ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்து, சர்வாதிகார மன்னாராட்சிக்கு வழிவகுக்கும்  நீங்கள் சாலை உலாக்கள் நடத்தியது போதும் ஆட்சியை விட்டுவெளியேறுங்கள்’ என்று வெளிப்படையாக ஒட்டுமொத்த இந்திய மக்களும் வீதிகளில் அணி திரளும் நாள் வெகு தொலைவில் இல்லை.   


07 April, 2026