‘அறம்’, ‘பொருள்’ தலைப்புகளில் தவெக தேர்தல் அறிக்கை பற்றி சென்ற இதழில் பார்த்தோம். மூன்றாவது பாலான ‘இன்பம்’ பகுதியில் 3 தூண்களில் 70 விதமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
“மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல்” பகுதியில், மருத்துவம் தொடர்பாக 11 வாக்குறுதிகளும் சுற்றுச்சூழல் தொடர்பாக 10 வாக்குறுதிகளும் உள்ளன. ரூ.25 லட்சத்துக்கான ‘மக்கள் நலன் காப்பீடு’ அட்டை, கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை, டெலி மருத்துவ வசதிகொண்ட 3000 மக்கள் நல நிலையம், ரூ 500 கோடியில் மனநல மருத்துவத் திட்டம் போன்ற கவனத்திற்குரிய அறிவிப்புகள் உள்ளன. 495 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என (உலக சுகாதார நிறுவனம் 1000:1 என பரிந்துரைக்கிறது) தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகமுள்ளது. ஒரு பக்கம் ஏழை, எளிய மக்கள் முழுமையாக அரசு மருத்துவமனைகளையே நம்பி இருக்கிறார்கள். இவை மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை (கிராமப்புர மருத்துவ முறைகளில் 70% மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன) நலிந்துபோன கட்டமைப்பு, கையூட்டு காரணமாக, மக்கள் தேவையை நிறைவேற்றுவதாக இல்லை. மறுபுறம் கார்ப்பரேட், சிறிய, பெரிய தனியார் மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் புற்றீசல் போல் பெருத்து வருவதும் நடுத்தர மக்கள், வசதி படைத்தவர்கள் இந்த மருத்துவக் கட்டமைப்பை நோக்கி விட்டில்பூச்சிகளாய் படை எடுப்பதையும் காணமுடிகிறது. முந்தைய முதல்வர் எம்ஜிஆர் ஆட்சியில் காலூன்றிய இந்த ஆபத்து அடுத்துவந்த திராவிட ஆட்சிகளில் ராட்சத உருவமெடுத்துள்ளது. இதன் மீது கை வைக்காமல் “மகிழ்ச்சியான தமிழ்நாடு திட்டத்தை” கொண்டுவர முடியாது. கை வைக்கும் துணிச்சலை தவெக விடம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால், “பெரு நிறுவனங்கள், சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்களுடன் இணைந்து மாநிலம் தழுவிய மகிழ்ச்சி சூழலை தவெக அரசு உருவாக்கும்” என்ற வாக்குறுதி மக்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா?
சுற்றுச் சூழல் சவால்கள்?!
ரூ. 3000 கோடி காலநிலை பட்ஜெட், பசுமை தமிழ்நாடு, சுத்தமான ஆறுகள், தூய காற்று, கூவம், அடையாறு மீட்பு இயக்கம், சதுப்பு நிலப்பாதுகாப்பு என அறிக்கை நம்பிக்கை ஏற்படுத்துகிறது. பசுமை தமிழ்நாட்டை உருவாக்க, தற்போதுள்ள 17.59 விழுக்காடு காடுகள் வரும் அய்ந்தாண்டுகளில் 33 விழுக்காடாக அதிகரிக்கப்படும் என்று கூறுவது மிக நல்ல அறிவிப்பு. அதேசமயம், தொழில்மயமாக்கமும், நகர்மயமாக்கமும் அவற்றால் உற்பத்தியாகும் பேரழிவுக் கழிவுகள் அகற்றத்திலும் பெரும் மாற்றுக் கொள்கைகளும் விவசாய மறுமலர்ச்சியும் வேண்டும். அப்படி எதுவும் அறிக்கையில் தெரியவில்லை.
“உலகத்தர கட்டமைப்பு” பகுதியில் 27 வாக்குறுதிகள் உள்ளன. ‘மின்சாரம் மற்றும் பசுமை ஆற்றலின்’ கீழ் 5 வாக்குறுதிகளும் ‘நவீன கட்டமைப்பின்’ கீழ் 8 வாக்குறுதிகளும் ‘கிராம வளர்ச்சி’ பொருளின் கீழ் 5 வாக்குறுதிகளும் ‘நகரவளர்ச்சி’ தலைப்பில் 9 வாக்குறுதிகளும் உள்ளன. 24 மணி நேரம் தங்குதடையற்ற மின்சாரம் தொடங்கி, மாதம் தோறும் கட்டணமுறை, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் சிறு குறு தொழில்களுக்கு மின் கட்டணம் குறைப்பு, சோலார் மின்சாரத்துக்கு மாறுவோருக்கு மானியம், 5000 அரசுப் பேருந்துகளையும் மின்சார வாகனமாக்குவது என வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. நல்லது.
நவீன கட்டமைப்பாக, துறைமுகம், ரயில் இணைப்பு, விமான நிலையங்கள், ஏஅய் தொழில் நுட்பத்துடன் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி விபத்துகளை தடுப்பது, சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் …. தனியார் வாகன உரிமையாளர்களுக்கு ‘நல்ல சமாரியன் உயிர் காப்பாளர் விருது’ (சமாரிடன், பைபிளில் வரும் கதாபாத்திரம்) போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குறுதிகளை மேலெழுந்தவாரியாக பார்த்தாலே மெகா கார்ப்பரேட் திட்டங்கள் என்பது புலனாகும். ‘சென்னை, கோவை, தூத்துக்குடி மூன்று இடங்களில் சரக்குப் போக்குவரத்து, சரக்கு பாதுகாப்பு பணிகளை ஒருங்கிணைக்கும் பல்திறன் பரிமாற்றப் பூங்கா நிறுவப்படும். இதன்மூலம், தமிழக வர்த்தகர்களின் ஏற்றுமதி செலவுகள் 20% முதல் 30% வரை குறையும். தென்கிழக்காசியாவில் தமிழ்நாடு சிறந்த வர்த்தக பரிமாற்ற மய்யமாக வளர்ச்சியடையும்’ எனும் அறிக்கையின் வழித்தடம் தெளிவாக்கிவிடுகிறது.
நகர வளர்ச்சியும் கிராம வளர்ச்சியும்?!
நகர வளர்ச்சிக்கு 9 வாக்குறுதிகளை அளித்துள்ள அறிக்கை கிராமப்புர வளர்ச்சிக்கு 5 வாக்குறுதிகளை தந்துள்ளது. ‘2031க்குள் சேரியில்லா நகரங்கள்’ தொடங்கி, சென்னை, திருச்சி, மதுரை, கோவை மாநகரங்களை உலகத்தரத்தில் உருவாக்குவது, சொத்து வரிக்குறைப்பு ஆகியவை கவனத்துக்குரியவை. தொடர்ந்து தோற்றுப்போன ‘சேரியில்லா நகரங்களை’ 5 ஆண்டுகளில் கொண்டு வரப்போகும் தவெக வாக்குறுதி உண்மையிலேயே ஆச்சரியமூட்டுகிறது. உலகத்தரமான கிராம வளர்ச்சிபற்றி பேசும் ‘அறிக்கை’, தமிழ்நாட்டிலுள்ள 15,978 கிராமங்களில் முதல் கட்டமாக 5000 கிராமங்களை மாதிரி கிராமங்களாக எடுத்துக் கொண்டு அவற்றில் நவீன நகர்ப்புர (அப்துல் கலாமின் புறா திட்டம்) கட்டமைப்பைக் கொண்டுவர உறுதி அளிக்கிறது. கிராமப்புர தொழில் உள்கட்டமைப்புத்திட்டம் மூலம், 1000 கிராமப்புர தொழில் தொகுப்புகளை உருவாக்கி லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் கூறுகிறது.
ஆனால், ஒரு கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புர தொழிலாளர் நம்பியிருக்கும் கிராமப்புர ஊரக வேலைத்திட்டம் “150 நாட்களாக உயர்த்தி, உரிய வருவாய் நிர்ணயிக்க முயற்சி செய்யப்படும்” என்று மட்டுமே கூறுகிறது. (ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள கிராமப்புர வறியவர் விரோத, கூட்டாட்சி விரோத விபி கிராம்ஜி சட்டம் பற்றி இதுவரை தவெக கருத்து எதுவும் சொல்லாதது வியப்பொன்றுமில்லை)! பொருள் பிரிவில் விவசாயிகள், கூலித் தொழிலாளர் பற்றிய தலைப்பில் பேசியிருக்க வேண்டிய விசயத்தை இன்பம் பிரிவில் ஏன் பேசுகிறது என்று வாசகர்களுக்கு தோன்றலாம். ‘அறிக்கை’ முழு வீரியத்துடன் நகர்ப்புர சார்பைக் கொண்டிருக்கிறது. முழுமனதோடு கிராமப்புர புறக்கணிப்பை வெளிப்படுத்துகிறது. உலகத்தரம் பற்றி அறிக்கை அடிக்கடி பேசுகிறது. எது உலகத்தரம்? உலகத்தரம் எப்படி அளவிடப்படுகிறது? யார் இதை முடிவு செய்கிறார்கள் என்ற ஆராய்ச்சிக்குள் சென்றால் ‘உலகத்தரம்’ பல்லிளிக்கும்.
அறிக்கையின் 10வது தூணாக “மக்கள் அரசு; உண்மை மற்றும் நேர்மையான நிர்வாகம்” உள்ளது. 22 வாக்குறுதிகள் உள்ளன. “நமது ஒவ்வொரு அரசுத்திட்டமும் உறுதியாகவும் நேரடியாகவும் மக்களுக்குச் சென்றடையும் வகையில் இருக்கும் என்பது தொடங்கி, உரிமை அட்டைகள் மூலம் (இருக்கும் அட்டைகளுக்கே ஒன்றுமில்லை; இன்னொரு அட்டையா? என்றே ஏழைகள் புழுங்குவார்கள்). ‘மக்களே அரசின் வழிகாட்டிகள்’ என்று நம்பும் தவெக, “மக்கள் நேரடியாக அனுப்பும் புகார்கள் பற்றி சட்டமன்றம் ஒருநாள் முழுக்க விவாதிக்கும்” என்று உறுதி அளிக்கிறது. ‘லஞ்சத்திற்கு எதிராக பூஜ்யம் சகிப்புத்தன்மை’யை வலியுறுத்தும் அறிக்கை, லோக்அயுக்தாவை வலுப்படுத்தவும் கனிம வளம், மணல் கொள்ளையை ஒழிக்கவும் போதையில்லா தமிழகத்தைக் கொண்டு வரவும், காவல் படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும் உறுதி அளிக்கிறது. ஆனால், மது அருந்துவதை சீராகவும் படிப்படியாக குறைக்க உறுதியளிக்கிறது. (மது போதை வளையத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளது தள்ளாட்டமா? தடுமாற்றமா என பலருக்கு கேள்வி எழலாம்). இதுவரை கேள்விப்பட்டிராத புதுமையாக “சமூக நிதிநிலை அறிக்கை, சமமான வட்டார வளர்ச்சி நிதிநிலை அறிக்கை, கலாசார, பண்பாட்டு நிதிநிலை அறிக்கை, சூழலியல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறுகிறது. ஆவலோடு காத்திருப்போம்!
தமிழ்நாட்டை பொருளாதார இறையாண்மை பெற்ற மாநிலமாக ஆக்குவோம் என்று உறுதியளிக்கும் அறிக்கை, ‘புதிய வரிகளை சுமத்தாமல், இழப்புகளைத் தடுத்து, வருவாயை பெருக்கி, புதிய வழிகளில் பொருளாதார கட்டமைப்புகளை உருவாக்கும்’ என விவரிக்கிறது. ஆனால், எல்லாவழிகளிலும் மாநிலங்களின் பொருளாதார “இறையாண்மையை” தகர்க்கும் ஒன்றிய அரசிடமிருந்து எப்படி தமிழ்நாட்டின் பொருளாதார இறையாண்மையை காப்பது? அறிக்கை அமைதி காக்கிறது. முத்தாய்ப்பாக, ரூ 50,000 கோடியில் ‘வியூக முதலீட்டு ஆணையம்’ ஒன்றை அமைக்கப்போவதாக வாக்குறுதியளிக்கிறது. “வரிகள், சலுகைகளை (மத்திய அரசிடமிருந்து மானியங்கள்) நம்பியிருக்கும் முறையிலிருந்து விலகி, செல்வத்தை உருவாக்கும் புதிய பொருளாதார மாதிரியை நோக்கி தமிழகத்தை தவெக கொண்டு செல்லும். .....தமிழக அரசு, தவெக ஆட்சியில் தொழில் துறையினருடன் இணைந்து முதலீடு செய்து புதிய மதிப்புகளை உருவாக்கி, அதன் உரிமையைப் பகிர்ந்து கொள்ளும். இது லட்சக்கணக்கான உயர்தர வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுடன் மாநிலத்திற்கு வரி அல்லாத புதிய வருவாய் ஆதாரங்களையும் ஈட்டித்தரும்” என்கிறது. இதிலிருந்து தவெக வின் பொருளாதார கொள்கை, தெளிவாகி விடுகிறது. “சூரியனையும் இலை, பூ பழத்தை” தோற்கடித்தாலும் பெரும் கார்ப்பரேட் பாதையை அறிக்கை வெற்றிபெறச் செய்கிறது. தவெக வெற்றிக்கு பாடுபட்ட ஜிக் தொழிலாளர், ஆட்டோ தொழிலாளருக்கு சில நல்ல அறிவிப்புகளை அறிவித்துள்ளது அறிக்கை. ஆனால் உலகமய பொருளாதார தாக்குதலில் இருந்து தமிழ்நாட்டை எப்படி தவெக காப்பாற்ற போகிறது?
மண்டையைக் குடையும் இன்னொரு கேள்வி, மேலே சொன்ன வாக்குறுதிகள், திருவள்ளுவரின் மூன்றாம் பாலுக்குள் எப்படி வருகிறது? இன்பத்துபால் அல்லது காமத்துப்பால் ஆணின் பார்வையில் பெண்ணைப்பற்றிப் பேசுகிறது. ஆணுக்காக உருகும், மருகும் பெண்ணையே முன்னிறுத்துகிறது. இந்தப்பாலில் தவெக பால் கலப்பட பாலல்லவா? கட்சியின் தலைவர், முதலமைச்சர் ஜோசப் விஜய் விளக்கினால் விளங்கிக் கொள்ளலாம்.
இறுதியாக; தத்துவப் பேராசன் திருவள்ளுவரின் திருக்குறள் வளர்ச்சிக்கு பாடுபடப்போவதாக சொல்லும் தவெக, இந்த தேர்தல் அறிக்கையை ஆங்கிலத்தில் எழுதி ஏஅய் கொண்டு மொழிபெயர்த்தது ஏன்? “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை உயிர்மூச்சாக எண்ணும் அறிக்கை எல்லோரும் போலவே, “சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்ற பகுதியை சொல்லவில்லையே ஏன்?
