வேடநத்தம் (தூத்துக்குடி) பள்ளி மாணவி வன்கொடுமை கொலை துயரச் சம்பவம் மீண்டுமொருமுறை தமிழ்நாட்டை அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று எதிர்க்கட்சிகளும் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று ஆள்வோரும் எதிரும் புதிருமான கதையாடலை மீண்டும் ஒரு சுற்று நடத்தி வருகின்றனர்.
முன்னேறிய மாநிலம், முற்போக்கான மாநிலம், வளர்ச்சி பெற்ற மாநிலம் என்றெல்லாம் அறியப்படும் தமிழ்நாட்டில் ஏன் இந்த நிலை? இதற்கு என்னதான் தீர்வு? கடுமையான தண்டனை, பள்ளிப் பாடங்களில் பால் சமநிலை விழிப்புணர்வு, பிள்ளை வளர்ப்புக் கல்வி, சமூக மாற்றம் போன்றவை கவனத்தை ஈர்க்கின்றன. இவை தேவைதான். சமூக மாற்றம் எனும் போது, (இப்போதுள்ள) சமூகத்தின் மனமாற்றமா? புரட்சிகரமான அடிப்படை சமூக மாற்றமா?
சமீபத்திய சில நிகழ்வுகள். பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு புகழ்பெற்ற பெண் திரைக்கலைஞரை இழிவுபடுத்தி பேசியுள்ளார். தனது கட்சியுடன் கூட்டணிக்கு வராத அந்த தலைவரை விமர்சிக்க துணிந்தவர் அந்த பெண் கலைஞரை இழிவுபடுத்தியுள்ளார். அவரது பேச்சை பெண் தலைவர் தமிழிசையோ, வானதி சீனிவாசனோ வேறு எந்த தலைவருமோ நாகந்திரனின் அருவருப்பான ஆணாதிக்க பேச்சை கண்டிக்கவில்லை. நாகேந்திரனது பேச்சுக்கு வலுவான எதிர்ப்பு ஏற்பட, பல நாட்களுக்குப் பிறகு வருத்தம் தெரிவித்தார். அதில் வருத்தத்தைவிட அவரது தேர்தல் அரசியலே வெளிப்பட்டது. அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள பாஜக வேட்பாளராக தேர்தலிலும் போட்டியிடுகிறார்.
மற்றொரு நிகழ்வு, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சிவி. சண்முகமும் திண்டுக்கல் சீனிவாசனும் மற்றொரு புகழ்பெற்ற பெண் திரைக்கலைஞரை அருவருக்கத்தக்க மொழியில் பேசியுள்ளனர். அவர்கள் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை. கண்டனம் கூட இல்லை. இவர்களும் அதிமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். அண்மையில், திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு மிக உயரிய விருதான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டது. தன்னையே தமிழாக எண்ணிக் கொண்டு இது “தமிழுக்கு அளிக்கப்பட்ட விருது” என்று பெருமையோடு பேட்டி அளித்தார். பல ஆண்டுகளாக இவர் மீது பெண் திரைக் கலைஞர்கள் பலரும் கடும் குற்றச் சாட்டுகளை கூறிவருகின்றனர். அது பற்றி வாய் திறக்காத அவர், அவரது குற்றங்களை ஞானபீட விருது ‘துடைத்தெறிந்து விட்டது’ போன்ற பெருமித உணர்வோடு பேசினார். திமுகவால் மாநிலங்களவை உறுப்பினராகியுள்ள கமல்ஹாசன், மீண்டும் முதல்வராகும் முனைப்புடன் களமாடி வரும் முதல்வர் ஸ்டாலின், வைரமுத்துவை பாராட்டியுள்ளனர். திமுகவின் பெண் முகமாக இருக்கும் கவிஞர் கனிமொழி கருணாநிதியும் கருத்துக் கூறவில்லை.
அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் ஞானபீட விருது அறிவிப்பை கண்டித்து ஊடகங்களில் அறிக்கை வெளியிட்டது. அதை அடுத்து, திரை ஆளுமைகள், படைப்பாளிகள் பலரும் கண்டித்துள்ளனர். அதன்பின் விருதுபற்றி அதிகம் பேசாமல் வைரமுத்து அமைதி காத்து வருகிறார். தவெக பெண் தொண்டர்களை தரக்குறைவாக பேசியதற்காக அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் மீது புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அவர் மன்னிப்பு கோரவேண்டுமென்று தவெக கட்சித் தலைமை வலியுறுத்தியது. இதற்கு பதிலளிக்க முனைந்த பொன்ராஜ், தவெகவின் ஆண், பெண் கட்சித் தொண்டர்களின் பாலியல் சீரழிவுப் பேச்சுகளால் ஏற்பட்ட “அறச்சீற்றாத்தால்” அப்படி பேசி விட்டதாக கூறுகிறார். தவெக தலைவர் விஜய் மன்னிப்பு கேட்டால் நானும் கேட்கிறேன் என்று கூறுகிறார். தேர்தல் பரப்புரையில் இறங்கியுள்ள நாதக சீமான், பொன்ராஜ் வரிசைப்படுத்திய ‘வக்கிரப் பட்டியலை’ அப்படியே திருப்பி வாசித்திருக்கிறார். “அய்யா பொன்ராஜ்க்கு” ஆதரவும் தெரிவித்திருக்கிறார்.
மேலே சுட்டிக் காட்டப்பட்ட, பெண் வெறுப்பு பேச்சுப் பேசிய தலைவர்கள் வெற்றி பெற்றால் ஆட்சி நடத்துவார்கள். சட்டமியற்றுவார்கள். நம்முடையது அரசியல் சமூகம். நமது சமூகத்தை அரசியல் கட்சிகள் வடிவமைக்கின்றன. அரசியல் கட்சிகளோடு நெருக்கமாக இருக்கும் ஆளுமைகளும் திரைக் கலைஞர்களும் அந்த அரசியல் தலைவர்களையும் அவர்களது கருத்துகளையும் தூக்கித் திரிகின்றனர். சமூகத்தின் மீது பெரும் செல்வாக்கு செலுத்துகிறார்கள். பத்திரிகைகள், காவல்துறை, அதிகாரவர்க்கம், நீதித்துறை அனைத்தையும் வழிநடத்துகிறார்கள். இவர்கள் அதிகார வர்க்கம், காவல்துறையை வழிநடத்துவார்கள். பாடத்திட்டத்தையும் உருவாக்குவார்கள். இவர்களால் எப்படி சமூக மாற்றம் ஏற்படும்?
நாதக வுக்கு அடுத்தபடியாக, 297 வாக்குறுதிகளை அறிவித்துள்ள அதிமுக தேர்தல் அறிக்கை ‘மகளிர் நலன்’ பற்றியும் பேசுகிறது. ‘குல விளக்குத் திட்டம்’, ‘தாலிக்கு தங்கம்’, ‘அம்மா ஸ்கூட்டி மானியம்’ தாண்டிச் செல்லவில்லை. பெண்களுக்கு 14 வாக்குறுதிகளை அளித்துள்ள திமுக தேர்தல் அறிக்கை, ரூ 8000 டோக்கன் “இல்லத்தரசி” திட்டத்தையும் அறிவித்துள்ளது. குல விளக்குத், இல்லத்தரசி என்பதை தாண்டி செல்லவில்லை. பெண்கள் மீதான சுரண்டல், ஒடுக்குமுறை, பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றியோ, ஆணாதிக்க பெண்வெறுப்பு பேச்சுகளை ஒழிப்பது பற்றியோ பேசவில்லை. கட்சிக்குள், பொதுவெளியில் பெண்களை சமத்துவமாக நடத்துவது பற்றி பெரிய கட்சிகளிடம் எந்த வாக்குறுதியும் இல்லை. இடது, ஜனநாயக சிவில் சமூக எதிர்ப்புகளுக்குப் பிறகும் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரணதண்டனை சட்டத்தை நிறைவேற்றியுள்ளது திமுக அரசு. அதற்குப் பிறகும் ஏன் வேடநத்தம் நடக்கிறது?
பெண்களுக்கு 50 விழுக்காடு வேட்பாளர் வாய்ப்பை அளித்துள்ளதாக பெருமை பேசிக்கொள்ளும் நாதக கட்சி தேர்தல் அறிக்கை, பெண்ணுரிமை என்ற தலைப்பில் 5 அம்ச திட்டங்களை நாதக அரசு செயல்படுத்தும் என்று வாக்குறுதி அளிக்கிறது. மரணதண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்துகள் ஓங்கிவரும் வேளையில், “பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்” என்று கூறுகிறது அறிக்கை. “திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் பெண்களை இழிவுபடுத்தும் போக்கை பெண்ணிய இழிவாக நாம் தமிழர் கட்சி கருதுகிறது” (பக்கம்141) என்றும் கூறுகிறது. ஆனால் மேலே சுட்டிக்காட்டியதுபோல, தனது அரசியல் பரப்புரை கூட்டத்தில் பெண்களை இழிவுபடுத்திப் பேசிய, பொன்ராஜை ஆதரித்துப் பேசிய சீமானை நாதக அரசு என்ன செய்யும் என்று தெரியவில்லை. தனக்குத் தானே மரண தண்டனை விதித்துக் கொள்வாரா என்றும் தெரியவில்லை! புரட்சிகரமான சொல்லுக்கும் பிற்போக்கான செயலுக்கும் பெயர்தான் நாதக போலும்?
மேலே சொன்ன நிகழ்வுகள், ஒட்டுமொத்த சமூக உரையாடலையும் அழுகி நாறும் ஆணாதிக்க சிந்தனையாக மாசுபடுத்தி விட்டது. பெண்கள் மீதான பெருங்குற்றங்களுக்கு இவையே காரணம். பெண்கள் மலிவான உழைப்பு, பெண்கள் மலிவான வாக்கு, பெண்கள் மலிவான இலக்கு என்ற சிந்தனையே ஊற்றுக்கண். சங்பரிவார் சக்திகள் வளர்ந்து வருவதும் தமிழ்நாட்டிலுள்ள கட்சிகள் பலவும் பாஜகவை அண்டியிருப்பதுமே இந்தப் போக்கை தீவிரப்படுத்தி வருகிறது.
முதலாவதாக, அரசியல் கட்சிகளில், அதிகாரவர்க்க, காவல்துறை, சமூக அமைப்புகளில் பெண் வெறுப்பு கருத்துகளுக்கு இடமிருக்கக்கூடாது. பெண்களை இழிவுபடுத்திப் பேசும் தலைவர்களுக்கு இடமே இருக்கக் கூடாது. அரசியல் கட்சிகளில் மேலிருந்து கீழ்வரை அழுக்குகள் சுத்தப்படுத்தப்பட வேண்டும். இந்த அழுக்கு, 1968 லியே ‘முற்றும் துறக்காத’ முனிவரிடம் இருந்தே வெளிப்பட்டது.
அரசியலில் நயினார் நாகேந்திரன், சி வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், சீமான் போன்றவர்களுக்கு இடமிருக்கக் கூடாது. பாரதியார், பெரியார், சிங்காரவேலர் அம்பேத்கர் போன்றோரது புரட்சிகரமான கருத்துகள் தலைமைதாங்க, “திராவிட நிலம்” திராவிட நிலமாக மாற கட்சிகளில் தீவிர களையெடுப்பு நடத்த வேண்டும். உடனடி தண்டனையாக இந்தத் தலைவர்கள் வரும் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும்.
