திராவிட மாடல் அரசில் உழைக்கும் மக்கள்.

$articleData->title

திராவிட மாடல் அரசில் உழைக்கும் மக்கள்.

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 2.2 கோடி ரேஷன் அட்டைகளுக்கு ரூ 3,000 பொங்கல் பரிசு தந்த திமுக அரசு, 13.02.2026 அன்று காலை அவசர அவசரமாக, இரகசியமாக, உரிமைத்தொகை பெறும் 1.31 கோடி பெண்கள் கணக்கில் ரூ 5,000 செலுத்தியது.

கூட்டணி கட்சிகள் நிபந்தனை இல்லாமல் வரவேற்கிறார்கள். திரு.விஜய், தம்மை கண்டு அஞ்சியே, முதல்வர் ரூ 5,000 தர முடிவு செய்தார் என்கிறார். அஇஅதிமுக, தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வைக்கவே, இந்த நடவடிக்கை எனச் சொல்கிறது.

திராவிட மாடல் அரசு மக்களுக்கு நன்மை செய்யவிடாமல் அஇஅதிமுக-பாஜக நடவடிக்கை எடுக்கக்கூடும் என்பதால் தான், திமுக அரசு அவசர அவசரமாக, இரகசியமாகத் துல்லிய தாக்குதல் தொடுத்தது என, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு எழுதுகிறது.

  பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் தரப்பட வேண்டிய ரூ1,000 + ரூ 1,000 + ரூ 1,000  மற்றும் கோடை காலத்திற்கு ரூ 2,000 என, மொத்தம் ரூ.5,000 தரப்பட்டுள்ளது.

சுட்டெரிக்கும் கோடைகாலம் தொடங்கும் முன்பு, தமிழ்நாட்டு சாமானிய மக்களுக்கு ஏழை எளிய பெண்களுக்கு ரூ.3,000 ம், ரூ 5,000 ம் சற்று ஆசுவாசம் தருகின்றன என்பது யதார்த்தமே ஆகும். செல்வச்செழிப்பு மிதமிஞ்சி சிலரிடம் இருக்கும் சமூகத்தில், ரூ 3,000, ரூ 5,000 நிவாரணம் சற்று ஆறுதல் தருவது எதனால்?

திராவிட மாடல் வளர்ச்சிக் கதையாடலில், (NARRATIVE)  தமிழ்நாட்டு நகர்ப்புற கிராமப்புற வறுமை மறைக்கப்பட்டுள்ளதா?

© சம தளம், மேடு, பள்ளம் என்பவை நாம் அறிந்த சொற்களே ஆகும். சம தளத்தில் பள்ளம் தோண்டத் தோண்ட, மேடுகள் குவியும். முதல்வர் திறந்து வைத்த சிலையில் அமைந்துள்ள காரல் மார்க்ஸ், "கூலி உயர லாபம் குறையும் கூலி குறைய லாபம் உயரும்" என்றார். மலையெனச் செல்வம் குவியும் நாணயத்தின் மறுபக்கமாக, கடல் என வறுமை பரவுகிறது. வறுமை, நம் அன்னையர், அவர்தம் அன்னையர் மற்றும் முன்னோர் கால அளவுகோல் கொண்டு காணத்தக்கது அல்ல. இயற்கையும் உழைப்பும் இணைந்து உருவான செல்வத்தில், கண்டுணரத்தக்க சமூக  செல்வத்தில், யாருக்கு என்ன கிடைக்கிறது என்பதிலிருந்தே, வசதியை, வசதியின்மையை / வறுமையை மதிப்பிட முடியும்.

© ரூ 3,000 ம், ரூ 5,000 ம் ஆறுதலும் ஆனந்தமும் தருகிறதென்றால், தமிழ்நாட்டு சாமானிய மக்களும் பெண்களும், வசதியின்மை / வறுமைத்துயரில் வாழ்கிறார்கள், கடன் பொறியில் சிக்கி உள்ளார்கள் என்பது சுலபமாக அறியத்தக்கது தானே!

அரசின் 2025-26 தொழிலாளர் தொடர்பான கொள்கை குறிப்பு சொல்வதும் சொல்லாததும்.

© தமிழ்நாடு அமைச்சரவையில், வலுவில்லாத, பொலிவிழந்த, அதிகாரம் அகற்றப்பட்ட துறை, தொழிலாளர் துறை. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை என்ற பெயரிலிருந்து, தொலைநோக்கத்தோடு "வேலைவாய்ப்பு" அகற்றப்பட்டது. திறன் வளர்ப்பு சேர்க்கப்பட்டது. முதலீட்டாளரின் லாபத்தை உயர்த்தும், மகிழ்ச்சியை பெருக்கும் திறன் அய்ந்தாண்டுகளில் நன்றாகவே வளர்ந்துள்ளது.

கொள்கை குறிப்பு சொல்வதும் சொல்லாததும் என்ன என்பதற்கான விவரங்களை முதலில் பட்டியல் போடுவோம். பிறகு உண்மைகளை கண்டு அறிய முயற்சிப்போம்.

கொள்கை குறிப்பில் இருந்து 

© தமிழ்நாட்டில் 62,350 ஹெக்டர் நிலத்தில் 2,232 தோட்டங்களில் 52,108 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். 3,027 மோட்டார் வாகன நிறுவனங்களில் 1,39,730  பேர் பணிபுரிகின்றனர்.

© கிக் தொழிலாளர் நல வாரியம் தமிழ்நாட்டில் கடைசியாக உருவான நல வாரியம் ஆகும். கட்டுமான தொழிலாளர் நலவாரியம் உள்ளிட்ட 19 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில், 47,62,810 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஈஎஸ்ஐ, ஈபிஎப் சட்டங்களின் எல்லைக்குள்/ பாதுகாப்பிற்குள் வராதவர்கள். இதுவரை, இவர்களுக்கு நலப்பயன்கள் ரூ 4,045 கோடி வழங்கப்பட்டுள்ளது.

©அமைப்புசாரா நல வாரிய உறுப்பினர்கள், 4,51,073 பேர் மாதம் ரூ 1,200 ஓய்வூதியும் பெறுகிறார்கள்.

© 2024-25 ல் பதிவு செய்தவர்கள் 4,79,345 ஆவார்கள். பெற்ற பயன்கள் ரூ 930.82 கோடி. ஆனால் இதே 2024-25-ல் கட்டுமான தொழிலாளர் வாரியத்திற்கு நலநிதி ரூ 1,020 கோடியும், ஓட்டுனர் மற்றும் பணிமனை தொழிலாளர் வாரியத்திற்கு ரூ 27 கோடியும், நலநிதியாக வந்துள்ளது. மாநில அரசு வாரியங்களுக்கு ரூ 2085.70 கோடி மானியமாக தந்துள்ளது

© 31.03.2025 நிலவரப்படி, தமிழ்நாட்டில் வேலை கோரி தம் பெயரை வேலை வாய்ப்பு முகாம்களில் பதிவு செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை 32,35,683.

© 2024-25 வேலையில்லா காலப்படி (மாதம் ரூ 200 முதல் ரூ 600 வரை கல்வித் தகுதிக்கேற்ப) 15,203 பேருக்கு ரூ 10.9 கோடி தரப்பட்டுள்ளது. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ 72,000 தாண்டக்கூடாது. பயனாளியின் வயது 40 தாண்டக்கூடாது. 5 வருடங்களாக வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு, இந்த படி, 3 ஆண்டுகள் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் 2542 பேர் மாதம் ரூ 1,000 ஆயிரம் வரை 2024-25 ல் வேலையில்லா காலப்படி 2.76 கோடி பெற்றுள்ளனர்.

© மேற்கு வங்கத்தில், வேலை கிடைக்கும் வரை அல்லது 5 வருடங்களுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 21 வயது முதல் 40  வயது வரை உள்ள, வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ 1,500 வேலையில்லா காலப்படி வழங்கப்படும் என்றும், மேற்குவங்கம் முழுவதும் உள்ள இளைஞர்கள், இதற்கான படிவத்தை நிரப்ப வரிசைகளில் நிற்பதாகவும், 16.02.2026 தேதியிட்ட தி இந்து செய்தி சொல்கிறது.

© ஒவ்வோர் ஆண்டும், கொள்கை குறிப்பு, பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையை முன் வைக்கும். அந்த எண்ணிக்கை அடுத்தடுத்த ஆண்டுகளில் 300, 200 என மிகவும் சொற்பமாக இருந்ததால், இந்த ஆண்டு, பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை பற்றிய குறிப்பே இடம் பெறவில்லை.

© 31.03.2025 நிலவரப்படி தமிழ்நாட்டில் 52,614 பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்கே 27,04,468 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்; 3,059 பதிவு செய்யப்பட்ட கட்டுமான நிறுவனங்களில், 4,83,162 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.

© தமிழ்நாட்டில் ஈ.எஸ்.அய் வேலையாள் அரசு காப்பீட்டு திட்டத்தில் 43.77 லட்சம் பேர், மருத்துவ காப்பீட்டுக்குள் வருகிறார்கள்; அவர்களது இணையர், குழந்தைகள், பெற்றோர் என 1.75 கோடி சார்பு நிலையில் உள்ளோர் மருத்துவ பயன் பெற முடியும். (மாதச் சம்பளம் ரூ 21,000 வரை இருப்பவர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தும்)

கொள்கை குறிப்பு சொல்லாதவற்றை பார்ப்போம்.

© கொள்கை குறிப்பு, ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத, மாநில உரிமைகள் விரோத நான்கு சட்டத் தொகுப்புகள் பற்றி எதுவும் சொல்லவில்லை. சட்டத் தொகுப்புகள் 21.11.2025 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், திமுக அரசு, தொழிலாளர் உரிமையோடு தொடர்புடைய மாநில உரிமைகளில், அவசர அக்கறை காட்ட வேண்டும்.

 © தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7.7 கோடி. விவசாயமும் விளை நிலமும் சுருங்கிவிட்டன. நேரடியாக விவசாயத்தோடு, பால் பண்ணைகளோடு, காடுகளோடு, கோழி ஆடு மாடு வளர்ப்போடு, மீன்பிடிப்போடு தொடர்புடையவர்கள் எவ்வளவு பேர்? அவர்கள் வருமானம் எப்படி உள்ளது?

© அரசு, அரசு துணை நிறுவனங்கள் வழங்கும் நிரந்தர வேலை வாய்ப்பு எவ்வளவு? சம்பளம், ஓய்வூதியம் எப்படி உள்ளது?

© தனியார் கூட்டுறவு, பொதுத்துறை, நிரந்தரப் பணியாளர்கள் எவ்வளவு பேர்? அவர்கள் சம்பளம் பணி நிலைமைகள்  எத்தகையவை?

© கொள்கை குறிப்பு கணக்குப்படி தொழிற்சாலை, 20 வகை அமைப்பு சாரா, மோட்டார் வாகனம், தோட்டத் தொழில், வேலை கிடைக்காதோர் என எல்லா வகை சேர்ந்தே சுமார் 1.5 கோடி என்ற எண்ணிக்கையை தாண்டாது.

© தமிழ்நாட்டு தொழிற்சங்க இயக்கம் பெருமளவுக்கு நிரந்தர தொழிலாளிகள், அரசு, அரசு நிறுவன, கூட்டுறவுத் துறை ஊழியர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்தியில் மட்டும் சுருங்கி நிற்பது போல், தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறையும், விவசாய மற்றும் விவசாயம் தொடர்புடைய தொழில்கள் அல்லாத இதர தொழில்களில் பணியாற்றும் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் பற்றிப்  பேசவே இல்லை.

® தமிழ்நாட்டின் திட்ட ஆணைய செயல் துணைத் தலைவர் அறிஞர் ஜெயரஞ்சன் 04.03.2025 அன்று, மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்ந்து, தமிழ்நாட்டில் தற்சமயம் பணியாற்றும் 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பற்றிச் சரியாகவே எழுதினார்:

" நம் பொருளாதாரத்தில் பிற மாநில தொழிலாளர்கள் அத்தியாவசியமானவர்கள். ஆனால் புறக்கணிக்கப்பட்டவர்கள். நீண்ட வேலை நேரம். குறைவான சம்பளம். மோசமான வாழ் நிலைமைகள். சமூக பாதுகாப்பு இல்லாத நிலை. பாகுபாட்டையும், துன்புறுத்தலையும் இவர்கள் சந்திக்கிறார்கள்" ஆனால், அவர்கள் நல்வாழ்க்கைக்கான குறிப்பான நடவடிக்கைகள் பற்றி, கொள்கை குறிப்பிலோ அதற்கு வெளியேயோ திமுக அரசு எதுவும் சொல்லவில்லை. (தமிழ்நாட்டில் பதிவு செய்து கொண்டுள்ள பிற மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை 12,17,229)

© 47.33 லட்சம் குறு நிறுவனங்களில், 60,013 சிறு நிறுவனங்களில் உழைப்பவர்கள், சுய வேலைவாய்ப்பில் உள்ள, குறை வருமானம் ஈட்டும் ஒரு கோடிக்கு மேலானவர்கள் பற்றி, அறிக்கை எதுவும் சொல்லவில்லை.

© சுமார் 18 லட்சம் இல்லப் பணியாளர்கள், 7.5 லட்சம் மின் வர்த்தக பணியாளர்கள், வண்டி ஓட்டுநர்கள் நலன் காக்கவும் அரசிடம் திட்டம் எதுவும் இல்லை.

(மொத்த வேலைவாய்ப்பில் தற்செயல் வேலையில் உள்ளவர்கள் 44%, சுய வேலை பார்ப்பவர்கள் 29%,  குறித்த கால சம்பளம் வாங்குபவர்கள் 27% .)

திராவிட மாடல் அரசு குறி வைக்கிற அதே மக்கள் பிரிவினரிடம், போராடும் இடதுசாரி இயக்கமும் சென்றாக வேண்டும்.

© 2025 ஆகஸ்ட் துவங்கி தமிழ்நாட்டில் போராட்டத் திருவிழாக்கள் துவங்கிவிட்டன. மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், அருந்தியர், ஆதிதிராவிடர், அனைத்து சாதி ஏழைகள், பெண்கள் தான் தமிழ்நாட்டின் இந்த சுற்று வரலாற்றில், மக்களுக்கு இடம் தேடித் தந்தனர். தமிழ்நாட்டில் போராட்ட முகம், பெண் முகமாக இருந்தது. பெண் உடலும் உணர்வும், போராட்டக் கருவிகள் ஆயின. முதல்வர், முதல்வருக்கு ஆலோசனை சொல்பவர்கள் அறிவார்ந்தவர்கள் தான். மிகச் சரியாக மாநில உரிமைகளுக்காக, தமிழ்நாட்டு நலன் காக்க, மதவாதம் எதிர்க்க, சங்பரிவாரையும் பாஜகவின் அடிமைகளையும் எதிர்க்கும் முழக்கங்களை கதையாடல்களை கட்டமைத்துள்ளனர். 

© பெண்களின் பேராற்றல் பற்றி அறிந்துள்ளனர். அதனை சட்டமன்ற தேர்தல் வாக்குகளாக மாற்ற, சில நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்

© ஆனால் 2025 ன் இறுதி பகுதியிலும் 2026 ன் துவக்கத்திலும் நிரந்தரமற்ற டாஸ்மாக் பணியாளர்கள், தூய்மை/சுகாதார/மருத்துவமனை பணியாளர்கள், சத்துணவு-அங்கன்வாடி உள்ளிட்ட பல்வகை திட்ட (SCHEME) பணியாளர்கள், நாள் கணக்கில் சென்னைக்கு வந்து தங்கி, போராடி, நியாயம்  கேட்கிறார்கள்.

© திமுக அரசு, ஊரகப் பள்ளிகளில் 25,000 தூய்மை பணியாளர்களுக்கு மாதம் ரூ 1,500 வரை மட்டுமே சம்பளம் தருவதையோ, சுமார் 70,000 தூய்மை காவலர்களுக்கு மாதம் ரூ. 6,000 தான் சம்பளம் என்பதையோ, திட்டப்பணி/ தூய்மை பணி/ டாஸ்மாக் பணி என எங்கும் நீக்கமற ரூ 10,000 சம்பளம் தாண்டாத அல்லது அதற்கு பக்கத்தில் சம்பளம் தரும் தொகுப்பூதிய முறை மற்றும் ஒப்பந்த மயத்தை  திணித்துள்ளதையோ, களம் கண்டுள்ள பெண்களின் பேராற்றல், இனியும் ஏற்காது என உணர வேண்டும். ரூ 3,000 பொங்கல் தொகை, கோடைகால நிவாரணம் ரூ 2,000 தரப்பட வேண்டியவையே. மாநில அரசின் முதலாளித்துவ அரசின் எல்லைகள், நிதி வலிமையின் இன்றைய நிலை நமக்கு புரிகிறது.

© ஆனால் 2026 தேர்தலில், பெண்களின் பேராற்றல், உழைக்கும் மக்களின் சீற்றம், அவர்களின் பெரு விருப்பம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, உழைக்கும் மக்களுக்கு திமுக உத்தரவாதம் தர வேண்டும்.


20 February, 2026