தனிமைப்பட்டு போன பாஜக, தத்தளிக்கும் அதிமுக; தனித்துவிடப்பட்ட திமுக, மக்கள் பிரச்சனைகளை ஓரங்கட்ட நினைக்கும் தவெக!

$articleData->title

தனிமைப்பட்டு போன பாஜக, தத்தளிக்கும் அதிமுக; தனித்துவிடப்பட்ட திமுக, மக்கள் பிரச்சனைகளை ஓரங்கட்ட நினைக்கும் தவெக!

மக்கள் தீர்ப்பும் மாறிவரும் அரசியல் களமும்

மே 4 மக்கள் தீர்ப்பு, தமிழ்நாட்டின் அரசியல் களத்தை தலைகீழாக மாற்றிப் போட்டுவிட்டது. தமிழ்நாட்டை அறுபது ஆண்டுகள் கட்டி ஆண்ட திராவிடக் கட்சிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளன. தவெகவை தனிப்பெரும் கட்சியாக தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனாலும் தனித்து ஆட்சி அமைக்கும் கட்சியாக தேர்ந்தெடுக்கவில்லை! இந்த நிலையில், ஒன்றிய ஆட்சி அதிகாரத்திலிருக்கும் பாஜக பிரதிநிதியான ஆளுநர், தவெகவுக்கு பதட்டத்தை உருவாக்கினார். ஒருவார பரபரப்புக்கு பிறகு, திமுகவுடன் கூட்டணியிலிருந்த காங்கிரஸ், இகக, இகக(மா), விசிக, அய்யூஎம்எல் ஆதரவுடன், தமிழ்நாட்டின் முதல் கூட்டணி ஆட்சியை தவெக அமைத்தது.

கார்ப்பரேட் கொள்கைகளால் ஏற்பட்டிருந்த ஆழமான சமூகப் பொருளாதாரப் பிளவுகளை ‘சமூகநீதி’ மேல்பூச்சு கொண்டு மூடியிருந்த “திராவிட மாடல் ஆட்சியை” மக்கள் தகர்த்துவிட்டனர். தவெக தனது கொள்கை எதிரியாக அறிவித்திருந்த பாஜக, அதனுடன் கூட்டணி கண்டிருந்த அதிமுகவையும் மக்கள் வலுவாக நிராகரித்து விட்டனர். பாஜக, ‘ஒற்றைத் தாமரை’யாக ஒதுங்கிவிட்டது. பாஜகவை வாய் திறக்காமல் செய்துவிட்டனர். திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளால் குவிந்துபோன அதிருப்தி, விரக்தி, கோபங்கள் தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகளை அதன் கூட்டணிகளை இரண்டாவது, மூன்றாவது இடங்களுக்கு தள்ளி விட்டது. மூன்றாவதொரு அரசியல் சக்தியாக தவெக வை கொண்டுவந்துவிட்டது. தவெக பெற்ற தீர்ப்பு இளைஞர்களின் தீர்ப்பு; பெண்களின் தீர்ப்பு, சாதி, மதம், பணம் இவற்றை நிராகரித்த தீர்ப்பு என்றெல்லாம் பேசப்படுகிறது. என்றாலும், திராவிடக்கட்சிகளால் ஆதிக்கம் செய்யப்பட்ட இருதுருவ அரசியலுக்கெதிரான தீர்ப்பு; தவெக என்ற மூன்றாவது சக்தியை அரசியலுக்கு கொண்டுவந்துள்ள தீர்ப்பு. இதுவே முதன்மையானது, அடிப்படையானது.

தவெக அரசு எப்படி?

தாவிச் சென்று ஆதரவளித்த காங்கிரசை அடுத்து கம்யூனிஸ்டுகள் வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தனர். விசிக, அய்யூஎம்எல் ஆட்சியில் பங்கேற்று ஆதரவளித்துள்ளன. தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி என்ற வகையில் ‘மாற்றம்’; திமுக வுடன் இருந்த கட்சிகளைக் கொண்ட ஆட்சி என்ற வகையில் ‘தொடர்ச்சி’. ஆட்சி அமைத்த முதல் வாரத்தில் போற்றப்பட்ட விஜயின் “நாகரிக அரசியல்” 30 நாட்களுக்குள் “அநாகரிக அரசியல்” “குதிரை பேர அரசியல்” என்று குற்றஞ்சாட்டப்படுகிற நிலைமையை தவெக ஏற்படுத்திக் கொண்டது. ஆறுமாதங்களுக்கு இந்த ஆட்சிக்கு எவ்வித தொந்தரவும் கொடுக்க மாட்டோம் என்று சொன்ன திமுக தலைவர் ஸ்டாலின், இந்த ஆட்சி மூன்று மாதம் கூட தாங்காது, ஆறுமாதத்தில் தேர்தல் வரும் என்று பேசி வருகிறார். திமுகவை ஆட்சியிலிருந்து இறக்கிய தவெகவை ஆட்சியிலிருந்து இறக்குவது கட்சி அரசியல். ஆனால் ஜனநாயக அரசியல் அல்ல.

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவை ஆதரித்த அதிமுக அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள், வேறு ஒரு உத்திக்கு தாவியுள்ளனர். குட்கா ஊழலில் சிக்கிய மருத்துவர் விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் தவெகவுக்கு தாவிவிட்டனர். எந்த எதிர்பார்ப்பும் உறுதிமொழியும் இல்லாமலா தாவியிருப்பார்கள்? தவெகவின் ஆட்சி அதிகாரம் எப்படிப்பட்ட கறையையும் வெளுத்து விடும் என்று இருதரப்பும் நம்புகிறது போலும்! தவெகவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டம் முதலமைச்சரின் பதவியேற்பு உரையோடு முடிந்துவிட்டது போலும்? தவெகதான் உண்மையான அதிமுக என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் கூறியதை ஒத்துக்கொள்வதைப் போல படையெடுப்பு இன்னும் தொடருமென்றே தெரிகிறது. பாஜக துணையோடு ‘ஒற்றைத் தலைமை’யின் கீழ் கொண்டுவந்த எடப்பாடியின் அஇஅதிமுக தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் கடுமையாகத் தண்டித்தது ஏன் என்பது பற்றி எடப்பாடி சிந்திக்கத் துணியவில்லை. ஜிகே வாசன், ஜான்பாண்டியன் கட்சிகள் விலகி தேசிய ஜனநாயக கூட்டணி துடைத்தெறியப்பட்டதிலிருந்து தேவையான பாடத்தை எடப்பாடி பெற்றிருக்க வேண்டும். பெற்றிருப்பாரா? இருத்தலுக்கான போராட்டத்தில் தள்ளிவிடப்பட்டுள்ள எடப்பாடி தவெகவுக்கு எதிராக காட்டமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

திமுகவிடம் சொல்லிக் கொள்ளாமலே தவெகவிடம் ஓடிவிட்ட காங்கிரசின் “துரோகத்தின்” மீது திமுக சவாரிசெய்தது. ஆனால் 67ல் ஆட்சியை இழந்ததிலிருந்து, (அப்போது காங்கிரஸ் அமைச்சரவையில் 9 பேர்). அமைச்சராகி கட்சியை வளர்க்க முடியும் என்று நம்புகிறது காங்கிரசின் சாணக்கியம்! தேர்தலின் போதே தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை, திமுகவுடன் அதிக இடங்களுடன் போட்டி என்ற காங்கிரசின் ‘இருவழிப்பாதை’ தெளிவாகவே தெரிந்தது. திமுகவுடன் பணிவாக நடந்துகொள்ளும் செல்வப்பெருந்தகையை நீக்கிவிட்டு, “அடித்தால் திருப்பி அடிக்கும்”, பரம்பரை மிராசுதாரர் மாணிக்கம் தாகூரை காங்கிரஸ் மாநிலத்தலைவராக அகில இந்தியத் தலைமை நியமித்துள்ளதன் மூலம் இந்த இரு வழிப்பாதை உறுதியாகிறது. ஆக, திராவிடக்கட்சிகளிடம் மாறிமாறி கூட்டணிவைத்த மூச்சுத்திணறல் முடிவுக்கு வந்துள்ளதாக காங்கிரஸ் கருதுகிறது.

ஆட்சி அமைக்கும் நாட்களில் தவெக பாஜகவின் நெருக்கடிகளை தாக்குப்பிடித்து நின்று, மதச்சார்பின்மை, சமூகநீதி முழக்கத்துடன் மாற்றுக்கூட்டணி கண்டது தெளிவானதொரு அரசியல் ‘நகர்வு’தான். அதன் தொடர்ச்சியாக, நட்சத்திர விடுதி விருந்துக் கூட்டம், (இரண்டு சட்டப் பேரவை உறுப்பினர்களை திமுகவுக்கு பலி கொடுத்தாலும் முகமலர்ச்சியுடன் கலந்து கொண்டார் மறுமலர்ச்சி திமுகவின் வைகோ) கூட்டணிக்கு பெயர், குறைந்தபட்ச செயல்திட்டம், கூட்டணிக்கு ஒருங்கிணைப்புக் குழு என்று ‘நகர்வு’ உறுதிப்படுவதாகத் தெரிகிறது. பிரதமருடன் சந்திப்பு, நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சரின் உரை, ஆளுநர் உரை, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரை இவற்றைக் கொண்டு பார்க்கும் போது, திமுக, அதிமுகவுக்கு ‘மாற்று’, தமிழ்நாட்டின் சமூக, அரசியல் விழுமியங்களின் ‘தொடர்ச்சி’ என தவெக காட்ட விரும்புகிறது. மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி, மத்திய அரசுடன் தேவையற்ற மோதலை மேற்கொள்ளமாட்டோம், சேர்ந்து செயல்படுவோம் என்று தவெக தலைவர் கூறுவது தெளிவான செய்திகளைச் சொல்கிறது. சென்ற ஆட்சிபோல் உரத்த பாஜக, ஒன்றிய ஆட்சி எதிர்ப்பைக் காட்டமாட்டோம். இதுதான் தவெக சொன்ன “மாற்றம்” போலும்! ஆனால், “கொள்கை எதிரி” பாஜகவை தனிமைப்படுத்திய மக்கள் தீர்ப்போடு தவெகவின் இந்த நிலைப்பாடு மோதுகிறது. மேலும் ஆட்சியை உறுதிப்படுத்திக்கொள்வது, தனிப்பெரும்பான்மை பெற்றுவிடுவது என்பது முன்னுரிமையாகத் தெரிகிறது. தேசிய அரசியல் தொடர்பாக ஒரு பாதுகாப்பான தூரத்தில் நின்று கொள்வது போலவும் தெரிகிறது. இந்தியா கூட்டணியில் தவெக இடம் பெறுமா என்ற கேள்விக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளே இந்தியா கூட்டணியில் இடம் பெறும் என்று காங்கிரஸ் சொல்வதும் பிரவின் சக்கரவர்த்திக்கு தனது இடத்தை தவெக விட்டுக் கொடுத்ததும் இதற்கான சான்றாக உள்ளது.

அண்மையில் சென்னை வந்திருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலமைச்சரின் “மத்திய அரசுடன் தேவையற்ற மோதலை மேற்கொள்ளமாட்டோம்” என்ற கருத்தை வரவேற்றுப் பேசினார். விஜயின் “அப்பாவைக் காணோம்” பற்றிய நிருபர்களின் கேள்விக்கு அரசியல் “விமர்சனத்தை சட்டமன்றத்தில் பேசாமல் வெளியிலா பேசமுடியும்” என எதிர்க்கேள்வி கேட்டு விஜயை ஆதரித்துள்ளார். தவெகவுடன் பணியாற்றத் தயாராக இருக்கிறோம் என்பதற்கு சமிக்கையாகவும் தரைதட்டிப்போன பாஜகவை தட்டி எழுப்பும் முயற்சியாகவும் இது தெரிகிறது. தவெக வானத்திலிருந்து குதித்த ஒரு கட்சி அல்ல. தமிழ்நாட்டு பூமியிலிருந்து உருவான கட்சிதான் என்பதை பாஜகவின் நிர்மலா நன்றாகவே, உணர்ந்திருக்கிறார்.

இடதுசாரி அரசியலின் தேவை

திமுக, அதிமுகவை சுற்றி நடந்து வந்த பல பத்தாண்டுகால அரசியல் திட்டவட்டமான பின்னடைவைச் சந்தித்துள்ளது. கடந்த காலங்களில் மதிமுக, தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் தோன்றினாலும் அவை திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நிலைபெற முடியவில்லை. அதே திமுக, அதிமுக வோடு அண்டி நின்றே அரசியல் செய்ய வேண்டிய நிலை. இக்கட்சிகள், “கழகம்” எனும் பின்னொட்டை விடுவதாக இல்லை. அதனாலும் இவை கழகங்களுக்கு மாற்றாக காணப்படுவதில்லை. அதே கழகப் பின்னொட்டோடு வந்துள்ள தவெக, கழகங்களின் தொடர்ச்சியாகவும் (கழகத்தலைவர், நிரந்தர முதல்வர் என்ற முழக்கங்களை பரவலாக காணமுடிகிறது) கழகங்களுக்கு மாற்றாகவும்  பார்க்கப்படுகிறது.

இந்தப் பின்னணியில், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி தனது தாக்குதலை திருப்பியுள்ளது. முரசொலியில் மூன்று பகுதிகளாக எழுதப்பட்ட கட்டுரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் கடந்தகால வரலாறுகளையெல்லாம் சுட்டிக்காட்டி எழுதியுள்ளது. அதில் அரசியல் குறைவாகவும் அநாகரிகம் மிதமிஞ்சியும் உள்ளது. இதற்கு தீக்கதிரும் மறுப்பு எழுதியுள்ளது. திமுக, மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாக மட்டும் கொள்ள முடியாது. ஒட்டுமொத்த இடதுசாரி இயக்கத்தின் மீதும் அதன் அரசியல், வரலாற்றின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே கொள்ளமுடியும். திராவிட கட்சிகளுக்கும் இடதுசாரி இயக்கத்துக்கும் இடையே வரலாற்று ரீதியாகவே போட்டி இருந்து வருகிறது. இடதுசாரி இயக்கத்தை பின்னுக்குத் தள்ளி அறுபதுகளில் ஆட்சியைப் பிடித்த திமுக, 72ல் உருவான அதிமுக இவை இரண்டுமே இடதுசாரிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே விரும்புகின்றன. ஒருமுறை, ஜெயலலிதா “கம்யூனிஸ்ட்கள் அநாகரிகமானவர்கள்” என வசைபாடியதை மறந்துவிடமுடியாது. பொதுமக்கள் பார்வையிலும் இவர்கள் மாறிமாறி கூட்டு வைப்பவர்கள் என்ற விமர்சனமும் இருக்கிறது. தற்போது எழுந்துள்ள புதிய அரசியல் சூழலில், மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் தனிப்பெரும் கட்சியே ஆட்சியமைக்க உரிமை கொண்டது என்ற அடிப்படையிலும் பாஜக சித்துவிளையாட்டின் காரணமாக ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதனாலும் தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பது என்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் மிகச் சரியாகவே முடிவு செய்தன. அதேசமயம், கூட்டணி கட்சிகளின் (01-07-26) விருந்து கூட்டத்தைத் தவிர்த்ததும் வரவேற்கத்தக்கது. மாறியுள்ள அரசியல் சூழலை ஏற்றுக்கொள்ள முடியாத ஸ்டாலின், ஒருபக்கம் வாழ்த்தி வழியனுப்பி வைத்ததாக கூறுவதும் இன்னொரு பக்கம் அவரது முரசொலியில் தரம் தாழ்ந்த விமர்சனத்தை வெளியிடுவதும் தமிழகம் அறிந்த ‘திராவிட அரசியல் பண்பாடாக’ வெளிப்படுகிறது. திமுக வின் மற்றொரு முக்கியத் தலைவரான ஆ.ராசா பெரியார் பெயரை சொல்லிக்கொண்டே மிகவும் பிற்போக்குத்தனத்தின் உச்சமாக, நிலப்பிரபுத்துவ மொழியில் கூட்டணியிலிருந்து விலகியவர்களை வசைபாடினார்.

இவையெல்லாம் சுட்டிக்காட்டுவது, சார்புநிலை ஒழிந்த தனித்துவமான வழியில் இடதுசாரிக் கட்சிகள் வளரவேண்டுமென்பதே மக்கள் தீர்ப்பின் வெளிச்சம். அரசின் ஒவ்வொரு மக்கள் நலனுக்கு எதிரான செயல்களை உடனுக்குடன் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். தெருவுக்கு வரவேண்டும். வந்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக விவசாயிகள் ஏமாற்றப்பட்டதனால் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்க, ஒப்பந்தமயமாக்க தீயசக்திகளிடம் ஒப்படைக்கும் அரசின் முயற்சியை எதிர்த்து உழைப்போர் உரிமை இயக்கம் -ஏஅய்சிசிடியூ தெருவுக்கு வந்தது. தமிழ்நாடு முழுவதும் தூய்மைப் பணியாளர் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு பின்வாங்கியது. கடந்த ஆட்சி போலவே டாஸ்மாக் தொழிலாளரை குற்றவாளியாக்கும் இவ்வரசைக் கண்டித்தும் பெரும் எதிர்ப்பை வெளிப்படுத்திய டாஸ்மாக் தொழிலாளர்கள், ‘டாஸ்மாக்கை மூடு, தொழிலாளருக்கு மாற்றுவேலை வழங்கு’ என்று உரத்து முழங்கினர். கார்ப்பரேட்கள் சூரிய ஒளி மின்னாற்றல் என்ற பெயரில் சூறையாட நினைக்கும் ஆயிரக்கணக்கான நிலங்களை மீட்கும் போராட்டத்தில் பெருந்தோட்டம் கிராமப்புர தொழிலாளர் அவிகிதொச தலைமையில் போராடிவருகின்றனர். ‘உழுதிடும் உரிமையை’ மீட்டெடுக்க அத்தியூர், சூரியூர் விவசாயிகள் போராடி வருகின்றனர். குமரியில் அணுக்கனிம ஒப்பந்தத்தை நீட்டித்ததை எதிர்த்து கண்டனங்கள் எழும்பியுள்ளன. ஆட்சிக்கு வருவதற்கு முன் எதிர்த்த இந்தத் திட்டத்தை ஆட்சிக்கு வந்தபின் அனுமதி நீட்டிப்பது ஏன் என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. முதலமைச்சர் “அவகாசம்” கேட்டார். மக்கள் தரத் தயாராக இல்லை.

சென்ற ஆட்சி காலத்தின் போது தலைவிரித்தாடிய கல்விக் கட்டண கொள்ளை, அரசின் தொழிலாளர் துறை ஆலை அதிபர்கள் கூட்டணியால் ஒட்டச்சுரண்டப்படும் புலம் பெயர் தொழிலாளர் வாயு கசிவால் கொல்லப்படுவது, ஆணவக் கொலைகள், சாதி ஆதிக்க கொடூரங்கள் இந்த ‘சமூகநீதி’ ஆட்சியையும் துரத்துகின்றன. அரசு அமைதி காக்கிறது!

இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்காக போராட, ‘இடது மாற்றை’ நோக்கிய அரசியலுக்காக அந்த அடிப்படையிலேயே இகக, இகக(மா), இகக(மாலெ) மூன்று இடதுசாரி கட்சிகளும் சேர்ந்து இடதுசாரி ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியுள்ளன. மக்கள் போராட்டமும் இடதுசாரி அரசியலும் முதன்மையானது. தனித்துவமான, இடதுசாரி மாற்று அரசியலை நோக்கிய பயணம் தமிழ்நாட்டுக்குத் தேவைப்படுகிறது. அந்தத் தேவையை, உணர்ந்தே இடதுசாரி மாணவர், இளைஞர், பெண்கள் அமைப்புகள் நீட் பயங்கரவாதத்திற்கு எதிராக ஜூலை 1 அன்று தெருவுக்கு வந்தனர். கிராமப்புற தொழிலாளர் வேலையை பறிக்கும் விபி கிராம் ஜி சட்டத்துக்கு எதிராக குரலெழுப்பினர். என்எல்சி லாபத்தை மக்களுக்கு தருவதற்கு மாறாக முதலாளிகளுக்கு தரும் பங்கு விற்பனையை எதிர்த்து இடதுசாரி ஒருங்கிணைப்பு போராட்டப் பதாகையை உயர்த்தியுள்ளது. திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இவை பற்றி கண்டுகொள்ளவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாடுதழுவிய பாசிச ஆபத்துக்கு எதிராக, உண்மையான மதச்சார்பற்ற, ஜனநாயக, முற்போக்கு, சமூகநீதி சக்திகளோடு கரம் கோர்க்கும் அதேவேளை பாசிச எதிர்ப்பில், பாசிச எதிர்ப்புக்கான மக்கள் போராட்டத்தில் இடதுசாரிகளே முன்னணியில் இருக்க வேண்டும். 2026 மக்கள் தீர்ப்பு, இடதுசாரிகளுக்கு உரத்துச் சொல்லும் செய்தி இதுதான்.

09 July, 2026