தேர்தல் முடிந்த பிறகு பிஜேபியின் தேர்தல் அறிக்கை பற்றி பேசுவது கேள்வியை எழுப்பலாம். ஆனால், பிஜேபியின் தேர்தல் அறிக்கை என்பது தேர்தலுக்கானது மட்டுமல்ல, அது பிஜேபியின் தமிழ்நாட்டுக்கான எதிர்காலத் திட்டம். எனவே, அதைப்பற்றிப் பேசுவது அவசியம் ஆகிறது.
போட்டா போட்டி ஜனரஞ்சகவாதம்
2026 தேர்தல் களம் என்பது காய்கறி விற்கும் சந்தை போல ஆகிவிட்டது. பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்தை திமுக அமல்படுத்தியுள்ளதால், ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம் என்கிறது அதிமுக. பெண்களுக்கு மாதம் ரூ 2000 என்கிறது திமுக; 2500 என்கிறது அதிமுக. தன் பங்கிற்கு வேலையில்லா நிவாரணம் ரூ.4000 என்கிறது தவெக. அனைவருக்கும் குளிர் பதனப் பெட்டிகள் இலவசம் என்கிறது அதிமுக; மக்கள் என்ன எலெக்ட்ரானிக் பொருள் வாங்க விருப்பமோ அதை வாங்கிக் கொள்ள ரூ 8000 கூப்பன் என்கிறது திமுக. இன்னும் ஒரு படி மேலே சென்று அனைவரும் ஒரு கார் வாங்கும் நிலைக்கு அவர்களது நிலைமையை மேம்படுத்துவோம் என்கிறது தவெக. இங்கு நாம் சொல்லி இருப்பது கொஞ்சம்தான். அது மிக நீளமான பட்டியல். அனைத்துக் கட்சிகளும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு சட்டமன்றத் தேர்தல் களத்தில் நடத்தும் ஜனரஞ்சகவாத அரசியல்.
இலவசங்களுக்கு எதிரான அரசியல் பேசிவந்த, எள்ளி நகையாடிய பிஜேபி, தமிழ்நாட்டில் சுமார் 60,000 கோடி அளவுக்கு இலவச நலத் திட்டங்களை அறிவித்திருக்கிறது. ஏற்கனவே, கடனில் தத்தளிக்கும் தமிழ்நாடு அந்தப் பணத்தை எப்படி உருவாக்கும் என்பது பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை பிஜேபி. ஒருவேளை, தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி வரிப் பகிர்மானத்தை அதிகப்படுத்துவோம் என்றோ, தமிழ்நாட்டுப் பங்கை முழுமையாக கொடுத்து விடுவோம் என்றோ சொல்லியிருந்தால் அவர்களின் வாக்குறுதிகளை நம்பலாம். மாறாக, அவை வெறும் ஜித்து விளையாட்டுகளே.
கார்த்திகை தீபத் தீ
பிஜேபியின் கவலை முற்றிலும் மாறுபட்டது. நாட்டில் நிலவும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், வேலை இழப்பு, விலைவாசி உயர்வு, கல்விக்கும் மருத்துவத்திற்கும் ஆகும் அபாரச் செலவுகள் போன்ற மக்கள் கவலைப்படும், அல்லல்படும் பிரச்சனைகள் எவை பற்றியும் அவர்களுக்கு அக்கறை கிடையாது. தென்னாட்டு அயோத்தியாக திருப்பரங்குன்றத்தை மாற்றுவோம், தென்னாட்டு காசியாக ராமேஷ்வரத்தை மாற்றுவோம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்துக் கோவில்களும் புனிதத் தலங்கள் ஆகையால், அவற்றை அரசிடமிருந்து மீட்போம் – இப்படித்தான் பிஜேபியின் திட்டம் இருக்கிறது. அதைத்தான் பிஜேபியின் அகில இந்திய தலைவர் நிதின் நபின் ஆரம்பித்து பாஜக அமைச்சர் ராஜ்நாத் சிங், உ.பி. முதல்வர் யோகி வரை தேர்தல் பரப்புரைக்கு வந்த அனைவரும் வலியுறுத்தினர். அப்போது கூட, திருப்பரங்குன்றத்தைப் போல, முருகன் கோவிலும் தர்காவும் அக்கம்பக்கமாக, மத நல்லிணக்கத்தின் சின்னமாக இருப்பது போல அயோத்தியை மாற்றுவோம் என்று சொல்லத் தயாராக இல்லை. சொல்ல மாட்டார்கள். அயோத்தியில் எப்படி பாபர் மசூதி இடிக்கப்பட்டதோ அதே போல திருப்பரங்குன்ற மலையில் இருக்கும் தர்காவை அகற்றுவோம் என்று வெளிப்படையாகச் சொல்கிறார்கள். அது மட்டுமல்ல, தர்கா அருகில் உள்ள தூணில் தீபத்தை ஏற்றியே தீருவோம் என அவர்களது தேர்தல் அறிக்கை சொல்கிறது. இதுவே பிஜேபியின் மதவெறி அரசியல் திட்டத்தை, தமிழ்நாட்டு மக்களை மதவெறி அடிப்படையில் துண்டாட, வெறுப்பு அரசியலை ஊட்டி வளர்த்திட நினைக்கும் அதன் சதியை அம்பலப்படுத்துகிறது. ஏப்ரல் 12 அன்று சாத்தூர் முதல் மதுரை வரை சாலையோர பரப்புரையில் ஈடுபட்ட பிஜேபியின் அகில இந்திய தலைவர் நிதின் நபின், ஊழல் திமுக என்றும் தாங்கள் ஊதி வளர்க்கும் மதவெறி அரசியல் பற்றி மட்டுமே மாறி மாறிப் பேசினார்.
மதவெறி அரசியல் கலந்த ஆட்சி முறை
முருகப் பெருமானுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் தைப் பூசம் அரசு விழாவாக அறிவிக்கப்படும் என்கிறது பிஜேபி. எம்மதமும் சம்மதம் என்றல்ல. இந்து மதமே அரசின் மதம் என்கிறது தேர்தல் வாக்குறுதி. அது அத்தோடு முடியவில்லை. ‘திருக்கோவில் நித்திய பூஜை தொகுப்புத் திட்டம்’ என ஒன்றை அறிவிக்கிறது. அதன்படி, சூடம், நெய் / எண்ணெய், 60 கிலோ அரிசி, குங்குமம், மஞ்சள், விபூதியை அரசே வழங்கும் என்கிறது. அதே போல, பூஜைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான கோவில் மணி, தாம்பூலம், ஆரத்திக்கான பொருட்கள், பூஜைக்கான வேட்டி-சேலை தொகுப்பு இவை அனைத்தையும் அரசே இலவசமாக வழங்கும் என்கிறது. பெண்களுக்கு ஒருமுறை பயனாக அளிக்கும் தொகை கூட ரூ 10 ஆயிரம்தான். ஆனால், பூஜை புனஸ்காரங்களுக்காக ஆண்டுதோறும் ரூ 25,000 வழங்கப்படும் என்கிறது பிஜேபியின் தேர்தல் அறிக்கை. பூஜைக்கு என பொருட்களை அரசே வழங்குவதன் மூலம் தெய்வ வழிபாட்டைப் பயன்படுத்தி மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி, அதன் மூலம் தனது மதவெறி அரசியலை வளர்த்து விடலாம் என திட்டமிடுகிறது.
இதை இன்னும் வளர்த்திடுவதை நோக்கமாகக் கொண்டு, பலதரப்பட்ட கடவுள்களையும், குறிப்பாக முருகனையும் தாண்டி வெவ்வேறு கிராமத் தெய்வங்களை வழிபடுவதை அதிகரித்திட, “தமிழக கிராமத் தெய்வங்கள் சங்கமம்” எனும் திட்டத்தையும் அறிவித்திருக்கிறது. இது ஒருபுறம் கிராமங்களில் தெய்வ வழிபாட்டைக் கைப்பற்றி, பிராமணியத்தின் ஆகம விதிகளுக்குள் அடங்காத கிராமத் தெய்வங்களை அல்லது சிறு தெய்வங்களை பிராமணிய சட்டகத்துக்குள் உள்வாங்கிக் கொள்ளும் நோக்கம் கொண்டது. இன்னொருபுறம், பெருந்தெய்வ வழிபாட்டை, ஆகம விதிகளை முன்வைக்கும் பிராமணியத்திற்கு எதிராக, இந்துத்துவ சனாதனத்திற்கு எதிராக, திமுக அரசு சிறு தெய்வ வழிபாட்டை முன்நிறுத்துகிறது, அதுதான் தமிழர் கலாச்சாரம் என்கிறது, குடமுழுக்குகள் நடத்துகிறது என்பதனால் அதற்கு பதில் வினையாற்றும் நோக்கத்தையும் கொண்டது. ஆகம விதிகளுக்குள் வராத, கிராமத் தெய்வங்களையும் அதை வணங்குபவர்களையும் இந்துத்துவ வரையறைக்குள் அடைக்கப் பார்க்கிறது ஆர்எஸ்எஸ்-பாஜக. பண்டைய தமிழ்நாட்டில் கடவுள் வழிபாடு இருந்ததற்கான அடையாளமே கீழடி அகழ்வாராய்ச்சியில் காணப்படவில்லை. அதனால்தானோ என்னவோ, கலாச்சாரத் தலைநகரமான தமிழ்நாடு குற்றத் தலைநகரமாக மாற்றப்பட்டுவிட்டது என்று கூறும் பிஜேபி, தமிழ் மக்களின் கலாச்சாரத் தொன்மையை நிரூபிக்கும் கீழடி அறிக்கையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
நாடு முழுவதும் காசிக்கு செல்ல இலவச பயண வசதியை வழங்குவது போல, தமிழ்நாட்டில் உள்ள திருத்தலங்களுக்குச் சென்றுவர, “தமிழக திருத்தல யாத்திரை” எனும் திட்டத்தையும் முன்வைத்திருக்கிறது.
இவ்வாறாக, தமிழ்நாட்டு மக்களின் சமூக, பொருளாதார ரீதியான முற்போக்குப் பயணத்தை, பின்னோக்கிய பயணமாக மாற்றிட எத்தனிக்கிறது.
சூடான விவாதங்கள் குறித்து சூட்சும மவுனம் சாதிக்கும் பிஜேபி
மிகத் தாமதமாகத்தான், தேர்தல் பரப்புரை காலம் துவங்கி 5 நாட்களுக்குப் பிறகுதான், தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பிஜேபி. அதில் தமிழ்நாட்டு அரசியலில் சூடாக விவாதிக்கப்படும் எது பற்றியும் சொல்லப்படவில்லை.
தமிழ்நாட்டு ஏழை, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்களின் முன்னேற்றத்தைப் பறித்துவிட்ட நீட் குறித்து பிஜேபி எதுவும் சொல்லவில்லை. இரு மொழிக் கொள்கைதான் என்கிறது தமிழ்நாடு அரசு. மொழிக் கொள்கை பற்றி மூச்சு விடவில்லை பிஜேபியின் அறிக்கை. அதேவேளை, வரும் கல்வியாண்டில் மும்மொழிப் பாடத் திட்டம் கட்டாயம் என்று தேர்தல் சமயத்திலேயே ஒன்றிய கல்வி அமைச்சர் அறிவிக்கிறார். மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்தாததால் தமிழ்நாட்டுக்குத் தராமல் நிறுத்தி வைக்கப்பட்ட ரூ.1200 கோடி நிதியை வழங்குவது பற்றி வாய் திறக்கவில்லை. எல்லாவற்றையும் தனியாரிடம் கொடுத்துக் கொண்டிருக்கும் பிஜேபி, ஏழை மாணவர்களுக்கு கல்வியை எட்டாக்கனியாக்கும் கல்வி தனியார்மயமாக்கத்தை திரும்பப் பெற வாக்குறுதிகூட அளிக்காது என்பது தெரிந்ததுதான். கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் காணப்படும் சாதி ஆதிக்கத்தை, ஒடுக்குமுறையை ஒழித்துக்கட்ட சட்டம் இயற்றுவது பற்றியோ, பல்கலைக் கழக மானியக் குழுவின் சுற்றறிக்கையை அமுல்படுத்துவது பற்றியோ பிஜேபி எதுவும் சொல்லாததில் வியப்பேதுமில்லை.
கூட்டாட்சி முறை
தமிழ்நாடு குறித்த விசயங்களை தீர்மானிப்பது தமிழ்நாட்டு மக்களா, டெல்லியா என நடந்து வரும் விவாதம் பற்றி கப்-சிப்பென இருக்கிறது.
அதீத அதிகார மையப்படுத்தல், பொருளாதார மையப்படுத்தல், சர்வாதிகார ஆட்சி முறை, ஒற்றை ஆட்சி முறை பற்றி கனவு காணும் பிஜேபி, கூட்டாட்சி முறை, கூட்டாட்சி தத்துவம் பற்றி, பொருளாதார கூட்டாட்சி பற்றி அறிக்கையில் கள்ள மவுனம் சாதிக்கிறது. தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதாச்சாரத்தைக் குறைக்க மாட்டோம் என சொல்லவில்லை. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படுமா, 2026 அடிப்படையில் செய்யப்படுமா என்பது குறித்து பின்னர் நாடாளுமன்றம் தீர்மானிக்கும் என அந்த மசோதா சொல்கிறது. ஒன்றிய – மாநில உறவுகள், அதிகாரங்கள் பற்றி பரிந்துரை செய்ய தமிழ் நாடு அரசு ஒரு கமிட்டி அமைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் வளர நினைக்கும் பிஜேபி, மாநில அதிகாரம் பற்றிய விவாதம் குறித்தும் மவுனம் சாதிக்கிறது. இவை பற்றியெல்லாம் வாய் திறந்தால் தோல்வி உறுதி என்கிற பயத்தின் காரணமாக ஆழ்ந்த மவுனம் காத்தது போலும்.
சட்டம்-ஒழுங்கு – பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள்
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவது என்கிற பெயரில் விலாவரியாக பேசும் பிஜேபி ஒரு ஒடுக்குமுறை போலீஸ் ஆட்சியை உருவாக்குவதற்கான தனது கருத்தையே முன்வைத்திருக்கிறது. பெண்கள் பிரதிநிதித்துவம், பாதுகாப்பு குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கும் பிஜேபி, தற்போது இருக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளில் 33 சதவீதத்தை பெண்களுக்கு ஒதுக்க மறுக்கிறது. மாறாக, அவசியமே இல்லாமல், தொகுதி மறுவரையறையையும், பெண்களுக்கு இட ஒதுக்கீட்டையும் இணைத்து, அந்த மசோதா நாடாளுமன்றத்தில் தோற்றுப் போகும் என்று தெரிந்தே அந்த நிலையை உருவாக்கியது. அதன் மூலம் பிஜேபி மட்டுமே பெண்கள் நலன் காக்கும் கட்சி என, தேர்தல் நேரத்தில், தம்பட்டம் அடித்துக் கொள்ள முயற்சித்தது. தமிழ் நாட்டில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன, அதைத் தடுத்திடுவோம் என வெறும் பேச்சுக்குக்கூட சொல்லவில்லை. சாதியாதிக்க, ஆணவக் கொலைகள் தமிழ்நாட்டில் நடந்த வண்னம் இருக்கின்றன. அதைத் தடுத்திட தனிச் சட்டம் இயற்றுவோம் என்று சொல்ல மறுக்கிறது. பள்ளி, கல்லூரிகளிலும் கூட சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் அதன் திட்டம், காவல்துறை நவீனமயமாக்கம், அதிவிரைவு நீதிமன்றங்கள் போன்றவை அத்தகையதோர் போலீஸ் ஆட்சி எனும் கனவோடு பொருந்திப் போவதாகவே இருக்கின்றன.
பிஜேபியின் தேர்தல் அறிக்கை என்பது தனது ஒற்றை ஆட்சிக் கனவுகளை, பாசிச இந்து ராஷ்ட்ர கனவுகளை, தமிழ்நாட்டை வெறுப்பு அரசியல் நாடாக மாற்றும் கனவுகளைத்தான் - சிலவற்றை வெளிப்படையாகவும், சிலவற்றைக் குறித்து மவுனம் சாதிப்பதன் மூலமும் - முன்வைத்திருக்கிறது. ரூ 2000, ரூ.10,000, கேஸ் சிலிண்டர்கள் போன்ற ஜனரஞ்சகத் திட்டங்களும், அதிமுகவோடு கூட்டணி என்பதும் பிஜேபியின் அத்தகைய கொடூர நோக்கத்தை மறைப்பதற்கான முகமூடிகள்தானே தவிர வேறேதுமில்லை.
பிஜேபியின் தேர்தல் அறிக்கை வெறுமனே தேர்தலுக்கானது மட்டுமல்ல, நாளைய தமிழ்நாட்டை எந்தத் திசையில் கொண்டுபோக விழைகிறது என்பதை சுட்டிக்காட்டும் அதன் தமிழ்நாட்டுக்கான பாசிசக் கனவு அறிக்கை.
