இதிகாச புனைவுகளும் இரத்தம் சிந்திய வரலாறும் கொண்டது ராமேசுவரம் முதல் கந்தர்வக்கோட்டை வரையிலான பழைய முகவை மாவட்டம். பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராட்டங்களாலும், ஆகஸ்ட் விடுதலைப்புரட்சி தியாகிகளாலும் புகழ்பெற்றது சிவகங்கை மண்.
விடுதலைக்குப் பிறகு வறுமை ஒழியும், வளமை கொஞ்சும், சமத்துவம் மலரும், ஜனநாயகம் தழைக்கும் என்று காத்திருந்த விவசாயிகள், அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கொழுத்த கதர் சட்டைகளே கோலோச்சின. மிட்டா மிராசுகளின் ஆட்சியே நிலத்தின்மீது, பொதுச் சொத்துக்களின் மீது ஆதிக்கம் செலுத்தின. ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மிட்டா மிராசுகளின் விரல் சொடுக்கின்படி சேவகம் செய்தனர். அன்றைய நிலைமை, அடித்தட்டு மக்களின் சமத்துவத்திற்கும் சுயமரியாதைக்கும் பெரும் தடைக் கற்களாக இருந்தன.
வரலாறு நின்று போய்விடவில்லை. அது நிலத்துக்கான போராட்டமாக பயணத்தைத் தொடங்கியது. சமூக சமத்துவத்துக்கான கூர்மையான போராட்டங்களாகத் தொடர்ந்தது. இனாம் நிலம் ஒழிக்கப்பட் டாலும் உழுதவர்களுக்கு நிலம் வந்து சேரவில்லை. உழவர்களின் போராட்டங்கள் வெடித்துக்கிளம்பின. காந்திக்கே சவால் விட்ட சாதி ஒடுக்குமுறையாளர்களை எதிர்த்து சமத்துவத்துக்கான போராட்டம் பீறிட்டுப் பரவியது. இமானுவேல் சேகரன் தியாகியானார் (1956). சுயமரியாதை கருஞ்சட்டைக்காரர்களும் செஞ்சட்டை தோழர்களும் சிவகங்கை மண்ணில் வேர்விட்டனர்.
இந்த வரலாற்றுத் தடங்களின் தொடர்ச்சியாக, நக்சல்பாரி விவசாய எழுச்சியில் பிறப்பெடுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) சிவகங்கை மண்ணில் களமாடத் துணிந்தது. பட்டியலின மக்களின் சமத்துவத்திற்காக, சாதி ஒழிப்பை இலட்சியமாகக் கொண்ட போராளிகளும் தலைவர்களும் பண்ணையார்களால் படுகொலை செய்யப்பட்ட காலமது. புரவி எடுக்கும் உரிமை எங்களுக்கும் உண்டு என கர்ஜித்த உஞ்சனை அய்வர் படுகொலை செய்யப்பட்டனர். நிலம், கூலிக்காகப் போராடிய விவசாயிகளின் போராட்டமும், சுயமரியாதை, சமத்துவத்துக்காகப் போராடிய வர்க்கப் போராட்ட வடிவங்களை முன்னெடுக்க சிவகங்கை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியின் உழைக்கும் விவசாயிகள் சங்கம் கட்டப்பட்டது. மாவட்டத் தலைவராக தோழர் சுப்பு வெகுசிறப்பாக செயல்பட்டார். நிலம், கூலி, சுயமரியாதை முழக்கங்களை கிராமங்கள் தோறும் சின்னச்சின்ன குடியிருப்புகள் தோறும் கொண்டு சென்றார். களவங்குடி சாதி ஆதிக்கவாதிகள், கல்லூரணி கிறித்தவ ஆதி திராவிடர்களுக்கு விவசாயத்திற்கான நீராதாரங்களை தர மறுத்து நெருக்கடி தந்த பொழுது, தோழர் சுப்பு ஏழைவிவசாயிகளுக்கு ஆதரவாக நின்றார் தோழர் சுப்பு.
சிறுவாட்சி, கங்கணி, துத்தகுடி தலித்துகளின் நிலத்தை அபகரித்த ஆதிக்கவாதிகளிடமிருந்து நிலத்தை மீட்டுக்கொடுத்தது மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி. வடுகணி மக்களின் கண்மாயை மீட்டது, தத்தணி மக்களின் நிலங்களுக்கு பட்டா பெற்றுக் கொடுத்தது. மொன்னாணி நிலமற்ற விவசாயிகளுக்கு 46 ஏக்கர் அரசு நிலங்களை எடுத்துக் கொடுத்தது ஆகியன குறிப்பிடத்தக்க நிலப் போராட்டங்களாகும். அதன் தொடர்ச்சியாக மொன்னாணி, உலக்குடி கிராமத்தாருக்கு 106 ஏக்கர் நிலங்களை மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் கட்சி வழிகாட்டியபடி அனைத்திந்திய விவசாய கிராமப்புர தொழிலாளர் சங்கம் தோழர்கள் சிம்சன், நாராயணன் தலைமையில் கையகப்படுத்தி நிலமற்றோருக்கு வழங்கினர்.
நாட்டுத் தலைமையின் நிலங்களுக்கு மட்டும் பயன்படும் விதத்தில் முத்துக்கண்மாய் அருகே அணை கட்டுவதற்கு எடுத்த முயற்சியை உழைக்கும் விவசாயிகள் சங்கத் தலைமையில் சாதிப்பிரிவினைகளை தாண்டி அனைத்து விவசாயிகளையும் அணி திரட்டி வென்றார் ஏழை விவசாயிகளின் தலைவர் சுப்பு. நாட்டுத் தலைமை நாக்கை கடித்துக் கொண்டது.
கிராமப்புர வறியவர்களை அணிதிரட்டவும் நிலமற்ற கூலி ஏழை விவசாயிகளின் கோரிக்கைகளை முன்னெடுக்கவும் அன்று தோழர் சுப்பு செய்த துணிச்சலான போராட்டங்கள் அனைத்திந்திய விவசாய கிராமப்புர தொழிலாளர் சங்கமாகவும் அகில இந்திய விவசாயிகள் மகாசபையாகவும் இன்று எழுந்து நிற்கிறது. அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான நாடு கட்டமைப்பின் பிளவு நடவடிக்கைகளையும் மீறி பட்டியல் சமூக, பிற்படுத்தப்பட்ட சமூக விவசாயிகளையும் சங்கத்தில் ஒன்றுபடுத்தினார் தோழர் சுப்பு! கிராமப்புர தொழிலாளர், ஏழை நடுத்தர விவசாயிகளின் தலைவர் தோழர் சுப்பு!
அன்று, சாதி ஆதிக்கம், பட்டியலின சமூக மக்களுக்கு சமத்துவத்தை மறுத்தது. சமமாய் அமர்ந்து டீ குடிக்க அனுமதிக்கப்படவில்லை. அதற்கு எதிர் வினையாகத்தான் மாடக்கோட்டைக்கு செல்லும் முகப்பு பாதையில் “சிங்கமுகம் டீ கடை” யை திறந்தார் சுயமரியாதைப் போராளி சுப்பு! தாயாரின் சிறுவாட்டுப் பணம் நண்பர்களின் நன்கொடையில் தொடங்கப்பட்ட டீக்கடை அரசியல் கூடமாக உயர்வு பெற்றது.
அந்த நாட்களில் தேவகோட்டையிலிருந்து சிறுவாட்சி வரை சாலை இல்லை. அதனால் பேருந்தும் இல்லை. 1982 ல் தேரளப்பூர் பாலம் அருகே விவசாயிகள் சங்கத்தின் டோல்கேட் அமைத்து அரசு அதிகாரிகள் வந்த சிற்றுந்து சக்கரங்களின் காற்றைப் பிடுங்கி விட்டு விவசாயிகளை கலகம் செய்ய வைத்தார் கலகக்காரர் சுப்பு!
ஊராட்சிமன்ற அதிகாரம் ஒரு தரப்புக்கு மட்டுமே இருக்க வேண்டுமா? அரசமைப்புச் சட்டப்படி அனைத்து தரப்பும் பங்குபெற வேண்டாமா? என்ற கேள்வி கேட்ட சுப்பு, ஆதிக்க சக்திகளுக்கு சவால் விட்டு பொதுத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பதவிக் காலம் முடியும் வரை நேர்மையுடன் செயல்பட்டார். அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில் முதுகெலும்புடன் எழுந்து நின்று செயல்பட்டார் மக்கள் தலைவர் சுப்பு!
சிறுவாட்சி சாலை வசதிக்காக அதனை இணைக்கும் நகராட்சி சாலையைப் போடுவதற்காக நகராட்சி அதிகாரிகளின் மெத்தனத்தை அம்பலப்படுத்தும் விதமாக எருமை மாடுகளை நகராட்சி அலுவலகத்திற்குள் குடியேற வைத்தார். ஊழல் அதிகாரிகளுக்கு சிம்ம சொப்பனமாக நின்றார் தோழர் சுப்பு.
இன்று சங்கர், கண்ணகி, முருகேசன், கோகுல்ராஜ் காதலுக்காக கொல்லப்படுகின்றனர். ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கேட்டு போராட்டம் நடந்து வருகிறது. அந்த நாட்களிலேயே, சாதி மறுப்பு காதல் திருமணங்கள் நடக்கும் இடமாக இருந்தது இகக(மாலெ) அலுவலகம். காதலர்களை சேர்த்து வைத்தார் காதலர்களின் காதலன் தோழர் சுப்பு! பெண்களை போராட்டக் களத்திற்கு தலைமை தாங்கும் பொறுப்புக்கு வர விடாப்பிடியாக பாடுபட்டார். பெண்கள் மனம் திறந்து பேசும் நம்பிக்கையான நண்பன் தோழர் சுப்பு!
இவற்றின் உச்ச கட்ட போராட்டம்தான் 1992ல் நடந்த சிறுவாட்சி கோவில் நுழைவுப் போராட்டம். 1984ஆம் ஆண்டிலிருந்து சிறுவாட்சி முத்துநாச்சி அம்மன் கோவில் திருவிழாவில் பட்டியலின மக்களுக்கு சம உரிமையும், மரியாதையும் வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அக்கோரிக்கையை நாடு ஏற்றுக் கொள்ளுமா? ஒதுங்கிப் போவாரா சுப்பு?
சிறுவாட்சி முத்துநாச்சி அம்மன் கோவில் திருவிழாவில் பட்டியலின மக்கள் அடிமை வேலைகள் செய்யமாட்டோம், பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சாமி கும்பிடவும் திருவிழா நடத்தவும் உரிமை வேண்டும் என்ற கோரிக்கைகளை நாடு கூட்டத்தில் மக்கள் சார்பாக முன்வைத்தார் தோழர் சுப்பு. அவரது தலைமையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டனர். 100 ஆண்டுகளாக நுழைய முடியாத சிறுவாச்சி ஸ்ரீமுத்துநாச்சி அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் திரண்டு வழிபட்டனர். பகுத்தறிவு வாத்தியார் சுப்பு தள்ளி நின்று கைதட்டி ஆரவாரம் செய்தார். 1992 கோவில் நுழைவுப் போராட்ட வெற்றி கொண்டாட்டம் சிவகங்கை சீமையையும் தாண்டி அதிர்ந்தது. இரண்டாம் வைக்கம் போராட்டம் என்று கூறி பலரும் கொண்டாடினர். சாதிப் போராட்டம் என்று எதிர்ப்பார்ப்பு பாடிய கம்யூனிஸ்டுகளும் உண்டு!
ஒரு சமயம், தோழர் சுப்புவிடம் சாதிக் கொடுமை எவ்வளவு ஆபத்தானது எனச் சொன்னபோது, சாதியே கொடுமைதான் எனச் சொன்னார் தோழர் சுப்பு. இதன் பொருள், சாதி அழித்தொழிக்கப்பட வேண்டுமென்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதன் வலிமிகுந்த பதிவு. சாதி ஒழிப்பு போராளி தோழர் சுப்பு.
தோழர் சுப்புவின் மக்கள் செல்வாக்கு எதிராளிகளை அச்சுறுத்தியது. ஆதிக்க கோட்டையைத் தகர்த்து அதிகார சிம்மாசனத்தைச் சாய்க்கும் என பயந்தனர். தேவகோட்டை உரக்கடையில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டதை அதோடு துரும்பளவு தொடர்புமில்லாத மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் தலைவர்கள்மீது சுமத்துகின்றனர். நாட்டுத் தலைவர்கள் ஆணைப்படி தோழர் சுப்பு உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு சுமத்தி காவல்துறை சிறையிலடைத்தது.
காவல்துறையும், நாடு அமைப்பும் புனைந்த பொய் வழக்கில் நிபந்தனை ஜாமினில் வெளிவந்த தோழர் சுப்புவும், நாராயணனும் திருநெல்வேலி பாலம் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வரும் பொழுதுதான் கூலிப்படையினரால் 13.9.1994 தோழர் சுப்பு படுகொலை செய்யப்பட்டார். தடுக்கமுயன்ற தோழர் நாராயணன் வெட்டுக் காயம் பட்டார்.
இவ்வழக்கில் 1998 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தோழர் நாராயணனுக்கு ஆயுள்தண்டனை, தோழர்கள் சிம்சன், குப்பமுத்துவிற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை. உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டதால் மூவரும் 2004ஆம் ஆண்டு முதல் மதுரை மத்திய சிறையில் சிறை தண்டனை அனுபவித்தனர். சிம்சனும் குப்பமுத்துவும் 4 ஆண்டுகள் தண்டனையை முடித்து 2006ல் விடுதலையாகினர். அண்ணா பிறந்தநாளில் தமிழக அரசின் பொதுமன்னிப்பு சலுகையால் 2008ல் தோழர் நாராயணன் விடுதலை செய்யப்பட்டார்.
"கொலை தப்பில்லை" என்ற மனோபாவம் கொண்ட மண்ணில் தலைவர் சுப்புவின் கொலை, சாதி கடந்து அனைத்து சாதியிலுமிருந்து மன வருத்தத்தையும் கண்டனத்தையும் எழுப்பியது. ஜனநாயகமற்ற மண்ணை ஜனநாயகப்படுத்தும் போராட்டத்தின் வெற்றி. ஜனநாயகப் போராளி, கம்யூனிஸ்ட் போராளி தோழர் சுப்பு. புரட்சிகர சி.பி.ஐ.எம்.எல் கட்சியின் வழிகாட்டுதலில் நடந்தவை சுப்புவின் போராட்ட வரலாறு. தோழர் சுப்பு நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராளி. சாதியையும் வர்க்கத்தையும் உடைத்து நொறுக்கி சமத்துவம், ஜனநாயகம் படைக்க போராடிய சோசலிஸ்ட் போராளி.
தோழர் சுப்புவை நினைவு கொள்ளும்போது, சமத்துவ போராளி இமானுவேல் சேகரன், சந்திரபோஸ், சுப்புவுடன் சேர்ந்து களமாடிய நமசு, கோட்டைச்சாமி, குப்பமுத்து, அலெக்சாண்டர், சேவியர், சிலுவை முத்து, இம்மண்ணில் கால்பதித்து வழிகாட்டிய தோழர் வினோத்மிஸ்ரா, பிவி சீனிவாசன், டிகேஎஸ் ஜனார்த்தனன், சுகுந்தன் (கீர்த்தி வல்லபன்) ஆகியோரையும் நினைவு கூர்கிறோம். நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போரில் செப்டம்பர் 2 ல் படுகொலை செய்யப்பட்ட தோழர்கள் சந்திரசேகர், சந்திரகுமார், ஆட்சியாளர்கள் உத்தரவுப்படி காணாமலாக்கப்பட்ட முதல் மாநிலச் செயலாளர் தோழர் அப்பு, பாலன் உள்ளிட்டோரையும் நினைவு கூர்கிறோம். அஞ்சலி செலுத்துகிறோம்.
மக்கள் வாழ்வுக்கும், மாணவர்களது கல்விக்கும், இளைஞர்களது எதிர்காலத்துக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சிக்கும் ஆபத்தான ஆக்டோபஸ் கார்ப்பரேட்- பாசிசத்தை வீழ்த்திட முன்னேறிச் செல்ல நமக்கு உணர்வூட்டுகிறது; உரமேற்றுகிறது.
பழைய கதர் வேட்டிகளும், கருப்பு சிவப்பு கரைவேட்டிகளும் தவெக முகவரியில் தஞ்சமடைந்து வருகின்றன. அரசியல் நிறம் மாறுகிறது. மனிதர்களின் முகம் மாறுகிறது. அதிகாரம் கைமாறுகிறது. இடதுசாரிகள் தான் ஒரே மாற்று என்பதை மாறியுள்ள அரசியல் அறுதியிட்டுச் சொல்கிறது. இடதுசாரிகள் அரசியலின் மய்யத்துக்கு வரவேண்டும். மாற்றத்துக்கு வழிகாட்டுகிறவர்களாக வரவேண்டுமென தோழர் சுப்பு அடிக்கடி கூறுவார். அது அவரது ஆழ்ந்த விருப்பம்!
பாசிசம் வீழ்க; ஜனநாயகம் வெல்க!
தமிழக அரசியலை இடதுசாரிகள் வெல்க!
தியாகி சுப்புவிற்கு செவ்வணக்கம்!
தோழர் சுப்பு நினைவேந்தல்
செப்டம்பர் 13, 2026 அன்று மாடக்கோட்டையில் தோழர் சுப்பு நினைவு இடத்தில், கொடியேற்றத்துடன் நினைவேந்தல் நிகழ்ச்சி தோழர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது. செப்டம்பர் 14 அன்று "பாசிச பாஜக மோடி அரசை வெளியேற்றுவோம் இடதுசாரி அரசியலை வலுப்படுத்துவோம்!" என்ற பொருளில் கருத்தரங்கு தேவகோட்டையில் நடைபெற்றது. இகக(மாலெ) சிவகங்கை மாவட்டச் செயலாளர் அ.சிம்சன் தலைமை தாங்கினார். மத்திய கமிட்டி உறுப்பினர் பாலசுந்தரம் சிறப்புரை ஆற்றினார். மாநிலக் கமிட்டி உறுப்பினர்கள் நாராயணன், திருநாவுக்கரசு மாவட்டக்குழு உறுப்பினர்கள் மதிவாணன், செந்தமிழ், ஜெய்சங்கர், முத்துராஜா, செல்வராஜ், தனுசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மாவட்டச் செயலாளர், மெய்யர், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முருகபூபதி, சந்தன மேரி உள்ளிட்டோர் உரையாற்றினர்.
1) பாசிச பாஜக-விற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தவும் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட்டுகளின் இடதுசாரி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், வலுவான தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்வது எனவும்;
2) வரும் ஆண்டில் தோழர் சுப்பு வின் போராட்ட வரலாற்றை நூலாக கொண்டு வரவும் அவரது உருவச் சிலை ஏற்படுத்த குழு ஒன்று ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
3) தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்; தேவகோட்டையில் அரசு கலைக்கல்லூரி ஏற்படுத்திட வேண்டும்;
4) கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து வகையான விவசாயப் பயிர்க்கடன்களையும் (வட்டி மற்றும் அபராத வட்டி உட்பட), எவ்வித நிபந்தனைகளுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்வதோடு, அடுத்த சாகுபடிக்கான புதிய விவசாயக் கடன்களை எவ்விதத் தடையுமின்றி உடனடியாக வழங்க வேண்டும்;
5)கண்டதேவியில் தேர்வடம்பிடிக்க விரும்பும் அனைத்து தரப்புமக்களது உரிமையையும் விருப்பநத்தையும் நிறைவேற்றி நீதிமன்ற தீர்ப்பை காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் முழுமையாக உறுதிசெய்திட வேண்டும்;
6) காளையார்கோவில் தூய்மைப் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்ட பட்டாக்களுக்குரிய வீட்டு மனைகளை அளந்து அளிக்க வேண்டும். சட்டப்படியான கூலி, பணி நிலைமைகளை அமலாக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்றிட வேண்டும்;
7) மானாமதுரையில் தனியார் தொழிற்சாலைத்திட்டம் கைவிடப்பட்டதால், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அந்த விவசாயிகளுக்கே திருப்பி அளிக்க வேண்டும், சிவகங்கை அருகே விவசாயத்துக்கு எதிரான சிப்காட் திட்டத்தைக் கைவிட வேண்டும்;
8) முந்தைய வேலை உறுதிச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரான விபி கிராம் ஜி திட்டத்தை கைவிட்டு கேட்கும் அனைவருக்கும் தடையின்றி வேலைதர வேண்டும். கட்டடம், கைரேகை படம் எடுப்பதை கைவிட வேண்டும்;
9) காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்;
உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
