ன் தாப்பர்: நேகா, நீங்கள் ஒரு போராட்டப் பேரணியை நடத்த முயன்றீர்கள், ஆனால் காவல் துறையினர் உங்களைத் தடுக்க தங்களாலான அனைத்தையும் செய்தனர். காவல் துறையினர் நடந்து கொண்ட விதத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
நேகா: இந்தப் போராட்டங்களின் மூலம் நாம் காண்பது, வீதிக்கு வந்து போராடக்கூடிய ஒரு புதிய தலைமுறை உருவாகியுள்ளது என்பதை அரசாங்கம் புரிந்துகொண்டுள்ளது. அதனால்தான், ஜனநாயக ரீதியாக போராடும் உரிமையை எங்களுக்கு அளித்தால், நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிக்கு வந்து போராடுவார்கள் என்பதால், எங்களின் ஜனநாயகப் போராட்டங்களைக் கண்டு அரசு பயப்படுவதால், எங்களை 5 நிமிடம் கூட எங்கும் கூடி நிற்க அரசு அனுமதிப்பதில்லை. ஜந்தர் மந்தரை போராட்டக் களமாக நாங்கள் அறிவிக்கவில்லை, அது அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட இடம். ஆனால், இப்போது அந்த இடத்தில் மக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை எதிரொலிப்பார்கள் என்று தெரிந்ததும், ஜந்தர் மந்தரில் போராட அரசு தடை விதித்துள்ளது. நகரின் எல்லைகளுக்குச் சென்று போராட வேண்டும் என்கிறார்கள். அரசு அனுமதிக்கும் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே போராட வேண்டும் என்பது ஜனநாயகப் போராட்டத்தின் நோக்கத்தையே சிதைத்துவிடும்.
கரன் தாப்பர்: காவல் துறையினரால் நீங்கள் இரவு முழுவதும் பல மணி நேரம் காவலில் வைக்கப்பட்டீர்கள். அவர்கள் உங்களை எப்படி நடத்தினார்கள்?
நேகா போரா: என்னை அவர்கள் தனிமைப்படுத்தி வைத்தனர். ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், காவலர்கள் என்னைப் பிற போராட்டக்காரர்களிடமிருந்து பிரித்துச் செல்ல முயன்றபோது, முகமூடி அணிந்த இரண்டு மூன்று பெண்கள் அங்கு வந்தனர். அவர்களை நான் சக மாணவியர் என்றுதான் நினைத்தேன். பின்னர்தான் தெரிந்தது, போராட்டக்காரர்கள் போல வந்து என்னுடன் இருந்தவர்கள் அனைவரும் சாதாரண உடையில் இருந்த பெண் காவலர்கள் என்று! இது அப்பட்டமான ஏமாற்று வேலை. என்னைப் பாலம் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். மாலைக்கு பிறகு ஒரு பெண்ணைக் காவலில் வைக்கக் கூடாது என்று நான் பலமுறை கூறினேன். அவர்கள் கேட்கவில்லை. பின்னர் என்னை ஆர்.கே.புரம் காவல் நிலையத்திற்கு மாற்றினர். எனது பையைச் சோதனையிட்டனர், எனது செல்பேசியைப் பறித்துக்கொண்டனர். வழக்கறிஞரைச் சந்திக்கவோ, பேசவோ என்னை அனுமதிக்கவில்லை. அதிகாலை 2-3 மணியளவில் எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது மற்றவர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே வந்து கேட்ட பிறகுதான் எனக்கு மருந்து கொடுத்தனர். சில ஆவணங்களில் கையெழுத்திடும்படி என்னை வற்புறுத்தினர். எனது வழக்கறிஞர் இல்லாமல் நான் எதிலும் கையெழுத்திட மாட்டேன் என்று உறுதியாக மறுத்துவிட்டேன். மாலை 5 மணிக்கு என்னைக் கைது செய்து, மறுநாள் காலை 5:36 மணிக்கு விடுவித்தார்கள்.
கரன் தாப்பர்: கைது வாரண்ட் உங்களிடம் காட்டினார்களா?
நேகா போரா: இல்லை. "நீங்கள் கைது செய்யப்பட்டுள்ளீர்கள்" என்று பலமுறை கூறினார்கள், ஆனால் எந்தப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டேன் என்பதைக் கூற மறுத்துவிட்டார்கள். "உங்களைப் பற்றி ஒரு முடிவு எடுக்கப்பட்டு வருகிறது" என்று மட்டுமே திரும்பத் திரும்பக் கூறினார்கள். என்னை காவலில் வைத்தது பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால்தான் என்னைக் கைது செய்ய முடியாமல் போனது என நினைக்கிறேன்.
கரன் தாப்பர்: உங்களிடம் அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திடக் கூறினார்கள். அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
நேகா : இது மிகவும் முக்கியமான விஷயம். 'அமைதிப் பத்திரம்' என்ற பெயரில் சமூகச் செயல்பாட்டாளர்கள் இனி எந்தப் போராட்டத்திலும் பங்கேற்கவோ, போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கவோ மாட்டோம் என எழுதி வாங்குவதுதான் இவர்களின் திட்டம். அமைதியான முறையில் போராட அரசியலமைப்புச் சட்டம் எங்களுக்கு உரிமை அளிக்கிறது. ஆனால் "அமைதியை குலைக்க மாட்டேன்" என்று அவர்கள் கூறுவதன் பொருள் என்ன? அபிஜித் தீப்கே தனது வீட்டிற்கு வெளியே தேசிய கொடியை அசைத்ததற்காக அவரை கைது செய்தார்கள். இதில் எங்கு அமைதி குலைந்தது? ‘அமைதிப் பத்திரம்’ என்பது, ஜனநாயக முறையில் போராடும் உரிமையைப் பறிக்கும் ஒரு தந்திரமாகும்.
கரன் தாப்பர்: டெல்லி உயர் நீதிமன்றம் அசுதோஷ் வழக்கில், ஜென் சி (Gen Z) தலைமுறையினரைப் பிரதிநிதித்துவப்படுத்த உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? ஐரோப்பாவின் வன்முறைப் போராட்டங்களை நீங்கள் பின்பற்றுகிறீர்களா? என்று கேட்டது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
நேகா: அந்தக் கேள்விகளைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். நாம் ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைத்து வயதினரையும் பாலினத்த வரையும் சாதி மற்றும் வர்க்கங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இந்த நாட்டில் உள்ள இளைஞர்களும் மாணவர்களும் ஊழல் மிகுந்த கல்வி அமைப்பால் பாதிக்கப்படும்போது, அவர்களுக்காக நாங்கள் போராடுகிறோம். மாணவர்களுக்காக நாங்கள் போராடும்போது மற்ற வயதினரும் எங்களுக்கு ஆதரவாக நிற்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை நோக்கமாகும்.
கரன் தாப்பர்: நீதிமன்றம் ஜனநாயகத்தின் தன்மையை தவறாகப் புரிந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. கடந்த சில நாட்களில் காவல் துறையினரின் நடத்தை பற்றி உங்கள் எண்ணம் என்ன?
நேகா: மண்டி ஹவுஸ் போராட்டத்தில் என்னைக் காவலில் வைத்ததிலிருந்து, சாதாரண உடையில் உள்ள காவலர்கள் என்னைத் தொடர்ந்து பின்தொடர்கிறார்கள். நான் எந்த வாகனத்தில் சென்றாலும் 100, 200 மீட்டர் பின்னால் அவர்கள் வருகிறார்கள். நான் தங்கும் வீடுகளுக்கு வெளியே இரவு பகலாகக் காத்திருக்கிறார்கள். என்னைப் பின்தொடர அவர்களுக்கு யார் உத்தரவிட்டது? யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் என போராட்டத்தோடு தொடர்புடைய அனைவருமே காவல் துறையினரால் பின்தொடரப்படுகிறார்கள்.
கரன் தாப்பர்: காவல்துறை மட்டுமல்ல, நாட்டின் பிரதமரும் உங்களையும் உங்கள் தோழர்களையும் 'தேசவிரோதிகள், ஆந்தோலன் ஜீவிகள், அர்பன் நக்சல்கள்' என்று குறிப்பிடுகிறார். இதைப் பற்றி..
நேகா : இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் முட்டாள்கள் என அவர்கள் நினைக்கிறார்கள். 13 கோடி மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதும் தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபடுவதும் தேசவிரோதம் என்று மக்கள் நினைக்க மாட்டார்கள் என அவர்கள் நம்புகிறார்கள். தலைமைத் தேர்தல் ஆணையரைத் தங்களுக்குச் சாதகமாகச் செயல்பட வைப்பது தேசவிரோதம் இல்லை, ஆனால் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விதிகளை மீறியதைக் கேள்வி கேட்கும் நாங்கள் தேசவிரோதிகளா? அனைவருக்குமான வாக்குரிமை என்பதுதான் ஒரு ஜனநாயகத்தை உருவாக்குகிறது. ஆனால் யாருக்கு வாக்குரிமை இருக்க வேண்டும் என்பதை அதிகாரத்தில் உள்ளவர்களே முடிவு செய்கிறார்கள்.
கரன் தாப்பர்: பாஜகவின் தேசியத் தொடர்பாளர் பிரதீப் பாரி, 2024-ல் வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சியைக் கவிழ்த்ததிலிருந்து நீங்கள் ஈர்க்கப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார். இந்தியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர வங்கதேச பாணியிலான ஜென் சி இயக்கத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்றும், வன்முறையை உருவாக்க விரும்புகிறீர்கள் என்றும் உங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்.
நேகா: முதலில், வங்கதேசப் போராட்டம் பற்றி பாஜக அமைச்சர்களுக்கும் தலைவர்களுக்கும் என்ன தெரியும். அங்கு நடந்த போராட்டத்தில் பல பிரிவினரும் அமைப்புகளும் இருந்தன. சிறுபான்மையினரைப் பாதுகாக்கவும், ஜனநாயகத்தை வலியுறுத்தவும் முற்போக்கான மாணவர் அமைப்புகள் அங்கு போராடின. நான் பேசிய வீடியோ அங்குள்ள 'சோசலிச மாணவர் முன்னணி' என்ற முற்போக்கு அமைப்பிற்கு ஆதரவாக பேசப்பட்டது. ஆனால் வலதுசாரிகள் அந்த வீடியோவைத் திருத்தி, திரித்து வெளியிடுகிறார்கள். வங்கதேசத்தின் வலதுசாரிகளும் இந்தியாவின் வலதுசாரிகளும் ஒன்றுக்கொன்று எதிரிகள் போல் காட்டிக்கொண்டாலும், அவர்கள் நெருங்கிய நண்பர்கள். அராஜகம் பற்றி அவர்கள் பேசுகிறார்கள்! மக்கள் ஜனநாயக ரீதியாகப் போராடுவார்கள் என்பதற்காக, இரவோடு இரவாக ரயில்களை நிறுத்துவதும், டெல்லியில் 57 மெட்ரோ நிலையங்களை மூடிவிட்டு மக்களை முடக்குவதும்தான் அராஜகம். 13 கோடி மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிப்பதுதான் உண்மையான அராஜகம்.
கரன் தாப்பர்: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தப் போராட்டங்கள் திட்டமிட்டு தூண்டப்படுகிறது என்றும், அராஜகத்தைப் பரப்ப தவறான தகவல்களை ஆயுதமாகப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டுகிறார். தேசிய நலனுக்கு மேல் அரசியல் நலனை வைப்பதாகவும் அவர் கூறுகிறார். இதற்கு உங்கள் பதில் என்ன?
நேகா: தேசிய நலன் என்பது பாஜகவின் நலன் என்றே அவர்கள் கருதுகிறார்கள். அதிகாரத்தில் இருப்பதே தங்களின் பிறப்புரிமை என்று அவர்கள் நினைக்கிறார்கள். தேர்தல் ஆணையரைத் தங்கள் சட்டைப் பையில் வைத்துக்கொண்டு, அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் மிரட்டி, லஞ்சம் கொடுத்து, தங்களுக்குச் சாதகமாகச் செயல்பட வைக்க முடியும் என்று நினைக்கின்றனர். 13 கோடி மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதுதான் உண்மையான தேசிய நலன் சார்ந்த பிரச்சனை.
தலைமைத் தேர்தல் ஆணையர் தன் சக அதிகாரிகளாலேயே விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்படுவதுதான் தேசிய நலன் சார்ந்த மிகப்பெரிய பிரச்சனை.
கரன் தாப்பர்: வெளிநாட்டு நிதி உதவியுடன் நீங்கள் செயல்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பற்றி ?
நேகா: உண்மையில் வெளிநாட்டு நிதியுதவியைப் பெறுபவர்கள் பாஜகவினர்தான். தேர்தல் பத்திரங்கள் மூலமாகவும் பல்வேறு வெளிநாட்டு அமைப்புகள் மூலமாகவும் அவர்களுக்கு எவ்வளவு நிதி வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். இஸ்ரேல் அரசுடன் அவர்களுக்கு உள்ள உறவும் நமக்குத் தெரியும். தங்களுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கும் அனைவரையும் தேசவிரோதிகள் என்று முத்திரை குத்துவது அவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. ஹிண்டன்பர்க் அறிக்கை பற்றிப் பேசினாலும் தேசவிரோதம் என்கிறார்கள். ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அவர்கள் எதாவது ஒரு பெயரிட்டு முத்திரை குத்துகிறார்கள், எனவே அவர்களின் முத்திரைகளை மக்கள் இப்போது பொருட்படுத்துவதில்லை.
கரன் தாப்பர்: ஜார்ஜ் சொரெஸ் (George Soros) இந்தப் போராட்டங்களுக்கு எந்த வகையிலாவது நிதியுதவி செய்துள்ளாரா? அவரது பணம் இந்தப் போராட்டங்களைத் தூண்டுகிறதா?
நேகா : எனக்குத் தெரியாது. நாங்கள் போராட்டப் பதாகைகளை அச்சிட்டதற்கு இன்னும் 50,000 ரூபாய் கடன் உள்ளது. ஜார்ஜ் சொரெஸ் எங்கள் கடனை அடைத்தால் நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன். எனவே இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு.
கரன் தாப்பர்: ஜூலை மாதம் நீட் (NEET) விவகாரத்திற்காகப் போராடியபோது உங்களுக்குப் பெரும் ஆதரவு இருந்தது. அது நாடு முழுவதும் உள்ள இளைஞர்களைப் பாதிக்கும் பிரச்சனை. ஆனால் இப்போது தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விவகாரம் என்பது சற்று சிக்கலான, நேரடியாக தொடர்பில்லாத விவகாரம். இதற்கும் முன்பு இருந்த அதே அளவிலான ஆதரவு உங்களுக்கு இருப்பதாக நம்புகிறீர்களா?
நேகா போரா: இந்த முறை எங்களுக்கு இன்னும் அதிகமான ஆதரவு இருப்பதாகவே நான் நினைக்கிறேன். மக்கள் பாஜகவின் ஆட்சியின் கீழ் தாங்கள் உணரும் துயரத்தை வெளிப்படுத்த நீண்ட நாட்களாகக் காத்திருக்கிறார்கள். தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததன் மூலம் எங்களால் தெருவிற்கு வந்து போராட முடியும், வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் நடத்தும் கொடூரமான தாக்குதல் வீடியோக்களை மக்கள் சமூக ஊடகங்களில் பார்க்கிறார்கள். இருந்தும் அடுத்த நாள் அதே மக்கள் தெருவுக்கு வந்து போராடத் துணிகிறார்கள்.
கரன் தாப்பர்: அப்படியானால் போராட்டக்காரர்களுக்கு அனுதாபமும் ஆதரவும் வளர்ந்து வருகிறது, பல சந்தர்ப்பங்களில் காவல் துறையினரின், அரசாங்கத்தின் நடவடிக்கைகளே உங்கள் ஆதரவு பெருகுவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது என்கிறீர்களா?
நேகா: ஆம், இது அனுதாபமும் ஆதரவும் மட்டுமல்ல, நான் எல்லா இடங்களிலும் துணிச்சலைப் பார்க்கிறேன். இத்தனை காலம் பயந்து அடங்கி கிடந்த மக்கள் இப்போது துணிச்சலாகப் பேசுகிறார்கள். ஜனநாயகத்தைக் காக்க மக்கள் எந்த அளவிலான வன்முறையையும் தங்கள் உடல்கள் மீது தாங்கிக்கொள்ளத் தயாராக இருப்பது ஆச்சரியமளிக்கிறது.
கரன் தாப்பர்: ஞானேஷ் குமார் ராஜினாமா செய்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை, அரசாங்கமும் அவரைப் பாதுகாக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது. எனவே இந்தப் போராட்டங்கள் எவ்வளவு காலம் தொடர முடியும்? பண்டிகைக் காலம், சோர்வு ஏற்பட்டு போராட்டங்கள் வலுவிழக்கும் என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா?
நேகா போரா: இந்தப் போராட்டங்கள் வலுவிழக்கும் என்று நான் நினைக்கவில்லை. பண்டிகைகள் வருவது உண்மைதான், ஆனால் அரசாங்கம் சரியாகச் செயல்படாததால், ஜனநாயக ரீதியாகப் போராடும் உரிமையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் புரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகப் போராட மக்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்போது எதிர்க்கட்சிகளும் தங்கள் தாமதத்தை உணர்ந்து தெருவுக்கு வந்து போராடத் தொடங்கியுள்ளன.
கரன் தாப்பர்: நரேந்திர மோடி அரசாங்கத் தலைவராக 25 ஆண்டுகளை நிறைவு செய்வதை பாஜக கொண்டாடுகிறது. குஜராத் முதல்வராகவும், தற்போது இந்தியாவின் பிரதமராகவும் நரேந்திர மோடியை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
நேகா: இவருடைய வரலாறும், இவருடைய அரசியல் பின்னணியும் எங்களுக்குத் தெரியும். அவர்கள் என்ன செய்கிறார்கள், ஏன் செய்கிறார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். குஜராத்தில் அவர் என்ன செய்தார் என்பதும் எங்களுக்குத் தெரியும். 2002 குஜராத் வன்முறையில் அவரது பங்கின் காரணமாக, நீண்ட காலமாக அமெரிக்கா அவருடன் எந்த உறவும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை... தலித்துகள், முஸ்லிம்கள், பெண்கள் என இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதும், வன்முறையை விரும்புவதுமே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் அரசியல் பணிகளில் தொடர்ச்சியான ஒரு அங்கமாக இருந்து வருகிறது. நரேந்திர மோடி இந்த அமைப்புகளின் அரசியல் முகம். இந்த வன்முறையின் முகமாக, ஒட்டுமொத்த வெறுப்பு மற்றும் பாகுபாட்டுப் பிரச்சாரத்தின் முகமாக, நாட்டின் அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்ற ஒரு நாட்டின் முகமாக நான் அவரைப் பார்க்கிறேன். ஜனநாயகம் என்றால் என்ன என்பதை மறக்கடிக்கப்பட்ட ஒரு நாட்டின் முகமாக, ஜனநாயகத்தில் இருந்து எதேச்சதிகாரத்தை நோக்கித் தள்ளப்படும் ஒரு நாட்டின் முகமாகவே நான் அவரைப் பார்க்கிறேன்.
கரன் தாப்பர்: கருத்துக்கணிப்புகளின்படி நரேந்திர மோடி மிகவும் பிரபலமான பிரதமராகத் தொடர்கிறார். 2029-லும் பாஜக வெற்றி பெறும் என அமித் ஷா பெருமையடித்துக் கொள்கிறார். மோடி உங்கள் தலைமுறையினரிடையே கருத்துக் கணிப்புகள் கூறுவது போல் இன்னும் பிரபலமாக இருக்கிறாரா? அவர்களின் இந்த நம்பிக்கை தவறானதா?
நேகா: இந்தக் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் நிதியளிக்கப்படுபவர்களால் நடத்தப்படுபவை. அவர்கள் நிதியளிக்கும் ஊடகங்களில் அதை வெளியிடுகிறார்கள். மோடி எவ்வளவு பிரபலமானவர் என்பதை அறிய நாம் சமூக வலைதளங்களைப் பார்த்தால் தெரியும். அங்குதான் அதிகாரத்தில் உள்ளவர்களைப் பற்றி மக்கள் பகிரும் மீம்ஸ்கள், நகைச்சுவைகள் மற்றும் விமர்சனங்கள் அதிகம் காணப்படுகின்றன.
கரன் தாப்பர்: நரேந்திர மோடியை மதிப்பிடுவதில் சமூக ஊடகங்களே இந்தியாவின் உண்மையான குரல் என்று சொல்கிறீர்களா?
நேகா: ஆம், கருத்துக்கணிப்புகள் நேர்மையாக நடத்தப்பட்டால் நாம் அவற்றை நம்பலாம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை அப்படி நடத்தப்படுவதில்லை.
கரன் தாப்பர்: கடந்த சில மாதங்களில், நீங்கள் ஒரு மாணவர் தலைவரில் இருந்து தேசிய அளவிலான போராட்டத்தின் மிக முக்கியமான, பலராலும் போற்றப்படும் முகமாக மாறியுள்ளீர்கள். இது உங்களுக்குப் பயமாக இருக்கிறதா அல்லது உற்சாகமாக இருக்கிறதா?
நேகா : இது எனக்கு மிகவும் சோர்வளிக்கிறது. அவமானம், வன்முறை மற்றும் ஏமாற்றம் நிறைந்த வாழ்க்கையில் மக்கள் நம்பிக்கையைத் தேடுகிறார்கள். அதனால் அவர்கள் ஒரு சாதாரண மனிதரை அடையாளமாக மாற்றுகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் இது எனக்கு மிகவும் சோர்வைத் தருகிறது. சாலையில் செல்லும்போது யாராவது என்னைப் பார்த்தால், அவர்கள் என்னை அபிமானத்துடன் பார்க்கிறார்களா, அல்லது நான் பயப்பட வேண்டுமா, அல்லது அவர் டெல்லி காவல் துறையைச் சேர்ந்தவரா என்ற இந்தப் புதிய பயம்... இப்போது இது எனக்குள் இருக்கும் ஒரு புதிய பயமாக உள்ளது.
கரன் தாப்பர்: உங்களுடன் நேர்காணல் என்றவுடன், உங்கள் மன உறுதியையும் தைரியத்தையும் பாராட்டிப் பலரும் கருத்துத் தெரிவித்தனர். ஒருவர், "அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார், அவருக்கு எங்கிருந்து இவ்வளவு ஆற்றல் கிடைக்கிறது?" என்று கேட்டார். நீங்கள் சோர்வாக இருப்பதாகக் கூறுகிறீர்கள், ஆனால் இந்த ஆற்றல் எங்கிருந்து வருகிறது?
நேகா : மற்றவர்களுக்கு இது புதிதாகத் தெரியலாம், ஆனால் எனக்கும் என் அமைப்பில் உள்ள அனைவருக்கும் இது புதிதல்ல. நாங்கள் எப்போதும் இதைத்தான் செய்கிறோம். இந்த ஆற்றல் உணவிலிருந்தோ ஒரு நபரிடமிருந்தோ வரவில்லை. மாற்றத்திற்கான காலம் நெருங்கிவிட்டது என்ற எண்ணத்திலிருந்தே இந்த ஆற்றல் வருகிறது. பயம் மற்றும் ஏமாற்றத்தைத் தாண்டி, ஒரு மாபெரும் ஜனநாயக அமைப்பு தழைத்தோங்க வேண்டும் என்ற உந்துதல் தான் எங்களை இயக்குகிறது. இந்தப் போராட்டம் நசுக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
கரன் தாப்பர்: கடைசி கேள்வி. உங்களுக்கு 29 வயதாகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் நீங்கள் ஒரு எம்.எல்.ஏ அல்லது எம்.பி ஆக விரும்புகிறீர்களா? நீங்கள் அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருக்க விரும்புவீர்களா? அரசியலை உங்கள் தொழில் வாழ்க்கையின் மையமாகக் கொள்ள விரும்புகிறீர்களா?
நேகா: அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. இந்த நாட்டில் எந்த ஒரு நல்ல மாற்றமும் நாடாளுமன்றத்திற்கு உள்ளே நடக்கவில்லை, தெருக்களில் நடக்கும் போராட்டங்கள் மூலமாகவே நடந்துள்ளது. விவசாயச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதும், தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததும் தெருக்களில் நடந்த போராட்டங்களால்தான். தொழிலாளர் உரிமைகள், பெண்கள் உரிமைக்கான போராட்டங்களும் களத்தில்தான் நடந்துள்ளன. அதனால் நான் நாடாளுமன்றப் பதவிகளைப் பெரிதாகக் கருதவில்லை.
கரன் தாப்பர்: நீங்கள் ஒரு நாடாளுமன்றவாதியாக இருப்பதை விட ஒரு வீதிப் போராளியாக இருக்கவே விரும்புகிறீர்கள் அப்படித்தானே?
நேகா: ஆம், எனக்குப் பதவிகள் மீது நாட்டம் இல்லை. ஆனால் நாங்கள் நாடாளுமன்றத்திற்குச் சென்றாலும், நாங்கள் போராளிகள் என்பதை மறக்க மாட்டோம். ஒரு எம்.பியாக இருப்பதென்பது சொகுசான பிளாட், ஏசி கார் மற்றும் சம்பளம் வாங்கி வாழ்வது அல்ல; தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்காக இன்னும் அதிகமாகப் போராடுவதையே அது கோருகிறது
கரன் தாப்பர்: நேகா, எனக்காக உங்கள் நேரத்தை ஒதுக்கி, போராட்டங்கள் குறித்தும் அரசாங்கத்தின் தாக்குதல்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பது குறித்தும் நீங்கள் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி. பாதுகாப்பாக இருங்கள். வாழ்த்துகள்!
