மீண்டும் ஒருமுறை உமர் காலித்திற்கும் சர்ஜீல் இமாமிற்கும் பிணை மறுக்கப்பட்டுள்ளது. இம்முறை, டெல்லி, கர்கர்டூமாவிலுள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றம் பிணைமறுத்துள்ளது. 2020ம் ஆண்டு வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்திற்கு சதித் திட்டம் தீட்டினார்கள் என குற்றம் சுமத்தி, உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 5 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை இன்றியே சிறையில் இருக்கிறார்கள். ‘பெயில்தான் முதலில், ஜெயில் அல்ல’ என்று இந்திய உச்சநீதிமன்றமே பல முறை பல வழக்குகளில் சொல்லியிருந்தாலும்கூட, அந்த உச்சநீதிமன்றமே இவர்கள் இருவரையும் பிணையில் விடாமல் இழுத்தடித்துக் கொண்டே செல்கிறது. இந்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி இவர்களுக்கு பிணை மறுத்த உச்ச நீதிமன்றம், ஒரு நிபந்தனையையும் போட்டது. இவ் வழக்கின் பாதுகாக்கப்பட்ட சாட்சி விசாரிக்கப்பட்ட பின்னரோ அல்லது ஓராண்டு கழித்தோ இருவரும் மீண்டும் பிணை மனு தாக்கல் செய்யலாம் என்பதுதான். இந்த உத்தரவைக் காட்டிதான் விசாரணை நீதிமன்ற நீதிபதி சமீர் பாஜ்பால் தற்போதைய இந்த பிணை மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தள்ளுபடி செய்துள்ளார். சில மாதங்களுக்கு முன்புதான் உச்சநீதிமன்றத்தில், செய்யது இப்திகார் ஆண்ட்ராபி எதிர் என்ஐஏ வழக்கில், ஆண்டுக் கணக்கில் சிறையிலிருந்தால் அவர்களுக்கு பிணை வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இந்த உத்தரவு உமர் காலித்திற்கும் சர்ஜீல் இமாமிற்கும் பொருந்தாதாம். விரைவாக விசாரணையைத் தொடங்க வேண்டியதும் பாதுகாக்கப்பட்ட சாட்சியை சீக்கிரம் அழைத்து வர வேண்டியதும் யார் கடமை? ‘ஓராண்டு காலம் அல்லது பாதுகாக்கப்பட்ட சாட்சி விசாரணை முடிந்த பின் எது முதலில் வருகிறதோ அப்போது மீண்டும் பிணை மனு’ என்று சொன்ன உச்சநீதிமன்றம் பாதுகாக்கப்பட்ட சாட்சி விரைந்து அழைத்து வர அரசுத் தரப்பிற்கு உத்தரவு போடவில்லை. இங்குதான் நீதி நெறிமுறை சார்ந்து இல்லாமல், அரசின் விருப்பம் சார்ந்து நீதிமன்றம் செயல்படுவது வெளிப்படுகிறது. இப்படிப்பட்ட படுமோசமான சூழலிலும்கூட அத்தி பூத்தாற்போல், அரசமைப்புச் சட்டப்படியான அடிப்படை உரிமைகளைக் காக்கும் நீதிபதிகள் இருப்பது ஆறுதல் தருவதாக உள்ளது. மகாராஷ்டிர மாநில எஸ்டிபிஐ கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் சயீத் அகமது, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, பாபர் மசூதி இடிப்பு, ஞானவாபி மசூதி பிரச்சனை, எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தினார். அந்த போராட்டங்களில் பாஜக, மோடி-அமித்ஷா அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது என்பதற்காக, மும்பை, செம்பூர் காவல் துணை ஆணையாளர் சயீத் அகமது 12 மாதங்கள் மும்பைக்குள் வரக் கூடாது என்று 2025 டிசம்பரில் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், நீதிபதி மாதவ் ஜாம்தார், ‘ஒன்றிய அரசின் கொள்கைகளை எதிர்ப்பது, அதற்கெதிராக முழக்கங்கள் எழுப்புவது குடிமக்களின் அரசியலமைப்புச் சட்டப்படியான உரிமை. இதற்காகவெல்லாம் ஒருவரை வெளியேற்ற முடியாது. நாட்டில் தற்போது நடக்கும் வினாத்தாள் கசிவு பிரச்சனைகளுக்கு எதிராக மக்கள் போராடினால், அவர்கள் மீது வழக்கு போட்டு இப்படி உத்தரவு போடுவீர்களா? குடிமக்கள் ஒன்றிய அரசின் அடிமை கிடையாது. போராட்டம் நடத்துவது பொதுமக்களின் உரிமை’ என்று சொல்லி சயீத் அகமதுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை இரத்து செய்தார். மக்களுக்கு விரோதமான அரசின் கொள்கைகளை, திட்டங்களை எதிர்த்து எதுவும் பேசக் கூடாது, அப்படிப் பேசினால் அவர்கள் தேசத் துரோகிகள் என்று மோடி-அமித்ஷா அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நீதிபதியின் தீர்ப்பு தெளிவாகக் காட்டுகிறது. இன்னொருபுறம், வேலை கிடைக்காமல் இருப்பவர்களை கரப்பான் பூச்சிகள் என்ற இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், இல்லாத தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும், இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று வலிந்து உத்தரவு போடும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் போன்றவர்களே அதிகமாக உள்ள இந்நாள்களில், நீதிபதி மாதவ் ஜாம்தார், உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜால் பூயான் போன்றவர்களால்தான் இந்திய அரசமைப்புச் சட்டமும் ஜனநாயகமும் காக்கப்படும் என்கிற நம்பிக்கையும் நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கையும் ஏற்படுகிறது. நம்பிக்கையூட்டும் சில நீதிபதிகளைத் தாண்டி, நீதிமன்றங்கள் அனைத்தும் இந்திய குடிமக்களுக்கும் நீதி சார்ந்த நெறிமுறைகளுக்கும் நம்பிக்கை தரும் அமைப்பாக மாறப்போவது எப்போது?
