இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் ஒரு நூற்றாண்டை நிறைவு செய்துள்ளது. இந்திய நாடு பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் கீழ் இருந்தபோது, டிசம்பர் 26, 1925ல் கான்பூரில் நடைபெற்ற முதல் மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானது; தமிழ்நாட்டைச் சார்ந்த சிங்காரவேலர் அந்த மாநாட்டின் தலைவராக இருந்தார்.
இக் காலகட்டத்தில், ஒருபுறம் ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையே போர்கள் நடந்து கொண்டிருந்தன; மற்றொருபுறம் காலனிய நாடுகளின் மக்கள், தங்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தையும் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சுரண்டல்களுக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தையும் நடத்திக் கொண்டிருந்தார்கள்.
இந்திய கம்யூனிஸ்டுகள் செயலுத்தியாக காங்கிரஸ் கட்சிக்குள்ளும் தொழிலாளர்கள் - விவசாயிகள் கட்சிகளை அமைத்தும் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டு இருந்தார்கள். தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சி கண்டு அஞ்சிய பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம், கம்யூனிஸ்ட் தலைவர்கள் மீது, 1929ல் மீரட் சதி வழக்குப் போட்டு, கைது செய்து ஒடுக்க முயற்சித்தது.
எனினும், புரட்சிகரமான வர்க்கப் போராட்டங்களும் விடுதலைக்கான கிளர்ச்சிகளும் தீவிரமடைந்தன; நாடு முழுவதும் தொழிலாளர்கள், விவசாயிகள் போராட்டங்கள் வெடித்தன. ஜமீன்தாரி முறை, குத்தகைச் சுரண்டல், கந்துவட்டிக் கொடுமைகளுக்கு எதிரான விவசாயிகளின் புரட்சிகர போராட்டங்கள் வெடித்தன.
ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான மோதல்கள் இரண்டாம் உலக யுத்தத்தை உருவாக்கியது. இப்பின்னணியில், 1941ல் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் அடக்குமுறைச் சட்டங்களை போட்டு கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. 2500 கம்யூனிஸ்ட் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கான முயற்சிகளும் இயக்கங்களும் நடைபெற்றன. அதன் விளைவாக, 1942 ல் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீக்கப்பட்டது.
மீண்டும், வர்க்கப் போராட்டங்கள் (பிரிட்டிஷ் காலனியாதிக்க சக்திகளின் ஏவலாள்களாக திகழ்ந்த) நிலப்பிரபுக்களுக்கு, முதலாளிகளுக்கு எதிராக தீவிரமடைந்தன. வங்காளத்தின் தெபகா விவசாயிகள் கிளர்ச்சி, ஆந்திராவில் தெலங்கானா விவசாயிகளின் வீரம் செறிந்த ஆயுதப் போராட்டம், மகாராஷ்டிராவின் வோர்லி பழங்குடியினர் இயக்கம், தமிழகம், கர்நாடகம், ஆந்திர, கேரளம் பகுதிகளை உள்ளடக்கிய அன்றைய சென்னை மாகாணத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கையூர் தியாகிகளின் மலபார் விவசாயிகள் இயக்கம், பண்ணையடிமைத்தனத்திற்கு முடிவுகட்டிய தஞ்சாவூர் குத்தகை விவசாயிகள் இயக்கம் என எண்ணற்ற புரட்சிகர இயக்கங்களை இந்திய விடுதலைக்கு முன்பே காணலாம்.
விடுதலைக்குப் பின்னர் நடந்த வீரஞ்செறிந்த போராட்டங்கள்:-
பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும், கம்யூனிஸ்டுகள் தலைமையில் விவசாயிகளின் நிலத்திற்கான கிளர்ச்சிகள், தொழிலாளர்களின் கூலி உயர்வு - சங்க உரிமைக்கான எழுச்சிகள், பண்ணை அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கான தலித்துகளின் போராட்டங்கள் என எண்ணற்றப் போராட்டங்கள் வெடித்தன.
சென்னை மாகாணத்தில், தெலுங்கானா துவங்கி மலபார், தஞ்சை வரை நடைபெற்ற விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டங்களையும் சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை என நடைபெற்ற தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்கப் போராட்டங்களையும் கண்டு நேரு அரசாங்கம் பயந்தது. முதலாளிகள், நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு ஆதரவாக, 1948-ல் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை, சதி வழக்குகள், கைது, சிறைவாசம் என பிரிட்டிஷ் ஆட்சிக்கால அடக்குமுறைகளையே மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியும் தொடர்ந்தது. 1950 ல் சென்னை மாகாணத்திலும் காங்கிரஸ் அரசாங்கம் தான் இருந்தது. சென்னை மாகாண முதல்வர் ஆக PS.குமாரசாமி ராஜா இருந்தார். சென்னை மாகாணத்தின் கம்யூனிஸ்ட் தலைவர்கள் வேலூர், கடலூர் சிறைகளிலும், கம்யூனிஸ்ட் ஊழியர்களை சேலம், திருச்சி, மதுரை சிறைகளிலும் பிரித்து அடைத்தார்கள்.
கேரளா -மலபார் விவசாயிகள் போராட்டத்தில் தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் தோழர்கள், விவசாய சங்கத் தலைவர்கள், பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர, தமிழக கம்யூனிஸ்ட் தோழர்கள் என 350 பேர் சேலம் கிளைச் சிறையில் மூன்று கொட்டடிகளில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.
சேலம் சிறைக்குள் கிளர்ச்சி :-
சேலம் சிறைக்கு "கறுப்பு குல்லா ஜெயில்" என்று அழைக்கப்பட்டது. கொலை, கொள்ளையில் ஈடுபட்ட கைதிகள்தான் அடைக்கப்பட்டிருந்தனர். சிறைக் காவலர்களின் கொடுமையும் அடக்குமுறையும் அதிகமாகவே இருந்தது. சிறைவாசிகள் மனிதாபிமானமின்றி சித்தரவதை செய்யப்பட்டார்கள். கம்யூனிஸ்ட் சிறைவாசிகளுக்கு சி வகுப்பு தான் வழங்கப்பட்டது. காலையில் புளித்த கஞ்சி, நண்பகலில் சோளக் களியும் கீரைக் குழம்பும், மாலையில் அச்சடித்த சோறும், அரை ஆழாக்கு நீர் மோரும் பத்து நிலக்கடலையும்தான் உணவாக தரப்பட்டது.
அரைக்கை சட்டை, அரைக்கால் டிரவுசர், மொட்டைத் தலைக்கு குரங்கு குல்லாய் உடையாகவும், படுத்துறங்க கிழிந்த கோணிப்பாய், பேன்கள் பீடித்த பழைய கம்பளியும், குளிக்க நாலுக் குவளை தண்ணீரும்தான் கொடுக்கப்பட்டது. மிகவும் மோசமான நோய் பரப்பும் கழிப்பறைகள், சிறைக் கொட்டடிகள்.
அதிகார வெறி பிடித்த கிருஷ்ணன் நாயர் என்ற சிறை அதிகாரி-ஜெயிலர், அரக்கனான தாமோதரன் என்ற தலைமை வார்டன் இருவரும் கம்யூனிஸ்ட்டுகளை கிரிமினல் குற்றவாளிகளைப் போல் நடத்தினர். பகல் முழுவதும் தோட்ட வேலைகளில் தண்ணீர் இறைக்கவும் ரோடு ரோலர் இழுக்கவும் மாடுகளுக்குப் பதிலாக தோழர்களைப் பயன்படுத்தினர். "நாயிண்ட மகனே" போன்ற இழிசொற்கள், வசைகள், அடிகள், தண்டனைகள், நம்பர் கட்டையை கழுத்தில் கட்டுதல் தோழர்கள் மீது சித்தரவதைகள் தொடர்ந்தன. அதனால், நாங்கள் கிரிமினல்கள் அல்ல 'குல்லாய், நம்பர் கட்டை அணியமாட்டோம்!, மாடு போல வேலை செய்ய மாட்டோம்!' என்ற போராட்டக் குரல்கள், மனித உரிமைக்கான குரல்கள் எழுந்தன. தோழர்களைப் பார்க்க கேரளா, ஆந்திராவிலிருந்து வந்த உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
சிறைக்குள் துப்பாக்கிசூடு
1950 பிப்ரவரி 7 ந் தேதியன்று வேலைநிறுத்தம், உண்ணாவிரதம் என உள்ளிருப்பு போராட்டத்தைத் துவங்கினார்கள் தோழர்கள். பிப்.11, காலை 8 மணியளவில் சிறைக் காவலர்கள் குல்லாய் வைக்க வற்புறுத்த தோழர்கள் மறுத்தனர். கம்யூனிஸ்டு சிறைவாசிகள் மதில் சுவர்களால் சூழப்பட்ட திறந்தவெளியில் நிறுத்தப்பட்டனர். சிறைத்துறை அமைச்சர் மாதவமேனன் முன்னிலையில், ஜெயிலர்கள் கிருஷ்ணநாயர், அய்யா பிள்ளை, தலைமை வார்டன் தாமோதரன் ஆகியோர் தலைமையில், 250 சிறைக் காவலர்கள் சூழ்ந்து நின்று குண்டாந்தடிகள் கொண்டு கம்யூனிஸ்டுகளை கொடூரமாகத் தாக்கினார்கள். அப்போது விசில் சத்தத்துடன் அபாயச் சங்கும் ஒலிக்கப்பட்டது. தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டை நடத்தினார்கள். அப்போது "இன்குலாப் ஜிந்தாபாத் " "விப்ளவம் ஜெயிக்கட்டே" "புரட்சி ஓங்குக! ""கம்யூனிஸ்ட் பார்ட்டி ஜிந்தாபாத் " என்ற முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன. சேலம் சிறை பிணக் காடானது. 200 க்கும் மேற்பட்டோர் குண்டு காயமுற்றனர். தோழர்களின் இரத்தம் ஆறாக ஓடியது. அந்த துப்பாக்கி சூட்டில் 22 தோழர்கள் கொல்லப்பட்டார்கள். 19 பேர் சிறை வளாகத்திலும், 3 பேர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.
1) திருச்செங்கோடு காவேரி ,
2) சேலம் ஆறுமுகம்,
3) ஷேக்தாவூத்,
4) N.பாலன்,
5) N. பத்பநாபன்,
6) K.N. கோரன்,
7) N. கண்ணன்,
8) M.K.கோபாலன் நாயர்,
9) P. கோபாலன் நாயர்.
10) N. நாராயண நாயர்.
11) A.K.குஞ்சப்பன்,
12)குஞ்சிராமன்,
13)குன்ஞாம்பு,
14)களத்துக்கோயிலோடன்,
15)ம.கோரன்,
16)M. நாராயண நம்பியார்,
17)P. கோவிந்த நம்பியார்,
18)P.குஞ்சப்பன் நம்பியார்,
19)அம்பாடி ஆசாரியார்,
20)O.P.அனந்தன் நம்பியார்.
21)T.இராமன் நம்பியார்,
22)M. கோபாலன் குட்டி நாயர்
ஆகிய 22 தோழர்களில், திருச்செங்கோடு நெசவாளர் காவேரி முதலியார், சேலம் ஜவஹர் மில் தொழிலாளர் அரியாகவுண்டம்பட்டி ஆறுமுக பண்டாரம்* இருவரும் தமிழ்நாட்டையும் கடலூர் சேக்தாவூத் ஆந்திராவையும் மீதமுள்ள 19 பேர் கேரளத்தையும் சேர்ந்தவர்கள். இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் சேலம் சிறைத் தியாகிகள் அழியா இடம் பெற்றுள்ளனர்.
சிறைவாசிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும், சிறைவாசிகளுக்கு தரமான உணவு, போதுமான இடவசதி, சுத்தமான கழிவறைகள் உள்ளிட்ட கோரிக்கைகள் இன்றும் கூட தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த உரிமைகளுக்காக அன்று முதல் இன்றுவரை கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ந்து குரல் கொடுத்து போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சேலம் சிறைத் தியாகிகளுக்கு வீர வணக்கம்!
