உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி அவர்களின் திராவிட இயக்க வெறுப்பு தீர்ப்பு நியாயம்தானா?

$articleData->title

உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி

  நீதிபதி ஸ்ரீமதி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஆவார். 27.11.2025 தீர்ப்புக்காக ஒத்தி வைத்த வழக்கில், அவர் 20.01.2026 அன்று, ஒரு விசித்திரமான தீர்ப்பு வழங்கினார்.

            பாரதிய ஜனதா கட்சிகாரரான திரு. அமித் மாளவியா என்பவர், தம் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி, தாக்கல் செய்த வழக்கில்தான், நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

            தீர்ப்பு, சனாதன தர்மம் தொடர்பானதாகும். சனாதனம் என்றால், ஆதியும் அந்தமும் இல்லாதது, முதலும் முடிவும் இல்லாதது என்று பொருள். சனாதனம் என்ற சொல்லை தனித்து வைத்து, அது சரியா, தவறா என்று சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் சனாதனம் என்பதற்கு, மனு தர்மம் என்றும், சாதிய சமூகத்தை தூக்கி பிடிப்பது என்றும், சூத்திர இழிவை திணிக்கப் பார்ப்பது என்றும் மட்டுமே, பல பத்தாண்டுகளாக நீதி கட்சி / சுய மரியாதை இயக்கம் / திராவிட இயக்கம் களமாடிய காலங்களில் பொருள் இருந்துள்ளது. சனாதன தர்மத்தை விமர்சிப்பது என்று நீலமும் (அம்பேத்கரியவாதிகள்), கருப்பும்(பெரியாரியவாதிகள்), சிவப்பும்(மார்க்சியவாதிகள்) முன் வரும் போது, அது நிச்சயமாக, ஏகப் பெரும்பான்மை இந்துக்களை விமர்சிப்பது என்பதாக இருந்ததில்லை. ஏனென்றால், ஏகப் பெரும்பான்மை இந்துக்கள் கருப்பு, நீலம், சிவப்பு பின்னால் தான் இருந்து வருகிறார்கள். ஏகப்  பெரும்பான்மை இந்துக்கள்தான், சனாதன தர்மத்தின் நுகத்தடியை அதாவது, சூத்திர இழிவை பஞ்சமர் என்ற அநீதியை, காலா காலமாகச் சுமந்து வந்தார்கள். சூரியனைச் சுமந்தவர்கள் எல்லாம், வியர்வை சிந்தி உழைத்தவர்கள் எல்லாம், தமிழ்நாட்டில் சனாதன தர்மத்தால், அதர்மத்திற்கு ஆளாக்கப்பட்டார்கள். 

            நீதிபதி ஸ்ரீமதி, வள்ளலார் சனாதன தர்மத்தை உயர்த்திப் பிடித்தவர் என்று, தயங்காமல் சொல்லியுள்ளார். “சாதியும் மதமும் சமயமும் பொய் என, ஆதியில் உணர்த்திய அருட் பெருஞ் ஜோதி” என்று சனாதனத்தின் ஆணி வேரை உலுக்கியவரை, சனாதன தர்மக் காவலராக நீதிபதி ஸ்ரீமதி குறிப்பிடுகிறார்.

அதே போல், நீதிபதி ஸ்ரீமதி, பெரியாருக்கு எதிரான உச்சநீதிமன்ற அய்ந்து நீதிபதிகள் தீர்ப்பு என்று 1958 ஆம் ஆண்டு தீர்ப்பு ஒன்றை சுட்டிக்காட்டுகிறார். பொதுவாக, உச்சநீதிமன்ற அய்ந்து நீதிபதிகள் தீர்ப்பு என்றால், அதற்கு அரசமைப்புச் சட்ட அமர்வ அந்தஸ்த்து உண்டு. இந்த சாதாரண விசயத்தில் கூட, நீதிபதி அவசர கோலத்தில் விவரங்களை (Facts) சரிபார்க்காமல், தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். திருவாளர்கள் புவனேஸ்வர் பி சின்ஹா, சையத் ஜாபர் இமாம் மற்றும் கே.என்.வாஞ்சு ஆகிய மூன்று நீதிபதிகள், பெரியார் தொடர்பான ஒரு வழக்கில், 25.08.1958 வழங்கிய தீர்ப்பைத்தான், நீதிபதி மேற்கோள் காட்டுகிறார். அந்தத் தீர்ப்பின் ஆன்மாவை (Spirit), நீதிபதி காணத் தவறுகிறார். அந்த வழக்கு பெரியார் பிள்ளையார் சிலையை உடைத்தார் என்பது தொடர்பானதாகும். அது திமுக ஆண்ட காலமல்ல. குற்றவியல் நடுவர் நீதிமன்றம், அமர்வ நீதிமன்றம், உயர்நீதிமன்றம் என நீதித்துறை நெடுக, அந்த வழக்கை பெரிதுபடுத்தவில்லை. உச்சநீதிமன்றமும் அய்ந்தாண்டுகள் கடந்துவிட்டது. பழையதாகிவிட்டது, இதையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம் என்ற பொருளில், தீர்ப்பு எழுதியுள்ளது. ஆனால், மரியாதைக்குரிய நீதிபதி ஸ்ரீமதி, வரிந்து கட்டிக்கொண்டு மேற்படி தீர்ப்பு, பெரியாரின் வெறுப்பு அரசியலுக்கு எதிரானது என்று எழுதுகிறார். (விவரம் அறிந்தவர்கள், விவரம் அறிய விரும்புபவர்கள் 1958 AIR -1032 உச்சநீதிமன்றம் S.வீரபத்திரன் செட்டியார் எதிர் E.V.ராமசாமி நாயக்கர் மற்றும் மற்றோர் வழக்கில் 25.08.1958ல் வழங்கப்பட்ட தீர்ப்பை, பதிவிறக்கம் செய்து பார்த்துக் கொள்ளலாம்.)

திரு.உதயநிதி சனாதன தர்மம் கொள்ளை நோய் போன்றது என்றும், அது முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும் என்றும், சாதி ஆதிக்கம் தொடர்பாகப் பேசினார். அவரே பின்னர், இதனை விளக்கியுள்ளார். ஆனால், தமிழ்நாட்டில் காலூன்றத் துடிக்கும் சங்பரிவார் கும்பல் திரு.அமித் மாளவியா மூலம், திரு.உதயநிதியின் கருத்து 80% இந்துக்களை படுகொலை செய்வதற்கான கருத்து என்று விஷமமாகப் பேசியது. இந்தக் கருத்துக்காக திரு.அமித் மாளவியா மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய அவர் தாக்கல் செய்த மனுவில், நீதிபதி ஸ்ரீமதி அவர்கள், உதயநிதியை, திராவிட கழகத்தை, திராவிட முன்னேற்ற கழகத்தை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, தானே வழக்காடியாக, வழக்கறிஞராக, நீதிபதியாக மாறி, அவர்களையெல்லாம் குற்றவாளிகள் என்று தீர்ப்பு சொல்லி, மகிழ்ந்துவிட்டார். சங்பரிவாருக்கு கொண்டாட்டம். (நீதிபதியை போலவே நாமும், அசல் வழக்கு என்ன என்பதை மறந்துவிடக் கூடாது. நீதிபதி ஸ்ரீமதி, உதயநிதி வெறுப்பு அரசியல் பேசினார், திக, திமுக, பெரியார் கால காலமாக வெறுப்பு அரசியல் பேசினார்கள், ஆகவே அதற்கு, பதில் சொல்லும் விதமாக கேள்வி எழுப்பிய மாளவியா பதிவு போட்டது குற்றமல்ல என்று முடிவு செய்து, அவர் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து, தீர்ப்பு வழங்கியுள்ளார்.)

நீதிபதி ஸ்ரீமதி குடுமி அறுத்தல், பூணூல் அறுத்தல், பன்றிகளுக்கு பூணூல் அணிவிப்பது, ராமன், விநாயகர் உருவங்களை செருப்பால் அடிப்பது. விநாயகர் சிலை உடைப்பது என்ற குற்றங்களையெல்லாம் இழைத்த திராவிட கழகம், திராவிட முன்னேற்ற கழகம் மீதெல்லாம் வழக்கு போடப்படவில்லை என ஆவேசமாக எழுதுகிறார். நீதிபதி அவர்கள், திரு.உதயநிதியோ, திகவோ, திமுகவோ, பெரியாரோ தம் முன் உள்ள வழக்கு தரப்பினர் அல்ல என்பதை கணக்கில் கொள்ளாமல், அவர்களுக்கு எதிராக தமது வெறுப்பை பதிவு செய்துள்ளார்.

நீதிபதி ஸ்ரீமதி வசதியாக, நீதிபதி அனிதா சுமந்த் அவர்கள் தீர்ப்பிலிருந்து சில வரிகளை மட்டும் எடுத்தாளுகிறார். அந்த வழக்குகளில் முதன்மை கோரிக்கை தொடர்பாக, அதாவது எந்த அதிகாரத்தின் கீழ் பதவியில் இருக்கிறீர்கள் (writ of quo warranto) என்ற பிரச்சனையில், நீதிபதி அனிதா சுமந்த் தீர்ப்பு வழங்கவில்லை என்ற அடிப்படையான செய்தியை, போகிற போக்கில் கூட, சொல்லத் தவறுகிறார்.

நீதிபதி ஸ்ரீமதி சனாதன ஒழிப்பு என்று பேசியதை, சனாதன தர்மத்தை பின்பற்றும் மனித சமூகத்தையே ஒழிப்பது என்றும், இந்து மத ஒழிப்பு என்றும், உண்மை ஒழிப்பு என்றும், அறநெறி சூழல் ஒழிப்பு என்றும், கலாச்சார ஒழிப்பு என்றும், அடுக்கிக் கொண்டே போகிறார். திரு.அமித் மாளவியாவின் வழக்கில், திரு.உதயநிதி அனைத்து விதமான அழிப்புக்கும், ஒழிப்புக்கும் அறை கூவல் விடுத்ததால், அது பற்றி அமித் மாளவியா பேசியது வெறுப்பு உரை அல்ல என்கிறார்.

இன்று உச்சநீதிமன்றத்திலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி, வலது சாரி கருத்துக்களுக்காக வாதாட, போராட ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் நீதி பரிபாலன துறையில் புறப்பட்டுவிட்டார்கள். ஒன்றிய அரசு அதிகாரத்தின் பக்கம் இருப்பது, ஒரு விதமான பாதுகாப்பு நிழலைத் தருவதோடு மட்டுமல்லாமல், எதிர்ப்பாளர்களைத் துன்புறுத்துவதற்கும், வெறுப்பை உமிழ்வதற்கும், வெறுப்பு அரசியலை ஊட்டி வளர்ப்பதற்கும், துணிச்சல் தருகிறது.

நீதிபதி ஸ்ரீமதியின் தீர்ப்பு, மக்கள் மன்றத்தின் முன் விவாதத்திற்கு வந்துள்ளது. மக்கள் மன்றம், மாட்சிமை மிகுந்த நீதிபதி தி.க., தி.மு.க, சுய மரியாதை இயக்கம், சமூக நீதி இயக்கம் அனைத்துக்கும் எதிராக கொண்டுள்ள வெறுப்பை நிச்சயமாக கவனத்தில் கொள்ளும்.

நீதிபதி ஸ்ரீமதியின் தீர்ப்பு, வெறுப்பு அரசியலை முன் நிறுத்தும் தீர்ப்பாகும், சமூக நீதிக்கு எதிரான சனாதன தர்மத்திற்கு ஆதரவான தீர்ப்பு என்று, வரலாறு நிச்சயம் பதிவு செய்து கொள்ளும்.

--------------------------------------------

பின்குறிப்புக்கு பதிலாக

நீதிபதி ஸ்ரீமதி அவர்கள் கவனத்திற்கு,

சில தினங்களுக்கு முன்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புய்யான், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் உள்ளடக்கிய கொலீஜியம் தவறு இழைத்ததைப்  பற்றி பகிரங்கமாக விமர்சனம் செய்துள்ளார். நீதிபதி அதுல் ஸ்ரீதரன், மத்திய பிரதேச சங்பரிவார் அமைச்சரான விஜய் ஷா, ஆபரேசன் சிந்தூர் பற்றி ஒன்றிய அரசின் சார்பாக பேட்டி அளித்த கர்னல் சோபியா குரேஷி தொடர்பாக பேசிய மொழி சாக்கடை மொழி என்றும், அவர் பேசிய விசயங்கள் ஆபத்தானவை, அவமரியாதையானவை என்றும் குறிப்பிட்டு, இராணுவ அதிகாரியை இஸ்லாமிய சமூகத்தைச்  சேர்ந்தவராக பயங்கரவாதிகளின் சகோதரியாக சித்தரித்துப் பேசிய அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யச் சொன்னார்.

  உச்ச நீதிமன்ற கொலீஜியம், நீதிபதி அதுல்ஸ்ரீதரனை முதலில் சட்டிஸ்கர் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியது. அங்கு அவர் முதல் மூன்று பேருக்குள், அதாவது கொலீஜியத்தில் இடம் பெறும் வகையில் இருந்தார். பிறகு அரசாங்கம் கேட்டுக்கொண்டதால் திரு.அதுல்ஸ்ரீதரனை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதாக உச்சநீதிமன்ற கொலீஜியம் சொன்னது. அங்கு அவர் பணி மூப்பு அடிபட்டு, அவர் கொலீஜியத்தில் இருக்கமாட்டார்.

ஒன்றிய அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப நீதிபதிகளை இடம் மாற்றுவது நீதித்துறையின் சுதந்தரத்திற்கு ஆபத்து உருவாக்கும் என்று உஜ்ஜல் புய்யான் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளார். நீதிபதி உஜ்ஜல் புய்யான் நகர்ப்புற நக்சல் என்றும், தேச விரோதி என்றும் சொல்ல, தமது பாணி சனாதன தர்மத்தை உயர்த்திப்பிடிக்கும் மோடி பக்தர்கள் தயாராகிறார்கள். 

   திரு.உஜ்ஜல் புய்யான் போன்ற நீதிபதிகள் நீதித்துறை சுதந்திரமாக செயல்படுவதற்கும், அரசமைப்புச் சட்ட அறம் காக்கப்படுவதற்கும் பங்களிப்பு செய்கிறார்கள். ஒன்றிய அரசிடம், அதிகாரத்திடம், அச்சமின்றி உண்மையை பேசுகிறார்கள்.

   நீதிபதிகள் அனைவரும், நீதிபதி உஜ்ஜல் புய்யான் போல் நடந்து கொள்வது, நாட்டிற்கும், அரசமைப்புச் சட்டத்திற்கும் நல்லது. 


12 February, 2026