பலமான கட்சியைக் கட்டி எழுப்புவோம்! பாசிசத்தை வீழ்த்துவோம்!

$articleData->title

பலமான கட்சியைக் கட்டி எழுப்புவோம்! பாசிசத்தை வீழ்த்துவோம்!

விடுதலையின் விளைபொருள்

பாசிச சக்திகளைப் பற்றி அவ்வளவு பேச வேண்டிய அவசியம் என்ன என்பது மிக முக்கியமான கேள்வி. நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தின் மூலம், பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிரசும், தேசப்பற்றாளர்களும் அத்தனை பேரும் இணைந்து போராடிப் பெற்றதுதான் நம் தாய்நாட்டின் சுதந்திரம். அதன் விளைபொருள்தான் இந்திய நாட்டின் அரசமைப்புச் சட்டம். விடுதலை போராட்டத்தின், நாட்டு மக்கள் செய்த தியாகத்தின் ஒரு விளைபொருள். இந்த அரசமைப்பு சட்டத்தோடு நமக்கு வேறு பல வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது பிஜேபி. இந்த அரசமைப்புச் சட்டத்தை ஒழித்துக் கட்டி, அதனிடத்திலே மனு (அ)நீதியை கொண்டு வர வேலை செய்கிறது பிஜேபி. ஆனால், காங்கிரஸோ திமுகவோ அப்படி இல்லை. வேறு சில மாநிலக் கட்சிகளும் கூட அப்படி இல்லை என்று சொல்லலாம் இவை எல்லாம் முதலாளித்துவ கட்சிகளாக இருந்த போதிலும் கூட இந்திய நாட்டு அரசமைப்புச் சட்டத்தின் ஆட்சியை வலியுறுத்தக்கூடிய கட்சிகள். ஆகவே, முதலாளித்துவ வர்க்கத்திற்குள்ளேயே இருக்கும் பிளவை நாம் எப்படி பாட்டாளி வர்க்கத்துக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொள்வது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு இருக்கக்கூடிய குறைந்தபட்ச ஜனநாயகத்தையும் ஜனநாயக ஆட்சி முறையையும் ஒழித்துக் கட்டி அதனிடத்திலே இந்து ராஷ்டிரா என்கிற ஒரு பாசிச, சர்வாதிகார ஆட்சி முறையை, மதவெறி ஆட்சி முறையை கொண்டு வரத் துடித்துக் கொண்டிருக்கிறது பிஜேபி. இதுதான் இதர முதலாளித்துவ கட்சிகளுக்கும் பிஜேபி என்கிற முதலாளித்துவ கட்சிக்கும் இடையில் இருக்கக்கூடிய மிக முக்கியமான வேறுபாடு. 

இந்தியா எனும் கனவு

பாசிச சக்திகள்தான் இந்த நாட்டு மக்களின் முதல் அபாயம். நீதித்துறை, கல்வித்துறை, ஜனநாயக அமைப்பு முறைகள் அனைத்திலும் பாசிச சக்திகள் ஊடுருவி நிற்கிறார்கள். இந்துக்கள் அதிகமாக இருப்பதால் நாடு  இந்து ராஷ்டிரம் ஆவதில் தவறென்ன என்கிறார்கள். அப்படி கேட்க முடியுமா? நம் தாய்த்திரு நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு. பல்வகைப்பட்ட மொழிகள், கலாச்சாரங்கள், தேசிய இனக் குழுக்கள் உள்ள, பன்முகத் தன்மை கொண்ட நாடு. அதுதான் இந்தியாவின் அடையாளம். அந்த இந்தியா என்கிற அடையாளத்தை, அதன் மதச்சார்பற்றத் தன்மையை, பன்முகப்பட்ட தன்மையைக் காத்திட வேண்டும். பாசிச சக்திகளை, அதனுடைய அணிவகுப்பை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு பிஜேபிக்கும் இதர கட்சிகளுக்குமுள்ள வேறுபாட்டை பார்க்க வேண்டியது அவசியம். 

மனுநீதி, நவீன இந்தியாவுக்கு எதிரானது. நவீன இந்தியா என்று சொன்னால் நவீன விழுமியங்கள், நவீன சமூகக் கட்டமைப்பு. ஜனநாயகம் என்று பொருள். சாதி, இனம், பாலினம் குறித்த பிரச்சனைகள், பட்டியலின மக்கள் பிரச்சனை என எல்லாவற்றிலும் பிற்போக்குத்தனத்தைக் கடைபிடிப்பது மனு (அ)நீதி. அது ஜனநாயகத்துக்கு எதிரானது. உழைக்கும் மக்களை அடிமைகளாக்கும் நோக்கம் கொண்டது. இந்து ராஷ்டிர, சர்வாதிகார, பாசிச ஆட்சியானது சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, பட்டியலின மக்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மத, சாதி உழைக்கும் மக்களுக்கும் எதிரானது. இன்னொருபுறம் இந்த நாட்டினுடைய வளங்கள், சொத்துகள் எல்லாம் அதானிக்கும் அம்பானிக்கும் கிட்டத்தட்ட இலவசமாகவோ குறைந்த விலைக்கோ வழங்கப்படுகிறது. நாட்டையே கூறு போட்டு அவர்களுக்கு விற்று விட்டாலும் வியப்பில்லை.

வர்க்கப் போராட்டத்தின் அரசியல் பரிமாணம்

பாசிச எதிர்ப்பிற்கும் வர்க்கப் போராட்டத்திற்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. ஆலை முதலாளிகளுக்கு எதிராக, அரசுக்கு எதிராக நடத்தும் தொழிலாளர் போராட்டம், பொருளாதாரப் போராட்டம் மட்டுமே வர்க்கப் போராட்டம் அல்ல.  வயல்வெளிகளில் நடப்பதும் வர்க்கப் போராட்டம்தான். இந்திய சமூகப் பின்னணியில் சாதியாதிக்க எதிர்ப்புப் போராட்டமும், நிலப்பிரபுத்துவ விழுமியங்களுக்கு எதிரான போராட்டமும் கூட வர்க்கப் போராட்டம்தான். அதன் அரசியல் பரிமாணமும் வர்க்கப் போராட்டம்தான், அதன் மற்றுமொரு படிதான். இந்த நாட்டின், நாட்டு முன்னேற்றத்தின் மிகப்பெரும் தடைக்கல் பாசிச சக்திகள் என வரையறுப்பதும், அதனை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்ப்பதற்காகப் போராடுவதும்தான் அந்த வர்க்கப் போராட்டத்தின் இன்றைய அரசியல் பரிமாணமாக இருக்க முடியும். வர்க்கப் போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும் ஒன்றுக்கு எதிராக ஒன்றை நிறுத்த முடியாது. ஆலைகளில் வயல்களில் போராடுவோம். எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, அடக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் போராடுவோம். அதுவும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதிதான். அந்த வர்க்கப் போராட்டத்தின் தர்க்கரீதியான எல்லையை, விளைவை எட்டிட வேண்டும் என்றால், அதற்கு நாட்டு மக்கள் விடுதலை பெற வேண்டும். அதாவது நாட்டின் அரசியல் அதிகாரத்தை உழைக்கும் வர்க்கம் கைப்பற்றிட வேண்டும்.  அதற்கு நாம் முன்னோக்கி நடைபோட முதன்மையான தடை பாசிச சக்திகள்தான். பாசிசம் படுபிற்போக்கானது. நவீனத்துவத்திற்கு, மானுட விடுதலைக்கு, நாட்டு முன்னேற்றத்துக்கு எதிரானது. அதற்கு கருத்தியல் ரீதியில், அரசியல் ரீதியில் சமாதி கட்டாமல் இந்த நாட்டு மக்களுடைய விடுதலை சாத்தியமில்லை. அதனால்தான், நாம் கார்ப்பரேட் லாப வெறி, ஆதிக்கச் சாதிவெறி, இந்துத்துவ மதவெறி பாசிச சக்திகளை வேரோடு சாய்ப்போம் என்கிற முழக்கத்தை இந்த மாநாட்டிலே முன்வைத்திருக்கிறோம்.

பிஜேபி ஆளாத மாநிலங்கள்

பிஜேபி ஆளும் மாநிலங்களில் செயல்தந்திரம் வகுப்பது மிக எளிதானது. ஆனால், பிஜேபி அல்லாத கட்சிகள், குறிப்பாக, பிஜேபிக்கு எதிரான, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்தந்திரத்தை வகுப்பது சிக்கலானது.

 பிஜேபி, அதற்கு எதிரான எதிர்க்கட்சிகள் இரண்டையும் முதலாளித்துவக் கட்சிகள் எனும் ஒரே தட்டில் வைத்து, கம்யூனிஸ்ட்கள் மட்டும்தான் சரியான மாற்று, உழைக்கும் மக்களுக்கான மாற்று என்று சொல்வதில் எந்தத் தவறும் கிடையாது. எந்தவிதமான சிக்கலும் கிடையாது. ஆனால், இவற்றில் ஒன்று இந்த நாட்டையே நிர்மூலமாக்கத் துடிக்கிற போது, யார் முதன்மை அபாயம் என்பதை வரையறுத்தாக வேண்டி இருக்கிறது, அத்தகைய முதன்மை அபாயத்துக்கு எதிரான வியூகத்தில், அதற்கு எதிரான அனைத்து சக்திகளையும் திரட்டிக்கொள்ள வேண்டி இருக்கிறது. அதைத்தான் டிமிட்ரோவின் பாசிச எதிர்ப்பு அய்க்கிய முன்னணி எனும் செயல் தந்திரமும் சீனப் புரட்சியும் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றன. அத்தகைய சூழலில், எது முதன்மை அபாயம் என்பதை தீர்மானிக்கவில்லை என்றால், அதற்கு எதிரான போராட்டத்தைக் கூர்மைப்படுத்தவில்லை என்றால் அது ஒரு அரசியல் சந்தர்ப்பவாதமாக முடிந்துபோய் விடும் வாய்ப்பு உள்ளது. திமுக போன்ற மாநிலக் கட்சிகள், பிஜேபிக்கு எதிரான முதலாளித்துவ கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில், பிஜேபிக்கு எதிராக மாநில உரிமைகளுக்காக, சமூக நீதிக்காக, மொழி சுதந்திரத்திற்காக, கூட்டாட்சி முறைக்காக குரல் கொடுக்கும் அதே நேரத்தில் மூலதனத்தின் நலன்களைப் பாதுகாக்கின்றன. உழைக்கும் மக்களுக்கு எதிராக செயல்படுகின்றன. அவர்கள் தமது வர்க்க அரசியலை, ஆதிக்க வர்க்கங்களை, சுரண்டும் வர்க்கங்களைக் காப்பதற்கான அரசியலை கடைபிடிக்கின்றனர். அவற்றின் லாப வெறியைப் பாதுகாப்பதற்காக தனியார்மயம், குறைந்த கூலி உள்ளிட்ட அனைத்து விதமான உழைக்கும் மக்கள் விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றன. அத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக உழைக்கும் மக்கள் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி உழைக்கும் மக்களைத் திரட்ட வேண்டும், போராட வேண்டும். அதே நேரத்தில், முதன்மை அபாயம்  பிஜேபியா, அதற்கு எதிரான திமுகவா என்று வந்துவிட்டால் பிஜேபி தான் என்று வரையறுத்து, அதற்கு எதிராக போராடும் ஒரு அரசியல் உணர்வை அந்த உழைக்கும் மக்களுக்கு ஏற்படுத்துவது தேவைப்படுகிறது. பிஜேபி போன்ற பாசிச சக்திகளை, பிற்போக்கு சக்திகளைத் தோற்கடிப்பது என்பது உழைக்கும் மக்கள் இயக்கத்தை அடுத்த கட்டம் உயர்த்துவதற்கானதோர் முன்நிபந்தனை ஆகிவிடுகிறது. முதன்மை அபாயத்தை வீழ்த்திட மேற்கொள்ளும் சில தற்காலிக செயல்தந்திரங்கள், சில சரிக்கட்டுதல்கள் வர்க்கப் போராட்டத்தை மேலும் கூர்மைப் படுத்திட அவசியம் என்பதனால் மேற்கொள்ளப்பட வேண்டியதாகின்றன. அவை வர்க்கப் போராட்டத்தை சமரசம் செய்வதாகவோ, வர்க்கப் போராட்டத்தைக் கைவிடுவதாகவோ பொருளாகாது. இதை நாம் மிகத்தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ளவில்லை என்று சொன்னால் பல்வேறு சிக்கல்கள் வரும். அத்தகைய சிக்கலை, செயல்தந்திர சிக்கலை எங்கெல்லாம் பிஜேபி அல்லாத எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கின்றனவோ அங்கெல்லாம் பலரும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், பீகாரில் ஜேடியூ, ஆர்ஜேடி ஆட்சி நடந்தது. நாமும் கூட அந்தக் கூட்டணியில் இருந்தோம். ஆனால், உழைக்கும் மக்கள் போராட்டத்தை நாம் ஒருபோதும், எந்தச் சூழலிலும் கைவிடவில்லை. திட்டப் பணியாளர்களுடைய போராட்டம் துவங்கியது. 45 நாட்கள் பீகார் மாநிலத்தையே ஸ்தம்பிக்க வைத்த செவிலியரின், ஆஷா தொழிலாளரின் மாபெரும் போராட்டத்தை, வேலை நிறுத்தத்தை நமது சங்கம் நடத்தியது. நாம் தலைமை தாங்கிய சத்துணவுத் தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டம் கிட்டத்தட்ட 54 நாட்களுக்கும் மேல் நடந்தது. அத்தகைய போர்க்குணமிக்க போராட்டங்கள் நமது கூட்டணி கட்சிகளின் ஆட்சி இருந்தபோதே நடந்தன. தொழிலாளர் எனும் அங்கீகாரம் வேண்டும், குறைந்தபட்ச கூலி வழங்கப்பட வேண்டும் என நடந்த அந்தப் போராட்டம் பீகார் மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்கதோர் போராட்டமாகும். 

பிஜேபிக்கு எதிராக, திமுக கூட்டணியை ஆதரிப்பது என்று சொன்னால் திமுக கூட்டணி என்ன செய்தாலும் ஆதரிப்போம் என்று பொருள் கிடையாது. திமுக கூட்டணி எப்போதெல்லாம் உழைக்கும் மக்களுக்கு எதிராக செயல்படுகிறதோ அப்போதெல்லாம் எவ்வித சமரசமுமின்றி அதை எதிர்க்கின்ற முதல் கட்சியாக சிபிஅய்(எம்எல்) கட்சி இருக்கும். பாசிச சக்திகளுக்கு எதிராக திமுக போராடினால் அதையும் முழுமையாக ஆதரிக்கும். தேர்தல் நிலைப்பாடும் அந்தப் புரிதலின் தொடர்ச்சியாகவே இருக்கும்.

 தமிழ்நாட்டின் முற்போக்கு மரபுகளைத் தகர்க்கும் திட்டம்

தமிழ்நாட்டு அரசியலுக்குள் தற்போது தவெக விஜய் நுழைந்திருக்கிறார். தவெக என்பது திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அல்ல, மற்றொரு வடிவமாக இருக்கக்கூடுமோ என எண்ணத் தோன்றுகிறது. அவர் பிஜேபி அல்ல, பிஜேபி கூட்டணியிலும் இல்லை. ஆனாலும் அவரது திமுக எதிர்ப்பு தூக்கலாகவும், பாசிச பிஜேபி எதிர்ப்பு குறைவாகவும் இருப்பது போல தெரிகிறது. சற்றுப் பொறுத்திருந்து பார்த்த பிறகே தவெக பற்றிய ஒரு முழுமையான மதிப்பீட்டுக்கு வரமுடியும்.  

தமிழ்நாட்டுக்கு என்று ஒரு முற்போக்கு மரபு, ஒரு பகுத்தறிவு மரபு, பெண்ணுரிமைப் போராட்ட மரபு, சமூக நீதி மரபு, பெரியார் மரபு இருக்கிறது. தமிழ்நாட்டு மரபுகள், விழுமியங்கள், பாசிச சக்திகள் இன்னமும் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆகவே, தமிழ்நாட்டில் பாசிச சக்திகளின் முதன்மை நோக்கம் என்பது உடனடியாக ஆட்சிப்பீடத்தை பிடிப்பதை விடவும் முக்கியமான நோக்கம், அந்த முற்போக்கு மரபுகளை, விழுமியங்களை ஒழித்துக் கட்டுவதுதான். அதுதான் தமிழ்நாட்டில் பாசிச சக்திகளின் வளர்ச்சிக்கான களத்தை உருவாக்கிக் கொடுக்கும்.  

அதற்கு ஒருவேளை விஜய் உதவக்கூடுமோ எனவும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் உதவியைப் பெறுவதற்கு அனைத்து வழிகளிலும் முயற்சித்து வருகிறார்கள். அந்த வலையில் விஜய்யும் தவெகவும் சிக்குவார்களா, மாட்டார்களா? காலம்தான் பதில் சொல்லும். 

பாசிச சக்திகளை வீழ்த்தாமல் நாட்டு மக்கள் விடுதலை சாத்தியமில்லை. நமது அடிப்படை அளவுகோல் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை தீவிரப்படுத்துவதுதான். அதை மையமாக வைத்துத்தான் நமது அரசியல் செயல்தந்திரத்தை, இதர கட்சிகளுடனான உறவை நாம் தீர்மானிக்க வேண்டும். வர்க்கப் போராட்டத்தை அரசியல் மட்டத்துக்கு உயர்த்தி, அரசியல் போராட்டமாக பரிணமிக்கச் செய்ய வேண்டும். அரசியல் மட்டத்துக்கு உயர்த்துவது மட்டுமல்ல, வர்க்கப் போராட்டத்தின் இன்றைய அரசியல் பரிமாணம் என்ன என்பதையும் புரிந்து கொள்வது மிகவும் அவசியமானது. 

அரசியலுக்கு வலுச்சேர்க்கும் அமைப்பு

கடந்த மாநாட்டுக்கும் இந்த மாநாட்டுக்கும், இடையே நமது கட்சி கண்டிப்பாக வளர்ந்திருக்கிறது. மாநாட்டுப் பிரதிநிதிககளின் சேர்க்கையைப் பார்த்தாலே அந்த வளர்ச்சி நன்றாக தெரிகிறது. ஆனால், ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி என்கின்ற முறையிலே, நம் முன்னால் இருக்கக்கூடிய சவால் அந்த வளர்ச்சியின் மட்டம், அதன் தாக்கம் குறித்தது ஆகும். 

நமது அரசியல் நிலைப்பாடுகள் தெளிவாக, சரியாக இருக்கின்றன. இதர இடதுசாரி கட்சிகளிடமிருந்து, வேறு பல முதலாளித்துவ கட்சிகளிடமிருந்து வேறுபட்டதாக இருக்கின்றன. நாம் பொதுப் பிரச்சனைகளில் அவர்களோடு சேர்ந்து செயல்படுவதனாலேயே, சமரசம் செய்து கொள்வதாக பொருள்படாது. ஆனால், நம்முடைய அரசியல் கடமையை, பாசிசத்தை வேரோடு சாய்க்கும் கடமையை நிறைவேற்றிட வேண்டுமானால், நமது அமைப்பு வலுவானதாக இருக்க வேண்டும். அதற்கு நமது தனித்த, சுதந்திரமான போராட்டங்கள், சுதந்திர வளர்ச்சி ஆகியன அடிப்படையானவை. பாசிச சக்திகளை களத்தில் நேருக்குநேர் சந்திக்க ஆற்றல் பெற்றதோர் அமைப்பு பலம் தேவை. அந்தப் பலம் எங்கிருந்து வருகிறது என்றால் அது வலுவான கட்சிக் கிளைகளில் இருந்து வருகிறது. உள்ளூர் கமிட்டிகளில் இருந்து வருகிறது. பகுதி கமிட்டிகளில் இருந்து வருகிறது. நம்முடைய அணிதிரட்டல் பலத்திலிருந்து, வாக்கு பெறும் பலத்திலிருந்து வருகிறது.

 நமது வெகுமக்கள் அமைப்பு பலம் சில லட்சம் உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கலாம். அது போதாது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஆயிரக் கணக்கானோரைத் திரட்டும் ஆற்றல் பெற்றதாக கட்சி அமைப்பை வளர்த்திட வேண்டும். உற்சாகமான, உணர்ச்சிகரமான உரை வீச்சுகள், பலத்த கைதட்டல்கள் போதுமானவை அல்ல. பேசிப் பேசியே ஆட்சியைப் பிடித்த கதைகள் எல்லாம் சொல்வார்கள். அது உண்மை அல்ல, வெறும் மேலோட்டமான பார்வை. கம்யூனிஸ்ட் கட்சி என்பது சமூக மாற்றத்தை சாதிப்பதற்கான கட்சி. மக்கள் ஆற்றலின் மடை திறக்கும் கட்சி. வாய் வீச்சுக் கட்சி அல்ல. அப்படி வாய்க் கொட்டம் போட்டு ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது. அப்படிப் பிடித்தாலும், அது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியாக, சமூக மாற்றத்துக்கான ஆட்சியாக இருக்காது. 

கம்யூனிஸ்ட் கட்சி என்பது இந்த சமூகத்தை மாற்றி அமைக்கும் கட்சியாக பலம்பெற வேண்டும் என்றால், மக்கள் கோரிக்கைப் போராட்டங்கள், போர்க்குணமிக்க போராட்டங்கள் மட்டும் போதுமானதல்ல, அந்த மக்களை அரசியல் போர்ப் படை வீரர்களாக வளர்த்தெடுத்திட வேண்டும். அதுதான் மிக முக்கியமான சவால். அந்தச் சவாலை சந்திக்க வேண்டும் என்று இந்த மாநாடு அறைகூவல் விடுக்கிறது. 

தேவை போராட்ட இயக்கம்

பாசிச எதிர்ப்புப் போராட்டம் என்பது வெறும் வாய்வீச்சின் மூலம் சாதிக்கப்படுவதல்ல. அது ஒரு களப் போராட்டம். வீதிப் போராட்டம். தேர்தல் போராட்டம். அதற்கு நமது வேர்க்கால் மட்ட கட்சி அமைப்பை வலுவாகக் கட்டி எழுப்பிட வேண்டும். ஊராட்சிகளில் நூற்றுக்கணக்கானோரை, ஒன்றிய, பகுதி மட்டங்களில் ஆயிரக்கணக்கானோரை போராட்டத்தில் அணிதிரட்டும் பலம் பெற்றிட வேண்டும்.

 பல இடங்களில் வேலை செய்கிறோம். பல்லாயிரக்கணக்கான நிலங்களை நிலமற்றோருக்குப் பகிர்ந்தளித்து இருக்கிறோம். பட்டாக்கள் வாங்கி கொடுத்திருக்கிறோம். ரேஷன் அட்டைகள் கூட போராட்டங்கள் மூலம் பெற்றுக் கொடுத்திருக்கிறோம். ஒன்றல்ல இரண்டல்ல, நாம் நடத்திய போராட்டங்கள், நாம் பெற்ற வெற்றிகள். ஆனால், அவை போதுமானதல்ல. தங்கள் கோரிக்கைகளுக்காக செம்பதாகையின் கீழ் அணிதிரளும் அந்த மக்களுக்கு, அந்த மக்களின் விடிவுகாலம், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளிலிருந்து விடுதலை என்பது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் தான் இருக்கிறது என்கிற அரசியல் உணர்வை ஊட்டிட வேண்டும். அப்போதுதான் போராட்டத்துக்கு கம்யூனிஸ்டுகள்,  ஓட்டுக்கு கழகங்கள் என்கிற நிலையை மாற்றிட முடியும்.

 சங்கத்திற்கு அரசியல் கிடையாது என சொல்பவர்கள் அல்ல நாம். மாறாக, ஒவ்வொரு தொழிலாளியையும் ஒரு அரசியல் போர்ப்படை வீரனாக தயார்ப்படுத்த வேண்டும் எனச் சொல்பவர்கள். தொழிற்சங்கங்கள் சோசலிசத்தின் பள்ளிக்கூடங்கள் என்பவர்கள் நாம். அப்படிப்பட்ட சங்கங்களை  வளர்க்கும் போதுதான் நாம் ஒரு புரட்சிகர தொழிற்சங்கமாக பரிணமிக்க முடியும். 

வீடு, வீட்டுமனை, கடன் உள்ளிட்ட கோரிக்கைகள், பிரச்சனைகளுக்காக மக்களைத் திரட்டுவதோடு நமது வேலை முடிந்துபோகவில்லை. மாறாக, அங்கிருந்துதான் அது தொடங்குகிறது. அவர்களை அரசியல்ரீதியாக தயார்ப்படுத்துவதுதான் நம் முன்னுள்ள சவால். அதற்கு நமது வேர்க்கால் மட்ட கட்சி அமைப்புக்களை வலுவானதாக, துடிப்பானதாக வளர்த்தெடுப்பது அவசியமாகும். 

போராட்டம் என்பது சில பத்து பேரை, சில நூறு பேரை திரட்டுவது மட்டுமல்ல. சில ஆயிரம் பேர்களைத் திரட்டிட வேண்டும். ஒவ்வொரு போராட்டமும் வெற்றி பெறும் வரை தொடர் போராட்டங்களாக நடத்தப்பட வேண்டும். தொடர் போராட்டங்கள் அலை அலையான போராட்டங்களாக வளர்க்கப்பட வேண்டும். அப்போராட்டங்களை ஒரு மக்கள் இயக்கமாக பரிணமிக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த மக்கள் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன. மக்கள் இயக்கமாக அது உருவெடுக்கும் போதுதான் அவர்கள் போர்ப்படை வீரர்களாக பரிணாமம் பெறுகிறார்கள். அவை மாநிலம் முழுவதும் ஒரு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் இயக்கங்களாக பரிணமிக்கின்றன. இந்த இயங்கியலை நாம் புரிந்து கொண்டு நமது போராட்டங்களை வளர்த்திட வேண்டும். 

நம்முடைய மாவட்டக் கமிட்டிகள், ஒன்றியக் கமிட்டிகளுக்கு தமக்கேயான ஒரு திட்டம் இருக்க வேண்டும். மக்கள் பிரச்சனைகள் மீது மிகப்பெரிய போராட்டத்தை, அந்தக் கோரிக்கைகள் வெற்றி பெறும் வரை நடத்த வேண்டும். அதோடு அது அரசாங்கத்தை எதிர்கொள்ளக் கூடியதாக, முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்கொள்ளக் கூடியதாக, பெரும் சக்தி வாய்ந்தவர்களை, பணம் படைத்தவர்களை எதிர்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது ஒரு இயக்கமாக, அரசியல் போராட்டமாக மாறுகிறது. இதுதான் வர்க்கப் போராட்டத்துக்கும் அரசியல் போராட்டத்துக்கும் இடையிலான உறவு, அதுதான் நமது நோக்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

நாம் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் வேலை செய்வதனாலேயே நமக்கு அனைத்தும் தெரியும் என பொருளல்ல. நாம் வேலை செய்யும் இடங்களில் காலப்போக்கில், அரசின் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று சொன்னால் 40 அல்ல 50 - 60 ஆண்டுகள் ஒரே இடத்தில் இருந்தாலும் ஒரு பயனும் கிடையாது. நம்முடைய பார்வையில் ஒரு புதிய மாற்றம் வேண்டும். புதிய மாற்றங்களை புரிந்து கொள்ள வேண்டும். அந்த புதிய மாற்றங்களுக்கு ஏற்ப மாறியுள்ள மக்கள் கோரிக்கைகளை, புதிய கோரிக்கைகளை புரிந்து கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில், புதிய கோரிக்கைகளை உருவாக்க வேண்டும். மக்களைத்  திரட்டுவதற்குப் பல வழிகள் உண்டு. நம்முடைய கட்சி வலுவாக இருக்கிற போது கட்சியை நம்பி மக்கள் திரள்கிறார்கள். அது ஒரு வகை. அதேபோல, மக்களின் நாடி நரம்புகளைப் பிரதிபலிக்கும் விதத்திலான கோரிக்கைகள் உருவாக்கப்படுமேயானால், அந்த கோரிக்கைகளே மக்களைத் திரட்டும் கருவிகள் ஆகின்றன. பரந்த மக்கள் ஆதரவு பெற்ற கோரிக்கைகளை உருவாக்குவது, பற்றி எரியக்கூடிய கோரிக்கைகளைக் கண்டறிவது என்பது கட்சி கமிட்டிகளின் பணி ஆகும். அதைச் சாதித்திட வேண்டுமானால், ஆய்வு-படிப்பு என்பது நமது நடைமுறையின் ஒரு உள்ளார்ந்த பகுதியாக இருக்க வேண்டும். எல்லாம் தெரியும் என்கிற மமதை அகற்றப்பட வேண்டும். 

உறுதியான கட்சி

கட்சி வளர்கிற போது பல்வேறு பிரச்சனைகள் வரும். இன்று நாம் சந்திப்பது தேக்கத்தின் பிரச்சனை அல்ல, அது வளர்ச்சியின் பிரச்சனை. கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை அமைப்புக் கோட்பாடு ஜனநாயக மத்தியத்துவம். கட்சியின் ஒட்டுமொத்த நலன் பற்றி, மக்கள் நலன் பற்றி கவலை இல்லாமல் அவரவர் விருப்பப்படி வேலை என்பது கட்சி அமைப்பு முறைக்கு, ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டுக்கு எதிரானது. தனிநபர் பிரச்சனைகளின் பின்னால் ஓடுவது கம்யூனிஸ்ட் கட்சியின் வேலை அல்ல. கம்யூனிஸ்ட் கட்சி என்றால் ஒட்டுமொத்த சமூகத்தின், மக்களின் முன்னணிப் படை என்று அர்த்தம். முன்னணிப் படை என்றால், எந்த தியாகத்தையும் செய்யத் தயாரானவர்களாக, கட்சிக் கட்டுப்பாட்டைக் கறாராக கடைபிடிப்பவர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டதோர் போர்ப் படையாக கம்யூனிஸ்ட் கட்சியை கட்டி எழுப்பிட வேண்டிய அவசியம் இருக்கிறது. 

ஒரு மாறிச் செல்லும் கட்டத்தில் இருக்கக்கூடிய நம் கட்சியில். பல்வேறு அரசியல் நீரோட்டங்களிலிருந்து வந்து இணைந்து கொண்டிருக்கக்கூடிய தோழர்களை அரசியல் ரீதியாக, கருத்து ரீதியாக சிந்தனைரீதியாக கட்சி வழியோடு, அமைப்பு முறையோடு ஒருங்கிணைப்பது என்பது கட்சிக் கமிட்டிகளின் மிகமுக்கிய பணி ஆகும். 

அந்நிய கருத்தியல்கள் கட்சிக்குள் வரலாம். அவற்றை எதிர்த்துப் போராடிட வேண்டும். அதற்கு, ஒரே ஆயுதம் கட்சி அமைப்புதான். அதன் அரசியல் பலம்தான். கட்சி கமிட்டி என்பது வலுவானதாக, ஒன்றுபட்டதாக, எதையும் சந்திக்க தயாரானதாக இருக்கும் போதுதான் அது ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக் கமிட்டி என்கிற உண்மையான பொருளைப் பெறுகிறது. அப்படிப்பட்டதோர் கட்சியைக் கட்டிட நாம் இன்று உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும். 

நம் முன்னால் மிகப்பெரியதோர் அரசியல் கடமை காத்திருக்கிறது. அந்தக் கடமையை நிறைவேற்றிட, பாசிச சக்திகளை, வேரோடு சாய்த்திட, உழைக்கும் மக்களின் தமிழ் நாட்டை, புதியதோர் தமிழ் நாட்டைப் படைத்திட வீதிப் போராட்டங்களை, அரசியல் போராட்டங்களை நடத்திட தயாராக இருக்கக்கூடிய ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பை கட்டிட உறுதி ஏற்போம்!

 

இன்குலாப்! ஜிந்தாபாத்!

 


26 January, 2026