யூஜிசி சமவாய்ப்பு விதிமுறைகள் மீதான நயவஞ்சகமான தடையை எதிர்த்துப் போராடுவோம்!

$articleData->title

யூஜிசி சமவாய்ப்பு விதிமுறைகள்

இந்திய உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் நிலவும் கொடூரமான சாதியப் பாகுபாட்டின் யதார்த்தத்தை இந்தியாவுக்கு உணர்த்திய ரோஹித் வெமுலாவின் அதிர்ச்சியூட்டும் நிறுவனப் படுகொலை நடந்து பத்தாண்டுகளாகிவிட்டன. இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவம், நீதிக்கான கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றமும் மோடி அரசாங்கமும்  துரோகம் இழைத்திருப்பதன் மூலம் பத்தாண்டுகளுக்குப் பிறகு, ரோஹித் வெமுலா மீண்டும் ஒருமுறை படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் சமூகபாகுபாடு, அநீதி, ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒவ்வொரு முயற்சியும் வரலாற்று ரீதியாக அதிகார வர்க்கத்திடமிருந்தும் ஆதிக்கப் பிரிவினரிடமிருந்தும் கடுமையான சமூக எதிர்வினையை எதிர்கொண்டு வருகிறது; ஆனால் இம்முறை அரசாங்கமும் நீதித்துறையும் வெட்கக்கேடான முறையில் இந்த சமூக எதிர்வினைக்கு உடந்தையாகி, செயற்கையாக உருவாக்கப்பட்ட இச்சீற்றத்தை சமூக நீதியின் அடிப்படைக்கு துரோகம் இழைப்பதற்கான சாக்குப்போக்காகவும் தப்பிக்கும் வழியாகவும் பயன்படுத்தின.

 

கல்வி வளாகங்களில் சாதி பாகுபாடு, பாலினப் பாகுபாடு, அநீதி இழைக்கப்படுவதை தீர்ப்பதற்கான முதல் தீவிர முயற்சியே, 2012 யூஜிசி விதிமுறைகளை ஏற்றுக் கொள்வதற்கு வழிவகுத்தது. ஆனால், 2016 ஜனவரியில் நடந்த ரோஹித் வெமுலாவின் நிறுவனப் படுகொலை அந்த விதிமுறைகளின் போதாமையை அம்பலப்படுத்தியது.

அது முதல் இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களும் குடிமக்களின் முற்போக்கு பிரிவினரும் வளாகங்களில் சாதிப் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவர ரோஹித் வெமுலாவின் பெயரில் செயலூக்கமிக்க சட்டத்தை இயற்றக் கோரி வருகின்றனர். ஆனால் மோடி அரசாங்கம், அந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்க மறுத்துவிட்டது.

மாறாக, ரோஹித்துக்கு நீதி கேட்டு முன்னின்று போராடிய ஜவஹர்லால் நேரு, ஹைதராபாத், இன்ன பிற பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், சங்க் பரிவார் கும்பல்களால் வேட்டையாடப்பட்டனர்;  தேசவிரோதிகளாக சித்தரிக்கப்பட்டனர். மே 2019 இல், மகாராஷ்டிராவில் ஒரு இளம் பழங்குடி முதுகலை மருத்துவ மாணவி டாக்டர் பாயல் தாத்வி சாதிப் பாகுபாட்டால் உயிரிழந்தபோது இந்தியா மற்றொரு நிறுவனப் படுகொலையைக் கண்டது.

பாயல் தாத்வியின் நிறுவனப் படுகொலையைத் தொடர்ந்து ரோஹித் சட்டத்திற்கான அவசரத் தேவை குறித்து புதிய கோரிக்கை குரல் நாடெங்கும் எழுந்தது. ரோஹித் மற்றும் பாயலின் அன்னைகள், ராதிகா வெமுலாவும் அபேதா தாத்வியும் உச்ச நீதிமன்றத்தில், விளிம்புநிலை சமூகப் பின்னணியைச் சார்ந்த எந்த மாணவரும் ஆராய்ச்சியாளரும் அல்லது ஆசிரியரும் ரோஹித் அல்லது பாயலைப் போல மடிய அவசியமில்லாத நீதியையும் சமூக பாகுபாடற்ற கல்வி வளாகங்களையும் கோரினர். இந்த சட்டப் போராட்டத்தின் விளைவாகவும் கடுமையான பாகுபாடு எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான தொடர்ச்சியான கோரிக்கைகளின் விளைவாகவுமே ரோஹித் வெமுலாவின் பத்தாவது நினைவு நாளின் சில நாட்களுக்கு முன்பு யூஜிசி இறுதியாக சமவாய்ப்பு விதிமுறைகளை வெளியிட்டது.

2012 விதிமுறைகளுடன் ஒப்பிடுகையில், புதிய 2026 சமவாய்ப்பு விதிமுறைகள் மிகக் குறிப்பாகவும் காலக்கெடுவுடன் கூடிய குறைதீர்க்கும் செயல்முறையையும் கட்டமைப்பையும் வழங்கின. மேலும் எஸ்சி/எஸ்டி சமூகங்களைச் சேர்ந்த தனிநபர்களின் புகார்களுடன் ஓபிசி பிரிவினர் எதிர்கொள்ளும் சமூக பாகுபாட்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டன.

 யூஜிசி-இன் புதிய சமவாய்ப்பு விதிமுறைகளுக்கு எதிராக உயர் சாதியினரின் சில நாள் சீற்றத்திற்கே, உச்ச நீதிமன்றம் தலையிட்டு யூஜிசி விதிமுறைகளுக்குத் தடை விதித்தது.

செப்டம்பர் 2025 இல், சமூக பாகுபாடுகளுக்கு எதிரான கடுமையான விதிமுறைகளை உருவாக்குமாறு யூஜிசியை  வலியுறுத்திய அதே உச்ச நீதிமன்றம், இப்போது எஸ்சி-எஸ்டி-ஓபிசி அடித்தட்டு சமூகங்கள் எதிர்கொள்ளும் சாதிப் பாகுபாட்டின் மீதான யூஜிசி-இன் விதிமுறைகள், சாதியற்ற சமூக ஒழுங்கை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் ஒரு பிற்போக்குத்தனமான தடைக்கல் என்று விவரித்தது! இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை (யூஜிசி விதிமுறைகள்) மேற்கொண்டதற்காக தங்களைத் தாங்களே பாராட்டிக் கொண்ட அதே வேளையில், சில நாட்களுக்கு முன்பு தாங்கள் அறிவித்த விதிமுறைகளைப் பாதுகாக்க யூஜிசியும் அரசாங்கமும் மறுத்ததும் அவர்களின் மயான அமைதியும் சமமாக எரிச்சலூட்டும் வகையில் இருந்தது! இதற்கிடையில், இந்தியாவின் வீதிகளில் செயற்கையாக உருவாக்கப்பட்ட உயர் சாதிச் சீற்றம், எதிர் பாகுபாடு பற்றியும் உயர் சாதியினருக்கு ஏற்படும் பாதிப்பு பற்றியும் அலறியது; இந்த எதிர்ப்பை நாடகமாக்க மோடி-ஷா உருவபொம்மைகளை எரித்தது; மேலும் அனைத்து வகையான வழமையான சாதிய வன்மத்தையும் கக்கியது.

 பாகுபாட்டை வரையறுப்பதில் உள்ள தெளிவின்மை, முன்மொழியப்பட்ட கட்டமைப்பு மற்றும் குறைதீர்க்கும் முறையின் பலவீனங்கள் உள்ளிட்ட குறைபாடுகளை யூஜிசி விதிமுறைகள் கொண்டிருந்தன. ஆனால் உயர் சாதியினர் விலக்கப்படுவதாகவும் அவர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுவது முற்றிலும் தவறானது என்பதுடன் புதிய விதிகளின் தவறான பயன்பாடு பற்றிக் கூறப்படும் அச்சுறுத்தல் வேண்டுமென்றே மிகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான தீர்வு விதிமுறைகளை மேம்படுத்தி அவற்றை மிகவும் பயனுள்ளதாக்குவதே தவிர, பாகுபாட்டையும் ஒடுக்குமுறையையும்  இயல்பான ஒழுங்காக ஏற்றுக்கொள்வதும் நன்கு வேரூன்றிய ஆதிக்க சாதியினரின் சலுகைகளை அவர்களின் உரிமையாகப் பாதுகாப்பதும் நிச்சயமாக அல்ல.

அனைத்து வகையான பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் சமூக சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கும் சமூக நீதியை உறுதி செய்வதற்கும் உறுதிபூண்ட அரசமைப்புச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு எழுபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகியும் அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்தை செயல்படுத்த அரசுக்கு இன்னும் அரசியல்ரீதியாக விருப்பம் இல்லை என்ற உண்மை, சாதிய அமைப்புமுறை அதன் ஒவ்வொரு செயலிலும் இந்தியாவை எவ்வாறு தொடர்ந்து பின்னுக்குத் தள்ளுகிறது என்பதை தெளிவாக காட்டுகிறது.

 வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களுக்கான இட ஒதுக்கீடு வடிவிலான ஆதரவு நடவடிக்கைகூட, இந்தியாவில் அவ்வப்போது கடுமையான எதிர்ப்பை சந்திக்கிறது. விதவைகள் தீக்குளிப்பதை தடை செய்ய ராம்மோகன் ராய் போராடிய, அல்லது பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு கல்வியளிக்க ஜோதிபாவும், சாவித்ரிபாய் பூலேவும் முன்னோடியாக இருந்த காலனித்துவ காலத்திலிருந்தே பெண்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கான எல்லா முயற்சிகளும் ஆணாதிக்க சக்திகளின் எதிர்ப்பை சந்தித்துள்ளன. ஆனால் சுதந்திரம் அடைந்து அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட பின்னரும் இந்த எதிர்வினை தொடர்கிறது. 1950களில் இந்து சட்ட மசோதா இயற்றப்பட்டது முதல் வரதட்சணை எதிர்ப்பு அல்லது வன்புணர்வு எதிர்ப்புச் சட்டங்கள் அல்லது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது வரை, ஒவ்வொரு முற்போக்கான நடவடிக்கையும் நன்கு வேரூன்றிய சாதியாதிக்க சக்திகளிடமிருந்தும் ஆணாதிக்க சக்திகளிடமிருந்தும் பிடிவாதமான மனுவாத எதிர்ப்பை எதிர்கொள்கின்றன. 1990 இல் மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்கு எதிரான வெறித்தனமான உயர் சாதி எதிர்ப்பும் வி.பி.சிங்குக்கான ஆதரவை பாஜக திரும்பப் பெற்றதும் இன்னும் பசுமையாக நம் நினைவில் உள்ளது.தற்போதைய தருணத்தை இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சி எனத்  தெளிவாகக் காணலாம்.

ஓபிசி ஆதரவு பிம்பத்தை உருவாக்கி, எஸ்சி மற்றும் ஓபிசி பிரிவு இரண்டிலும் உட்பிரிவு சாதிகளுக்குள் பிளவை ஏற்படுத்தி, ஒரு பிரிவை மற்றொரு பிரிவுக்கு எதிராக நிறுத்தி, பாஜக அதன் முக்கிய உயர் சாதி ஆதரவுத் தளத்தைச் சுற்றி ஒரு பெரிய சமூகக் கூட்டணியை உருவாக்கும் சமூகப் பொறியியல் கலையைச்  செழுமைப்படுத்துவதன் மூலம் மோடியின் காலகட்டத்தில், பாஜக அதன் முக்கிய மனுவாத அடையாளத்தை மறைக்க  முடிந்துள்ளது. யூஜிசி விதிமுறைகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினருடன் ஓபிசி பிரிவினரையும் இணைத்தது, இந்த சமூகப் பொறியியல் வரைபடத்தை நிலைகுலையச் செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது. எனவே யூஜிசி விதிமுறைகள் மீதான உச்ச நீதிமன்றத் தடை சங்பரிவார்-பாஜக  கும்பல்களுக்கு பெரும் நிம்மதி அளித்துள்ளது. பாஜக இதை நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதும் அதே வேளையில், யூஜிசி விதிமுறைகளைத் தடுத்து நிறுத்தியதன் மூலம் வெற்றியை சுவைத்துள்ள உயர் சாதியினரின் முயற்சி மேலும் இப்போது பல்வேறு துறைகளில் சமூக சமத்துவம், சமமான பிரதிநிதித்துவத்திற்கான ஒவ்வொரு முயற்சியையும்  தடை செய்யவும் ஆதரவு நடவடிக்கைக்கான (இட ஒதுக்கீடு) வழிமுறைகளை பின்னுக்குத் தள்ளவும் தற்போது விரும்பும்.

 நில உரிமைகளுக்கான இயக்கம் ஒரு பயனுள்ள ஒப்புமையை வழங்குகிறது. வாஜ்பாய் அரசாங்கத்தின் தோல்வியும், அதன் “இந்தியா ஒளிர்கிறது” என்ற கட்டுகதையைத் தொடர்ந்து, இந்தியாவில் நிலப் பாதுகாப்பு மற்றும் நில உரிமைச் சட்டத்திற்கான புதிய எழுச்சியைக் கண்டோம். வன உரிமைகள் சட்டமும் ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமும்  நிறைவேற்றப்பட்ட காலகட்டமும் இதுவாகும். நிதிஷ் குமார் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட நிலச் சீர்திருத்த ஆணையம் அதன் அறிக்கையை சமர்ப்பித்து, நிலம் கையகப்படுத்தல் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. அதன்படி எந்தவொரு நிலத்தையும் கையகப்படுத்த ஒப்புதலும் உரிய இழப்பீடும் கட்டாயமாக்கப்பட்டது. இருப்பினும், நிலப்பிரபுத்துவ பிரிவினரை திருப்திப்படுத்த பீகார் நிலச் சீர்திருத்த அறிக்கை அரசாங்கத்தால் கைவிடப்பட்டது. மேலும் மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தச் சட்டங்களைச் சீர்குலைக்கவும் மாற்றியமைக்கவும் இடைவிடாமல் முயன்று வருகிறது.

நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை ரத்து செய்வதற்கான அதன் முயற்சி வெற்றிபெறவில்லை என்றாலும் கார்ப்பரேட் ஆதரவு விவசாயச் சட்டங்களும் திரும்பப் பெறப்பட வேண்டியிருந்ததாலும் அரசாங்கம் இப்போது முடிந்தவரை நிலத்தைக் கைப்பற்ற முழு அளவிலான புல்டோசர் ராஜ்ஜியத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் யூஜிசி விதிமுறைகளுக்குத் தடை விதிக்கும் அதே வேளையில், அந்த யூஜிசி-யையே மாற்றியமைக்க விபிஎஸ்ஏ மசோதா 2025 முன்மொழிகிறது. யூஜிசி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, தேசிய ஆசிரியர் கல்விக் குழு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு ஒற்றை மையப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை அமைப்பாக மாற்றிட விபிஎஸ்ஏ (வளர்ந்த இந்தியாவிற்கான கல்வி ஆணையம்) மசோதா 2025 முன்மொழிகிறது. உயர்கல்வித் துறை முழுவதும் எப்போதும் இல்லாத வகையில் அதிகாரத்தை மய்யப்படுத்துதல், தனியார்மயமாக்கல் மற்றும் இந்துத்துவா கருத்தியல் கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்படுகிறது.

ரோஹித் வெமுலாவின் நிறுவனப் படுகொலையைத் தொடர்ந்து ஜேஎன்யு, ஹைதராபாத் பல்கலைக்கழகம் மற்றும் பிற முற்போக்கு மாணவர் இயக்க வளாகங்கள் மீதான தாக்குதல்கள் தொடரும் நிலையில், சமூக நீதி, கல்விச் சுதந்திரம், தரமான கல்வி மற்றும் கண்ணியமான வேலைவாய்ப்புக்காக மாணவர்களிடையே கொந்தளிப்பு ஏற்படும் இத்தருணத்தில் ஜேஎன்யு மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. வளாக ஜனநாயகத்தின் மீதான அதிர்ச்சியூட்டும் ஒடுக்குமுறையாக, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மத்திய நூலகத்தில் கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டதை எதிர்த்துப் போராடியதற்காக ஜேஎன்யு மாணவர் அமைப்பின்  நான்கு மையப் பொறுப்பாளர்களான – தலைவர் அதிதி, துணைத் தலைவர் கோபிகா, பொதுச் செயலாளர் சுனில், இணைச் செயலாளர் டேனிஷ் ஆகியோருடன் முன்னாள் தலைவர் நிதிஷ்-ஐயும் ஜேஎன்யு நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

 உறுதியான சமூக நீதி, சமமான பிரதிநிதித்துவம் மற்றும் செயலூக்கமுள்ள ஜனநாயக தேடல் கொண்டவர்களின் நோக்கம் நிச்சயமாக யூஜிசி விதிமுறைகளை விட மிகப் பெரியது. எனவே இத்தருணத்தில் ஒரு சக்திவாய்ந்த மாணவர் எழுச்சியே இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்திற்கும் உயர்கல்வி வளாகங்களுக்குள்ளும் அதற்கு அப்பாலும் சாதியை ஒழிப்பதற்கான பாதையின் திறவுகோலாக அமையும்.

 

தலையங்கம்,

எம்எல் அப்டேட், 27 ஜன – 02 பிப் 2026.

தமிழாக்கம்: விஜி


20 February, 2026