ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய்க்கு கொள்முதல்; உடன்குடி அரசு மின்திட்டம் தனியாருக்கு தாரைவார்ப்பு

$articleData->title

ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய்க்கு கொள்முதல்;

தமிழ்நாட்டில், தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த 3 மாதங்களாக மின்வெட்டுகள் அன்றாட செய்திகளாகி விட்டன. மின்சார அமைச்சர் தரப்பிலிருந்து, "அவை பவர்கட் அல்ல, மின்தடைகள் தான்'' என்ற புதிய விளக்கம், புதிய காரணங்கள் சொல்லப்பட்டு வந்தன. எனினும் மின்வெட்டுகள் தொடர்ந்து அதிகரிக்கவே, வரலாறு காணாத விலைக்கு  யூனிட் ரூ.35 க்கு மின்சாரத்தை  தனியார் கேஸ் மின்உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து தவெக அரசு வாங்கி வருகிறது. இதே தவெக அரசு தான், 'கடந்த திமுக ஆட்சியில் யூனிட் மின்சாரம் ரூ.11 முதல் ரூ.20 வரை கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்துள்ளது' எனக் குற்றம்சாட்டி நடைமுறையில் இருந்த மின் கொள்முதல் ஒப்பந்தங்களை எல்லாம் கடந்த மாதத்தில்

ரத்து செய்து இருந்தது.


யூனிட் ரூ.35க்கு கொள்முதல் ஏன் என்பது பற்றி மின்சார அமைச்சர் நிர்மல்குமார் தரும் விளக்கங்கள்:-

1) பீக் ஹவர் மின்சாரத் தேவைக்காகவே ( அதாவது மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நமது தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே)  வாங்கினோம்; அதுவும் 1000 மெகாவாட் மட்டுமே யூனிட்  35 ருபாய் விலைக்கு வாங்குகிறோம்.

2) நமது சொந்த மின்உற்பத்தி தினசரி 5300 MW தான்; ஆனால், தற்போதைய தினசரி மின்சார நுகர்வு 21,700 மெகாவாட்டாக உயர்ந்துள்ளதால், பீக் ஹவர் தேவைக்காக மட்டுமே 35 ரூபாய் விலையில் வாங்குகிறோம்.

3) கேஸ் மின்சார உற்பத்தி செலவு ரூ.20 முதல் 25 வரை ஆகும். நாம் நமது நாப்தா மின்நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்தால் யூனிட் செலவு ரூ.45 ஆகிவிடும். எனவே, ரூ.35 என்பது பெரிய தொகை இல்லை. அக்.15 முதல் அக்.31 வரை 16 நாட்களுக்கு மட்டுமே வாங்குவதால், கூடுதல் செலவு சுமார் ரூ.100- கோடி மட்டுமே ஆகும்.

உண்மைநிலை வெளியிடப்பட வேண்டும்! 

1) தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தமிழ்நாட்டின் அன்றாட மின்சாரத் தேவை பற்றி  கண்காணிக்கும் அதிகாரிகள் குழு ஒன்று தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.கோடைகாலத்தில் பீக்ஹவர் நெருக்கடி பற்றி அதிகாரிகள் குழு உரிய எச்சரிக்கை செய்தபோதும், முன்கூட்டியே குறுகியகால மின் கொள்முதல் ஒப்பந்தம் போடாமல், பழைய ஒப்பந்தங்களை ரத்து செய்து நாட்களை கடத்திவிட்டு அவசர அவசரமாக 35 ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கு காரணம் நிர்வாகத் திறமை இன்மையா அல்லது அரசியலா என தவெக அரசு மக்களுக்குத் தெளிவுப்படுத்த வேண்டும்.

  

2) கடந்த திமுக ஆட்சியிலேயே தினசரி மின் நுகர்வு 20,000 மெகாவாட்டை கடந்துவிட்டது. இருந்தபோதும், திமுக அரசாங்கம் எப்படி மின்வெட்டுகள் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள்? திமுக ஆட்சியில் TANGEDCO வின் கீழ் உள்ள அனைத்து அனல்மின் நிலையங்களும், இயன்றவரை முழுமையான மின் உற்பத்தி செய்ததாக த.நா. மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

தவெக அரசு அமைந்த பின்னர், எண்ணூர், வடசென்னை, மேட்டூர், தூத்துக்குடி, உடன்குடி யூனிட் 1 உட்பட அனைத்து அனல்மின் நிலையங்களும் தினசரி முழுமையான உற்பத்தியில் ஈடுபட்டனவா? தினசரி ஒவ்வொரு அனல்மின் நிலையத்திலும் உற்பத்தியான மின்சார அளவு எவ்வளவு? அனைத்து அனல், புனல், கேஸ் மின்நிலையங்களில் உற்பத்தியான தினசரி மின்சாரம் எவ்வளவு? கடந்த திமுக அரசாங்கத்தின் மின் உற்பத்தியையும் ஒப்பிட்டு, தவெக அரசு ஒரு வெள்ளை அறிக்கையை  வெளியிட வேண்டும்.

3) கேஸ் மின்சார நிலையங்கள் மூலம் முழுஅளவு மின் உற்பத்தி செய்தால், யூனிட்டுக்கு ரூ.5 தான் உற்பத்தி செலவாகும். கடந்தகாலத்தில் குத்தாலம் கேஸ் மின்நிலையத்தின் உற்பத்தி செலவுகள் ஆவணங்களாக உள்ளன. மின்சார அமைச்சர் கூறுவதுபோல, நம்மிடம் நிறைய நாப்தா மின்நிலையங்கள் கிடையாது.  பேசின்பிரிட்ஜ் மின்நிலையம் (120 MW) மட்டுமே நாப்தாவில் இயங்கக் கூடியது. அதிலும் தயாரிப்பு செலவு யூனிட் 12 ரூபாய் மட்டுமே ஆகும். நாப்தா கிடைக்காதால், தற்போது அது டீசலில் இயக்கப்படுகிறது. அதேபோல இயற்கை எரிவாயு கிடைக்காததால் தற்போது திருமாக்கோட்டை (கோவில்களப்பால்) கேஸ் மின்நிலையம் (108 MW) முழுமையாக மூடப்பட்டுள்ளது.

எனவே, இயற்கை எரிவாயு, நாப்தா, நிலக்கரி போன்ற எரிபொருள் கொள்முதல் பிரச்சினைகளை சரிசெய்ய தவெக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையும் வெளியிடப்பட வேண்டும்.

தனியாருக்கு தாரை வார்க்கப்படும் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான உடன்குடி அனல் மின் நிலையம்! 

ஒரு யூனிட் மின்சாரம் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் நிலையில் இருக்கும்போது, சொந்த மின்உற்பத்தி குறைவுதான் என அறிவிக்கும் நிலைமையில், தமிழ்நாடு அரசு அவசரமாக உடன்குடி அரசு மின்நிலையத்தின் 4000 மெகாவாட் உற்பத்தியை தனியாருக்கு தாரை வார்க்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உடன்குடி அனல் மின் நிலையம் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில்(கல்லாமொழி கடற்கரை அருகில்)  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் (TANGEDCO / TNPGCL), சுமார் ரூ.13,000 கோடி திட்ட மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மிக உய்ய (Supercritical) அனல் மின் திட்டமாகும்.

முதல் அலகு யூனிட் 1 (660 மெகாவாட்) மார்ச் 13, 2026 அன்று தொடங்கியது. செப்டம்பர் 2026-ல் வணிக ரீதியான மின் உற்பத்தியும் துவங்கியது. இரண்டாம் அலகின் பணிகள் இந்த ஆண்டு (2026) இறுதிக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


2026 செப்டம்பரில், உடன்குடி அனல் மின் திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரிவுகள் உள்ளிட்ட ஏழு திட்டங்களுக்காக நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பாகத் தமிழக அரசு அரசாணை ஒன்றையும் வெளியிட்டுள்ளது;  சமீபத்தில் இந்த மின் நிலையத்தில் தலா 800 மெகாவாட் திறனில் கூடுதலாக 4 அலகுகள் அமைக்கும் விரிவாக்கத் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, 4 x 660 மெகாவாட்டில் இருந்து 4x800 மெகாவாட் ஆக உயர்வு செய்யப்பட்டது. இந்தப் பின்னணியில், தவெக அரசின் ஆட்சியில், தமிழக மின் உற்பத்தி கழகத்தின் போர்டு 23.09.2026 அன்று கூடி எடுத்த மிகமுக்கிய முடிவு 12.10.2026 ல் கையெழுத்திடப்பட்டு வெளியாகி அதிர்ச்சி அளிக்கிறது. 

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான உடன்குடி அனல் மின் நிலையத்தை PPP அடிப்படையில் - 'பொதுத்துறை தனியார் கூட்டு' என்ற அடிப்படையில்,  தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை அறிவிக்கிறது. அதாவது, இதுவரை அரசே நேரடியாக கட்டி வந்த உடன்குடி மின்திட்டத்தின், ஸ்டேஜ் 2 ல் 2× 800 மெகாவாட் மற்றும் ஸ்டேஜ் 3 ல் 2×800 மெகாவாட் மற்றும் ஸ்டேஜ் 1 ல் 2வது யூனிட் 800 மெகாவாட் ஆக மொத்தம் PPP யில் 4000 மெகாவாட் மின்நிலையங்கள், 'பொதுத்துறை தனியார் கூட்டு' -  *Public Private Partnership (PPP)* என்றடிப்படையில் உருவாக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதாவது இனி தனியார் மின்நிறுவனங்கள் தான் உடன்குடியில் மின்உற்பத்தி செய்து தமிழக அரசுக்கு விற்பனை செய்யும்; அங்கு உற்பத்தியாகும் மின்சார கட்டணத்தையும் தனியார் நிறுவனங்கள் தான் நிர்ணயிக்கும். அதானி பவர், டாடா பவர், ஜேஎஸ்டபிள்யூ போன்ற கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் தான் 4000 மெகாவாட் மின்நிலையங்களை கட்டி, PPP நிபந்தனைகள் (Terms and conditions) அடிப்படையில், 25 வருடத்திற்கும் தாங்கள் விருப்பப்படி கட்டுப்பாடு இல்லாமல் மின்சாரத்தை விற்பார்கள். பொதுத்துறை மின்நிலையங்களில் ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செலவு ரூ.6 முதல் ரூ.10 வரை ஆகும். ஆனால், தனியார் மின்நிலையங்கள் மின்சார தட்டுப்பாடு மற்றும் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தமிழக அரசுக்கு மின்சாரத்தை விற்று கொள்ளை இலாபம் அடிப்பார்கள். 

கூடுதலாக, தனியார்மயம் ஆவதால் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசுத்துறை வேலைவாய்ப்புகள் பறிபோகும்; நீண்டகால நோக்கில் மதிப்பிட்டால், நமக்கு சொந்தமான மின்னுற்பத்தியை கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்குத் தாரைவார்த்துவிட்டு, தமிழ்நாட்டின் மின் தன்னிறைவை இழக்க நேரிடும்.  

மின்தடைகள், தட்டுப்பாடுகள்,  மின்கட்டண உயர்வுகளுக்கு மிகமுக்கியக் காரணம் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் நாம் மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல் இருப்பதே ஆகும். ஒன்றிய பிஜெபி அரசு கொண்டுவந்துள்ள மின்சார திருத்த சட்டம் மற்றும் கொள்கைகள், அரசு வசமுள்ள பொதுத்துறை மின்உற்பத்தி நிலையங்களையும், மின்விநியோக கட்டமைப்பையும் தனியார் பெருமுதலாளிகளுக்கு தாரைவார்க்க வழிவகுத்துள்ளன.

உடன்குடி மின்திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஒருபுறம்;  "பொதுநலன்" என்பதற்காக, நமது விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் சாகுபடி நிலங்களை மின்நிலையத்திற்கு வழங்கியுள்ளது மறுபுறம். ஆனால், இவை பற்றி எல்லாம் கவலைப்படாத தவெக அரசாங்கம், தமிழ்நாட்டின் அரசு மின்னுற்பத்தி நிலையங்களை தனியாருக்குத் தாரைவார்த்திட அவசரம் காட்டுகிறது. அனுமதியோம், கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகள் முறியடிக்கப்பட வேண்டும்.

28 October, 2026