எதிர்ப்பும் புத்துயிர்ப்பும் இந்தியா கூட்டணியின் எதிர்காலமும்

$articleData->title

எதிர்ப்பும் புத்துயிர்ப்பும் இந்தியா கூட்டணியின் எதிர்காலமும்

ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பு, ஒற்றுமை, பணிவு ஆகியவற்றில் வேர் கொண்ட புதிய உந்துசக்தியும் புதுப்பிக்கப்பட்ட அரசியல் நோக்கமும்  இந்தியா கூட்டணிக்குத் தேவைப்படுகிறது.


காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இந்தியா (INDIA) கூட்டணியின் (உள்ளடக்கிய வளர்ச்சிக்கான இந்திய தேசியக் கூட்டணி) தலைவர்கள் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையை பொதுவெளியில் வெளியிடுவது இதுவே முதல் முறையாக இருக்கலாம். இந்தியக் குடியரசின் அரசியலமைப்பு அடித்தளத்தின் மீதும் கோடிக்கணக்கான இந்தியர்களின் சுதந்திரம், வாழ்வாதாரங்கள் மீதும் சங்-பாரதிய ஜனதா கட்சி நடத்தும் தாக்குதலுக்கு எதிராக ஓர்  ஒருங்கிணைந்த எதிர்ப்பைக் கட்டியெழுப்புவதில் அவர் கவனம் செலுத்துவது வரவேற்கத்தக்கது; என்றாலும், உண்மையிலேயே சக்திவாய்ந்த, விடாப்பிடியான எதிர்ப்பைக் கட்டியெழுப்பும் நோக்கில் சில ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைப்பது அவசியமாகிறது.


20-க்கும் மேற்பட்ட மாநிலங்கள், ஒன்றியப் பகுதிகளில் பாஜகவின் ‘இரட்டை இன்ஜின்’/தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆட்சி நடைபெற்று வரும் வேளையில், ராகுல் காந்தியின் உணர்ச்சிப்பூர்வமான உரை ஒருபுறம் நம்பிக்கையூட்டுவதாகவும் மறுபுறம் சற்றே கவலையளிப்பதாகவும் அமைந்திருந்தது. இது காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றாலும் இந்தியாவின் இறையாளுமைமிக்க, சமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசைப் பாதுகாப்பதற்காக ஒன்றுபட்டுள்ள, நாட்டின் பல்வேறு கருத்தியல் நீரோட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 23 கட்சிகளின் கூட்டத்தில், அதிலுள்ள சில பகுதிகள் சற்றே முரண்பாடாகத் தோன்றின.


பூர்ண ஸ்வராஜ் (முழுமையான சுதந்திரம்) காங்கிரஸின் அதிகாரப்பூர்வ குறிக்கோளாக மாறிய பிறகுதான், காங்கிரஸ் ஒரு எதிர்ப்பு இயக்கமாக உருவெடுத்தது என்பதை ராகுல் காந்தி நமக்கு நினைவூட்டுவது சரியே. 1927 சென்னை அமர்வில் அறிமுகப்படுத்தப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1929 லாகூர் காங்கிரஸ் அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்தத் தீர்மானம், காங்கிரஸை இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முன்னணி பாத்திரத்திற்கு கொண்டு வந்தது; அதோடு, கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள், இன்று பூலே-அம்பேத்கர்-பெரியார் மரபு என்று அழைக்கப்படும் பிரிவினர் பிற முக்கியப் பங்காளர்களாகச் செயல்பட்டனர். இருப்பினும், பூர்ண ஸ்வராஜ் குறித்த கருத்து முதன்முதலில் 1921 ஆம் ஆண்டு காங்கிரஸின் அகமதாபாத் அமர்வில் மௌலானா ஹஸ்ரத் மோஹானி, சுவாமி குமரானந்தா ஆகிய இரு கம்யூனிஸ்ட் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மேலும் பகத் சிங்கும் அவரது தோழர்களும் 1928-ல் இந்துஸ்தான் சோசலிச குடியரசு இராணுவத்தை துவங்கி, தெளிவான மிகத் துணிச்சலான கருத்தியல் பிரகடனத்தை வெளியிட்டனர்.


சர்வாதிகாரத்திற்கு எதிரான போர்


விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கி நின்று, பல சமயங்களில் அதை எதிர்த்த ஒரேயொரு கருத்தியல் நீரோட்டத்திற்கும் இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடி வெற்றிப் பெற்ற பல்வேறு கருத்தியல் நீரோட்டங்களுக்கும் இடையிலானது இன்றையப் போராட்டமாகும். தங்களின் கருத்தியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்காக அரசு நிறுவனங்களையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கட்டமைப்பையும் மாற்றியமைக்க முயல்கிற

ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்)-பாஜகவின் இந்துத்துவ கருத்தியலுக்கு எதிராக இந்தச் சக்திகள் மீண்டும் ஒன்றிணைவதையே இந்தியா கூட்டணி பிரதிநிதித்துவப்படுத்துகிறது.  


‘ஒரே நாடு, ஒரே கட்சி’ என்ற தனது முயற்சியில் பாஜகவுக்குத் வெற்றி கிடைத்தால், பிற அரசியல் கட்சிகளைப் போலவே காங்கிரஸும் சமமான பாதிப்பைச் சந்திக்கும்; சொல்லப்போனால், அது மேலும் கூடுதலாக பாதிக்கப்படும் என்பது பெரும்பாலான சமயங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்டத்தில் நமக்குக் குறிப்பிடத்தகுந்த புகழ்மிக்க வரலாறு இருந்தாலும் தற்போதைய அனைத்தும் தழுவிய பாசிசத் தாக்குதல், கருத்தியல் தாக்குதலுக்கு எதிராக கருத்தியல் ரீதியிலான பாதுகாப்போ அல்லது அதை தடுத்து நிறுத்துவதற்கான இயல்பான எதிர்ப்பாற்றலோ எந்தவொரு கட்சிக்கும் இல்லை. பாஜகவே, சில காலத்திற்கு முன்பு வரை காங்கிரஸில் இருந்த தலைவர்களாலேயே நிரம்பியுள்ளது. இன்னும் சொல்லப் போனால் பாஜகவை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தை ராகுல் காந்தி வலியுறுத்திய அதேசமயத்தில், தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல்வர், ஹைதராபாத்தில் நடந்த சர்ச்சைக்குரிய இடிப்பு நடவடிக்கையை நியாயப்படுத்திப் பேசும்போது ஹிட்லரை பெருமையுடன் மேற்கோள் காட்டிக் கொண்டிருந்தார்.


நிறுவனங்களைக் கைப்பற்றி, வாக்காளர் பட்டியல் முதல் வாக்கு எண்ணிக்கை, தேர்தல் முடிவுகளை அறிவிப்பது வரை ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறையிலும் முறைகேடு செய்தால், இந்தியாவை இறையாளுமைமிக்க, சமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக கருதும் அரசியலமைப்பை மரபாகப் பெற்ற மக்களுக்கு என்ன வழி எஞ்சியுள்ளது? எதிர்த்துப் போராடுதல் மட்டும் தான் இதற்கு ஒரே பதில் என்று ராகுல் காந்தி வாதிடுவது முற்றிலும் சரியானது – அது ஆங்காங்கே நடக்கும் தற்காலிகமான அல்லது அடையாள எதிர்ப்பாக இல்லாமல், நீடித்த, பரந்த, உறுதியான ஜனநாயக ரீதியிலான எதிர்ப்புப் போராட்டமாக இருக்க வேண்டும்.  


நீதிமிக்க குடியரசை நோக்கி


நாட்டிற்கும் அதன் ஆகப் பெரும்பான்மையான மக்களுக்கும் பேரழிவை ஏற்படுத்திய கொள்கைகளை இனியும் நம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது. வெகுமக்களை ஏழைகளாக்கி, சுற்றுச்சூழலைச் நாசமாக்கி, இந்தியாவின் அனைத்து வளங்களையும் ஒரு சில கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கும் சலுகைசார் முதலாளித்துவ  பொருளாதார மாதிரி ஒழித்துக்கட்டப்பட வேண்டும். அமெரிக்க ஏவுகணைகளால் இந்திய மாலுமிகள் கொல்லப்படும் சூழலிலும் அடாவடித்தனமான அமெரிக்க-இஸ்ரேல் அச்சிற்கு இந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தன்னாட்சி உரிமையை அடகு வைக்கும் வெளியுறவுக் கொள்கை உடனடியாக மாற்றப்பட வேண்டும். பழங்குடிகளின் நிலம், வன உரிமைகள் மீதான தாக்குதல்களும் அவர்களின் அரசியலமைப்புப் பாதுகாப்பைப் பறிக்கும் முயற்சிகளும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மாற்றுக்கருத்துடையோரை குற்றவாளிகளாக்கும், புல்டோசர்களையும் போலி மோதல்களையும் கொண்டாடும் ஒரு ஆட்சி மாதிரிக்கு ஜனநாயகக் குடியரசில் இடமில்லை. அதேபோல், மத மேலாதிக்கம், புறக்கணிப்பு மூலம் தேசியத்தை வரையறுக்கும் கலாச்சார தேசியவாதக் கருத்தியல் நிராகரிக்கப்பட வேண்டும். இறுதியாக, நம்பகத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் பலிகடாவாக்கும் தேர்தல் முறையில் உடனடியான, விரிவான சீர்திருத்தம் வேண்டும்.


நிச்சயமாகச் சொல்வதானால், இத்தகைய எதிர்ப்பு இயக்கங்கள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. 2014-ல் நிலக் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தைக் கைவிடவும் ஏழாண்டுகளுக்குப் பிறகு மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும் நரேந்திர மோடி அரசை விவசாயிகள் கட்டாயப்படுத்தினர். அரசியலமைப்பு விழுமியங்களுக்கு அச்சுறுத்தலாகப் பலரால் பார்க்கப்பட்ட 2019 ஆம் ஆண்டின் குடியுரிமை (திருத்த)ச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக ஷாகீன் பாக் தலைமையில் நடந்த இயக்கம், நாடு தழுவிய எதிர்ப்பைப் பற்ற வைத்தது. மிக அண்மையில், அதிகரித்து வரும் வேலைப்பளு, குறைந்து வரும் ஊதியத்திற்கு எதிராக வட இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள், அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யுஐ) அல்லது அகில இந்திய மாணவர் கழகம் (ஏஐஎஸ்ஏ), இந்திய மாணவர் சங்கம் (எஸ்எஃப்ஐ) போன்ற இடதுசாரி மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட அமைப்புகளின் தலைமையிலான மாணவர் போராட்டங்கள் அல்லது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) எனப்படும் புதிய டிஜிட்டல் நிகழ்வுப்போக்கு, கல்வி, தேர்வு முறையில் மோசமாகிவரும் நெருக்கடிக்கு பொறுப்பேற்க கோரி வருகின்றன.


இந்த எதிர்ப்பிற்காக மக்கள் கொடுத்த விலையையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். டெல்லி எல்லையில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டத்தின் போது 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். அருட்தந்தை ஸ்டான் சுவாமி சிறைக்காவலில் இருந்தபோதே உயிரிழந்தார். எல்கர் பரிஷத், சிஏஏ போராட்டங்களுடன் தொடர்புடைய சுரேந்திர காட்லிங், உமர் காலித், ஷர்ஜீல் இமாம் போன்ற செயற்பாட்டாளர்கள் பல்லாண்டுகளாக சிறையில் வாடி வருகின்றனர். அடிப்படை உரிமைகளையும், நியாயமான ஊதியத்தையும் கோரியதற்காக தொழிலாளர்களும் செயற்பாட்டாளர்களும் சிறைவாசத்தை எதிர்கொண்டு வருகின்றனர். எந்தவொரு தெளிவான விளக்கமுமின்றி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பல மாதங்கள் காவலில் வைக்கப்பட்டிருந்து பின்னர் விடுவிக்கப்பட்ட சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் ஓர் அரிய விதிவிலக்காகத் தோன்றுகிறார். பத்திரிகையாளர்களும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு சட்டரீதியான நிவாரணம் பெற்ற சிலரில் பிரபீர் புர்காயஸ்தாவும் ஒருவர்.


கடுமையான மிரட்டல்களின் அழுத்தத்தால் அல்லது அதிகாரத்தின் கவர்ச்சியால் பிளவுபடும் அல்லது தனக்குள்ளே சிதைவுறும் அரசியல் கட்சிகளின் கவலைக்கிடமான நிலையுடன் மக்களிடையேயான இந்த துணிவையும் விடாமுயற்சியையும் 

ஒப்பிட்டுப் பாருங்கள். எதிர்ப்பைக் கட்டியெழுப்புவது பற்றிப் பேசும்போது நாம் எவ்வளவு பணிவுடன் இருக்க வேண்டும் என்பதை இது நினைவூட்டுகிறது. தற்போது நடந்து வரும் இந்தப் போராட்டங்களுடன் தங்களை இணைத்துக் கொள்வதும் பொதுமக்களின் ஏமாற்றம், கோபம், வேட்கையில் உள்ள ஆற்றலை வெளிக்கொண்டு வருவது, நீதிக்கான கோரிக்கைகளைப் பெருக்குவது, ஜனநாயகத்திற்கான கூட்டுப் போராட்டத்தை வலுப்படுத்துவது ஆகியவையே இந்தியா கூட்டணியின் முன்னாலுள்ள சவாலாகும்.

 

எதிர்க்கட்சிகளுக்கு மீண்டும் ஆற்றலூட்டுதல்


சம குடியுரிமை இயக்கம், வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் இயக்கம் போன்ற அடுத்தடுத்து நடந்த இரு சக்திவாய்ந்த போராட்டங்களின் தாக்கம், பாரத் ஜோடோ யாத்திரையின் (இந்திய ஒற்றுமைப் பயணம்) வெற்றி, 2020-ல் பீகாரில் பாஜக நூலிழையில் தப்பியது முதல் மேற்கு வங்கம் (2021), கர்நாடகாவில் (2023) அதன் தோல்விகள் வரை தொடர்ச்சியான ஊக்கமளிக்கும் தேர்தல் முடிவுகள் – ஆகியவை 2023-ல் இந்தியா கூட்டணி உருவாவதற்கான சிறந்த பின்னணியை உருவாக்கின.


(ஐக்கிய) ஜனதா தளமும் ராஷ்டிரிய லோக் தளமும் வெளியேறிய போதிலும் மேற்கு வங்கம், கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தேர்தல் ஒருங்கிணைப்பு இல்லாத போதிலும் 2024-ல் பாஜக தலைமையிலான என்டிஏ-வை இந்தியா கூட்டணி தோற்கடிப்பதற்கு மிக நெருக்கமாக வந்தது. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு – ஓரளவுக்கு பீகார் – ஆகிய மாநிலங்களின் முடிவுகள் இந்தியா கூட்டணியின் தேர்தல் திறனை நிரூபித்தன. இது காங்கிரஸின் எண்ணிக்கையை 100 இடங்களாகவும் கூட்டணியின் மொத்த எண்ணிக்கையை 234 ஆகவும் உயர்த்தியது. அதன்பிறகு, 2024-ல் மகாராஷ்டிரா, ஹரியானாவிலும் 2025-ல் டெல்லியிலும் ஏற்பட்ட தோல்விகளில் தொடங்கி தொடர்ச்சியான தேர்தல் பின்னடைவுகள் இந்தியா கூட்டணியின் பலத்தையும் செல்வாக்கையும் சிதைத்துள்ளன. பல் பரிமாண தேர்தல் மோசடிகளின் துணையோடு ஏற்பட்ட இந்த பின்னடைவுகள், இன்னும் குறைந்தபட்ச இந்திய தேர்தல் ஜனநாயகத்தில்  எஞ்சியிருப்பவற்றின் மீது பாஜகவின் பிடியை மேலும் இறுக்கியுள்ளது. இந்தியா கூட்டணிக்கு நிச்சயமாக ஒரு புதிய உந்துதலும் மாற்றமும் தெளிவாகத் தேவைப்படுகிறது. இந்தச் சூழலில் செயல்பட ராகுல் காந்திக்கு முக்கியமான இரட்டைப் பாத்திரம் உள்ளது – ஒன்று காங்கிரஸுக்கு மீண்டும் புத்துயிரூட்டுவது, அடுத்து பல்வேறு வரலாற்று பின்னணியும் கருத்தியல் சாய்வும் கொண்ட கட்சிகளுக்கு இடையே பரஸ்பர மரியாதை, நம்பிக்கை, இணக்கமான வாய்ப்பை  உறுதி செய்வதன் மூலம் பரந்த இந்தியா கூட்டணிக்கான தளத்தை எளிதாக்குவது. பன்முகத்தன்மையில் (அல்லது பன்முகத்தன்மை மூலமாக) காணும் ஒற்றுமையின் அடிப்படையில் மட்டுமே இந்தியா என்ற நாடானது வளர முடியும் என்றால், அதே விதி இந்தியா என்ற அரசியல் கூட்டணிக்கும் பொருந்தும்.


ஜனநாயக ரீதியான எதிர்ப்பு, ஒற்றுமை, பணிவு, புதுப்பிக்கப்பட்ட அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய உந்துதல் இந்தியா கூட்டணிக்கு அவசியம் .





09 July, 2026