செப்டம்பர் செய்தி:

தமிழ்நாடு மீண்டும் இடது பக்கம்!

$articleData->title

தமிழகப் புரட்சியாளர்களும் செப்டம்பரும்

அறுபது ஆண்டுகளாக அரசியல் சமூக களத்தில் ஆகப் பெரும் செல்வாக்கு செலுத்திவரும் திராவிடக் கட்சிகள் செப்டம்பர் மாதத்தை மிக முக்கிய மாதமாகக் கருதுகின்றன.

செப்டம்பர் 17, பார்ப்பனிய மனுநீதி, பெண்ணடிமைத் தனத்துக்கு எதிராகப் போர்க்குணமிக்க பகுத்தறிவு கருத்துப் போராட்டத்தை நடத்திய பெரியார் பிறந்தநாள். சமூக சீர்திருத்த இயக்கமான திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து சென்று, பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 (ஸ்டாலின் அரசு சமூகநீதி நாளாக அறிவித்தது) ல் திமுகவை தோற்றுவித்து ஆட்சி அதிகாரம் வரை கொண்டு சென்ற அண்ணாத்துரையின் பிறந்தநாள் செப்டம்பர் 15. இந்த மூன்று நிகழ்வுகளையும் ஒருசேர நினைவூட்டுகிற வகையில் “முப்பெரும் விழாவாக” நடத்துவது திமுகவின் வழக்கம். இந்த ஆண்டு, முக்கிய அரசியல் திருப்பமாக, பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், காமராஜர், அஞ்சலை அம்மாள் இவர்களை கொள்கைத் தலைவர்களாக அறிவித்துள்ள தவெக ஆட்சியில் ‘முப்பெரும் விழா’ நினைவு கூரப்படுகிறது.

செப்டம்பரில் வேறுபல அரசியல் சமூக முக்கியத்துவம் கொண்ட நாட்களும் உள்ளன. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக கப்பலோட்டிய தமிழன், தொழிலாளர் தலைவர், செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரம். பிறந்தநாள் செப்டம்பர் 5. தமிழ் மக்களின் தேசவிடுதலை வேட்கையை வீர உணர்ச்சியாக வடிவமைத்த மகாகவி பாரதியார் மறைந்த நாள் செப்டம்பர் 11. காங்கிரஸ்காரராக வாழ்க்கையைத் தொடங்கி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இந்திய சுதந்திரம் சமத்துவதைக் கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போன நிலையில், சமூக சமத்துவப் போரை முன்னெடுத்த தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளும் செப்டம்பர் 11.

சொல்லப்பட்டுள்ள நாட்கள் முற்றிலும் தற்செயலானவை. அந்த நாட்களில் நடந்த நிகழ்வுகள் சமூக, அரசியல், பண்பாட்டு இயக்கங்களால் விளைந்தவை. இந்தத் தற்செயல் நாட்கள் கண்ணாடிவழியே தமிழ்நாட்டின் வரலாற்றை மீளாய்வு செய்கிறோம். 

மேலே செல்லும் முன் வேறு சில நாட்களையும் நினைவுபடுத்திட வேண்டும். செப்டம்பர் 2 தோழர்கள் சந்திரகுமார்-சந்திரசேகர் நினைவுநாள். அறுபத்தேழில் அரியணையேறிய திமுக ஆட்சியில் நடைபெற்ற வெண்மணி படுகொலை இந்தியாவையே உலுக்கியது. ஏறத்தாழ  இருபது‌ ஆண்டுகளில் மீண்டும் தஞ்சை மண்ணில் அடித்தட்டு மக்களைத்  திரட்டி நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்துக்கு சவால் விட்ட புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சந்திரசேகர்-சந்திரகுமார் படுகொலை செய்யப்பட்ட நாள் செப்டம்பர் 2. தென்திசை தமிழ்நாட்டின், சிவகங்கை மண். சம உரிமை உணர்வுடன் புரவி எடுப்பதும் (உஞ்சனை படுகொலை), சாமி கும்பிடுவதும் கொலைக்குற்றமாக கருதப்பட்ட நாட்டு அதிகாரக் கட்டமைப்பில் உரத்து பேசவும் தயங்கிய அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடந்த “ஊமை ஜனங்களை” செங்கொடி தூக்கி ஓங்கி முழங்கச் செய்த தோழர் சுப்பு கொல்லப்பட்ட நாள் செப்டம்பர் 13. சமத்துவம் வேண்டும். அதை பறித்தெடுக்க அதிகாரம் வேண்டும் என இமானுவேலுவின் தொடர்ச்சியாக முழங்கியவர் சுப்பு.

இன்று அதிகாரம் நிறம் மாறி இருக்கிறது. கைமாறி இருக்கிறது. பழைய காங்கிரஸ் பிரபுக்கள் சிறுத்துப் போயிருக்கிறார்கள். புதிய பிரபுக்கள்‌ (கனிம வளத்துறை அமைச்சர்) சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரசும் தவெகவும் கை கோர்த்துக் கொண்டிருக்கின்றன. 50 ஆண்டுகளுக்கும் மேலான சமூக சமத்துவ இயக்கமும் கம்யூனிஸ்ட் அரசியலும் தோழர் சுப்புவின் தலைமையும் அதிகாரக் கோடுகளை திருத்தி எழுதியிருக்கிறது.

தஞ்சை கிராமப்புரங்களில் நிலப்பிரபுத்துவ நுகத்தடியில் கட்டப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்களை எழுந்து நிற்கச் செய்தவர். அடித்தால் திருப்பியடி, துண்டை தோளில் போடு, சிவப்புக் கொடியை தூக்கிப்பிடி என சிலிர்ப்பூட்டியவர். நிலம், கூலி, சுயமரியாதை, அதிகாரம் என்பதை சிவப்பு அரசியலாக மாற்றிக் காட்டிய சீனிவாசராவ் மறைந்தது செப்டம்பர் 30.

ஒன்றிலிருந்து மற்றொன்று…

சிங்காரவேலர் தொடங்கி சீனிவாசராவ் வரை, தோழர்கள் பெரியார், ஜீவா, ராமமூர்த்தி, சங்கரய்யா, நல்லக்கண்ணு உள்ளிட்டோர் தேச விடுதலை இயக்கத்தால் உத்வேகம் பெற்றவர்கள். பின்னர் சுயமரியாதை சமூக சீர்திருத்த இயக்கம் வழியாக சோசலிச, கம்யூனிச கொள்கைப் பிடிப்பால் உச்சம் பெற்று இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்கள். தேச விடுதலை இயக்கத்தின் போதாமை சுயமரியாதை இயக்கத்துக்கு பாதை போட்டது. சுயமரியாதையின் எல்லைக் கோடு, கம்யூனிச இயக்கத்தை வரவேற்றது. நாற்பதுகள் தொடங்கி அறுபது வரை, சமூகநீதி திராவிட இயக்கமும் இடதுசாரி இயக்கமும் முன்னும் பின்னுமாய் போட்டியில் இருந்து, இடதுசாரி இயக்கத்தை பின்னுக்கு தள்ளிய திராவிட இயக்கம் அறுபத்தேழில் அரியணை ஏறியது.

புரட்சிகர திருப்பமாக, 67ல் நக்சல்பாரி வெடித்தது. அதன் அதிர்வுகள் தமிழகத்திலும் தெறித்தது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் களம் கண்டு திமுகவால் ஈர்க்கப்பட்ட ஆளுமைகள் வெண்மணி கொடூரம் கண்டு கொதித்தனர். மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியின்பால் ஈர்க்கப்பட்டனர். அதிகாரத்தில் இருந்த திமுக அதிர்ச்சியடைந்தது. ஆட்சியாளர் கண்ணசைவில் மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் கட்சியின் முதல் மாநிலச் செயலாளர் (அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்) தோழர் அப்பு காணாமலடிக்கப்பட்டது இந்த செப்டம்பரின் ஏதோ ஒருநாளில்தான். ‘புரட்சித் தலைவர்’ ஆட்சியில் இடதுசாரி புரட்சியாளர்களின் மக்கள் போராட்டம் தர்மபுரி, வடார்க்காடு மாவட்டங்களில் வீறு கொண்டு எழுந்தபோது, போராட்டங்களை ஒடுக்கும் எண்ணத்துடன் எம்ஜிஆர்-தேவாரம் கூட்டணி, புரட்சியாளர் பாலனைக் கொன்றதும் இதே செப்டம்பரில் தான்.

தமிழ்நாட்டின் பரந்த சமூகங்களை உள்ளடக்கிய முற்போக்கு சமூக சீர்திருத்த இயக்கம், அரசியல் வடிவம் பெற்று சாமான்ய மக்களின் அடையாளமாக ஆட்சி பீடம் ஏறி ஆதிக்க மேட்டுக்குடிகளின் ஆளும் கட்சியாக மாறிய கதைதான் கடந்த 60 ஆண்டுகளின் ஆட்சி வரலாறு. திராவிட இயக்கத்தின் பரந்த சமூக அடித்தளமாக இருந்த ஏழை எளிய சாமான்ய மக்கள் மீது நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைத் திரிசூலங்களை ஏவின திராவிட ஆட்சிகள். சமூகநீதி நலத்திட்ட திராவிட மாடல் கொள்கைகள், அதிதீவிர சமூக, பொருளாதார அரசியல் ஏற்றத் தாழ்வையே உருவாக்கின. “இரு துருவ அரசியல்” என நாகரிகமாக அழைக்கப்பட்டாலும் கட்சி அரசியல் எனும் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத அரசியலாக மூழ்கிப்போனது. முற்போக்கான பண்பாட்டு உருவாக்கத்திற்காக பெரிதும் பாராட்டப்பட்ட தமிழ்நாடு அருவருப்பு பண்பாடாக இழிந்தும் போனது.

2026ன் “மாற்றம்”, நீண்டகால “ஏமாற்றம்” உருவாக்கியது. ஆனால் நூறுநாட்களை தாண்டியுள்ள தவெக ஆட்சி, திமுக, அதிமுக ஆட்சிகள் வெகு தீவிரமாக பின்பற்றிய கார்ப்பரேட் பாதையை இன்னும் முனைப்பாக செலுத்துகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரை, தில்லி எதிர் தமிழ்நாடு, பாஜக எதிர் திமுக அணி என்று இருந்த நிலைமை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. கொள்கை எதிரி கண்ணுக்குத் தெரியவில்லை. தூயசக்தி தவெக எதிர் தீயசக்தி திமுக என்பது முன்னுக்கு நிறுத்தப்படுகிறது. இரு துருவ அரசியலே தொடர்கிறது. அதிமுக இடத்தில் தவெக என்ற சமன்பாடு மாறுதல் மட்டுமே. “மாற்றம்” எதுவும் ‘தோற்றம்’ தரவில்லை. பெரியாரை கொள்கைத் தலைவராக காட்டும் தவெக, தனது கொள்கையாக ‘தாய்மாமன் மோதிரம்’, ‘அண்ணன் சீர்’ திட்டங்களைக் காட்டுகிறது. மற்றொரு கொள்கைத் தலைவர் காமராசர் மிசா கொடுமைகளுக்காக கண்ணீர் வடித்தார். ஆனால் தவெக தலைவர் விஜய் மிசா கொடுமைகளை கிண்டலடித்து கொச்சைப் படுத்துகிறார்!

இங்குதான் தனித்துவமான இடதுசாரி அரசியல் தேவைப்படுகிறது. நாட்டு விடுதலைப் போராட்டம் வழியே கம்யூனிஸ்ட் லட்சியத்தை வந்தடைந்த இடதுசாரிகள் கார்ப்பரேட்-காவிப்பாசிச கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்துப்போராடி இரண்டாம் சுதந்திரப் போராட்டத்துக்கு தலைமை தாங்கும் வேளை வந்துள்ளது. வரலாற்றில் முன்னரங்கில் களமாடிய இடது அரசியல் மீண்டும் முன்னரங்கிற்கு வந்தாக வேண்டும். தமிழ்நாட்டின் கடந்தகால முற்போக்கு சமூக விழுமியங்களுக்கு பாசிசமே கடும் அச்சுறுத்தல்.அந்த அச்சுறுத்தலை முறியடிக்க இடதுசாரிகளே களமாடமுடியுமென்பதே செப்டம்பர் சொல்லும் செய்தி. தமிழ்நாடு இடது பக்கம் திரும்ப வேண்டும்.

 

29 September, 2026