இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியவர் முஸ்லீம் மதத்தில் உள்ள இட ஒதுக்கீடு சலுகையைப் பெற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த சமீர் அகமது என்பவர் தொடுத்த வழக்கில், தமிழ்நாடு அரசு கடந்த 9.3.2024ல் பிறப்பித்த அரசாணையையும் இரத்து செய்துள்ளது உச்சநீதிமன்றம்.
இந்து மதத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத்தவர் இஸ்லாத்திற்கு மாறினாலும் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது. அந்த அரசாணைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், மதம் மாறியவர்கள் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் பெறும் இட ஒதுக்கீட்டைப் பெற முடியாது என்று கூறியது மட்டுமின்றி, தமிழ்நாடு அரசு 9.3.2024ல் பிறப்பித்த அரசாணையையும் இரத்து செய்தது. அதற்கு எதிரான மேல் முறையீட்டில்தான் உச்ச நீதிமன்றமும் அதை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பில் மதம் மாறிய ஒருவர் ஏற்கனவே முஸ்லீம் மதத்தில் உள்ள ஒருவரைப் போன்றவர் அல்ல. அது பிறப்பால் வருவது எனக் கூறியுள்ளது. ஆனால், மனுதாரர் சமீர் அகமது மதம் மாறியதால் அவருக்கு ஏற்கனவே பிறப்பால் இந்து மதத்தில் கிடைத்து வந்த இட ஒதுக்கீடும் தற்போது கிடைக்காது. ஏனெனில், சாதி இல்லாத ஒரு மதத்திற்கு அவர் சென்று விட்டார் என்றும் சாதியால்தான் இட ஒதுக்கீடு என்பதால் இந்து மதத்தை விட்டு வெளியேறுவது சாதியை விட்டு வெளியேறுவது. எனவே இட ஒதுக்கீட்டுச் சலுகையை பெற முடியாது என்று சொல்லியுள்ளது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, ஸ்ரீசந்திரசேகர் அமர்வு.
ஒரு குறிப்பிட்ட மதத்தின் சமூக அமைப்பில் பெற்றிருந்த பிற்படுத்தப்பட்ட நிலை, மற்றொரு மதத்திற்கு மாறும்போது, அதன் அந்தஸ்தை இழந்துவிடும். அரசியல் சாசன சட்டப்பிரிவு 16(4)ன் கீழ் வழங்கப்படும் இடஒதுக்கீடு சலுகைகளை மதம் மாறிய பின் இழக்க நேரிடும். புதிதாக மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகைகள் பொருந்தாது என்று கூறியுள்ளது.
இது இடஒதுக்கீட்டின் அடிப்படையையே காலி செய்கிறது. இட ஒதுக்கீட்டுச் சலுகை என்பது பொருளாதார அடிப்படையிலானது அல்ல. இது சமூகநீதி மற்றும் சமூக அந்தஸ்து சம்பந்தப்பட்டதாகும். ஒரு பிற்படுத்தப்பட்டவரோ, மிகவும் பிற்படுத்தப் பட்டவரோ, பட்டியலினத்தவரோ இந்து மதத்தில் இருந்து இஸ்லாத்திற்கோ கிறிஸ்தவத்திற்கோ மாறினாலும் சாதிய ரீதியான அவர்களது சமூக அந்தஸ்து மாறுவதில்லை. அதிலும் குறிப்பாக, பட்டியலினத்தவர்களுக்கு பழைய அந்தஸ்தே தொடரும் நிலைதான் இன்றைக்கும் சமூகத்தில் இருந்து கொண்டிருக்கிறது. பண்பாட்டு ஆய்வாளர் அறிஞர் தொ.பரமசிவம், ‘மதம் மாறிடலாம், ஆனால், சாதி மாற முடியாது’ என்று சொல்வார். தென்காசி மீனாட்சிபுரத்தில், இந்து மதத்தில் இருந்த சாதியாதிக்கக் கொடுமை தாங்காமல் பட்டியலின மக்கள் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் முஸ்லீம்களாக மாறினார்கள். அவர்கள் முஸ்லீம்களாக மாறினாலும் அந்தக் குடும்பத்துப் பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்பது மட்டுமின்றி, பழைய நிலையிலேயே அவர்களின் வாழ்க்கை இருந்தது என்பதை ‘கருப்பாயி என்கிற நூர்ஜகான்’ விவரிக்கிறது. இன்றைக்கும் நெல்லை மாவட்ட திருச்சபைகளில், தலித், நாடார் மற்றும் இதர சாதி தகராறுகளும் மோதல்களும் இருந்து கொண்டிருப்பதைக் காணலாம்.
தான் விரும்பிய இறையை மதத்தை தேர்வு செய்தவர் தன் சொந்த மதம் அல்லது மாறிய மதம் என்ற இரண்டு பக்கமும் உள்ள ஒரு இட ஒதுக்கீடு சலுகையைப் பெற முடியாது. அவர் மீண்டும் இந்து மதத்திற்கே திரும்பினால், இழந்த இடஒதுக்கீட்டுச் சலுகையை அவருக்கு வழங்குவது குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The bond lost என்ற ஆய்வு நூல் கோயம்புத்தூர் மாவட்ட பகுதியில் உள்ள விடுதலைக்கு முன்னர் அருந்ததியர் மக்கள் கிருஸ்தவத்திற்கு இடம் பெயர்ந்ததை ஆய்வு செய்கிறது. அது அய்ரோப்பிய ஆய்வாளர் குழு தொகுத்த நூல். ஆயிரக்கணக்கான அருந்ததியர் மக்கள் கிருஸ்துவத்திற்கு திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மதம் மாறினர். இந்த மாற்றம் 1935 ஆண்டு அரசமைப்பு சட்டப்படி தடுக்கப்பட்டது. மதம் மாறியவர் சலுகையைப் பெற முடியாது என்று அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது பற்றி ஒரு தனிப் பகுதி இந்தப் புத்தகத்தில் உண்டு. இந்தச் சட்டவரையறை நுட்பமானது. மதம் என்ற சிறையில் ஒருவரை தக்க வைக்க உருவாக்கப்பட்டது. இதில் பழங்குடி மக்கள் மட்டுமே விதி விலக்கு. அவர்கள் மதத்தால் அமைக்கப்பட்ட சமூகத்தினர் அல்ல. அவர்கள் சமூகத்தின் அடிப்படை பண்பாடு. எனவே மதத்தைக் காரணம் காட்டி அவர்கள் சலுகையைப் பறிக்க முடியாது. ஆனபோதும் அவர்களும்கூட மதம் மாறி தங்களுடைய பழங்குடியினர் பழக்க வழக்கங்களில் இருந்து (Traditional Customs) முற்றிலும் விடுபட்டுவிட்டால் பழங்குடியினரின் சலுகை கிடைக்காது என்று சொல்லப்படுகிறது.
இந்தத் தீ்ர்ப்பானது, இந்துக்கள் மதம் மாறக் கூடாது என்பதைச் சொல்லும் விதத்தில்தான் அமைந்துள்ளது. ஏற்கனவே பிற மதங்களுக்கு மாறிய பட்டியல் சாதியினருக்கு இட ஒதுக்கீட்டுச் சலுகை கிடையாது என்று இதே உச்சநீதிமன்றம் கூறியுள்ளதன் தொடர்ச்சியாகவே இந்தத் தீர்ப்பும் இருக்கிறது. இந்தியாவில், முஸ்லீம் மக்கள் மிகவும் பின்னடைந்த நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் முஸ்லீம்களில் குறிப்பிட்ட சாதியினருக்கு, பின் தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தீர்ப்பை வழங்கும் முன் சச்சார் கமிட்டி பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் கணக்கில் கொண்டதாகத் தெரியவில்லை். முற்பட்ட வகுப்பினருக்கு பொருளாதாரத்தில் பின் தங்கியவர் என்கிற அடிப்படையில் சலுகை கிடைக்கச் செய்த உச்சநீதிமன்றம், சமூக ரீதியாக பின் தங்கியுள்ளவர்களின் சலுகையை மதம் மாறியதைக் காட்டிப் பறிப்பது அநியாயம் ஆகும்.
தென் மாவட்டங்களில் பட்டியலின மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாலும் கூட சாதிய பாகுபாடு, ஒடுக்குமுறையினால் சாதியாதிக்கத் தாக்குதல்களுக்கும் படுகொலைக்கும் உள்ளாகிறார்கள். மதம் மாறினாலும் அவர்களுக்கு சமூகத்தில் சமத்துவம் கிடைக்காத நிலை உள்ள போது, அவர்கள் மதம் மாறுவதற்கு முன்பு பெற்று வந்த சலுகைகளைப் பறிப்பது அரசமைப்புச் சட்டப்படியான இட ஒதுக்கீட்டுக் கொள்கையையே சீர் குலைப்பதாகும். எனவே இந்தத் தீர்ப்பைச் சரி செய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு தொடர்பாக போடப்பட்டிருந்த 9.3.2024 தேதிய அரசாணை மீட்டெடுக்கப்பட வேண்டும். அதற்குரிய சட்ட நடவடிக்கைகளையும் சட்டத்திருத்தங்களையும் தவெக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
