அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் 5வது தேசிய மாநாடு செப்.20, 21 நாட்களில் நடைபெற்றது. மாநாட்டின் துவக்க நிகழ்வாக பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில், தேஷ் பக்த் யாதகர் ஹாலில், "விவசாயிகள் - தொழிலாளர்கள் ஒற்றுமை மாநாடு" செப்.20 அன்று சிறப்பாக நடைபெற்றது. பஞ்சாபைச் சேர்ந்த விவசாயி அமைப்பான 'ஜமூரி கிசான் சபா' (Jamhoori Kisan Sabha), (தோழர் பாஸ்லா தலைமையிலான ஆர்எம்பிஐ கட்சியின் விவசாய சங்கம்) ஏஐகேஎம் உடன் இணைந்து மாநாட்டை நடத்தியது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தோழர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். ஆர்எம்பிஐ கட்சியின் விவசாய சங்கத்தின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து திரளான தோழர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். செப்டம்பர் 20, 21 தேதிகளில் நடைபெற்ற இந்த மாநாடு இவ்விரு அமைப்புகளுக்கும் இடையிலான ஒற்றுமை மாநாடாக திகழ்ந்தது. அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் தேசிய அமைப்புச் செயலாளர் புருசோத்தம் சர்மா வரவேற்புரை ஆற்றினார். தோழர் சத்னம் சிங் அஜ்னவாலா துவக்க உரை ஆற்றினார். ஜெகேஎஸ் பஞ்சாப் தலைவர்கள், ஏஐசிசிடியு தேசியப் பொதுச் செயலாளர் ராஜீவ் திம்ரி, அயர்லா தேசியத் தலைவர் சத்யதேவ் ராம், ஏஐகேஎம் தேசிய பொதுச்செயலாளர் ராஜாராம் சிங், எம்.பி., அய்சா ஆமீன், எஸ்கேஎம் தலைவர்களில் ஒருவரான டாக்டர் சுனிலாம் ஆகியோர் உரையாற்றினார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை பொதுச் செயலாளர் திபங்கர், ஆர்எம்பிஐ பொதுச் செயலாளர் மங்கத்ராம் பஸ்லா சிறப்புரை ஆற்றினார்கள்.
2வது நாள் மாநாடு, செப்டம்பர் 21ல் ஜலந்தரில் நடைபெற்றது. பல்வேறு மாநில பிரதிநிதிகளும் அரசியல் அறிக்கை, கொள்கை அறிக்கை, அமைப்புச் சட்டம் மீது கருத்துக்களை, பரிந்துரைகளை முன்வைத்துப் பேசினார்கள். சிபிஐஎம்எல் விடுதலை பொதுச் செயலாளர் திபங்கர், ஆர்எம்பிஐ பொதுச் செயலாளர் மங்கத்ராம் பஸ்லா எதிர்கால கடமைகளைச் சுட்டிக்காட்டி உரையாற்றினர். இறுதியில், ஏஐகேஎம் பொதுச்செயலாளர் ராஜாராம் சிங் தொகுப்புரை ஆற்றினார்.
மாநாட்டில் 152 பேர் கொண்ட தேசிய கவுன்சில் தேர்வு செய்யப்பட்டது; 57 பேர் கொண்ட தேசிய செயற்குழு தேர்வு செய்யப்பட்டது. பஞ்சாப் விவசாயிகள் தலைவர் தோழர். சத்னம் சிங் அஜ்னவாலா தேசிய தலைவராகவும், தோழர். புருசோத்தம் சர்மா பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
தியாகிகளின் கனவுகளை நிறைவேற்ற நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்! மிகப்பெரிய விவசாயிகள் அமைப்பாக வளர்த்தெடுப்போம்! விவசாயிகளை மென்மேலும் அணிதிரட்டுவோம்! இந்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் மீதும், நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பின் மீதும் இதுவரை இல்லாத மிகப்பெரிய தாக்குதல் தொடுக்கும், பெருநிறுவன ஆதிக்கம் கொண்ட மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை, பாசிச அரசை கட்டமைக்கும் மோடி அரசுக்கு எதிராக போராட்டங்களை வலுப்படுத்துவோம்!
