கடுமையாக அதிகரிக்கும் சமத்துவமின்மை, வேலைவாய்ப்பின்மை, ஊதிய தேக்கநிலை, மக்களின் வாங்கும் திறன் சரிவு, சிதைந்து வரும் உற்பத்தித் துறை ஆகியவற்றோடு உலகளாவிய பொருளாதார-அரசியலின் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், 2026-27 நிதிநிலை அறிக்கையை மோடி அரசாங்கம் தாக்கல் செய்துள்ளது. மோடி ஆட்சிக் காலத்தில், முன்பு வந்த அனைத்து மக்கள் விரோத நிதிநிலை அறிக்கைகளையும் விடவும் மிகவும் மோசமானது இந்த அறிக்கை. ‘விக்சித் பாரத்’ (வளர்ந்த பாரதம்) என்ற வெற்று பேச்சுகளை உதிர்க்கும் நிதிநிலை அறிக்கை, அதன் காலடியில் இந்திய பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் சிதைந்து கொண்டிருப்பதை பொருட்படுத்தவில்லை.
விவசாயம்-விவசாயிகள், தொழிலாளர், இளைஞர், பெண்கள் ஆகியோர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதையே 2026-27 நிதிநிலை அறிக்கை வெளிப்படுத்துகிறது. குறைந்த வருமானம், அதிக வேலைவாய்ப்பின்மை, கண்ணியமான வாழ்க்கைக்கான செலவுகளின் உயர்வு ஆகியவற்றால் அழுத்தமடைந்த பொருளாதாரச் சூழலில் வாழுமாறு பெரும்பான்மையான மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். நீண்ட காலமாக தேக்கத்திலிருக்கும் வருமானங்களை உயர்த்தும் அறிவிப்புகள் ஏதும் வருமா என எதிர்பார்க்கப்பட்டபோதும், நிதிநிலை அறிக்கை அதில் முழுமையாக தோல்வியடைந்துள்ளது.
முக்கிய சமூக பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் உண்மையான மதிப்பில் குறைக்கப்பட்டுள்ளன அல்லது பணவீக்கம், மக்கள் தொகை உயர்வுக்கேற்ப உயர்த்தப்படவில்லை. 2025-26 நிதியாண்டுக்கான உண்மையான செலவினத்தின் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் கூட இந்தப் போக்கையே காட்டுகின்றன. விவசாயம், அதனுடன் இணைந்த துறைகள், கல்வி, சுகாதாரம், சமூக நலன், கிராம, நகர மேம்பாடு போன்ற முக்கிய துறைகளில் கடந்த ஆண்டின் நிதி ஒதுக்கீட்டைவிட திருத்தப்பட்ட மதிப்பீடுகள் குறைந்துள்ளன.
முக்கியத் திட்டங்களிலும், 2025-26 ஆம் ஆண்டுக்கான உண்மையான செலவினத்தின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது: பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டம் (நகர்ப்புரம்) ₹7,500 கோடி (ஒதுக்கீடு ₹19,974 கோடி), கிராமப்புரம் ₹32,500 கோடி (ஒதுக்கீடு ₹54,832 கோடி), தூய்மைப் பாரத இயக்கம் ₹2,000 கோடி (ஒதுக்கீடு ₹5,000 கோடி), கிராமப்புர சாலை மேம்பாட்டு திட்டம் ₹11,000 கோடி (ஒதுக்கீடு ₹19,000 கோடி), பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத சுகாதார உட்கட்டமைப்பு திட்டம் ₹2,443 கோடி (ஒதுக்கீடு ₹4,200 கோடி) என குறைக்கப்பட்டுள்ளது. சமூக நலத் திட்டங்களுக்கு அவர்கள் ஒதுக்கிய தொகைகளைக் கூட செலவிட மறுப்பது அரசாங்கத்தின் பொறுப்பற்ற, திட்டமிட்ட செயல்பாடாகும்.
நாட்டை தாங்கிப் பிடித்து, வளர்ச்சிக்கு ஆண்டு முழுவதும் ஆதரவளிக்கும் விவசாயத் துறையின் தேவைகளை இந்த நிதிநிலை அறிக்கை மீண்டும் புறக்கணித்துள்ளது. விவசாயிகளின் வருமானம், குறைந்தபட்ச ஆதார விலை, காலநிலை மாற்றம், அதன் விவசாய பாதிப்புகள், சேமிப்புக் கிடங்கு வசதிகள், உணவு பதப்படுத்துதல் போன்ற அடிப்படை பிரச்சினைகள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. ட்ரோன் பயன்பாடு, விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு, உயர் மதிப்புள்ள வேளாண் துறைகள் போன்ற புதிய வேளாண் தொடர்புடைய புறத் திட்டங்கள் விவசாயத்தை வலுப்படுத்துவதாக அரசாங்கம் விளம்பரம் செய்கிறது. மேலும், 2026-27 நிதியாண்டுக்கான உரம், உணவு மானிய ஒதுக்கீடுகள், கடந்த ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டைவிட குறைவாக உள்ளன. விவசாய ஆராய்ச்சி, கல்வித் துறைகளுக்கான நிதியும் குறைக்கப்பட்டுள்ளது; இது விவசாய நலனிலும் விவசாயத்தை வலுப்படுத்துவதிலும் அரசாங்கத்திற்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள், உட்கட்டமைப்பு ஆகியவற்றின் பற்றாக்குறையால் பொது சுகாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தனியார் துறையை முன்னிலைப்படுத்தும் மாதிரியை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. சுகாதாரத்திற்கும் கல்விக்குமான நிதி ஒதுக்கீடுகள் உண்மையான தேவைகளை ஒப்பிடும் போது மிகக் குறைவாகவே உள்ளன. விபிஎஸ்ஏ மசோதா நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம், கல்வியில் தனியார்துறை கை இன்னும் ஓங்கவிருக்கிறது. கல்வி என்பது விடுதலைக்கான திட்டமல்ல, மாறாக, தொழில்துறைக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் மலிவான தொழிலாளரை வழங்குவதற்கான ஒரு கருவியே என்ற மோடி அரசாங்கத்தின் சிதைந்த பார்வையை இந்த நிதிநிலை அறிக்கை மறுஉறுதி செய்துள்ளது. தொழில்துறைகளுக்கு தேவையான திறன்களை மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் நிறுவனங்களாக பல்கலைக்கழகங்களின், கல்லூரிகளின் நோக்கம் மாற்றியமைக்கப்படுகின்றது. தொழில் வழித்தடங்களில் ஐந்து புதிய கல்வி நகரங்கள் அமைக்கப்படும்; 15,000 பள்ளிகள், 500 பல்கலைக்கழகங்கள் உள்ளடக்க ஆய்வகங்களைக் கொண்டிருக்கும் என முன்மொழியப்பட்டுள்ளது. இதன்மூலம், 2030க்குள் இணைய விளையாட்டுத் தொழிலுக்குத் தேவையான திறன்களுடைய தொழிலாளர் படையாக மாணவர்களை உருவாக்குவதற்கு தேவையான உள்ளடக்கம் அவர்களுக்குக் கற்பிக்கப்படும் என்பது தெளிவாகிறது.
ட்ரம்பின் சுங்கவரி தாக்குதல் தீவிரத்தை இந்த நிதிநிலை அறிக்கை கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்; இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நிதியுதவி செய்வதன் மூலம் ஓரளவு நிவாரணம் அளிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். அதோடுகூட, இந்தியத் தொழில்துறைகளில் ட்ரம்பின் சுங்க வரிகளால் ஏற்பட்ட பெரும் வேலை இழப்புகளையும் எதிர்கொள்ள எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் சுங்கவரி விலக்குகள் வழங்கப்படுவது, ‘தற்சார்பு இந்தியா’ குறித்த பேச்சுகள் வெற்று வாய்ச் சவடால் என்பதையும் பொருளாதாரம் உள்நாட்டு யதார்த்தங்களுடன், தேவைகளுடன் இணைக்கப்படவில்லை என்பதையுமே காட்டுகிறது.
சுய உதவிக் குழுக்களின் கீழ் இலட்சக்கணக்கான பெண்கள் தனியார் நுண் நிதி நிறுவனங்களின் கடும் கடன் சுமையில் சிக்கியிருக்கிறார்கள். இந்த பட்ஜெட் அதே கொள்கைக் கட்டமைப்பையே தொடர்கிறது; தனியார் நிறுவனங்கள் மேலும் மேலும் சுரண்டுவதை ஊக்குவிக்கிறது.
இந்தியாவில் கிளவுட் டேட்டா மையங்களை அமைக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெரிய வரிச் சலுகைகள் 2047 வரை அறிவிக்கப்பட்டுள்ளன. உலகளவில் இத்தகைய தரவு மையங்கள் நிலத்தடி நீர் சுரண்டல், காற்று மாசு, மிகுந்த ஆற்றல் தேவைப்படுவதன் காரணமாக தேவைக்கு அதிகமாக கனிமங்களை வெட்டி எடுத்தல், பரந்த நிலப் பகுதிகளின் தேவைகளுக்கான பிரச்சினைகள் ஆகிய காரணங்களால் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
தற்சார்பை ஊக்குவிப்பதன் பெயரில், அரசாங்கம் கனிம வளம் மிக்க மாநிலங்களில் சுரங்கத் வழித்தடங்களை அறிவித்துள்ளது. சரக்கு ரயில் வழித்தடங்களும் சாலை உள்கட்டமைப்பின் விரிவாக்கமும் நிதிநிலை அறிக்கையின் உரையில் முக்கிய இடம்பெற்றுள்ளன. ஆயினும்கூட, ஆட்சியின் தொடக்கத்திலிருந்தே அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குப் பெருமளவில் தாரைவார்க்கும் நடவடிக்கைகளுடன் இதை இணைத்துப் பார்க்க வேண்டும். பொதுத்துறை திட்டமிட்ட விதத்தில் பின்னுக்குத் தள்ளப்படுவதால், கனிமங்களைப் பிரித்தெடுக்கும் தொழிலின் உண்மையான லாபங்கள் மோடியின் விருப்பமான கூட்டாளிகளான அம்பானி, அதானி, வேதாந்தா மற்றும் பிறர் கைகளில் குவியும். வன உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் நீர்த்துப்போவதுடன், மக்களையும் சுற்றுச்சூழலையும் விலையாக கொடுத்து தனியார் கார்ப்பரேட் நிறுவன லாபங்களை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட வள சுரண்டல் மாதிரியை நிதிநிலை அறிக்கை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.
பல ஆண்டுகளாக ஏற்கனவே வலுவற்றதாக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், இப்போது மிகவும் நீர்த்துப்போன வடிவமான விபி கிராம்ஜி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், மற்றும் விபி கிராம்ஜி ஆகிய இரண்டின் கீழும் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஒதுக்கீடு மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், விபி கிராம்ஜி-க்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டைப் போல அதே அளவுதான் உள்ளது. விபி கிராம்ஜி-யின் அமலாக்கம் தாமதமாகும் அதேநேரத்தில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதி ஒதுக்கீட்டின் குறைப்பு கிராமப்புர ஏழை மக்களின் மீது உடனடி எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.
தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் உட்பட 350-க்கும் மேற்பட்ட சீர்திருத்தங்களை செயல்படுத்தியதாக இந்த நிதிநிலை அறிக்கை பெருமையுடன் கூறுகிறது. இந்தத் தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், ஊதியம், பணி நிலைமைகள் முதல் சமூக பாதுகாப்பு வரையிலான தொழிலாளரின் சட்ட உரிமைகளை திட்டமிட்ட வகையில் நீர்த்துப் போகச் செய்துள்ளன. உடல்நலம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற வகையான சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றின் உரிமையை வலுப்படுத்த வேண்டிய அவசரத் தேவையை இந்த நிதிநிலை அறிக்கை முற்றிலும் புறக்கணித்திருக்கிறது. இந்திய தொழிலாளர் சக்தியின் முதுகெலும்பாக விளங்கும் இணையவழி செயலி தொழிலாளர், திட்டத் தொழிலாளர், வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் பெரும்பான்மையான முறைசாரா துறை தொழிலாளர் - எந்தவொரு அர்த்தமுள்ள சமூகப் பாதுகாப்பையும் பெற முடியாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிதிநிலை அறிக்கையில் அவர்களுக்கு இடமே இல்லை.
உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைந்தளவே பயன்படுத்தியிருப்பது, இந்தியா உற்பத்தி சார்ந்த தொழில்களில் வேலைகளை இழந்து வருவதை உறுதிப்படுத்துகிறது. செல்வந்தர்களுக்கு பெரும் வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ‘ஸ்டார்ட்அப் இந்தியா’ மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன; நிவாரணங்கள் மறுக்கப்பட்டுள்ளன.
பெரும்பான்மையான மக்களின் வருமான சமத்துவமின்மையை போக்காமல் மொத்த தேவையை உயர்த்த முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் இந்த அடிப்படை பிரச்சினையை கையாளும் பார்வை இந்த நிதிநிலை அறிக்கையில் அறவே இல்லை; நிலையான வளர்ச்சிக்குத் தேவையான மொத்த முதலீட்டையும் இது ஊக்குவிக்கவில்லை.
கார்ப்பரேட் லாபங்களுக்கும் மிக உயர் வருமானம் கொண்ட நபர்களுக்கும் வரிகளை உயர்த்தாமலிருப்பதனால், நிதி ஒதுக்கீடுகளை கையாள்வதற்கான அரசாங்கத்தின் வெளி குறைந்துள்ளது.
மொத்த பட்ஜெட் அளவு ₹53.47 லட்சம் கோடியாக உயர்ந்தாலும் அது வெறும் 5.6% மட்டுமே. சொல்லிக் கொள்ளப்படும் பெயரளவு ஜிடிபி வளர்ச்சியைவிட இது குறைவு. மொத்த செலவினத்தில் நான்கில் ஒரு பகுதி, இந்திய அரசாங்கத்தின் கடந்த காலக் கடன்களுக்கு வட்டி செலுத்துவதற்கே செலவாகிறது.
தாராளவாத கொள்கை வழித்தடத்தில் செல்லும் இந்த நிதிநிலை அறிக்கை, விவசாயம், கிராமப்புர உள்கட்டமைப்பு, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி போன்ற அடிப்படைத் துறைகளின் ஒதுக்கீடுகளையும் உண்மையான செலவினங்களையும் குறைப்பதன் மூலம் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கிறது.
நலச்செலவுகள் குறைக்கப்படுகிறது. அதே வேளை, வரி கட்டுவதிலிருந்து தப்பிப்போர் மற்றும் கடந்த கால வருமான-சொத்து அறிவிப்பைச் செய்யாதவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்படுவதிலிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு கருப்புப் பணத்தை மீட்டுவருவோம் என்ற வாக்குறுதியுடன் மோடி ஆட்சிக்கு வந்தது; இப்போதோ ‘சிறிய அளவு வரி செலுத்துபவர்களுக்கான வசதி’ என்ற பெயரில் வெளிநாட்டு வருமானம், சொத்துக்களை தானாகவே தெரிவிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது—ஆனால் ‘சிறிய அளவு’ எதுவரையென வரம்பு குறிப்பிடப்படாததால் சந்தேகம் எழுகிறது.
அடிப்படையில், மக்களின் மிக அவசரமான கவலைகளுக்கு மோடி அரசாங்கம் தொடர்ந்து துரோகம் இழைப்பதையே ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2026 ம் தொடர்கிறது. மொத்தத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை, ஜனநாயக, சமூக உரிமைகள் அரிக்கப்படுவது, மக்களின் கண்ணியமான வாழ்வுக்கான உரிமையை திட்டமிட்டு சிதைப்பது ஆகியவற்றால் குறிக்கப்பட்ட பாதையை இந்த நிதிநிலை அறிக்கை வலுப்படுத்துகிறது.
மத்தியக் குழு,
சிபிஐ(எம்எல்) லிபரேஷன்
