திமாகி நக்சல் பீதியும் தொடரும் பழிவாங்கும் வேட்டையும்!

$articleData->title

திமாகி நக்சல் பீதியும் தொடரும் பழிவாங்கும் வேட்டையும்!

கற்பிதம் செய்யப்பட்ட உள்நாட்டு எதிரிகளுக்கு எதிராகப் பொதுமக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களைத் தூண்டிவிடுவதற்கு கவர்ச்சியான சொற்பதங்களை உருவாக்கும் கலையில் மோடி அரசாங்கமும் சங்கிக் கும்பலின் தகவல் தொழில்நுட்பப் பிரிவும் மோடியின் அடிவருடி ஊடகங்களும் பல ஆண்டுகளாக நிபுணத்துவம் பெற்றிருப்பதாகவே தோன்றியது. ‘துக்டே துக்டே கேங்’ (பிரிவினைவாதிகள்) முதல் ‘அர்பன் நக்சல்’ (நகர்ப்புற நக்சல்) வரை, தேசவிரோதி முதல் ஆந்தோலன்ஜீவி (போராட்ட பிழைப்புவாதி) வரை — அவர்கள் ஒரு புதிய சொல்லை உருவாக்கினால் போதும்; ஊடகங்களும் பொதுப்புத்தியும் அதை பேரார்வத்துடன் ஏற்றுக்கொள்வது போல் தோன்றியது. ஆனால் காலங்கள் மாறிவிட்டன. வேலையில்லா இளைஞர்களைக் குறிக்கும் வகையில் கரப்பான்பூச்சி என்ற சொல்லை தலைமை நீதிபதி பயன்படுத்தினார். பின்னர், போலிப் பட்டம் பெற்ற வழக்கறிஞர்களை மட்டுமே மனதில் கொண்டு அவ்வாறு குறிப்பிட்டதாக அவர் ‘விளக்கமளித்தாலும்’, அது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எதிர்வினையை மட்டுமே வரவழைத்தது. இந்திய இளைஞர்களை இழிவுபடுத்தும் வசைச்சொல்லாகப் பயன்படுத்தப்பட்ட அந்த வார்த்தையே, இந்தியாவின் முதல் ‘ஜென் ஷீ’’ எதிர்ப்புக் கொண்டாட்டத்திற்கு வித்திட்டது. தற்போது திமாகி நக்சல் (அறிவார்ந்த நக்சல்) என்ற சொல்லாக்கமும் அதேபோன்று பின்னடைவைச் சந்தித்து வருகிறது.


கோபமுற்று கிளர்ந்தெழும் இந்திய இளைஞர்களை அச்சுறுத்துவதற்குப் பதிலாக, திமாகி நக்சல் என்ற முத்திரை, ‘கரப்பான்பூச்சி’ என்ற சொல்லுக்குக் கிடைத்ததைப் போன்ற எதிர்வினையையே தூண்டியது. குறுகிய காலத்திலேயே, “சிந்தித்திடு, ஆராய்ந்திடு, எதிர்த்திடு” என்ற முழக்கத்துடன் ‘திமாகி நக்சல் கட்சி’ என்ற பெயரில் ஒரு டிஜிட்டல் இயக்கம் உருவானதை நாம் கண்டோம். அதோடு, ‘திமாகி நக்சல்’ முத்திரை மரியாதையின் சின்னம் என குடிமக்களும் பெருமையுடன் பறைசாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி, அமித் ஷாவின் ‘ஆபரேஷன் ககார்’ (மாவோயிஸ்ட் ஒழிப்பு) நடவடிக்கைக்கு முன்னோடியான  ‘ஆபரேஷன் கிரீன்ஹன்ட்’ - பசுமை வேட்டை நடவடிக்கையை முன்னெடுத்த மூத்த காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் உள்துறை அமைச்சருமான பி.சிதம்புரம் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட தங்களை திமாகி நக்சல்கள் அறிவித்துக்கொண்டனர். இந்த விவகாரத்தில் தன்னைத் தானே ஒரு முட்டுச்சந்தில் சிக்கவைத்துக்கொண்டு விளக்கமளிக்க வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டது. அவர்கள் எவ்வளவு அதிகமாக விளக்கமளிக்க முயன்றார்களோ, அவ்வளவு அதிகமாகத் தங்களது சொந்த தர்க்கப் பிழைகளின் வலைப்பின்னலில் தங்களைத் தாங்களே சிக்க வைத்துக் கொண்டனர்.

இதற்கான முதல் விளக்கமளிக்கும் முயற்சி கிரண் ரிஜிஜுவிடமிருந்து வந்தது. அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவையும் இந்திய வடகிழக்குப் பகுதிக்கான நுழைவாயிலாகக் கருதப்படும் சிக்கன் நெக் பகுதியை முடக்குவதன் மூலம் வடகிழக்கில் இயல்பு வாழ்க்கையைச் சீர்குலைக்கலாம் என்று கூறப்படும் அச்சுறுத்தலையும் குறிப்பிட்டு, திமாகி நக்சல் என்ற சொல்லாக்கத்தை விளக்க முயன்றார். அதன்பின்னர், ஆர்எஸ்எஸ்-ன் அதிகாரப்பூர்வ ஊதுகுழலான ஆர்கனைசர் இதழ், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிகால தேசிய ஆலோசனைக் குழு வரை பின்னோக்கி சென்று இந்தச் சொல்லின் வேரைத் தேடியது. ஆனால் தேசிய ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் எவருக்கும் 1967-ஆம் ஆண்டின் நக்சல்பாரி விவசாயிகள் எழுச்சியுடனோ பின்னர் பரவலாக நக்சலிசம் என்று அறியப்பட்ட புரட்சிகர கம்யூனிஸ்ட் அரசியல் இயக்கத்துடனோ எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. மேலும் தங்களை மாவோயிஸ்ட் என்று அடையாளப்படுத்திக்கொண்ட தீவிர ஆயுதப்படை போக்குகளுடனும் அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை என சொல்ல வேண்டியதுமில்லை. எனவே, தேசிய ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களோ அல்லது அவர்களின் கடந்தகால அரசியல் தொடர்புகளோ பிரச்சினையாகத் தெரியவில்லை. மாறாக, தேசிய ஆலோசனைக் குழுவால் முன்மொழியப்பட்டு, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட உரிமைகள் அடிப்படையிலான நலச் சட்டங்களே பிரச்சினையின் உண்மையான இலக்காகத் தெரிகிறது.

திமாகி நக்சல் என்ற சொல்லை வரையறுக்க வேண்டிய அவசியமே இல்லை என சங்–பாஜக அமைப்பின் நன்கு அறியப்பட்ட கருத்தியல் தூதரும் அரசியல் மேலாளருமான ராம் மாதவ் நம்மிடம் கூறுகிறார். அதனை அவர் ஒரு உலகளாவிய நிகழ்வாக திசைமாற்றி, கருத்தியல் ரீதியாக, வரலாற்று ரீதியாக, மாவோ, சே குவேரா தொடங்கி, இந்தியாவில் சாரு மஜும்தார், கானு சன்யால், கானாய் சாட்டர்ஜி, நேபாளத்தில் புஷ்ப் கமல் தஹால் ‘பிரசந்தா’ வரையிலும் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பல நன்கறியப்பட்ட தலைவர்களுடன் இணைக்கிறார். ‘ஒரு குறிப்பிட்ட அளவு தெளிவின்மை … பாதிப்பற்றதும் ரசிக்கத்தக்கதுமாகும்” என்று ராம் மாதவ் வாதிடுகிறார். ஆனால் இந்த ‘ஒரு குறிப்பிட்ட அளவு தெளிவின்மை’தான் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் கைகளில், பரந்த அளவிலான எதிர்கருத்துடையவர்களைத் தேடித்தேடி வேட்டையாடுவதற்கான ஒரு வழிவகையாக மாறுகிறது. பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் முதல் ஆசிரியர் இயக்கத் தலைவர் நந்திதா நரேன் வரை, பல்வேறு வகையான மாற்றுக் கருத்தாளர்களுக்கும் ‘திமாகி நக்சல்’ தூரிகை கொண்டு வண்ணம் பூச முடிகிறது.

‘பாதிப்பற்றதும் ரசிக்கத்தக்கதும்’ என ராம் மாதவ் குறிப்பிடும் வகையில் இந்தச் சொல் உண்மையிலேயே விவாதிக்கப்பட்டிருந்தால், அது குறித்து இவ்வளவு பெரிய விவாதமே எழுந்திருக்காது. செங்கோட்டையில் தான் ஆற்றிய உரையில் திமாகி நக்சல்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவது குறித்து மோடி பேசியிருந்தார். பாஜகவின் பல்வேறு சமூக ஊடகக் கணக்குகள் முன்னெடுத்த டிஜிட்டல் பரப்புரை இயக்கம், ‘திமாகி நக்சல்களை’ ஒழிப்பதற்கான வன்முறை வழி போரை சுட்டிக்காட்டும் மீம்ஸ்கள், ரீல்ஸ்களின் அதிரடித் தாக்குதலை ஏற்கனவே கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

டிஜிட்டல் தளங்களுக்குள் மட்டுமே இந்த வன்முறை சுருங்கிவிடவில்லை. ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் மீதான தாக்குதலிலும் மேற்கு வங்கம், ராஜஸ்தானில் நடைபெற்ற ‘பள்ளியைச் சீரமைப்போம்’ இயக்கங்களுக்கு எதிரான தாக்குதல்களிலும் அதன் நேரடி வன்முறை வடிவங்களை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம்.

‘காயமடைந்த பலசாலி’யால் தலைமை தாங்கப்படுகிற ஆட்டம்காணும் அரசாங்கத்திற்கு, திமாகி நக்சல் என்பது அறிவாளிப் பிரிவினருக்கு எதிரான தனியார் கண்காணிப்பு படைகள், சொத்துகளை சேதப்படுத்துதல், வன்முறை இயக்கத்தின் பீதியூட்டும் வேண்டுதலாக இருக்கக்கூடும்.

மோடி அரசாங்கத்திற்கும் சங் பரிவார் அமைப்பிற்கும் முன்னுள்ள ஒரு மிகப்பெரிய சவாலை ஜந்தர் மந்தர் போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்றுவரும் ஜென் ஷீ, ஜென் ஆல்ஃபா தலைமுறையினரின் விழிப்புணர்வும் அறுதியிடலும் உணர்த்துகின்றன. இது எந்தவொரு குறிப்பிட்ட பகுதிக்கோ அல்லது குறிப்பிட்ட சமூகப் பிரிவுகளுக்கோ மட்டுப்பட்ட நிகழ்வல்ல. மாறாக, வர்க்கங்கள், கலாச்சாரங்கள், தலைமுறைகளைத் தாண்டி பரந்த புவியியல் பரவலையும் சமூக ஈர்ப்பையும் இந்த நிகழ்வு கொண்டுள்ளது. இதற்கு, டிஜிட்டல் வழியில் தொடர்புகொள்ளும் இயக்கம் முதல் “ஒரு நாள், ஒரு பல்கலைக்கழகம்” என்ற திமாகி நக்சல் வேட்டைக்கான அமைச்சகப் பொறுப்புகள் வரை பன்முகப்பட்ட எதிர்வினை குறித்து பதற்றமடைந்துள்ள மோடி அரசாங்கம் சிந்தித்து வருகிறது. மிகச்சரியாக இதற்காகத்தான், 

இந்தியாவில் சங் பரிவாரின் வெறுப்பு நிறைந்த பாசிச நிகழ்ச்சி நிரலையும் அதன் மூர்க்கத்தனத்தையும் மறைக்க தனது வெளிநாட்டுப் பயணத்தின் போது மோகன் பகவத் ஒரு தாராளவாத, (அனைவரையும்) உள்ளடக்கிய முகமூடியை அணிய தன்னாலான சிறந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் இந்திய மக்களுக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் உலகெங்கிலும் இந்தியாவைக் கவனித்து வருபவர்களுக்கும் இப்போது போதுமான அனுபவம் கிடைத்துவிட்டது. அவர்கள் ஆர்எஸ்எஸ், பாஜகவை அவர்களின் இனிப்பு தடவப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு மதிப்பிடப் போவதில்லை; மாறாக, பத்தாண்டுகளுக்கும் மேலாக மத்தியிலும் பலப்பல பத்தாண்டுகளாக குஜராத் போன்ற மாநிலங்களிலும் அதிகாரத்தில் இருக்கும் சங் பரிவாரை எதிர்கொண்ட மோசமான அனுபவங்களின் அடிப்படையிலேயே மதிப்பிடுவார்கள்.                       


28 October, 2026