மோடியின் கார்ப்பரேட் ஆதரவு
தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை ரத்து செய்!
அனைவருக்கும் மாதம் ரூ. 42,000 குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்!
கூடுதல் நேரப் பணிக்கு இரட்டிப்பு ஊதியத்தை உறுதிப்படுத்து!
வெடித்துப் பரவும் தொழிலாளர் போராட்டங்கள்
தொழிலாளர் விரோத, நான்கு கார்ப்பரேட் தொகுப்புச் சட்டங்களை அமுல்படுத்திவிட்டால், தொழிற்சங்கங்களை ஒழித்துவிடலாம், தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்கிவிடலாம் என கனவு கண்டது மோடி அரசு. நான்கு தொகுப்புச் சட்டங்கள் அமுலுக்கு வருவதாக ஏப்ரல் 1 அன்று மோடி கையெழுத்து இட்ட மை இன்னும் காயவில்லை. தொழிலாளர் போராட்டங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று, ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரம் என காட்டுத் தீயாக பரவிக் கொண்டிருக்கின்றன. ஹரியானாவின் பானிபட் நகரில் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் (ஐ.ஓ.சி.எல்), பொதுத்துறை நிறுவனத்தில், துவங்கிய தொழிலாளர் போராட்டம், மானேசருக்கு விரிவடைந்தது. மானேசரின் தனியார் - கார்ப்பரேட், பன்னாட்டு - தொழில் நிறுவன தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். அது குஜராத்தின் சூரத்துக்குப் பரவியது. சூரத்தில் வேலைநிறுத்தம் மட்டுமல்ல, கேஸ் தட்டுப்பாடும், விலை உயர்வும் சேர்ந்து கொண்டதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் ஊர் திரும்புவதற்காக ரயில் நிலையத்தில் அலைமோதிய வீடியோ வைரல் ஆகியது. தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டத் தீ உத்தரப்பிரதேசத்தின் நோய்டாவில் கொழுந்து விட்டு எரிந்தது. மதர்சன், ரிச்சா குளோபல் உள்ளிட்ட பல கார்ப்பரேட், பன்னாட்டு நிறுவன தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.
இவை தொழிற்சங்கங்களின் திட்டமிட்ட போராட்டங்கள் அல்ல. அந்தத் தொழிலாளர் சங்க உறுப்பினர்களும் அல்ல. அவை முதலாளித்துவ குரூர சுரண்டலுக்கு எதிராக தன்னெழுச்சியாக வெடித்துக் கிளம்பிய கலகங்கள். அத்துக் கூலிக்கு 12 மணி நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட காரணத்தால் கொதித்தெழுந்த தொழிலாளரின் எழுச்சிகள்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒரு கம்பெனி, இரண்டு கம்பெனி தொழிலாளர் அல்ல, பல பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளம் தொழிலாளர். அவர்களில் ஒருவர் கூட நிரந்தரத் தொழிலாளர் அல்ல. அனைவரும் தினக்கூலி, பயிற்சியாளர், காண்ட்ராக்ட் என பல்வேறு பட்டங்கள் சூட்டப்பட்ட அமைப்பாக்கப்படாத தொழிலாளர். ரூ.10,000-11,000 மாதச் சம்பளம் பெற்று வரும் தொழிலாளர். 12 மணி நேரம், 14 மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளர். அது மட்டுமல்ல, இந்தத் தொழிலாளரில் பெரும்பாலானவர்கள் பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களிலிருந்து வேலை தேடி வந்த புலம்பெயர் தொழிலாளர். அவர்கள் தமது வறுமை காரணமாக போராடத் துணிய மாட்டார்கள் என முத்திரை குத்தப்பட்டவர்கள்
அந்தத் தொழிலாளர்தான் மோடியின் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பின் ஒவ்வொரு வெளிப்பாட்டுக்கும் எதிராக வீதியில் அணிவகுத்து வருகிறார்கள். இத்தகைய மாபெரும் போராட்டத்தை எதிர்பாராத யோகி அரசாங்கம் இது நகர்ப்புற நக்சல்கள் வேலை, பாகிஸ்தான் சதி என திசை திருப்புகிறது. தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாளரை தேச விரோதிகள் என சொல்லப் பார்க்கிறது. டெல்லி விவசாயிகள் போராட்டத்தின்போது அவர்களை காலிஸ்தானிகள் என முத்திரை குத்திய அதே பழைய, தோற்றுப்போன செயல்தந்திரத்தை தொழிலாளர் போராட்டத்திலும் பய்ன்படுத்தப் பார்க்கிறது மோடி - யோகி இரட்டை என்ஜின் அரசாங்கங்கள்.
அதையும் மீறி போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு தொழிற்சாலையில் போராட்டம் முடிந்தது போல் காணப்பட்டால், மற்றொரு தொழிற்சாலையில் துவங்குகிறது. ஒரு நகரத்தில் ஒரு போராட்டம் முடிந்தது போல் காணப்பட்டால், மற்றொரு நகரத்தில் துவங்குகிறது. இப்படி, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரகண்ட், உத்தரபிரதேச மாநிலங்களின் தொழில் நகரங்கள் தொழிலாளர் போராட்டங்களால் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன.
ஏற்றுமதி ஆடைத் தொழிலாளர் முதல் எலக்ட்ரானிக் தொழிலாளர் வரை அனைத்து வகைப்பட்ட தொழிலாளரும் போராட்டத்தில் எழுந்து வருகிறார்கள்.
அவர்களின் கோரிக்கை ஒற்றை கோரிக்கைதான். மாதச் சம்பளம் ரூ. 20,000க்குக் குறைவில்லாமல் வழங்கப்பட வேண்டும் என்பது தான். சில நகரங்களில், குறிப்பாக பொதுத் துறைகளில், அதே கோரிக்கை ரூ.30,000 என முழங்குகிறது.
அதோடுகூட, மனிதத் தன்மையற்ற 12 மணி நேர வேலை தடுக்கப்பட வேண்டும். அதற்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உயர்ந்து ஒலிக்கிறது.
ஆனால், மோடியின் தொழிலாளர் விரோத தொகுப்புச் சட்டங்கள் குறைந்தபட்ச ஊதியத்தை ஒழித்து, தரைமட்ட ஊதியம் நிர்ணயிப்பது பற்றி பேசுகிறது. அது நடைமுறைக்கு உதவாது என்பதை இப்போது நடக்கும் இத் தொடர் போராட்டங்கள் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கின்றன.
வேலை நேரத்தை சட்டப்படியே 12 மணி நேரமாக்குகிறது மோடியின் புதிய தொகுப்புச் சட்டங்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாது என வெடித்தவைதான் இந்த தொடர் போராட்டங்கள்.
இந்த அறிகுறியை மோடி அரசு புரிந்து கொள்ள முன்வரவில்லை என்றால் வரும் காலத்தில் ஆங்காங்கே வெடித்தெழும் போராட்டங்களையும் மோடி அரசு அடக்கிட முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
தொழிலாளர் வெடிப்புகளின் காரணமாக மார்ச் இறுதியில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதிய உத்தரவை ரத்து செய்து ஏப்ரல் 17 அன்று 21 சதவீத ஊதிய உயர்வை அறிவித்திருக்கிறது யோகி அரசாங்கம். ஆனால், அந்த 21 சதவீத சம்பள உயர்வு அறிவிப்பில் கூட, நோய்டா போன்ற தொழில் நகரத்தில் திறன் சாரா தொழிலாளிக்கு மாதம் ரூபாய் வெறும் 13,690 மட்டுமே. சராசரியாக 13,000 மாத சம்பளம் பெறும் ஒரு தொழிலாளி மாத வாடகை மட்டும் ரூ 4,000 முதல் 7,000 வரை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆண்டுக்கு மாத வாடகை ரூ 500 ஏறுகிறது. கேஸ் சிலிண்டர் விலை ரூ 4000 – 5000 அளவுக்கு சென்று விட்டது. அப்படி இருக்கும்போது, யோகி அறிவித்த ஊதிய உயர்வு, மாத செலவுகள் உயர்வை ஈடுகட்டக் கூட போதாது. எனவேதான், மாதம் ரூ 20,000 க்குக் குறைவாக எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என போராட்டங்கள் வெடிக்கின்றன.
ஹரியானாவில் 35 சதவீதம் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் கூட மானேசர் போன்றதோர் உலக மூலதன மையமான தொழில் நகரில் ஒரு திறன் சாரா தொழிலாளிக்கு மாதம் ரூ 15,220 வரை மட்டுமே அறிவித்திருக்கிறது. அறிவிக்கப்பட்டிருக்கும் உயர்வானது தொழிலாளரின் முக்கிய கோரிக்கையான ரூ 20,000 ஐ எட்டவில்லை. தொழிலாளர் பெரும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதனால் போராட்டங்கள் உடனடியாக தணிவதற்கான வாய்ப்பு ஏதும் தென்படவில்லை.
தொழிலாளரின் தொடர் போராட்டங்களால் நிர்ப்பந்திக்கப்பட்டு, உத்தரபிரதேச, ஹரியானா மாநில அரசுகள் அறிவித்திருக்கும் குறைந்தபட்ச ஊதிய அறிவிப்புகள்தான், ஊதியம் குறித்த புதிய ஊதிய தொகுப்புச் சட்டம், 2019ன் கீழ், நாட்டிலேயே முதல் முதலாக அறிவிக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு ஆகும். புதிய தொகுப்புச் சட்டங்கள் நடைமுறைக்கு வரும்போது தொழிலாளர் ஊதியம் கூரையைப் பிய்த்துக் கொண்டு போகும் என்று பீற்றிக் கொண்ட மோடியின் வாய்ச் சவடாலை அது பொய்யாக்கி இருக்கிறது.
ஏற்கனவே வாய்க்கும் வயிறுக்கும் போதாமல், பட்டினிக் கூலி பெற்று வாழ்க்கை நடத்தி வரும் தொழிலாளருக்கு கேஸ் விலை உயர்வு எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போலாகிவிட்டது. அது நியாயமான கூலி வேண்டும் என தொழிலாளரை போராட்டத்தில் எழச் செய்திருக்கிறது.
தொழிலாளரின் நியாயமான கோரிக்கைகளை கவலையோடும் கரிசனத்தோடும் பரிசீலிப்பதற்கு மாறாக, ஹரியானா, உத்தரபிரதேச அரசாங்கங்கள் காவல் துறையைக் கொண்டு அடக்கு முறையை ஏவிவிடுகின்றன. போலீஸ் தடியடிகள், கண்ணீர்ப்புகைக் குண்டுகள், எண்ணற்ற கைதுகள், வீட்டுக் காவலில் தொழிற்சங்கத் தலைவர்கள், சிறைகளில் வாடும் தொழிலாளர் என கொடூரமான அரசு ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் இந்த தன்னெழுச்சிப் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்தப் போராட்டங்களில் பெரும் பங்காற்றிய பெண் தொழிலாளரை ஆண் காவலர்கள் மிருகத்தனமாக தாக்கியிருக்கின்றனர். தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குவதற்காக காவல்துறையும் தனியார் கம்பெனி பவுன்சர்களும் கைகோர்த்துக் கொண்டு மிகக்கடுமையான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர்.
நோய்டா ஏஐசிசிடியு தலைவர் தோழர் அமர் சிங் உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், தொழிலாளருக்கு சட்ட உதவி வழங்கும் வழக்குரைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் வேட்டையாடப்படுகின்றனர்.
தொழிலாளரின் இந்தத் தொடர் போராட்டங்கள் பிஜேபி ஒன்றிய மற்றும் பிஜேபி ஆளும் மாநில அரசாங்கங்களுக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் இடையிலான வெளிப்படையான கூட்டை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன.
இந்நிலையில், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போருக்கும், பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை போருக்கும் எதிராக, இந்தியத் தொழிலாளர் வர்க்கமும், உலகத் தொழிலாளர் வர்க்கமும் தமது ஆதரவை உறுதிபட தெரிவித்து உள்ளன. மோடி அரசு, அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம், அதன் அதிபர் டொனால்ட் டிரம்பிடம் சரணடைந்து விட்டதின் காரணமாக, நாட்டின் எல்பிஜி எரிவாயு கேஸ் நெருக்கடியை மோடியால் தடுக்க முடியவில்லை. அதிகரித்து வரும் எரிவாயு விலை மற்றும் பணவீக்கத்தால் உழைக்கும் வர்க்கம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
இன்னொருபுறம், தொழிற்துறை விபத்துகள் பரவலாக நிகழ்கின்றன. ஆந்திரா, தமிழ்நாடு முதல் டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம் வரை, பாதுகாப்பான பணிச்சூழல் மறுக்கப்படுகிறது, அனைத்துப் பாதுகாப்பு விதிமுறைகளும் மீறப்படுகின்றன. பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதையே வழக்கமாகக் கொண்ட கார்ப்பரேட் பெருநிறுவனங்களின் லாபவெறியால் தொழிலாளர் உயிரிழக்கின்றனர். இந்த மே நாளில், நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான தொழிலாளரின் மரணங்களும், தொழில்துறை விபத்துகளும் ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளன.
ஆஷா, அங்கன்வாடி மற்றும் மதிய உணவுத் திட்டப் பணியாளர்கள் உள்ளிட்ட திட்டப் பணியாளர்களுக்கு, தொழிலாளர் என்ற தகுதியும், குறைந்தபட்ச ஊதியமும், சமூகப் பாதுகாப்புப் பலன்களும் திட்டமிட்டு மறுக்கப்படுகின்றன. திட்டப் பணியாளர்களின் கோரிக்கைகளை வெல்வதற்காக நாம் போராட்டங்களைத் தீவிரப்படுத்திட உறுதி ஏற்றிட வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள தூய்மைப் பணியாளர்கள் மிகக் குறைந்த ஊதியத்துக்கு எதிராக, திட்டமிடப்பட்ட சமூக, பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, பணி நிரந்தரத்திற்காக, உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். இந்தப் போராட்டங்களைத் தீவிரப்படுத்திட நாம் உறுதியேற்க வேண்டும்.
தற்போது நடந்து வரும் தொடர் தொழிலாளர் எழுச்சிப் போராட்டங்கள், புதிய தொகுப்புச் சட்டங்களுக்கு எதிராக, மோடி அரசு - கார்ப்பரேட் மூலதன கள்ளக்கூட்டுக்கு எதிராக நாளை அலைஅலையாக எழுந்துவர இருக்கும் போராட்டங்களுக்குக் கட்டியம் கூறுவதாக இருக்கின்றன.
2026-ன் இந்த மே நாளில், இந்திய தொழிலாளர் வர்க்கம் தனது உரிமைகளை, குறிப்பாக எட்டு மணி நேர வேலை உரிமைகளை, உறுதியாக பாதுகாத்திட வேண்டும், புதிய தொகுப்புச் சட்டங்களைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என ஏஐசிசிடியு அறைகூவல் விடுக்கிறது.
போராடும் தொழிலாளருக்கு ஆதரவாக இந்திய தொழிலாளர் அனைவரும் தோளோடு தோள் நின்று ஆதரவு தெரிவித்திட வேண்டும்; கார்ப்பரேட் சட்டத் தொகுப்புகளுக்கு எதிராகவும், தொழிலாளர் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், புதியதோர் இயக்கத்தை, அலைஅலையான போராட்டங்களின் புதியதோர் இயக்கத்தை கட்டி எழுப்பிட வேண்டுமென இந்திய தொழிலாளர் வர்க்கத்துக்கு ஏஅய்சிசிடியு அறைகூவல் விடுக்கிறது.
கீழ்க்காணும் கோரிக்கைகளுக்காக இந்திய தொழிலாளர் வர்க்கம் போராட்டத்தில் எழுந்திட வேண்டுமென ஏஐசிசிடியு அறைகூவல் விடுக்கிறது!
நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர் மீது ஏவப்படும் ஒடுக்குமுறையை உடனே நிறுத்து! சிறை வைக்கப்பட்டுள்ள தொழிலாளரை, தொழிற்சங்கத் தலைவர்களை நிபந்தனை ஏதுமில்லாமல் உடனடியாக விடுதலை செய்!
நாளொன்றுக்கு ரூ 1500, மாதம் ரூ 42,000 குறைந்தபட்ச ஊதியமாக உடனே அறிவித்திடு!
12 மணிநேர வேலை முறையை ஒழித்துக்கட்டு! 8 மணி நேரத்துக்கும் மேல் செய்யும் வேலைக்கு இரட்டிப்பு சம்பளத்தை கட்டயமாக்கு!
ஒப்பந்த முறை, பயிற்சியாளர் முறை, தினக்கூலி, குறிப்பிட்ட கால வேலை போன்ற பெயர்களில் நடத்தும் பகல் கொள்ளையை உடனே நிறுத்தி, அவர்களை பணி நிரந்தரம் செய்!
தொழிலாளர் விரோத, கார்ப்பரேட் ஆதரவு தொகுப்புச் சட்டங்களை ரத்து செய்!
மே நாள் வெல்க!
தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!!
AICCTU
அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில்
