இந்தியா கூட்டணியில் நாங்களும் இருக்கிறோம், வாக்களர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்க்கிறோம் என்று சொல்லி தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 15 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தவெக அமைச்சர் ஒருவர் கலந்து கொண்டார். ஆனால், நவம்பர் 1 அன்று ‘வாக்குரிமையைப் பாதுகாப்போம், ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்’ டெல்லி ராம் லீலா பேரணியில் தவெக சார்பாக யாரும் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை.
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் 128 இடங்களில் பேரணி நடத்துவதற்கு தவெக அரசு அனுமதித்துள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவு என்று காரணம் சொல்வார்கள். ஆனால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, ஆர்எஸ்எஸ் பேரணியால் வருங்காலத்தில் ஏற்படப் போகும் ஆபத்துகளையும் கலவரங்களையும் பற்றிய வலுவான காரணங்களை எடுத்துரைத்து அரசு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
ஆஸ்தான ஜோசியருக்கு அரசாங்கப்பதவி, தூய்மைப்பணிக்கு தனியார்க்கு டெண்டர், கம்யூனிஸ்ட்டுகள் கணக்கெடுப்பு, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுப்பாடு என ஒவ்வொரு உத்தரவாகப் போட்டு, அதற்கு எதிர்ப்பு வந்தவுடன் திரும்பப் பெற்றுக் கொண்டிருந்த, ஜோசப் விஜய் அரசு தற்போது, தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அரசு ஊழியர், ஆசிரியர், இளைஞர், மாணவர்களின் வருங்காலம் கேள்விக்குறியாகும் வகையில் அசராமல் அரசாணைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிரான குரல்களை ஒடுக்குவதற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறது. மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்களுக்குப் பின்னர், தவெக அரசின் அக்கறையற்ற அலட்சியப் போக்கும் அதிகரித்து வருகிறது.
‘டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு பத்து ரூபாய்’ என்று பாட்டு பாடி ஓட்டு வாங்கினார் விஜய். அவரின் அமைச்சர் அதையே மீண்டும் அமல்படுத்திவிட்டு, விலை உயர்த்தவில்லை, எம்ஆர்பி உயர்ந்துள்ளது என்று புது விளக்கமளிக்கிறார்! டாஸ்மாக் ஊழியர்கள் போராடினால், சஸ்பென்ஸன், சட்டம் பாயும் என்று மிரட்டுகிறார். டாஸ்மாக்கை தனியாரிடம் கொடுக்கும் திட்டத்தைக் கைவிடவில்லை என்கிறார். ஆண்டுக்கணக்கில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு போதுமான சம்பள உயர்வு, பணிநிரந்தரம் கிடையாது. ஆனால், எதிர்பாராமல் எம்எல்ஏ ஆனவர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம், சலுகைகள்.
சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் கொடுக்க இரகசியக் கடிதம் எழுதிய விஜய், இப்போது வெளிப்படையாகவே, அரசாங்கப் பணிகளையெல்லாம் அயலகபணி (அவுட் சோர்ஸ்) க்கு ஒப்படைப்பதற்கு ஆணை பிறப்பித்துள்ளார். அரசாங்க வேலைகளை தனியாரிடம் ஒப்படைக்க, தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனமான கடல்கடந்த உழைப்பு சக்தி கழகம் (ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்) முகவர் வேலை பார்க்கப் போகிறது. இனி நிரந்தர அரசாங்க வேலை, பணிப்பாதுகாப்பு, ஓய்வூதியம், அரசாங்க வேலைக்கு ஆளெடுக்க டிஎன்பிஎஸ்சி எதுவும் இருக்காது. 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்க மீண்டும் டெண்டர் விடப்பட்டுள்ளது. அதில் சேவை வழங்குநரைத் தேர்ந்தெடுத்தல் பணி ஒப்பந்தப் புள்ளி அழைப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாநகராட்சியில் காசு வாங்கிக் கொண்டு தொழிலாளர் கூலியையும் சுரண்டிக் கொழுக்கப் போகிற ஒப்பந்ததாருக்குப் பெயர் சேவை வழங்குநராம். மின்சாரக் கட்டணம் கண்டபடி எகிறுகிறது. மின் வெட்டு அதோடு போட்டி போடுகிறது. மின்சாரத்தை ஒரு யுனிட் ரூ.35க்கும் மேல் கொடுத்து தனியாரிடம் வாங்கப் போகிறது தவெக அரசு.
அரிசி, பருப்பு, பால், சர்க்கரை, எண்ணெய், வெங்காயம் என அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் விண்ணை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. அவை பற்றிய எந்தவொரு கவலையும் இல்லாமல், போகுமிடமெல்லாம் ‘சாலை உலா’ நடத்திக் கொண்டிருக்கிறார் விஜய். பள்ளிக்கூடத்திற்கு வரும் மாணவர்கள் தப்புத் தப்பாக முடி வைத்து வருகிறார்கள், உள்ளே விடாதீர்கள், மொட்டை அடித்துவிடுங்கள் என்று சமூகநலத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசுகிறார். ஆனால், விஜயைப் பார்க்க பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை கொடுத்து அழைத்து வருகிறார்கள். கம்யூனிஸ்ட்டுகள், கரப்பான் கட்சி கூட்டத்திற்குதான் மாணவர் போகக்கூடாது. விஜயைப் பார்க்க வரலாம். வெயிலில் காத்துக் கிடந்து மயங்கலாம். விலைவாசி பற்றி கேட்டால் விஜயின் அமைச்சர்களோ, எல்லாவற்றிற்கும் காரணம் முந்தைய ஆட்சியாளர்கள், பதுக்கி வைத்துள்ளார்கள் என்று கூருணர்வேயில்லாமல் பழிபோட்டுப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், போதை கலாச்சாரம், பாலியல் வன்முறை ஆகியவை குற்றவாளிகளுக்கு எந்தவொரு அச்ச உணர்வும் இன்றி அமோகமாக அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. காவல்துறையோ இவற்றைப்பற்றிய அக்கறையே இல்லாமல், ஆட்சியின் அவலத்தை, விலைவாசி உயர்வைச் சுட்டிக் காட்டிய எம்ஐடிஎஸ் பேராசிரியர் கலையரசனை, இடைத்தேர்தல் போது போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை, காலங்காத்தாலே வந்து கைது செய்து இரவு உடையோடு அழைத்துச் செல்கிறார்கள். விஜய் ஆட்சியை விமர்சனம் செய்பவர்கள் எவ்வித காரணமும் இன்றி சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாக கைது செய்யப்படுகிறார்கள்.
தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்றனர். அதில் ஒரு கைதி, நாங்கள் தப்பிச் சென்றதற்குக் காரணம் பொய் வழக்கும் சிறைக் கொடுமையும்தான் என்று வீடியோ போட்டுள்ளார். பொய் வழக்குப் போடுவதிலும் எதிர்க்கட்சியினரைக் கைது செய்து சிறையில் அடைப்பதிலும் காட்டும் ஆர்வத்தை, அக்கறையை நடக்கும் குற்றங்களைத் தடுப்பதற்கு காட்டலாம்.
வாக்குத் திருட்டு நடத்திய ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி நடக்கும் ஜந்தர்மந்தர் 2.0 போராட்டத்தை தமிழ்நாட்டில் மாணவர், இளைஞர் நடத்துவதற்கும் சென்ற ஆட்சியில் போராட்டம் நடத்தியபோது, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று சொன்ன தவெக அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி செவிலியர், பல்நோக்குப் பணியாளர், தூய்மைப் பணியாளர் நடத்தும் அமைதிப் போராட்டங்களுக்கும் அனுமதி மறுத்து கைது செய்கிறது தவெக அரசின் காவல்துறை.
சென்னை விமான நிலையத்தை, பட்டினப் பாக்கத்தை, பல்கலைக்கழகங்களை, கல்வியை, குடிநீரை, மின்சார விநியோகத்தை, சுகாதாரப் பணிகளை, அரசாங்கப் பணிகளை, காவல்துறையைத் தவிர, எல்லாவற்றையும் தனியார் கையில் கொடுத்து பெரு முதலாளிகளைக் கொழுக்கச் செய்யத் துடிக்கும் விஜயின் அரசு தமிழக மக்களுக்கான அரசா? தனியார் வெற்றிக்கான அரசா?
