சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய மோசடிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் பொறுப்பாக்கப்பட வேண்டும்

$articleData->title

இந்தியத் தேர்தல் ஆணையம்

2025 பீகார் தேர்தலுக்கு முன்னதாக தொடங்கப்பட்ட, வாக்காளர் பட்டியலின் தேர்தலுக்கு முந்தைய மறுசீராய்வு, இந்தியாவின் மிகவும் அதிர்ச்சியளிக்கும் வாக்காளர் நீக்க இயக்கமாக இப்போது உருவெடுத்துள்ளது. பீகார் நடவடிக்கைக்குப் பிறகு சுமார் ஓராண்டுக்குள், 2024 மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 13 கோடி வாக்காளர்களை இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கை நீக்கியுள்ளது. 2024 தேர்தல் முடிவுகள் பாஜகவின் (தேர்தல்) கணக்குகளைத் தெளிவாகவே தவிடுபொடியாக்கின; எனவே, அனைத்துக் கணக்குகளையும் தவிடுபொடியாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டத்துடன் இந்த ஆட்சி இப்போது பதிலடி கொடுத்துள்ளது. பீகாரில், ஆதார் அட்டையைச் செல்லுபடியாகும் அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ளும்படி தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் கட்டாயப்படுத்தியது; ஆனால் எஸ்ஐஆர் நடவடிக்கை மேற்கு வங்கத்திற்கு வந்தபோது, எந்தவொரு ஆவணத்தையும் கேள்விக்குட்படுத்தி செல்லாததாக்கக்கூடிய தர்க்க முரண்பாடு எனப்படும் கணிக்க முடியாத ஒரு பிழையைத் தேர்தல் ஆணையம் கண்டுபிடித்திருந்தது.


எஸ்ஐஆர்-இன் மிகப்பெரிய வடிவமைப்புக் கோளாறே, அது எந்தவொரு தவறையும் ஏற்க மறுப்பதுதான். ஒவ்வொரு புள்ளிவிவர நடவடிக்கையும் மனிதத் தவறுகளுக்கான சாத்தியத்தை ஏற்றுக்கொள்கிறது; தவறுகளைத் திருத்தும் வழிமுறைகளையும் வழங்குகிறது. ஆனால் எஸ்ஐஆர்-ஐப் பொறுத்தவரை, தவறுதலாக நீக்கப்பட்ட ஒவ்வொரு வாக்காளரையும் முதல்முறை வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான படிவம் 6-ஐப் பயன்படுத்திப் புதிதாக விண்ணப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்கிறது. உச்ச நீதிமன்றத் தலையீடு மேற்கு வங்கத்தில் தீர்ப்பாயங்கள் என்ற ஒரு வழிமுறையை உருவாக்கியது; ஆனால் அந்தச் செயல்முறை மிகவும் வெளிப்படைத்தன்மையற்றதாகவும் மந்தமானதாகவும் இருப்பதால், மாநிலத்தில் அமைக்கப்பட்ட பத்தொன்பது தீர்ப்பாயங்களால் மொத்தமுள்ள சுமார் 40 லட்சத்தில் 1,00,000 மேல்முறையீடுகளுக்குக் கூட இன்றுவரையிலும் தீர்வு காணப்படவில்லை. இதுவரை பரிசீலிக்கப்பட்ட மேல்முறையீடுகளில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட முறையீடுகளில் தீர்ப்பாயங்கள் சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளன என்று நமக்குச் சொல்லப்படுகிறது. ஆனால் தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ள சுமார் 30 லட்சம் மேல்முறையீடுகள், உண்மையில் மேலும் வாக்காளர்களை நீக்குவதற்கான மேல்முறையீடுகள்தான் என்றும் தெரியவந்துள்ளது! வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வாக்களிக்கும் உரிமையை மீட்டெடுப்பதற்கான மேல்முறையீட்டு வழிமுறை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது அல்லது காலவரையின்றித் தாமதப்படுத்தப்பட்டுள்ளது.


நீக்கப்படும் வாக்காளர்களின் எண்ணிக்கை, வெற்றி வித்தியாசத்தை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில், எஸ்ஐஆர் நடவடிக்கையால் தேர்தல் முடிவுகள் பாதிக்கப்படுவதற்கும் முடிவுகள் தலைகீழாக மாறுவதற்குமான சாத்தியக்கூறுகளை உச்ச நீதிமன்றம் அனுமான ரீதியாக ஏற்றுக்கொண்டிருந்தது. இதுபோன்ற முறைகேடுகளை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டிருந்தால், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கத்தில் நாம் ஏற்கனவே பல மறுவாக்குப்பதிவுகளைக் கண்டிருப்போம். வாக்காளர் நீக்க நடவடிக்கைகளால் மட்டுமல்லாமல், மோசடியான அல்லது நியாயமற்ற முறையில் பெயர்களைச் சேர்ப்பதாலும் தேர்தல் முடிவுகள் பாதிக்கப்படுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தீவிரத் தணிக்கைகளும் தேர்தலுக்குப் பிந்தைய வாக்காளர் பட்டியல்களின் நேரடிச் சரிபார்ப்புகளும் சந்தேகத்திற்குரிய முறையில் கணிசமான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதைத் தெரியப்படுத்தியிருக்கின்றன. எஸ்ஐஆர் செயல்முறையைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை சுதந்திரமாக செயல்பட அனுமதித்துள்ளதால், இந்தியாவில் தேர்தல் ஜனநாயகம் முற்றிலும் வெளிப்படைத்தன்மையற்ற, மோசடியான செயல்பாடுகளுக்கு நிரந்தரமாக இரையாகியுள்ளது.


2024-க்குப் பிறகான ஒவ்வொரு தேர்தலும் இந்த திட்டமிட்ட வகையிலான தேர்தல் முறைகேட்டிற்கு உட்பட்டுள்ளது. எஸ்ஐஆர் முறையாகத் தொடங்கப்படுவதற்கு முன்பே, படிவம் 7-ஐச் சமர்ப்பிப்பது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் ஒரு முக்கியமான மாற்றத்தைச் செய்தது. வாக்குச்சாவடிகளின் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் அமைக்கப்பட்டிருந்தாலும் ஒரு சட்டமன்றத் தொகுதியில் உள்ள எந்தவொரு வாக்காளரும் தனது வாக்குச்சாவடியில் மட்டுமல்லாமல் அதே சட்டமன்றத் தொகுதியின் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர்கள் இருப்பதையோ அல்லது சேர்க்கப்படுவதையோ எந்த எண்ணிக்கையிலும் எதிர்க்கலாம். ஒரு குறிப்பிட்ட வாக்குச்சாவடியிலிருந்து ஒட்டுமொத்தத் தொகுதிக்கும் புகாரின் வரம்பை விரிவுபடுத்தியதன் மூலம், படிவம் 7-ஐப் பேரளவில் ஆயுதமாக்குவதற்குத் தேர்தல் ஆணையம் வழிவகுத்தது. எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடியவர்கள், குறிப்பாக, முஸ்லீம் சமூகத்தினரையும் பல்வேறு விளிம்புநிலைப் பிரிவினரையும் குறிவைக்க பாஜக இதனை முழுமையாகப் பயன்படுத்தி வருகிறது. நிறுவப்பட்ட சட்ட விதிகளின்படி, பெயர் நீக்கப் புகார் அல்லது மேல்முறையீட்டை எதிர்கொள்ளும் ஒவ்வொரு வாக்காளரும் இது குறித்த அறிவிப்பைப் பெறுவதற்கும் தன்னைத் தற்காத்துக்கொள்வதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கும் உரிமை உள்ளவர்கள் என்றாலும் இந்த முறையான சட்டச் செயல்முறையைப் பின்பற்றாமல் கோடிக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்படுகின்றனர். இத்தகைய மீறல்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திடமிருந்து இதுவரை எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை.


உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வரவிருக்கும் முக்கிய சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக, இந்தியா இந்த எஸ்ஐஆர் மோசடியின் ஆணிவேரைக் கண்டறிய வேண்டும். எஸ்ஐஆர் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து நடந்து வரும் தில்லுமுல்லுகளுக்காக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதான கிரிமினல் குற்றச்சாட்டை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி வலுவாக முன்வைத்துள்ளார். வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்களால் அரசாங்கத்தைப் பின்வாங்கும்படி நிர்ப்பந்திக்க முடியும் என்றால், மக்களின் உறுதியான, ஒன்றுபட்ட எதிர்ப்பால் எஸ்ஐஆர் நடவடிக்கையையும் தடுத்து நிறுத்த முடியும். திரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல், இந்தியாவின் தேர்தல் அமைப்பை நிரந்தரமாகக் கைப்பற்றுவதற்கும் ஜனநாயகத்தை அப்பட்டமாகச் சீர்குலைப்பதற்கும் வழிவகுக்கும். நியாயமற்ற முறையில் நீக்கப்படும் ஒவ்வொரு வாக்காளருக்கும் தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் பொறுப்பாக்க வேண்டும்; மேலும், நீக்கப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் பட்டியலில் மீண்டும் இணைக்கப்படுவதற்கான நியாயமான வாய்ப்பை உறுதிசெய்வதோடு, அவர்களின் மேல்முறையீடுகள் நிலுவையில் இருக்கும்போது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதையும் உறுதிசெய்ய வேண்டும். வாக்களிக்கும் உரிமையின் மீதான இந்த ஒருங்கிணைந்த தாக்குதல், தேர்தல் ஜனநாயகத்தின் அடித்தளத்தையே அடித்து நொறுக்குகிறது. மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்கும் தேர்தல் செயல்முறையைக் கைப்பற்றுவதற்குமான இந்த திட்டமிட்ட வகையிலான முயற்சியை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள குடிமக்கள் ஓரணியில் திரண்டு எதிர்த்துப் போராட வேண்டும் என்பதையே ஜனநாயக உரிமைகளின் அதிகரித்துவரும் பாதுகாப்பற்ற தன்மை கோருகிறது.


தலையங்கம்,

எம்எல் அப்டேட்,

15 – 21 செப்டம்பர் 2026


தமிழாக்கம்: விஜி 


29 September, 2026