தவெக அரசின் கலாச்சாரமும் காவல்துறை அராஜகமும்

தலையங்கம்

$articleData->title

தவெக அரசு ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி

வருகிற குழந்தைகள் தினத்திற்கு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளிக்கூடங்களில் படிக்கும் 61.84 லட்சம் குழந்தைகளுக்கு தமிழ்நாடு முதல்வர் கேக் கொடுக்கச் சொல்லியுள்ளாராம். அதற்காக ரூ.9.27 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.  இது பற்றி தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் ஒரு கூட்டத்தில் பெருமையாகப் பேசுகிறார். சாக்லேட் கேக் கொடு, தமிழ்நாடு முழுவதும் ஒரே  மாதிரியாகக் கொடு என்றாராம் விஜய். கேக் கொடுக்கும் போது அதில் முதல்வர் பெயர் ஸ்டிக்கர் கூடாது, எனக்கு விளம்பரம் வேண்டாம், குழந்தைகளுக்கு கேக் போனா போதும் என்று சொல்லிவிட்டாராம். யாருக்கு இந்த மனசு வரும்…? உண்மையிலேயே காந்தி கண்ட கனவை நனவாக்குவதற்கும் இன்றைய இளைய தலைமுறையை ஒரு நல்ல பாதைக்கு கொண்டு செல்வதற்கும் ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது என்கிறார் அமைச்சர் ராஜ்மோகன்.  விஜய் அவருடைய சொந்தப் பணத்திலிருந்து ஒன்பது கோடி ரூபாய் செலவு செய்வதுபோல் அமைச்சர் பேசுகிறார். காந்தி குழந்தைகளுக்கு கேக் கொடுக்க எப்போது சொன்னாரோ? தவெக அமைச்சர்களும்  எம்எல்ஏக்களும் மாவட்ட, வட்டச் செயலாளர்களும் பள்ளிக்கூடங்களுக்குச் சென்று முதல்வர் விஜய் படத்தை மாட்ட வேண்டும், விஜய் நடித்த படத்தையும் பாட்டையும் போட்டு ஆட வேண்டும், விஜய் போல் மாணவர்கள் செய்கை செய்ய வேண்டும் என்று வற்புறுத்திச் சொல்லிக் கொடுப்பதுதான் இன்றைய இளைஞர்களுக்கு இவர்கள் காட்டும் நல்ல பாதை போலும். 


பள்ளி, கல்லூரிகளை மேம்படுத்த, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தேர்தல் வாக்குறுதியில் சொன்னதுபோல் ஆசிரியரை, செவிலியரை, ஊழியரைப் பணிநிரந்தம் செய்ய எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாமல், கஜானா காலியாக இருக்கு என்று சொன்ன இந்த விஜய் அரசு வேண்டாத திட்டங்களுக்கு வீணாகச் செலவு செய்து கொண்டிருக்கிறது. விஜய், திட்டங்களைத் தொடங்கி வைக்கச் செல்லும் இடமெங்கும் பல கி.மீ நீளத்திற்கு தடுப்புகள், தவெக கட்சிக் கொடி, விளம்பரங்கள் எல்லாம் அரசாங்க செலவில். ஆனால், அரிசி, பருப்பு, சீனி, வெங்காயம் என அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் மக்கள் கைகளுக்கு எட்டாமல் பறந்து கொண்டிருக்கின்றன. அது பற்றிய எவ்விதக் கவலையும் இல்லை ஆட்சியாளர்களுக்கு. தனியார் நிறுவனம் கொள்ளையடிக்க, யூனிட் ரூ.35க்கு மின்சாரத்தை வாங்குகிறது இந்த தவெக அரசு.


இன்னொருபுறம் காவல்துறையின் அராஜகக் கெடுபிடிகள் வேறு. ‘தாய் மாமன்’ மதுரைக்குச் சென்றபோது, பள்ளிக் குழந்தைகளும் பெண்களும் இளைஞர்களும் வெயிலில் காத்துக் கிடந்து மயங்கி விழுந்தார்கள். விழா இடத்திற்கு அழைத்துவரப்பட்ட குழந்தைகளிடத்தில் கடும் பாதுகாப்புச் சோதனைகள். வாக்குத் திருடர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, மோடி-ஷாவுக்கு எதிராக நாடெங்கும் மாணவர், இளைஞர் போராட்டம் நடக்கும்போது, டெல்லியில் மெட்ரோ ரயில்களை எல்லாம் முடக்கி வைத்துவிட்டு, எதுவுமே நடக்காதது போல், தமிழ்நாட்டிற்கு வந்து மெட்ரோ ரயில் ஓட்டத்தைத் துவக்கி வைத்த மோடியை வரவேற்க, நூற்றுக்கணக்கான பள்ளிக் குழந்தைகளை அலங்கரித்து அழைத்து வந்து, உணவு, தண்ணீர் கொடுக்காமல் அக்னி வெயிலில் காத்துக் கிடக்கச் செய்துள்ளனர். 

தமிழ்நாட்டுப் பெண்களுக்கு அண்ணனாகவும், அவர்கள் குழந்தைகளுக்குத் தாய்மாமனாகவும்  வளைகாப்பு நடத்துவது, தங்க மோதிரம் போடுவது எல்லாம் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து. தமிழ்நாட்டு சகோதரியை கர்நாடகாவிற்கோ, கேரளாவிற்கோ கட்டிக் கொடுத்துவிட்டு அவர் தாய்வீட்டுக்கு வந்து குழந்தை பெற்றுக் கொண்டால், அந்தக் குழந்தைக்கு இந்த விஜய் மாமாவின் அரசு மோதிரம் போடாதாம். மோதிரம் யாருக்குக் கிடைக்கிறதோ இல்லையோ இந்தத் திட்டங்களால் ஜாய் அலுகாஸ்ஸூம், கல்யாண் ஜூவல்லர்ஸ்ஸூம் நல்லாவே கல்லாக் கட்டுகிறார்கள். கோவை வந்த முதல்வர் விஜய்யை கேரளாவிற்குக் கூட்டிச் செல்வதற்கு  கல்யாண் ஜூவல்லர்ஸ்ஸின் ஹெலிகாப்டர் காத்துக் கிடக்கிறது. ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தைத் திறந்து வைத்த கையோடு, தனியார் நிறுவனத்தின் நவராத்திரி விழாவில் கலந்து கொள்ள திருச்சூர் புறப்பட்டார் விஜய். என்னவொரு கொள்கைப் பிடிப்பு?! 

அக்டோபர் 10ம் தேதி தவெக அரசு ஒரு அரசாணை (23984/GAD) வெளியிட்டது. அதில்  ஆயுத பூஜைக்கு அரசு ஊழியர்கள், அரசு அலுவலகங்கள் பொது மக்களிடம் இருந்து நிதி திரட்டக் கூடாது என்று சொல்லிவிட்டு, ஆயுத பூஜை கொண்டாடப்பட வேண்டும், பூசணிக்காய் தேங்காய் உடைத்து சாமி படங்களுக்கு பூ வைத்து அலுவலக வளாகத்தை அலங்கரித்து எளிமையாக கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது மதச் சார்பின்மைக்கும்  அறிஞர் அண்ணா காலந்தொட்டு தமிழ்நாட்டில் ஏற்கனவே அமலில் இருக்கும் அரசாணைக்கும் எதிரானது. 1968ல் அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் பிறப்பித்த அரசு ஆணை அரசு அலுவலகங்களில் உள்ள ஆண், பெண் கடவுள் படங்களையும் ஏனைய மதம் சார்ந்த அடையாளங்களையும் படிப்படியாக அகற்ற வேண்டும் என்று கூறுகிறது. 1994ல் ஒன்றிய அரசு, அரசு மற்றும் அரசு சார் அலுவலகங்களில் எந்த மதம் சார்ந்த கோயில், சர்ச் மற்றும் மசூதி வழிபாடுகளை அனுமதிக்கக்  கூடாது என்று ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக அரசுகள் மேற்படி ஆணைகளைக் கறாராக  அமல்படுத்தாமல் இருந்தாலும்கூட, இப்படி வெளிப்படையாக ஆயுதபூஜை நடத்த முயற்சிக்கவில்லை. ஆனால், விஜய் அரசு அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்களை இந்துமயமாக்கும் முயற்சிகளில் இறங்குவது போல் தெரிகிறது. தவெக விவசாய அமைச்சர், விவசாய நிதிநிலை அறிக்கையை, திருப்பதி சென்று பூஜை செய்து எடுத்து வந்தார். 

இப்படி ஒருபுறம் மதச் சார்பின்மைக்கு எதிராகவும் படுபிற்போக்கு, பெண்ணடிமைத்தன கலாசாரங்களை உயர்த்திப் பிடித்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் விஜய் அரசு, மறுபுறம் மோடி-ஷா போலீஸிற்கு இணையாக தமிழ்நாட்டு போலீஸின் அடக்குமுறையைக்  கட்டவிழ்த்துவிடுகிறது. திமுக ஆட்சியின் போது, போராடிக் கொண்டிருந்த செவிலியர்கள் மத்தியில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், நீங்கள் அனைவரும் பணிநிரந்தரம் செய்யப்படுவீர்கள் என்றார். ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகியும் எதுவும் நடக்கவில்லை எனப் போராடிய செவிலியர்களுக்கு கிடைத்ததோ தடியடியும் கைதும்தான். பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதம் இருக்கக்கூட அனுமதி கொடுக்காமல், குறிப்பிட்ட தேதியில் அமைதியாகக் குழுமி இருந்தவர்களை குண்டுக் கட்டாகத் தூக்கி கைது செய்து வழக்குப் போட்டுள்ளது விஜய் அரசு. இந்தியா கூட்டணியில் நாங்களும் இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, ஞானேஷ்குமாரை பதவி விலகக் கோரி, ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் போராடியவர்கள் மீது தடியடி, கைது. அடுத்து ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி தரப் போகிறது. தவெக அரசின்  செயல்பாட்டில் மாற்றமில்லை ஏமாற்றமே. 


28 October, 2026