தவெக அரசு எதை நோக்கிப் பயணிக்கிறது?

$articleData->title

தவெக அரசு

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசிநாளில், செப். 8 ல், தவெக அரசு ஓசையின்றி சில மசோதாக்களை நிறைவேற்றி இருக்கிறது.


ஆனால், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தொடர் பற்றி தவெக அரசு வெளியிட்ட செய்தி வெளியீட்டில் (த.நா.ச.பே. எண்: 24,  09.09.2026) ஜனநாயக மாண்பையும் மக்கள் நலனையும் முன்னிறுத்திய' பதினேழாவது பேரவையின் கூட்டத்தொடர் சிறப்புகள் பற்றி பின்வருமாறு பறைசாற்றிக் கொண்டது.

"தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 28 நாள்கள், அதாவது 178 மணி நேரம் 31 நிமிடங்கள் நடைபெற்றது. விதி 110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 17 அறிக்கைகளையும், 51 துறைகளின் சார்பில் 1,117 அறிவிப்புகளும் வெளியிடப்பட்டதோடு, 13 சட்ட முன்வடிவுகள் மற்றும் 9 அரசினர் தனித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன"...."பல்வேறு துறைகள் தொடர்பான முக்கிய அரசினர் சட்ட முன்வடிவுகள் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, அவற்றின் மீது உறுப்பினர்களின் கருத்துகள் பெறப்பட்டன."...

 "என்னென்ன அறிவிப்புகள்," "என்னென்ன வரலாற்றுச் சிறப்புமிக்க தனித் தீர்மானங்கள்" என விளக்கியிருந்த அரசு, புதிய சட்ட மசோதாக்கள் பற்றி, "13 அரசினர் சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றம்" என தலைப்பிட்டு பின்வருமாறு சுருக்கமாக, கமுக்கமாகத் தெரிவித்துவிட்டது.

"விரிவான விவாதங்களுக்குப் பின்னர், நிர்வாகத்தை மேலும் மேம்படுத்துதல், மக்கள் நலனை உறுதிப்படுத்துதல் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட 13 அரசினர் சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டன."

ஒரு சில சட்ட முன்வடிவுகள் பற்றி இங்கு பரிசீலிப்போம்.

நகர்- ஊரமைப்பு திருத்த மசோதா :விவசாய நிலங்களை அழிக்கும்!

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பி.ராஜ்குமார் கடந்த செப். 1-ஆம் தேதி இந்தச் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். அதில், நன்செய் நிலங்களை மேம்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட ஆட்சியரின் முன் அனுமதியை பெறும் நடைமுறையை நீக்கவும், நன்செய் நிலங்களைப் பொருத்தவரை உள்ளாட்சி அமைப்புக்கு முன் ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை நகரமைப்பு இயக்குநருக்கு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

"விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றிக்கொள்ள, மாவட்ட ஆட்சியரின் முன்அனுமதி தேவையில்லை" என்கிறது, இந்தச்  சட்டம். தற்போது விவசாய நிலத்தைக் கட்டடம் கட்டப் பயன்படுத்துவது என்றால், மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண், வருவாய், நீர்ப்பாசனத் துறையினர் ஆய்வு செய்வார்கள். அதற்குப்பிறகு, அது தீவிர விவசாய நிலம் அல்ல என அவர்கள் சான்றளிக்க வேண்டும்.

இப்போது, இந்தச் சட்டம் மூலமாக இத்தகைய முன் அனுமதி எல்லாம் தேவையில்லை. இதனால் விவசாய நிலங்கள் மனைகளாகி ரியல் எஸ்டேட் பெருகும்; விவசாய நிலங்களில் தொழிற்சாலைகள் அமைப்பதும் எளிதாகும்;  விளைநிலங்கள் குறையும் - உணவு உற்பத்தி கேள்விக்குறியாகும்.

மாவட்ட ஆட்சியருக்குத்தான் அனைத்து நிலங்களின் விவரம் தெரியும்; நகரமைப்பு இயக்குநருக்கு தெரியாது.  இந்தச் சட்ட முன்வடிவின் மூலம் நன்செய் விவசாய நிலங்களை எளிதில் கையகப்படுத்த முடியும். பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்கு எதிராக இந்தச் சட்ட முன்வடிவு உள்ளது. இதனால் விவசாய நிலப்பரப்பு குறைந்து உணவு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும். 

அமைச்சர் பி.ராஜ்குமார், ஒற்றைச்சாளர முறையின்கீழ் தடையில்லாத் திட்டச்  சான்றிதழ்களைப் பெற உதவும் என்பதால் தாமதம் குறையும் என்கிறார்; காலதாமதத்தைத் தவிர்க்க அரசு இந்த முடிவை எடுப்பதாகக் கூறுவதும் தவறாகும்.

அதிமுக, பாமக, சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் எதிர்த்திருக்கின்றன. இக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும், 'ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்' எனக் கோரினர். எனினும், இந்தச் சட்டத் திருத்த முன்வடிவு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டதால், இவற்றை எதிர்க்கவில்லை போலும்!

"விவசாய நிலம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்குத் தடை" என்ற தவெக அரசின் அறிவிப்பு உண்மையான அக்கறை தானா என்ற கேள்வி எழுகிறது.

விவசாய நிலங்களை அழிக்கும் நகர்- ஊரமைப்பு திருத்த மசோதா கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும்

தனியார் பல்கலைக்கழகங்களை தொடங்க நிபந்தனைகளைத் தளர்த்தும் சட்டத்திருத்த மசோதா: உயர்கல்வியில் தனியார்மய ஆதிக்கத்தை வலுப்படுத்தும்!

தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அவற்றைத் தொடங்குவதற்கான நிபந்தனைகளைத் தளர்த்தும் சட்ட திருத்த மசோதாவை எதிர்ப்புகளுக்கு நடுவே, தவெக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது!

இந்த மசோதா, தனியார் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான நிலத் தேவையை, காப்பீட்டுத் தொகையைக் குறைக்கிறது. இந்த மசோதா திமுக ஆட்சிக்காலத்திலும் கொண்டுவரப்பட்ட போது, "இதனால் கல்வி வணிகம் மேலும் பெருகும்; இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படும்" என கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், அப்போது அந்த மசோதாவைத் திரும்பப் பெற்றது, திமுக அரசு. 

இந்த மசோதா, ஒன்றிய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையின் NEP ஒரு கூறு ஆகும். புதிய கல்விக் கொள்கையைக் கடுமையாக எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதன்தான் இம்மசோதாவை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இந்தச் சட்ட திருத்த மசோதாவை ஆதரித்திருக்கிறது என்பது அரசியல் முரண் ஆகும்.

இதன் விளைவாகத் தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும்; அரசு பல்கலைக்கழகங்களின் இருப்பு கேள்விக்குள்ளாகும். 

குறைந்தபட்சம் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்குக் கூட வங்கிக் கடன் பெற்றுப் படிக்கும் அவலநிலைக்கே இது வழிவகுக்கும். உயர்கல்வியில் நமது மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை (Gross Enrolment Ratio) எதிர்மறையாகப் பாதிக்கும். ஏழை எளிய, விளிம்புநிலை மாணவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகளைப் பாதித்து வெளியேற்றப்படுவார்கள்.இத்தகைய கல்விச் சூழலை தமிழ்நாட்டில் உருவாக்க முயற்சிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.


தவெக அரசின் மக்கள் விரோத சட்டங்களை முறியடிக்க விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

29 September, 2026