நீதித்துறை சுதந்திரம் போற்றுவோம்! அரசியல் சட்ட அறம் போற்றுவோம்! அதிகாரத்திடம் உண்மையை பேசுவோம்!
உமர் காலித், ஷர்ஜில் இமாம் வழக்கில் 05.01.2026 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் அஞ்சாரியா அமர்வம் விசாரணையின்றி 28.01.2020 மற்றும் 01.10.2020 முதல் சிறையில் இருப்பவர்களுக்கு பிணை மறுத்து தீர்ப்பு வழங்கி உள்ளது. 142 பக்கங்களில் 444 பத்திகளில் தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது. தீர்ப்பின் நீளம் தான் அதிகமே தவிர, தர்க்கமும் நீதியும் பற்றாக்குறையாகவே உள்ளது. தீர்ப்பு 2020ல் இருந்து, இதே குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய அய்வருக்கு பிணை வழங்கியுள்ளது. தீர்ப்பின் அடி நாதத்தை, தீர்ப்பின் அரசு அதிகார சாய்வை, ஆள் தூக்கி சட்ட சாய்வை, அடிப்படை உரிமைகள்பாலான அலட்சியத்தை, பத்தி 434 இன் துணைப்பத்திகள் 8 மற்றும் 9 காட்டும். துணைப்பத்தி 8 விசாரணை முடியும் வரை மேல்முறையீட்டாளர்கள் நேரிலோ மெய் நிகர் முறையிலோ எந்த சந்திப்பு பேரணி அல்லது கூட்டத்திலும் கலந்து கொள்ளவோ பங்கேற்கவோ பேசவோ கூடாது என்கிறது துணை பத்தி 9 எந்த வடிவத்திலும் மின்னணு அல்லது அச்சு வடிவத்தில் சுவரொட்டி, துண்டறிக்கை பதாகை பதிவுகள் போன்றவற்றை சுற்றுக்கு விடக்கூடாது என்கிறது.
அரசியல் அமைப்புச் சட்ட முன்னுரை, இந்திய குடிமக்களுக்கு சிந்திக்க, எழுத, எடுத்துச் சொல்ல, நம்பிக்கை கொள்ள, வழிபட சுதந்திரம் உண்டு என அறுதியிட்டு சொல்கிறது. ஆனால் உச்சநீதிமன்றமோ பிணை வழங்கும் போதும், குடிமக்களின் சுதந்திரம் பக்கம் நிற்காமல் அரசு அதிகாரம் பக்கம் சாய்ந்து, அடிப்படை உரிமைகளைப் பறித்துள்ளது. பிணை வழங்கப்பட்டவர்கள், அரை மனிதர்களாகவே இருப்பார்கள். அவர்கள் முழு உரிமை உள்ள முழுமையான குடிமக்கள் அல்ல. இந்தியாவில் வெறுப்பு அரசியல் மேலோங்கும் போது, இஸ்லாமியர்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாற்றப்படும் போது, இந்த அணுகுமுறையின் எதிரொலி, உச்சநீதிமன்றத்திற்குள்ளும் ஒலிக்காதா?
ஷேக்ஸ்பியர் நாடகத்தில் புரூட்டஸ், தான் சீசரை குறைவாக நேசித்ததால் அல்ல ரோமாபுரியை கூடுதலாக நேசித்ததாலேயே, சீசருக்கு முடிவு கட்டியதாகச் சொல்லும் காட்சி உண்டு. நாமும் நீதிபதிகளை மதிக்கிறோம். அதைவிட குடிமக்களின் அடிப்படை உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்ட அறத்தையும், அதன் அடிப்படைக் கட்டமைப்பையும் நேசிக்கிறோம். ஜபல்பூர் ஏடிஎம் வழக்கு உணர்த்தியது போல், இறுதியானது என கருதப்படும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் மறுசீராய்வுக்கு உள்ளாக்கப்பட முடியும். அதனாலும்கூட, நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று சொல்கிறோம்.
பிணை மறுப்புக்கு சொல்லப்பட்ட காரணங்கள் சரிதானா?
தீர்ப்பு – பத்தி 40, 41
அரசு தரப்பு மந்த கதிக்கு ஆளாகி, விசாரணை செயலற்றுப் போய், வழக்கு தாமதமானதாகச் சொல்ல முடியாது. வழக்கின் சிக்கலான தன்மை, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் எண்ணிக்கை, ஆகியவையும் கூட, வழக்கின் வேகத்தைத் தீர்மானிக்கும்.
நமது விமர்சனம்
அ) வழக்கை அரசு தரப்பு நடத்துகிறது. நீதிமன்ற நடப்புகளை, நீதிபதிகளே தீர்மானிப்பார்கள். தரப்பினர் தீர்மானிக்க முடியாது. அப்படி இருக்க, குற்றம் சுமத்தப்பட்டவர்களால் தாமதம் என்று சொல்லப் பார்ப்பது, முறையல்ல. திரு.கபில்சிபல் (மூத்த வழக்கறிஞர்) 55 நாள்கள் நீதிபதி விடுப்பில் இருந்தார், 11 முறை நீதிமன்ற ஆள்பற்றாக்குறை, 26 முறை நீதிமன்றத்திற்கு நேரமில்லை, 59 முறை அரசு வழக்கறிஞர் வாய்தா வாங்கினார், 4 முறை வழக்கறிஞர் வேலை நிறுத்தம் என்பதால் வழக்கு தள்ளிப் போனது, சிறைவாசிகள் தரப்பால் அல்ல என்றும், இந்த விவரங்கள் தரப்பட்டும், உச்ச நீதிமன்றம் இந்த விவரங்களைக் குறிப்பிடவில்லை என்கிறார்.
ஆ) வழக்கின் சிக்கலான தன்மை, குற்றம் சுமத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை, சாட்சிகள் எண்ணிக்கை, பிணை மறுப்புக்கு காரணம் ஆக முடியாது. சட்டத்தில் அப்படி ஏதும் இல்லை. உச்ச நீதிமன்றம் புதிதாக சட்டம் இயற்ற முடியாது. சாட்சிகள் கூடுதலாக இருந்த வழக்குகளில், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்த வழக்குகளில், ஏற்கனவே பிணை வழங்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு - பத்தி 51, பத்தி 226
· உயிர் வாழும் உரிமை/தனிநபர் சுதந்திரம் என்பதை ஒரே அளவுகோலாகக் கொண்டு, சமூகத்தின் பாதுகாப்பை ஓரஞ்சார அக்கறையாக்க முடியாது.
அரசியலமைப்புச் சட்ட அக்கறையும் யதார்த்தமானதாகும். சட்ட எல்லைகளும் யதார்த்தமானதாகும்.
ஊ பா சட்டம் 43 D (5) மற்றும் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 21 இரண்டிற்கும் இடையில் ஒரு சமநிலை காக்க வேண்டும்.
நமது விமர்சனம்
ஊபா (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு UAPA ) சட்டத்தையும், அரசியலமைப்பு சட்ட உயிர் வாழும் உரிமையையும் ஒரே தட்டில் சமமாக வைப்பது, சரியல்ல, எல்லா சட்டங்களும், அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டவை. சமூகத்தின் பாதுகாப்பையும் தனிநபர் சுதந்திரத்தையும் எதிரெதிராக நிறுத்துவதும் கூட முறையற்றதாகும். அரசதிகாரம் மற்றும் ஆள்தூக்கி சட்டம் பக்கம் சாயாமல், உயிர்வாழும் உரிமைக்கும் தனிநபர் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பாக (PROTECTION OF RIGHT TO LIFE AND PERSONAL LIBERTY) உச்ச நீதிமன்றம் நிற்க வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு - பத்தி 56, 61
§ சட்டபூர்வமாக (ஊபா) வகுத்துள்ள எல்லைகளை சட்டை செய்யாமல், விசாரணை தாமதமாகிறது என்பதை ஒரு துருப்புச் சீட்டாக்க முடியாது.
§ நஜீப் வழக்கு தீர்ப்பு கட்டுப்படுத்தும் முன்மாதிரி ஆகாது. ஊபா சட்ட பின்னணி, குற்றச்சாட்டுகளின் தன்மை பார்க்காமல் நஜீப் வழக்கு தீர்ப்பை, துணைக்கு அழைக்க முடியாது.
நமது விமர்சனம்
v 01.02.2021 நஜீப் வழக்கில் நீதிபதிகள் அனிருதா போஸ், சூரியகாந்த், எஸ்.வி. ரமணா அமர்வம் சார்பாக நீதிபதி சூரியகாந்த் தீர்ப்பு எழுதினார்.
v அந்த வழக்கும் ஊபா வழக்காகும். பிணை கோரியவர், பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக இருந்தார்.
v நஜீப் தீர்ப்பின் பத்தி 18, ஊபா சட்டம் பிரிவு 43 D(5)-அய், உயிர்வாழும் உரிமை/ தனிநபர் சுதந்திரம் என்ற அடிப்படை உரிமை மீறலைக் காரணமாக கொண்டு பிணை வழங்குவதற்கு எதிராக நிறுத்த முடியாது: இரண்டையும் எதிரெதிராய் நிறுத்தாமல் இணக்கமாகக் காண வேண்டும்; துவக்கத்தில் பிணை மறுப்புக்கான கடுமை, விரைந்து விசாரணை நடத்த முடியாது மற்றும் பல ஆண்டுகள் சிறைவாசம் என்ற காரணங்கள் முன்பு கரைந்து உருகிவிடும் என்று சொல்கிறது. ஏறத்தாழ 800 சாட்சிகள் இருக்கும் வழக்கில் துரிதமாய் விசாரணை முடிய வாய்ப்பே இல்லை.
v 3 நீதிபதிகள் தீர்ப்புக்கு 2 நீதிபதிகள் தீர்ப்பு கட்டுப்பட்டு பிணை வழங்கி இருக்க வேண்டும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு - பத்தி 218
பல சம்பவங்கள் இருக்கின்ற ஒரு வழக்கில், ஒரு சாதாரண பங்கேற்பாளருக்கும் அமைப்பாளருக்கும் இடையிலான வேறுபாட்டை, அடுத்தடுத்த தொடர்ச்சியான பங்கேற்பு உறுதி செய்யும்.
நமது விமர்சனம்
தனித்தனி குற்றச்சாட்டுகள் இருக்கும் போது என்ன பங்கு என்று சொல்லாமல், தொடர் பங்கேற்பே அமைப்பாளரை காட்டும் என்ற கருத்தை, அனுபவமுள்ள ஒரு சட்ட மாணவர் கூட சுலபமாக நிராகரித்து விடுவார்.
அமைப்பாளர்/கட்டி எழுப்பியவர் என்றெல்லாம் சொற்களை அள்ளி வீசி, தொடர் பங்கேற்பை அதற்கு ஆதாரமாக்கி, பிணை மறுத்தது நியாயம் அல்ல.
தீர்ப்பின் பத்தி 211, 212, 221, 222
Ø உமர் காலித் அமைப்பாளர். அவர் சாலை மறியலுக்கு அழைப்பு விடுத்தார்.
Ø அமைதியான அறவழிப் போராட்டம் என்று அவர் பேசியதே, அவரது தொடர் குற்றங்களை மறைக்காது.
Ø பொதுவில் அறவழி அமைதி என பேசியது, தனியாக வேறு தயாரிப்பு செய்ததை மறைத்து விடாது.
Ø வன்முறையில் நேரடி பங்கில்லை, எந்த பாதகமான பொருளும் கைப்பற்றப்படவில்லை போன்ற காரணங்களைச் சொல்லி, ஊபா சட்டப்பிரிவு 15 -படியான பயங்கரவாத செயல்களுக்கான விளக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாது.
நமது விமர்சனம்
அரசதிகாரம் சொல்வதை சுருக்கெழுத்தாளர் போல் நீதிமன்றம் திரும்ப எழுத வேண்டியதில்லை. அதேபோல், அரசுத் தரப்பு சொல்வதை, சட்டம் ஏற்படுத்திய எல்லைக் கோடுகள் என்ற பெயரால், பயபக்தியோடு அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், சுய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பிணை வழங்கும் சட்டத்திலும் இது பொருந்தும். உச்ச நீதிமன்றம், பார்த்த மாத்திரத்தில் திருப்தி அடையும் பரிசீலனையைக் கூட மேற்கொள்ளாதது, உயிர்வாழும் உரிமைக்கு/தனிநபர் சுதந்திரத்திற்கு கொடும் காயம் ஏற்படுத்தியதாகும்.
வேறு வழிகளில் என்ற (BY ANY OTHER MEANS) சொற்றொடருக்கு, ரயில் மறியல், சாலை மறியல், போன்ற போராட்டங்களும் பொருந்தும் என்றால், போராட்டக்காரர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் ஆகிவிடுவார்கள்!
