இந்திய தேர்தல் ஆணையம் (இசிஐ), வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்ட திடுக்கிடும் உண்மைகளாலும் அதனைத் தொடர்ந்து தீவிரமடைந்துள்ள பரந்த மக்கள் போராட்டங்களாலும் மோடி அரசாங்கம் நிலைகுலைந்து போயுள்ளது. ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும்; எஸ்ஐஆர் ரத்து செய்யப்பட வேண்டும்; ஆளும் அரசாங்கத்திற்கு தங்களின் சொந்த விருப்பத்திற்கேற்ப தேர்தல் ஆணையக் குழுவைத் தேர்ந்தெடுக்கும் தடையற்ற அதிகாரத்தைத் வழங்குகிற, தேர்தல் ஆணையர்களுக்கு சட்டரீதியாக பொறுப்பேற்பதிலிருந்து வாழ்நாள் முழுவதற்கும் விலக்கு அளிக்கிற 2023-ஆம் ஆண்டு சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று இந்தப் போராட்டங்கள் கோருகின்றன. எனவே, தேர்தல் மோசடி, பெரும் எண்ணிக்கையிலான மக்களின் வாக்குரிமைப் பறிப்புக்கு எதிரான இந்தப் போராட்ட இயக்கத்தின் மீது மோடி அரசாங்கம் முழுமையான போரைத் தொடுத்துள்ளது.
ஜனநாயகத்தின் மீதான இப்போரின் மிகவும் அப்பட்டமான அம்சம் நிச்சயமாக, அடக்குமுறைதான். ‘வாக்குத் திருட்டுக்கு’ எதிராக நடக்கும் போராட்டங்களைத் தடுப்பதற்காக மோடி அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ள இத்தகைய அடக்குமுறையை, இந்திய மக்கள் மீது காலனித்துவ ஆட்சியாளர்கள் காட்டிய இகழ்ச்சியுடன் மட்டுமே ஒப்பிட முடியும். பல்லாயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினரைக் குவித்தது, ரயில்களை ரத்து செய்தது, மெட்ரோ நிலையங்களை மூடியது, டெல்லியின் புகழ்பெற்ற போராட்டக் களத்தின் (ஜந்தர் மந்தர்) அனுமதியை ரத்து செய்தது, சமூகச் செயல்பாட்டாளர்களையும் போராட்டச் செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிகையாளர்களையும் கூட வன்முறையாகத் தடுப்புக் காவலில் வைத்தது, கடத்தியது, பெண் போராட்டக்காரர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்களைப் பரவலாக நிகழ்த்தியது, ‘அனுமதி ரத்து செய்யப்பட்ட’ ஒரு இடத்தில் மூவர்ணக் கொடியை பறக்கச் செய்ததற்காகச் செயல்பாட்டாளர்களைக் கைது செய்தது வரை - ஓர் அமைதிவழிப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக மட்டுமே கொடூரமான முறையில் இத்தகையதொரு பிரம்மாண்டமான அடக்குமுறை இயந்திரத்தைப் பயன்படுத்துவது, சங்கிகளின் குறிப்பேட்டிலுள்ள ஏனைய உத்திகளைப் போலவே, காலனித்துவ ஆட்சி நிர்வாக மாதிரியிலிருந்து ஊக்கம் பெற்றதென தெளிவாகிறது.
வீட்டுக் காவல், தடுப்புக் காவல், செயல்பாட்டாளர்களை ‘சமாதானப் பத்திரத்தில்’ கட்டாயப்படுத்தி கையெழுத்திட முயற்சித்தல், பின்னர் அவர்கள் போராடும் உரிமையைத் விருப்பத்துடன் கைவிட்டதாகக் கூறிக் கொள்வது, போராட்டக்காரர்களைத் தாக்கும்போது காவல்துறையினர் தங்கள் அடையாளங்களை மறைத்துக்கொள்வது, போராட்டக்காரர்களைத் தாக்குவதற்காகக் காவல்துறை சீருடையிலோ அல்லது சாதாரண உடைகளிலோ குண்டர்களைத் திட்டமிட்டு களமிறக்குவது போன்ற பல்வேறு கொடூரமான காவல்துறை உத்திகள், அரசு ஒடுக்குமுறையும் பாசிசப் பயங்கரவாதமும் தீவிரமாகி வருவதன் புதிய மட்டத்தையே காட்டுகின்றன. இந்த அடக்குமுறை உத்திகளுக்கு அக்கம்பக்கமாக, போராட்ட இயக்கத்தின் மீதான மதிப்பைக் கெடுக்கவும் அதனைச் சட்டபூர்வமற்றதாக்கவும் தாக்கும்தன்மை வாய்ந்த ஒரு மாபெரும் விஷமப் பரப்புரையை சங்-பாஜக அமைப்பு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இந்தப் பரப்புரைப் போரின் இரு முக்கிய சொற்கள் ‘அராஜகம்’, ‘ஆட்சி மாற்றம்’ என்பனவாகும்.
இப்போராட்ட இயக்கத்திற்கு எதிராக வைக்கப்படும் ‘அராஜகம்’ என்ற குற்றச்சாட்டை விட நகைமுரணானதாக வேறெதுவும் இருக்க முடியாது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாலும், மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதாலும் டெல்லியிலும் அதற்கு அப்பாலும் மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்த குழப்பங்களுக்கும் பெருமளவிலான சிரமங்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் காரணம், அமைதிவழிப் போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள்தான். உண்மையில், இந்தியா கூட்டணி அழைப்பு விடுத்த பேரணியை அரசாங்கம் அனுமதித்த அந்த நாளில், கணிசமான அளவில் போராட்டக்காரர்கள் மத்திய டெல்லியில் திரண்டிருந்த போதிலும் அங்கு எந்தவிதமான குழப்பமோ அல்லது இடையூறோ ஏற்படவில்லை. உலகின் எந்தப் பகுதியிலும் மாபெரும் மக்கள் போராட்டங்கள் என்பது ஜனநாயகத்தின் ஒரு வரையறுக்கும் அம்சமாகவே திகழ்கிறது. மோ-ஷா ஆட்சி வருவதற்கு முன்பு, டெல்லியிலேயே பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட போராட்டங்கள், பேரணிகள், கூட்டங்கள் எந்தவொரு அராஜக இடையூறும் இல்லாமல் அடிக்கடி நடைபெற்றிருக்கின்றன.
இதற்கு மாறாக, இன்றோ, போராட்டங்கள் குறிப்பிட்ட ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று மோடி அரசாங்கம் விரும்புகிறது; பின்னர் நாடாளுமன்றம் அல்லது பல்வேறு அமைச்சகங்களுக்கு அருகிலுள்ள இடங்களின் அனுமதியை ரத்து செய்கிறது. மேலும், மாநாடுகள், அமைதிவழிப் போராட்டக் கூட்டங்கள் மீது அனைத்து வகையான கட்டுப்பாடுகளையும் விதிக்கிறது. இருப்பினும், போராட்டத்திற்கான புதிய இடங்களைத் தேடவும் இருப்பிடங்களை மாற்றிக்கொள்ளவும் நிர்பந்திக்கப்படும் போராட்டக்காரர்கள் அராஜகத்தைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டுகிறது. சில பாஜக தலைவர்களும் ஆர்எஸ்எஸ் கருத்தியலாளர்களும் தங்கள் அராஜகக் குற்றச்சாட்டை நியாயப்படுத்த அம்பேத்கரின் பெயரைத் துணைக்கழைக்கத் தொடங்கியுள்ளனர். மீண்டும் சொல்கிறோம், இது பெரும் நகைமுரண் ஆகும். அரசமைப்புச் சட்டத்தின் ஆட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குழப்பத்தையும் அராஜகத்தையும் தவிர்க்க வேண்டும் என்றும் அம்பேத்கர் வலியுறுத்திய அதே உரையில், ஜனநாயகம் சர்வாதிகாரமாகச் சீரழிந்துவிடும் ஆபத்து குறித்தும் எச்சரித்துள்ளார். அரசமைப்புச் சட்டம் (புதியவற்றை) ஏற்கும் திறனுடையதாக இருக்க வேண்டும் என்றும் நிறுவனங்கள் வரவிருக்கும் சந்ததியினரின் தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்த அவர் தாமஸ் ஜெபர்சனின் கூற்றை மேற்கோள் காட்டினார்.
“தங்களின் மக்கள் எதிர்ப்புணர்வைப் பேணிப் பாதுகாக்கிறார்கள் என்று அவ்வப்போது அதன் ஆட்சியாளர்கள் எச்சரிக்கப்படவில்லை எனில், எந்த நாட்டால் தன் சுதந்திரத்தைப் பாதுகாக்க முடியும்?” என்ற ஜெபர்சனின் புகழ்வாய்ந்த மேற்கோளைச் சுட்டிக்காட்டிய அம்பேத்கர், ஜெபர்சனின் கூற்று “வெறும் உண்மை மட்டுமல்ல, முழுமுற்றான உண்மையாகும்” என்று குறிப்பிட்டார். ஜனநாயகத்தின் மீதும் அரசமைப்பு நெறிமுறைகளின் மீதும் மட்டுமே அம்பேத்கரின் கவனக்குவிப்பு இருந்தது. ஆனால் இன்றோ, மோடி அரசாங்கத்தாலும் அது நேரடியாகத் தேர்வு செய்த தலைமைத் தேர்தல் ஆணையராலும் ஜனநாயகம் சிதைக்கப்படுவதற்கும் நிறுவன பொறுப்பேற்பு மீறப்படுவதற்கும் எதிராக மக்கள் அமைதிவழிப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கமோ, ‘அராஜகம்’ என்ற பூச்சாண்டியைக் காட்டி, அமைதிவழி அரசமைப்புச் சட்டப் போராட்டங்களை ஒடுக்குவதிலும் இகழ்வதிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது!
அரசாங்கம் பதற்றத்துடன் பயன்படுத்த முயலும் மற்றொரு பூச்சாண்டி ‘ஆட்சி மாற்றம்’ என்பதாகும். இறையாளுமை கொண்ட நாடுகளின் அரசாங்கங்களைக் கவிழ்த்து பொம்மை ஆட்சியாளர்களைப் பதவியில் அமர்த்துவதன் மூலம் தொடர்ச்சியான ‘ஆட்சி மாற்றங்களை’ அரங்கேற்றிய வெட்கக்கேடான அமெரிக்க வரலாற்றின் காரணமாக, இந்தச் சொல் வெளிநாட்டுச் சதி, ஏகாதிபத்தியத் தலையீடு என்ற வாடையை வீசுகிறது. ஈராக் போர் முதல் நடந்து கொண்டிருக்கும் ஈரான் போர் வரையிலும் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவின் கடத்தல் முதல் கியூபாவுக்கு எதிரான தொடரும் ஆட்சி மாற்ற அச்சுறுத்தல்கள் வரையிலும் ஆட்சி மாற்ற சதித்திட்டங்களின் தொடர் வரலாறு தான் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையாகும். ஆனால், உலகெங்கிலும் அமெரிக்கா நிகழ்த்தும் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளை ஆதரிப்பதோடு, அமெரிக்க-இஸ்ரேலியக் கூட்டுக்குச் சேவை செய்வதற்காக இந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தன்னாட்சியையும் தேசிய நலன்களையும் சாத்தியமுள்ள ஒவ்வொரு வழியிலும் அடகுவைக்கத் தயாராக உள்ள ஒரு அரசாங்கத்தை சீர்குலைக்க, இந்தியாவில் ஒரு ஆட்சி மாற்றத் திட்டத்தை எதற்காகத்தான் அமெரிக்கா தீட்டப்போகிறது?
இந்திய மக்களின் அனுபவங்கள், போராட்டங்களின் அடிப்படையில் இந்தியாவில் அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இன்று வலுத்து வருகிறது. மோடி அரசாங்கத்துடனும் நாடு முழுவதும் உள்ள அதன் எண்ணற்ற ‘இரட்டை என்ஜின்’ பதிப்புகளுடனும் தாங்கள் பெற்ற கசப்பான அனுபவங்கள், அவற்றின் முழுமையான தோல்விகள், துரோகங்கள், சங்-பாஜக இயந்திரம் ஒவ்வொரு நாளும் பரப்பும் வெறுப்பு, பொய்கள், கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறை ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் தங்களின் சொந்த அனுபவத்தில் இருந்து எட்டியுள்ள மிகவும் தர்க்கரீதியான முடிவு இதுவாகும். இளைஞர்களின் தலைமையில் மக்கள் ஆட்சி மாற்றத்தைப் பற்றிப் பேசுவது இது முதல் முறையல்ல. ஆட்சி மாற்றத்திலிருந்து அமைப்புமுறை மாற்றம் வரை, மாற்றத்திற்கான கோரிக்கையே நவீன இந்திய ஜனநாயக அரசியலின் ஜீவநாடியாக இருந்துள்ளது. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்தியாவின் மிகவும் புகழ்வாய்ந்த நாடு தழுவிய முழக்கமாக ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ (புரட்சி ஓங்குக) இருந்து வருகிறது. 1970-களின் நடுப்பகுதியில் ஜெயப்பிரகாஷ் நாராயண் விடுத்த ‘சம்பூர்ண கிராந்தி’ அல்லது முழுமையான புரட்சி என்ற முழக்கம் ஒரு பெரிய அரசியல் கொந்தளிப்பைத் தூண்டியது; அது நெருக்கடிநிலையின் தோல்விக்கும் இந்தியாவின் முதல் காங்கிரஸ் அல்லாத அரசாங்கம் மத்தியில் உருவாவதற்கும் வழிவகுத்தது.
மோடி அரசாங்கமும் சங்-பாஜக நிறுவனமும் ஆட்சி மாற்றப் பூச்சாண்டியை எழுப்பியும் வெளிநாட்டுச் சதி இருப்பதாகக் குறிப்பால் உணர்த்தியும் தேர்தல் மோசடிகளுக்கு எதிரான போராட்ட இயக்கத்திற்கு அவதூறு பரப்பவும் மக்களைத் திசைதிருப்பவும் முயற்சிக்கின்றன. இது மக்கள் மீதான அவர்களின் அடிப்படை அச்ச உணர்விலிருந்தும் மாற்றுக் கருத்துகளின் மீதான அவர்களின் வெறுப்பிலிருந்தும் எழுகிறது. அதனால்தான், ஊதிய உயர்வு அல்லது காலநிலை நீதி பற்றிப் பேசும் செயற்பாட்டாளர்களைக் கூட அடையாளம் கண்டு, ‘தேசியப் பாதுகாப்புக்கு’ அச்சுறுத்தலாகக் கூறி கைது செய்கிறார்கள். ஆனால் பாஜகவின் ஒடுக்குமுறை உத்தியைப் போலவே அதன் ‘கருத்துப்போரும்’ இந்த முறை தோல்வியடைந்து வருகிறது. வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படையில் நியாயமான தேர்தல்களுக்காகவும் பொறுப்புடன் பதிலளிக்கக்கூடிய அரசாங்கத்திற்காகவும் பொறுப்புக்கூறக்கூடிய நிறுவனங்களுக்காகவும் மக்கள் போராடுவதிலிருந்து எந்தவொரு அராஜகக் குற்றச்சாட்டோ அல்லது வெளிநாட்டுச் சதிப் பூச்சாண்டியோ அவர்களைத் தடுத்துவிட முடியாது.
தலையங்கம்,
லிபரேஷன், நவம்பர் 2026
தமிழாக்கம்: விஜி
