மகாத்மா காந்தி தேசிய கிராமப்புர வேலை உறுதிச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகவும் சக்திவாய்ந்த உரிமைகள் அடிப்படையிலான வறுமை ஒழிப்புத் திட்டம் சாகடிக்கப்படுகிறது. பெருமுதலாளிகளால் ஆளும் மோடி அரசாங்கம், மகாதேகிவேஉ சட்டத்தை ரத்து செய்து விட்டு, மய்யப்படுத்தப்பட்ட முறையில், (மோடி அரசாங்கம்) விரும்பியவாறு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளையும் அடித்து நிரவிவிட்டு ஒரே நாளில் விபி-கிராம்-ஜி சட்டத்தை மோடி அரசு நிறைவேற்றியுள்ளது.
சுதந்திர இந்தியாவில் கிராமப்புர ஏழைகள் வென்றெடுத்த வலுமிக்க உரிமைகளில் மகாதேகிவேஉ சட்டமும் ஒன்று. இந்த உரிமைகள் அடிப்படையிலான வறுமை ஒழிப்புத் திட்டம் சர்வதேச அளவில் ஒரு எடுத்துக்காட்டு. ஆணவம்பிடித்த மோடி அரசாங்கம், தொழிலாளர், கிராமசபைகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூகங்களுடன் கலந்தாலோசிக்காமல், நாடாளுமன்றத்தில் காத்திரமான விவாதம் நடத்தாமல் ரத்து செய்துள்ளது. மக்களுக்காகப் பேசுவதாகக் கூறும் அரசாங்கம் மக்களை மவுனமாக்கி விட்டது. இது பெருமுதலாளிகள் சார்பு அரசின் உண்மையான நோக்கத்தை வெளிக்காட்டுகிறது.
ஏறக்குறைய 20 ஆண்டுகளாக, மகாதேகிவேஉ சட்டம் கிராமப்புர இந்தியாவிற்குள் வறுமைப் பசியை வரவிடாமல் ஒரு தடுப்புச் சுவராகவே இருந்துவந்தது. கோடிக்கணக்கான வேலை நாள்களை உருவாக்கியது. வறட்சிகள், பொருளாதார நெருக்கடிகளின்போது, கோவிட்-19 பொதுமுடக்கத்தில் சந்தைகள் சரிந்து, வாழ்வாதாரங்கள் வறண்டு போனபோது தொழிலாளர் வர்க்கம் முற்றிலும் நம்பிக்கையிழந்து, பசியில் வாடியபோது, மகாதேகிவேஉ சட்டம்தான் உயிராதாரமாக இருந்தது. இதுபோன்ற கடினமான காலங்களில், மகாதேகிவேஉ சட்டம் 100 நாள்கள் வேலையை, தருமமாக இல்லாமல், சட்டபூர்வ உரிமையாக உத்தரவாதப்படுத்தியது. அரசு வேலை வழங்கத் தவறினால், அந்தத் தொழிலாளி சட்டப்படி இழப்பீடு பெறக் கடமைப்பட்டவர்.
மகாதேகிவேஉ சட்டம் அரசின் கருணைப் பரிசு அல்ல. 20 ஆம் நூற்றாண்டின் கடைசியில், 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிலவிய கொடிய வேலையின்மை, வறட்சி வறுமை, பெரும் எண்ணிக்கையில் துயர்மிக்க இடப்பெயர்வு ஆகியவற்றிற்கெதிராக பல பத்தாண்டுகளாக நடைபெற்ற போராட்டங்களால் உண்டானது. நாடு முழுவதும் உள்ள தொழிலாளர், பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள், மக்கள் இயக்கங்கள் தீவிரமான, அடிப்படையான சட்டப்படி உத்தரவாதமுள்ள வேலை செய்யும் உரிமைக் கோரின. 2005இல், நாடாளுமன்றம் அரிதான அரசியல் கருத்தொற்றுமையுடன் இந்தக் கோரிக்கைக்கு விடையளித்தது. சித்தாந்தங்களைக் கடந்து, கட்சிகள் கிராமப்புர இந்தியாவில் வேலைவாய்ப்புக்கு ஒப்புக்கொண்ட இதை சந்தை சக்திகளினிடத்தில் விட்டுவிடக் கூடாது.
மகாதேஊவேஉ சட்டம் அதிகார உறவுகளை மாற்றியது. மனு அளிப்பவர்களாக இருந்த கிராமப்புர ஏழைகளை உரிமைகள் கொண்ட குடிமக்களாக மாற்றியது. அரசிற்கு சட்டப்படியான கடமையானது. வேலை, ஊதியம், (அரசின்) பொறுப்புடைமையை கேட்கும் அதிகாரத்தை தொழிலாளருக்கு வழங்கியது. அதனால்தான் இச்சட்டத்தை அழிக்க வேண்டுமெனத் துடியாய் துடிக்கிறார்கள். செயல்திறனிற்காகவோ வளர்ச்சிக்காகவோ மகாதேஊவேஉ சட்டம் ரத்து செய்யப்படவில்லை. அதிகாரத்தை மய்யத்தில் குவிப்பதும், ஏழை தொழிலாளரின் பேரம் பேசும் சக்தியை உடைக்க வேண்டும் என்பதுதான் காரணம். உரிமைகளுக்குப் பதிலாக (அரசின்) விருப்புரிமையைக் கொண்டு வருகிறது, உத்திரவாதத்திற்குப் பதிலாக நிதி ஒதுக்கீட்டை வெட்டுகிறது, ஜனநாயகத்திற்குப் பதிலாக கட்டுப்பாடும் கட்டளையும் கொண்ட பெருமுதலாளிகள் (கார்ப்பரேட்) பாணி/ நிர்வாகத்தைக் கொண்டு வருகிறது. நிலப்பிரபுத்துவ சக்திகள், ஒப்பந்தக்காரர்கள், பெருநிறுவனங்கள், தொலைவிலுள்ள ஒன்றிய அரசாங்கத்திற்கு அதிகாரத்தை மீண்டும் வழங்கும் புதிய சட்டம், கிராமப்புர ஏழைகளை மீண்டும் பாதுகாப்பின்மையிலும் பசியிலும் தள்ளுகிறது.
இந்தப் புதிய சட்டம், அரசமைப்புச் சட்டத்தின் மீதும், பிரிவு 41 மீதும், மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடிமக்களைப் பாதுகாக்க அரசுக்கு உள்ள கடமை மீதுமான நேரடித் தாக்குதலாகும். மகாதேஊவேஉ சட்டத்தை அகற்றுவதன் மூலம், மோடி, அமித் ஷாவின் புதிய (வளர்ந்த) பாரதத்தில் ஏழைகளுக்கு எந்த உரிமையும் இல்லை. இந்தக் கொடூரமான செய்தியைத்தான் அரசாங்கம் சொல்கிறது.
மகாதேஊவேஉசட்டத்தை ரத்து செய்ததை ஏற்கமாட்டோம்.
வேலை செய்யும் உரிமையை அழிப்பதை ஏற்கமாட்டோம்.
மய்யப்படுத்தப்பட்ட ஆட்சிமுறையை ஏற்கமாட்டோம்.
மகாதேஊவேஉ சட்டம் எப்படி மக்களது வாழ்க்கையை மாற்றியது?
உழைக்கும் ஏழைகளை விலையாகக் கொடுத்து நவ தாராளவாத திட்டங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை மறுவடிவமைக்கும் காலத்தில், மகாதேஊவேஉசட்டம் செயல்படுத்தப்பட்டது. வேலையில்லா வளர்ச்சியின் போது, ஒவ்வொரு கிராமப்புர குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 100 நாட்கள் உத்தரவாதமான வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதி வருமானத்தை வழங்குவதை விடவும் கூடுதலாக, அன்றாட பொருளாதார, சமூக வாழ்வில் தொழிலாளர் குரலை வலுப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், 15.55 கோடி வேலை அட்டைகள் வழங்கப்பட்டு, 26.6 கோடி தொழிலாளர் பதிவு செய்யப்பட்டிருந்தனர். தற்போது, 8.63 கோடி வேலை அட்டைகளும், 12.17 கோடி தொழிலாளரும் வேலையில் உள்ளனர். எனவே, கிராமப்புர வாழ்வாதாரத்திற்கானதொரு திட்டத்தின் தொடரும் பொருத்தப்பாட்டை இது குறிக்கிறது.
மகாதேஊவேஉ சட்டம் ஒரு ஊதிய நிலைப்படுத்தி
மகாதேஊவேஉசட்டத்தில் கடந்த ஆண்டு சராசரி நாள் ஊதியம் சுமார் ₹267 ஆக இருந்தது. கூலிக்கு ஒரு சமதளத்தை அமைப்பதன் மூலம், இந்தத் திட்டம் பல மாநிலங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாள் வருமானத்தை அதிகரித்தது. தனியார் பண்ணை தொழிலாளர், கொத்தடிமைத் தொழிலாளர் சுரண்டப்படுவதை ஓரளவேனும் மட்டுப்படுத்தியது. கேட்கும்போது கிடைத்த வேலையாலும் குறைந்தபட்ச ஊதியத்தாலும் ஏழைக் குடும்பங்கள் பட்டினியிலிருந்து தப்பிக்க உதவியது. 2024-2025 நிதியாண்டில், 73 கோடிக்கும் அதிகமான தொகை நேரடியாக தொழிலாளர் கைகளுக்கு ஊதியமாகச் சென்றது.
ஏழைகளுக்கு கண்ணியமான வேலைக்கான ஆதாரம்
மகாதேஊவேஉசட்டம் மிகவும் விளிம்புநிலைக்கு தள்ளப்பட்டவர்களுக்கென வடிவமைக்கப்பட்ட திட்டமாகும். கிராமப்புர இந்தியாவில் கண்ணியமான வேலை இல்லாத நிலையில் மகாதேஊவேஉசட்டம் பலருக்கு ஆசீர்வாதமாக வந்தது. இதனால், பல கிராமங்களில், ஆண்டை-பண்ணையாள் போன்ற பாரம்பரிய அமைப்பு, சாதி அடிப்படையிலான, ஆண்டு முழுவதும் சேவைக்கடமைகளை செய்ய கட்டாயப்படுத்தும் புரவலர்-இரவலர் படிநிலை உறவு வலுவிழக்கத் தொடங்கின. இத்திட்டத்தில் உள்ள பல ஓட்டைகளையும் தாண்டி, 2025-26ல், இத்திட்டம் 4.87 கோடி கிராமப்புர குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது, 6.49 கோடி தனிநபர்கள் பங்கேற்று 106 கோடிக்கும் அதிகமான வேலை நாட்களை உருவாக்கியுள்ளனர்.
சமீபத்திய பத்தாண்டுகளில் மிகப்பெரிய மக்கள் பங்கேற்பு திட்டம்
2024-2025 நிதியாண்டில் பட்டியல் சாதியினர் (19%), பழங்குடியினர் (17%) மொத்த வேலை நாட்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான வேலைகளை உருவாக்கியுள்ளனர், அதே சமயம் மாற்றுத் திறனாளிகளும் இத்திட்டத்தின் கீழ் வேலைசெய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இந்தியாவில் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய ஒரு தொழிலாளர் திட்டமாகும்.
மிகவும் பரவலாக்கப்பட்ட திட்டங்களில் ஒன்று
மகாதேஊவேஉசட்டத்தில் முடிவெடுக்கும் நடைமுறையில் கிராம சபைகள், கிராம ஊராட்சிகள் முக்கிய பங்கு வகித்தன. கிராம சபையிலுள்ள தொழிலாளர் தங்கள் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப வேலைகளை அடையாளம் காணும் உரிமை உண்டு. தொழிலாளர் வரவு-செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு, அது செயல்படுத்தப்படுவதற்காக அரசாங்கத்துக்கு அனுப்பப்படும். அதிகாரவர்க்கம், மாநில, ஒன்றிய அரசாங்கத்தின் குறுக்கீடு இல்லாமல் மக்கள் திட்டமிடுபவர்களாக இருந்தனர்.
மகாதேஊவேஉசட்டம், பெண்களின் வாழ்க்கையை மாற்றியது
பல கிராமப்புர பெண்களுக்கு, மகாதேஊவேஉச முதல்முதலாக சுதந்திரமான வருமான ஆதாரத்தை வழங்கியது. குடும்பம், சமூகத்தின் முடிவுகளில் அவர்களது சொல்லுக்கு பெருமளவு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. மகாதேஊவேஉசட்டத்தின் விதிமுறைகள், வேலைசெய்பவர்களில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு பெண்களாக இருக்க வேண்டுமென வெளிப்படையாகவே ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் உண்மையான பங்கு இந்த குறைந்தபட்சத்தை விட அதிகமாகவே உள்ளது. இது கொரோனா பெருந்தொற்றுக்கு பிந்தையதை விட அதிகமாக 59% பங்கேற்பை எட்டியது! இது பெண்களின் உடலுழைப்புத் தேவையையும், திட்டம் கிராமப்புர வீடுகளுக்கு அருகிலேயே இருந்ததையும் பிரதிபலித்தது, பெண் தொழிலாளர் நடமாட்டத்திலுள்ள தடைகளைக் குறைத்தது. 2024-25 நிதியாண்டிற்கான அதிகாரப்பூர்வ மகாதேஊவேஉச போர்ட்டல் தரவு, நாடு முழுவதும் உள்ள மொத்த மனித நாட்களில் சுமார் 58.08% பெண்களின் பங்களிப்பைக் காட்டுகிறது. மட்டுமின்றி, கடந்த பத்தாண்டில் தேசிய அளவில் பெண்களின் பங்கேற்பில் நிலையான உயர்வையும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
விபி-கிராம்-ஜி சட்டத்தின் 60 நாள் தடை காலம் தொழிலாளரையும் விவசாயிகளையும் பிளவு படுத்தும் முயற்சி
இந்தச் சட்டம், ஒரே சமயத்தில் விவசாயிகள், தொழிலாளர் இருவரையும் ஏமாற்றுகிறது. இது, ஆழமான விவசாய நெருக்கடியை தந்திரமாக, வேண்டுமென்றே தவறான ஒற்றை காரணிக்குள் குறுக்கிவிடுகிறது; உச்சகட்ட விவசாய காலத்தின் போது தொழிலாளர் கிடைக்காததுதான் காரணம் எனச் சொல்கிறது. இதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. அரசாங்கத்தின் கொள்கைத் தோல்விகளை மூடி மறைக்கவும் விவசாயிகளையும் தொழிலாளர்களையும் ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்தும் கெட்ட நோக்கம் கொண்டது.
விவசாயத்தில் இழப்பு, தொழிலாளரது கூலியால் ஏற்படுவதில்லை. விவசாயிகள் கோரும் மிகவும் அடிப்படையான உத்திரவாதங்கள் மறுக்கப்படுவதால்தான் அவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. சட்டரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை இல்லாததாலும், சந்தை வசதி இல்லாததாலும், சேமிப்பு, குளிர்சாதன பெட்டகச் சங்கிலி உள்ளிட்ட கட்டமைப்பு வசதி தேவையான அளவுக்கு இல்லாததாலும், இடுபொருள் விலையேற்றத்தாலும், பயிர் காப்பீடு முழுமையாக தோல்வியடைந்து விட்டதாலும் இந்த நெருக்கடி உருவாகியுள்ளது. இந்தக் கட்டமைப்புச் சிக்கல்கள் மோடி அரசாங்கத்தின் கையாலாகாத நிலையால் ஏற்பட்டதே தவிர மகாதேஊவேஉ சட்டத்தால் ஏற்பட்டதில்லை. விவசாய வருமானத்தை உயர்த்துவதற்கு இந்த அரசாங்கத்திடம் அக்கறை மிக்க முயற்சி எதுவும் இல்லை. மாறாக, கோவிட் பெருந்தொற்றுக்கு மத்தியிலும் கொடூரமான வேளாண் சட்டங்களைத் திணிக்க முயற்சித்தது. இந்த வேளாண் சட்டங்கள், பெரும் நிறுவனங்களையும் குறிப்பாக அதானியின் விவசாயத்தொழில் வணிகத்தையும் நேரடியாக ஆதரிப்பவை. இந்த வேளாண் சட்டங்கள், விவசாயிகளது பேர வலிமையைத் தகர்த்திருக்கும்; விவசாயத்தை பெரும் தொழில் குழுமங்களிடம் ஒப்படைத்திருக்கும். அதனால்தான், இந்தச் சட்டங்களை திரும்பப் பெற வைக்க விவசாய சமூகம் ஓராண்டு கால வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது.
இந்தச் சட்டங்களை திரும்பப் பெற்றது. ஆனால், மாதம் சில நூறு ரூபாய் விவசாயி சம்மான் திட்டம் என்ற பேரால் வழங்கி விட்டால் விவசாயிகளின் துயரம் ஒழிந்துவிடும் அற்ப பிரச்சனை என்று சுருக்கிவிட்டது. பேருக்கான இந்தத் தொகை, நாட்டின் விவசாய சமூகத்தின் உண்மையான கரிசனங்களைத் தீர்த்து வைக்கவே இல்லை.
புதிய சட்டம் விவசாயிகள், தொழிலாளர் இருவரையுமே வஞ்சிக்கிறது. ஊதியத்துக்கான தரைத்தளம் அமைத்துக் கொடுத்து, மிகக் கடுமையாக சுரண்டப்படுவதிலிருந்து தொழிலாளியை பாதுகாத்த மகாதேஊவேஉசவை தகர்த்ததன் மூலம் தொழிலாளரை ஏமாற்றுகிறது. பாரம்பரிய கிராம அமைப்பு, தலித்துகள், ஆதிவாசிகள், விளிம்புநிலை மக்கள் மீது தலைமுறை தலைமுறையாக தளைகளை ஏற்றி வைத்துள்ளது. நில உடமை மேட்டுக்குடியினர் தங்கள் விருப்பத்துக்கு ஊதியத்தைக் கட்டுப்படுத்துகின்றனர், எவ்விதமான பேர வலிமையுமின்றி சார்பு நிலையை நோக்கி நெருக்குகிறார்கள். தொழிலாளருக்கு ஒரு மாற்று வேலைவாய்ப்பைக் கொடுத்து மகாதேஊவேஉச இந்த முறையை குலைத்துப் போட்டது. அதனால்தான் இந்தத் திட்டம் தாக்கப்பட்டு வருகிறது.
ஒரு பொய்யான கதையாடலை அவிழ்த்து விட்டு விவசாயிகளையும் ஏமாற்றுகிறது. விவசாயிகள் நீண்டகாலமாக கேட்டு வரும் உண்மையான கட்டமைப்பு மாற்றங்களை ஏற்றுக் கொள்வதற்கு மாறாக இந்தச் சட்டத்தை விவசாயிகளுக்கு “ஆதரவான சட்டமென்று” பொய்யாகக் கூறி குறுக்கு வழியில் ஆதாயம் தேடப்பார்க்கிறது. உண்மையில், இந்தப் புதிய சட்டம் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை, தொழிலாளர் உரிமைகளுக்கு அனைத்து கெடுதல்களையும் செய்கிறது.
மிக ஆழமான போராட்ட பிணைப்பு கொண்டுள்ள விவசாயிகள், தொழிலாளர் சமூகத்தின் இடையே ஒரு மோதல் பிளவை உற்பத்தி செய்யும் கெடு நோக்கம் கொண்டது புதிய சட்டம். விவசாய நெருக்கடியைக் காட்டி தொழிலாளர் பாதுகாப்பின் மீது பழி போடும் இந்த அரசாங்கம், தனது சொந்த கொள்கைத் தோல்விகளுக்கு பொறுப்பேற்பதை தட்டிக் கழித்து விட்டு பெரும் தொழில் குழுமத்தின் நலன்களைப் பாதுகாக்கிறது.
இந்தப் பொய்யான பிரிவினையை ஏற்கமாட்டோம்
அவிகிதொச அகில இந்திய தலைமையகம் வெளியிட்டுள்ள மய்ய வெளியீட்டில் இருந்து….
