கடனிலிருந்து விடுதலை எப்போது?

$articleData->title

கடனிலிருந்து விடுதலை எப்போது?

போர்ச்சூழலில் வாழ்கிறோம். ட்ரம்ப் வந்தது முதல் வணிகப்போர். வர்த்தகப்போர். போர் வணிகர்கள் ட்ரம்பும் நெதன்யாகுவும் ஈரான் மீது நடத்திவரும் நாகரிகமற்ற போர். நமது அடுப்பங்கரைக்கும் சாப்பாட்டு தட்டுக்கும் வந்துவிட்ட போர். முதலாளித்துவ லாபவெறியால் விளைந்த வெப்பக் கதிர்வீச்சுப் போர். திரும்பத் திரும்ப தமிழ்நாடு மீது மோடி நடத்தும் பொய்களின் போர். தேர்தல் போர். எண்களை ஏவுணைகளாக சுமந்துவரும் விளம்பரப்போர். போர்ச்சூழலில் வாழ்கிறோம்.

வழக்கத்துக்கு மாறான இந்த தேர்தல் போரில் பலவும் பேசப்படுகின்றன. பேசாப்பொருளை பேசியாக வேண்டும். 11.19% இரட்டை இலக்க வளர்ச்சி. இந்தியாவிலேயே முதலிடம். 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று ஆளும் திமுக பேசிவருகிறது. கடன்கார மாநிலம், குடிகார மாநிலம் என்று அதிமுக அணியினர் பேசி வருகின்றனர். தமிழ்நாட்டின் கடன் 9 லட்சம் கோடி. (இந்த கடனுக்கு வட்டியாக ஆண்டுதோறும் ரூ 60,000 கோடி செல்கிறது). அதிமுக ஆட்சியில் 5 லட்சம் கோடியாக இருந்தது, இப்போது 9 லட்சம் கோடியாக கூடிவிட்டது என்கிறார் பாஜகவுக்கு காவடி தூக்கும் பழனிசாமி. ஊதாரித் தனமான பழனிசாமி ஆட்சி, 5 லட்சம் கோடி கடனாக்கி சென்று விட்டது. ஆனால் திமுக ஆட்சி கடன் அளவைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். கடந்த அய்ந்தாண்டுகளில் மோடி ஆளும் ஒன்றிய ஆட்சி தமிழ்நாட்டுக்குரிய நிதிப் பகிர்வை குறைக்காமல் கொடுத்திருந்தால், ஒன்றிய ஆட்சியின் திட்டங்களுக்கு தர வேண்டிய நிதியை வெட்டாமலும், தாமதப்படுத்தாமலும் உரிய நேரத்தில் கொடுத்திருந்தால் கடன் அளவு 6 லட்சம் கோடியை தாண்டியிருக்காது என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகிறார். மூன்று லட்சம் கோடி கூடுதலாக கடன் ஏற்பட்டதற்கு ஒன்றிய அரசுதான்  காரணம் என்றும் கூறுகிறார். உண்மைதான்.

தமிழ்நாட்டின் கடன் அளவு பற்றி விவாதங்கள் பலதரப்பிலும் நடந்து வருகின்றன. ஆனால், ஒன்றிய அரசின் கடன் 182 லட்சம் கோடியாக (ஜிடிபியில் 58%) உள்ளது. 2014ல் 55 லட்சம் கோடியாக இருந்த கடன் 2025ல் 182 லட்சம் கோடியாக உயர்ந்தது ஏன்? எதனால்? என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டிருக்க வேண்டும். கேட்கவில்லை!

இந்தப் பொதுக் கடனை  தமிழ்நாட்டின் குடும்பங்களுக்கு பங்கிட்டால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 11 லட்சம் ரூபாய். (ஒன்றியம்+மாநிலம் 11 லட்சம். மாநிலம் மட்டும் 4 லட்சம்) நமக்குத் தெரியாமலேயே நம்மைக் கேட்காமலேயே நம்மீது இவ்வளவு கடன் சுமத்தப்படுகிறது. தனிநபர் கடனாக கணக்கிட்டால் இந்தக் கடன்கள் மக்கள் நலத் திட்டங்களுக்காகவே வாங்கப்படுவதாக ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் கூறுவது வழக்கம்.

 சிலந்தியும் ஈயும்!

மேலே கூறப்பட்டது அரசுகளின் ஒட்டுமொத்த பொருளாதார சித்திரத்திலிருந்து தெரியவருவது. தமிழக மக்களின் ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதார நிலமை எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் 60%க்கும் சற்று கூடுதலான குடும்பங்கள் கடன் சங்கிலியில் தம்மை பிணைத்துக் கொண்டுள்ளன. 65% வரையிலான கிராமப்புர குடும்பங்களும் 75% வரையிலான விவசாயக் குடும்பங்களும் கடன் வலையில் சிக்கி வதைபடுகின்றன. (இவை இந்திய சராசரி, 50%, 57%யைவிட அதிகம்). ஒவ்வொரு கிராமப்புர குடும்பமும் சராசரியாக ரூ 3.5 லட்சம் நேரடியாக கடனைச் சுமக்கின்றன. நகர்ப்புர குடும்பம் ஒவ்வொன்றும் ரூ 4.5 லட்சம் கடனைச் சுமக்கின்றன. மிக மோசமான அளவாக, சுமார் 20 % குடும்பங்கள் ரூ 6 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளன. நகைக் கடன், நுண்நிறுவனக் கடன், வங்கிக் கடன், முறைசாரா கடன் என்ற 4 வகைகளில் கடன் பெறுகின்றனர்.

நிலமற்ற கிராமப்புரத்தினர் ரூ 3 லட்சம் வரை கடன் வாங்குகின்றனர். அவர்களது கடன் அளவு 70%ஆக உள்ளது. சிறு விவசாயிகள் ரூ 4 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளனர். அவர்களது கடன் அளவு 75%ஆக உள்ளது. நகர்ப்புர ஏழைகள் ரூ 2.5 லட்சம் வரை கடன்பட்டு 60%வரை கடன்காரர்களாக உள்ளனர். கீழ்நடுத்தர வர்க்கத்தினர் ரூ 6 லட்சம் வரை கடன் வாங்கி 50% பேர் விழிபிதுங்கி நிற்கின்றனர். பெரிய விவசாயிகள் 5 லட்சத்துக்குமேல் கடன்பட்டு 40% பேர் வரை கவுரவம் குலைந்து நிற்கின்றனர். மொத்தத்தில், நிலையற்ற வருமானமுள்ள நிலமற்ற கிராமப்புர தொழிலாளர், சிறு\குறு விவசாயிகள், நகர்ப்புர முறைசாரா தொழிலாளர் ரூ 1.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை கடன்பட்டு படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர், விழுப்புரம், கள்ளக்குரிச்சி, திருவண்ணாமலை இந்தியாவின் “சிவப்புப் புள்ளிகள்” என அழைக்கப்படுகின்றன (முதலிடத்தில் உள்ளன). இந்த மாவட்டங்களில் 60-75% குடும்பங்கள் வரை கடன் வாங்கியுள்ளன;  குறைந்த பட்சம் 2 முதல் 6 லட்சம் வரை கடன்கள் வாங்கியுள்ளன; கடலூரில் சராசரியாக 2.5 லட்சமும், விழுப்புரத்தில் 2.3 லட்சமும், கள்ளக்குரிச்சியில் 2.4 லட்சமும், திருவண்ணாமலையில் 2.2 லட்சமும் கடன் வாங்கியுள்ளன. இந்நான்கு மாவட்டங்களில் மட்டும் தமிழ்நாட்டின் மொத்த நுண்நிறுவனக் கடனில் 30% முதல் 35% வரை நுழைந்திருக்கிறது. இந்த மாவட்டங்களில் சராசரியாக 27% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது தஞ்சாவூரில் ரூ 2.2 லட்சம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ரூ 2 லட்சம் என ஒவ்வொரு குடும்பமும் கடன்பட்டுள்ளன.

நகர்ப்புரத்தில் உழைக்கும் தூய்மைப் பணியாளர், வீட்டுப் பணியாளர் முதல் ஜிக் தொழிலாளர் வரை அரைகுறை வருமானம் காரணமாக வாழ்வை நடத்த கடன் பொறியில் சிக்கி சிதைகின்றனர். வெள்ளுடைப் பணியாளர் என அறியப்படும் கல்லூரி ஆசிரியர்கள்,  கவுரவ விரிவுரையாளர் என்ற பட்டத்தை சுமந்து கொண்டு 8000த்திற்கும் மேற்பட்டவர்கள் 138 கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிகின்றனர். மாத ஊதியம் ரூ.15000ல் தொடங்கி நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இப்போதுதான் தேர்தல் வரும் சூழ்நிலையில் ரூ.30000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. (இவர்களுக்கு ரூ.57000 ஊதியம் வழங்க வேண்டும்). வாழ்க்கை நெருக்கடியை சமாளிக்க கூடுதல் வருமானத்துக்காக ஜிக் தொழிலாளராக பகுதி நேரம் பணிபுரிகின்றனர். இவர்களும் நுண்கடன் நிறுவன சங்கிலியில் சிக்கியுள்ளனர். தண்டல் வட்டி, மீட்டர் வட்டிக்காரர்களிடமும் சிக்கியுள்ளனர்.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் முதலிடம். நகர்மயமாதலில் முதலிடம். நலத்திட்ட வளர்ச்சியில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலம். கல்வி, மருத்துவ வளர்ச்சியில் மிக வளர்ந்த மாநிலம். இந்தியாவின் மொத்த பெண் தொழிலாளரின் 42% தமிழ்நாட்டில் உள்ளனர். இத்தனை குறியீடுகளில் மிகவும் வளர்ச்சி பெற்ற மாநிலத்தில் ஏன் கடன் வளர்ச்சியில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது? வருமானத்தை விட கடன் அதிகமாக இருக்கிறது. சில மாவட்டங்களில் வருமானத்தைவிட கடன் அளவு 100% ஆகக் கூட உள்ளது. தலைக்கு மேலே கடன் செல்வதற்கு என்ன காரணம்? கட்டுக்கடங்காத செலவினங்கள். தறிகெட்டு நுகர்வுவாதம் என்று எச்சரிப்பவர்களும் உள்ளனர். கடன் வலை உடம்பு முழுவதும் சுற்றிக் கொண்டு ஒவ்வொரு எலும்பாக, ஒரேயடியாக இறுக்குவதிலிருந்து விடுதலை பெறுவது எப்போது? சிலந்தி வலையிலிருந்து ஈ வெளியேறுவது எப்போது? எது கடனில் மூழ்கடிக்கிறது? வருமானமின்மை. வேலையின்மை. கடனிலிருந்து விடுதலை பெற வேலையில்லாத் திண்டாட்டத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். அடுத்த இதழில் பார்ப்போம்.

 

30 March, 2026