தலையங்கம்

அநீதியை நீதியாக்கும் செயல்

$articleData->title

திருப்பரங்குன்றம் மலை

திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்காவிற்குப் பக்கத்தில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ராம.ரவிக்குமார் என்பவரை வைத்து வழக்குப் போட்டது பாசிச பாஜக-ஆர்எஸ்எஸ் சங்கிக் கூட்டம். ஆர்எஸ்எஸ்காரரான நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு வழக்கைக் கொண்டு வந்து, தர்காவிற்குப் பக்கத்தில் இருக்கும் தூண்தான் தீபத்தூண், அதில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டு, அதை வைத்து பாஜக-இந்துத்துவக்  கும்பல்கள்  திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க முயற்சித்ததை தமிழ்நாடு அரசு கார்த்திகை தீப நாள் அன்று முறியடித்தது. இது நீதிமன்ற அவமதிப்பு என்றார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். அதனைத் தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு சென்றது தமிழக அரசு. அந்த மேல்முறையீட்டில் நீதிபதிகள் ஜெ.ஜெயசந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு 6.1.2025 அன்று  தீர்ப்பு வழங்கியது. அதில் ஏற்கனவே காலங்காலமாக தீபம் ஏற்றப்படும் இடத்துடன் இப்போது தர்காவிற்கு பக்கத்தில் உள்ள தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும், அதை தேவஸ்தானமே, அறநிலையத் துறையே ஏற்ற வேண்டும். ஆனால், பொது மக்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை; தர்காவிலிருந்து 15 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். அதே வேளை தொல்லியல்துறை, காவல்துறை புதிய இடத்தில் தீபம் ஏற்ற நிபந்தனைகளை உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு நிற்காமல் அரசியல்  ஆதாயத்திற்காக, அரசாங்கம் சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டக் கூடாது என்று, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஆரம்பித்தது யார்?  என்று கூட பார்க்காமல், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பை அப்படியே உறுதி செய்துள்ளது.

இந்தத் தீர்ப்பு ‘இந்து மக்களின் உணர்வு’ என்ற பெயரில் சங்பரிவாரக் கும்பல்களின் அநீதியான செயலை நீதியாக்கும் முயற்சி. இல்லாத வழக்கத்தை இருந்ததாகச் சொல்லி புதிய நடைமுறையை திட்டமிட்டு உருவாக்கும் சங்கிகளின்  அராஜகச் செயலுக்கு இந்த தீர்ப்பு அங்கீகாரம் அளிக்கிறது. பாஜக-இந்துத்துவ கும்பல்தான் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம்” என்று வெளிப்படையாகவே அறிவித்தது. 

புதுப் பிரச்சனையை உருவாக்கியவர்கள் சங்கிக் கும்பல்கள்தான். பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று பிரச்சனை கிளப்பி,  மசூதியை இடித்தார்கள்.  இறுதியில் நீதிமன்றம் அந்த இடத்தை கோயில் கட்டக் கொடுத்துவிட்டது. அதே போல் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று இல்லாத ஒன்றைக் கிளப்பிய சங்கிகளுக்குச் சாதகமாக நீதிமன்றம் துணை போகிறது. இந்த மேல்முறையீட்டு வழக்கில், இந்துக்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தின் தீர்ப்பு இருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அண்மையில் கூறியிருந்தார். அதற்கேற்பவே தீர்ப்பும் கூறப்பட்டுள்ளது. இந்துக்கள் யாரும் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என ஒரு போதும் கோரியதில்லை. இது சங்கிகளின் கோரிக்கை.  இப்போது தர்கா பக்கத்தில் தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தொடர்ந்து அவ்விடத்தில் வழிபாடு நடத்த மக்களை அனுமதிக்க வேண்டும் என்று அடுத்த பிரச்சனையைக் கிளப்புவார்கள். அதற்கேற்ப நீதிமன்றமும் தொல்லியல் துறையிடம் அதைத் தள்ளியுள்ளது. பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கும் மத்திய தொல்லியல் துறையோ  வழிபாடு என்ற பெயரில் கலவரச் சங்கிகள் கடப்பாரையுடன் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுக்கும். பாபர் மசூதி நிலையை சிக்கந்தர் தர்காவிற்கும் ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்கள் திட்டம். அதனால்தான் தமிழ்நாடு அரசு, மலையில் தர்காவிற்குப் பக்கத்தில் தீபம் ஏற்றப்பட்டால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்கிறது. ஆனால், இந்த இரு நீதிபதிகள் அமர்வு அரசின் அக்கறையை, அச்சத்தை  அபத்தம் என்கிறது. அரசு தூண்டிவிட்டால் மட்டுமே குழப்பம் நிகழக் கூடும் என்றும் எந்த அரசும் தங்கள் அரசியல் நோக்கங்களை அடைய இந்த அளவுக்கு தரம் தாழக்கூடாது என்றும் கூறி திருப்பரங்குன்றம் பிரச்சனையில் தமிழ்நாடு அரசு காட்டிய பொறுப்புணர்வைக் கொச்சைப் படுத்தியது மட்டுமின்றி, பாஜக சங்கிகளின் அறிக்கையை அப்படியே பிரதிபலித்துள்ளது. 

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பும் இந்த இரு நீதிபதிகள் தீர்ப்பும் செல்லாதது. சட்டத்திற்குப் புறம்பானது. “1862, 1912 என இரண்டுமுறை மலை உச்சியில் தர்கா அருகே இருக்கக்கூடிய இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சி அன்றைய அரசால் முறியடிக்கப்பட்டது. தர்கா அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கூடிய வழக்கம் கிடையாது." என அன்றைய உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்தத் தீர்ப்புக்கு முரணாக இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே இது செல்லாது.

ஆனால், அரசமைப்புச் சட்டத்தையே அழிக்கத்துடிக்கும் சங்கிக் கும்பல்களுக்கு அவர்களுக்கு ஆதரவானவர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கு மாறான முன் தீர்ப்புகள் எதுவும் முக்கியம் கிடையாது. நீதிபதிகளோ இது போன்ற உணர்வுபூர்வமான வழக்குகளில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவது என்பதற்கு மாறாக, மதச்சார்பின்மை, பொது அமைதி பற்றி கவலைப்படாமல் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்குகிறார்கள். இது ஆபத்தானதாகும்.

இந்திய அரசமைப்பின் மூன்றாவது தூணும் காவிக் கும்பல்களின் கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கின்றது என்பது அப்பட்டமாகவே தெரிகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு, மேல்முறையீடு செய்யப் போவதாகச் சொல்லியிருந்தாலும், நீதிமன்றத்தை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல், தமிழ்நாட்டு மக்கள் ஆதரவுடன் பாசிச சங்கிகளின் சதித்திட்டத்தை திமுக அரசு முறியடிக்க வேண்டும். அநீதியை நீதியாக்க ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகள் பற்றி சங்கிகளுக்கு கவலை கிடையாது.  தமிழ்நாடு அரசும் திருப்பரங்குன்றத்தை சரியானதிசையில் பயன்படுத்துவதோடு, வாழ்வாதாரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் பிரச்சனைகளுக்கு உண்மையான தீர்வை உடனே கண்டு உழைக்கும் மக்கள் ஆதரவுடன் சங்கிக் கும்பல்களை தனிமைப்படுத்திட வேண்டும்.

22 January, 2026