தலையங்கம்

அதிகரிக்கும் சாதியாதிக்க வெறிக் கொலைகளும் சனாதன பிற்போக்கு்த் தனங்களும்

$articleData->title

சாதியாதிக்கப் படுகொலை. தூத்துக்குடி மாவட்டம்

இன்னுமொரு சாதியாதிக்கப் படுகொலை. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பெஞ்சமின் காலனியில் வசித்து வந்த அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த, 27 வயது ஏழுமலைவாசன்  ஜனவரி 15, 2026 பொங்கல் அன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலையைச் செய்தவர்கள் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே வீட்டை இரண்டு பாகங்களாகப் பிரித்து, ஒரு பகுதியில் ஏழுமலைவாசன் குடும்பத்தினரும் இன்னொரு பகுதியில் கொலை செய்த ராஜா குடும்பத்தினரும் வாழ்ந்து வருகிறார்கள். இருவருக்கும் ஒரே மின் இணைப்பு. மின் கட்டணத்தை இருவரும் பகிர்ந்து கொள்ள  வேண்டும். ஏழுமலைவாசன் மின் கட்டணம் கட்டும் காலம் வரும்பொழுது எந்தப் பிரச்சினையும் கிடையாது. ராஜா குடும்பத்தின் முறை வரும்போது ஏழுமலை வாசன் வீட்டு மின்சாரத்தைத் துண்டித்து பிரச்சனை செய்வார்கள். இதைக் கண்டித்துள்ளார் ஏழுமலைவாசன். தங்களை அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் கேள்வி கேட்பதா? என்று ஏழுமலைவாசன் வீட்டிற்குள் வந்தே சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை குத்திக் கொன்று இருக்கிறார்கள் ராஜாவும் அவரது இரு மகன்களும். வீட்டு உரிமையாளரிடம், அருந்ததியர் சமூகத்தவருடன் தாங்கள் சேர்ந்து இருக்க முடியாது, அவர்களை காலி செய்யுங்கள் என்று ஏற்கனவே சொல்லி வந்தார்களாம் கொலைகார குடும்பத்தினர். ஆதிக்க சாதி வெறி. தமிழக அரசு ஏழுமலை வாசன் தாயாரிடம் முதற்கட்டமாக ரூபாய் 6 லட்சம்  வழங்கியிருக்கிறது. மேலும் 3 சென்ட் நிலமும்  அவரின் சகோதரிக்கு அரசு வேலை தருவதாகச் சொல்லியுள்ளது. சாதியாதிக்கப் படுகொலைகள், ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றுவதற்காக தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி    கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று கடந்த அக்டோபர் மாதம் 17ம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல்வர் அறிவித்து மூன்று மாதங்கள் முடியவில்லை அதற்குள் இந்த ஏழுமலைவாசன் படுகொலை நடந்துள்ளது. சொல்லப்போனால், அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. தனிச் சட்டம் விரைந்து கொண்டு வரப்பட வேண்டும், முதல்வரின் அறிவிப்பு தேர்தல் கால அறிவிப்பாக இருந்து விடக் கூடாது, சட்டமும் ஒப்புக்கானதாக இருக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி முதல்வரின் அறிவிப்பு வந்தவுடனேயே சொன்னது. ஆனால், சாதியாதிக்கப் படுகொலைகள் நடக்கும் வேகத்திற்கு, அதைத் தடுப்பதற்காக தனிச் சட்டம் இயற்றுவதற்கான நடவடிக்கையில் வேகம் இல்லை. ஆளும் கட்சியும் சரி, பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளும் இப் படுகொலைகளைக் கண்டு கொள்ளாமல் கடந்து போய்க் கொண்ருக்கின்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஆண்களுக்கும் அரசு பேருந்துகளில் இலவசப் பயணம் என்கிறார் எடப்பாடி. (அரசுப் போக்குவரத்துக் கழகங்களை மொத்தமாக தனியாருக்குக் கொடுத்துவிட்டு கைவிரித்திடலாம் என்கிற தெம்புதான்) அதே எடப்பாடி ஆணவப் படுகொலைகளைப் பற்றியோ அவற்றைத் தடுப்பதற்காக தனிச் சட்டம் பற்றியோ பேசத் தயாராக இல்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தைக் கொண்டு வருவீர்களா என்று கேட்கும் போது, சாத்தியப்படுத்த முடியாததை வாக்குறுதியாகத் தரமாட்டோம் என்கிறார்  பழனிச்சாமி. அதே எண்ணம்தான்  அதிமுகவிற்கு ஆதிக்க, ஆணவப்படுகொலைகளைத் தடுப்பதிலும் இருக்கிறது போலும்.  பாஜக, சங்கிகளுக்கு அயோத்தியும் திருப்பரங்குன்றமும் கண்ணுக்குத் தெரியும் அளவிற்கு படுகொலையாகும் ஏழுமலைவாசன்கள் கண்ணுக்குத் தெரியமாட்டார்கள். அவர்களுக்கு இவர் இந்து இல்லை. ஏனென்றால், ஏழுமலைவாசன் அருந்ததியர். எல்.முருகன் வீட்டில் பொங்கல் கொண்டா்டுவார்கள். ஏழுமலைவாசன் பொங்கல் அன்று சாப்பிடும்போது கொல்லப்பட்டதைப் பற்றி சத்தமில்லாமல் கடந்து போவார்கள் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று. சினிமாவில் வீர வசனம் பேசும் தவெக விஜய்யும் இதுபற்றிப் பேசமாட்டார்.  பற்றி எரியும் திருப்பரங்குன்றம் பிரச்சனை பற்றியே இதுவரை அவர் வாய் திறக்கவில்லை. இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே இந்த சாதியாதிக்கப் படுகொலைகளுக்கு எதிராகவும் தனிச் சட்டம் உடனடியாகக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் போராடி வருகிறார்கள். இந்துத்துவ மதவெறிப் பாசிசம் தமிழ்நாட்டிலும் தலை தூக்கி வருவதின் விளைவாக, நாளுக்கு நாள் சாதியாதிக்கப் படுகொலைகளும் ஆணவப்படுகொலைகளும் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. அவற்றைத் தடுக்க வேண்டிய காவல்துறைக்குள்ளும் இந்த சாதியாதிக்க வெறியும் சனாதன பிற்போக்குத்தனமும்தான் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தென் மாவட்டங்களில் இதுவரை நடந்த சாதியாதிக்க, ஆணவப்படுகொலைகளில் காத்திரமான நடவடிக்கை எதுவும் தமிழ்நாடு காவல்துறை மேற்கொள்ளவில்லை. அப்படியே வழக்குகள் பதியப்பட்டாலும் அவ் வழக்குகளை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகள்தான் மேற்கொள்ளப்படுகின்றன. காவல்துறையின் இந்த மெத்தனப் போக்கை தட்டிக் கேட்கும் வகையில், வன்கொடுமைச் சட்டப் படி நடவடிக்கை மேற்கொள்ளாத காவல்துறை அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்ட காஞ்சிபுரம்  மாவட்ட நீதிபதி ப.உ.செம்மலை பணி இடை நீக்கம் செய்கிறது உயர்நீதிமன்றம். சனாதனவாதிதான் தான் என்று அறிவித்துக்கொண்டு தன் விருப்பம்போல் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பற்றி கேலிச் சித்திரம் போட்ட புத்தகம் தடை செய்யப்படுகிறது உயர்நீதிமன்றத்தால். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் விசயத்திலும் இதை நாம் காண முடிந்தது. காவல் நிலையத்தில் ஆண் பெண் காவலர்கள், வேட்டி சேலை உடுத்தி, ஆடிப் பாடி பொங்கல் விழா கொண்டாடினார்கள் என்பதற்காக சென்னை பல்லாவரம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த அனைவரும் ஒரு பிற்போக்கு காவல்துறை அதிகாரியினால் தற்காலிகப் பணி நீக்கம், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். அரசு, நீதித்துறை, காவல்துறை என எல்லா இடங்களிலும்  பிற்போக்கு சனாதனக் கருத்துகளும் ஆதிக்க சாதி வெறியும் அதிகரித்துக் கொண்டு வருகின்றபோது, முற்போக்கு விழுமியங்களுக்குப்  பெயர் பெற்ற தமிழ்நாட்டில் அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். 

26 January, 2026