ஏலீ; ஏலீ; லாமா சபக்தானி...

தவெக அரசின் 2026 - 2027 வரவு செலவுத் திட்ட அறிக்கை.....

$articleData->title

தவெக அரசின் 2026 - 2027 வரவு செலவுத் திட்ட அறிக்கை.....

  ஏலீ, ஏலீ, லாமா சபக்தானி... என் தேவனே என் தேவனே என்னை ஏன் கைவீட்டீர்...? சிலுவையில் அறையப்பட்ட தேவகுமாரன் பிதாவிடம் கேட்டாராம். விவிலியம் சொல்கிறது. தமிழ்நாட்டில் கிறித்துவராகப் பிறந்தவர்கள், பிறக்காதவர்கள் பலருக்கும் இனி இதுதான் மைன்ட் வாய்ஸ்.

  அய்யாயிரத்து தொண்ணூற்றி முப்பத்து இரண்டும் நாற்பதாயிரத்து நாற்பத்தி பன்னண்டும் சேர்ந்தால் என்ன கிடைக்குமோ அதுதான் தவெக ஆட்சியின் நிதிநிலை திட்டமிடலில் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்கும்.

  பார்வை இல்லை, பயிற்சி இல்லை என்றால், மாற்றிக் கொள்ள, வளர்த்துக் கொள்ள முடியும். அதற்கான தயார்நிலை இல்லை, ஆட்சி நடத்துவதில் அக்கறை இல்லை என்றால் என்ன செய்ய முடியும்? ஜெயலலிதாவுக்குப் பிந்தைய, 2021க்கு முந்தைய அஇஅதிமுக ஆட்சியில் அமைச்சர் பெருமக்கள் பலரும் விதவிதமாக பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். தெர்மகோல் வரை பார்த்தோம். ஆட்சிப் பொறுப்பு என்றால், சொத்து சேர்ப்பது, தீவு வாங்குவது என்பதாக அவர்கள் கருதினார்கள். மக்கள் வாடிப் போனார்கள். இடையில், எல்லாம் நலம் என்று சொல்வதற்கு இல்லை என்றாலும் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிந்தது. இப்போது மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்.

  முந்தைய ஆட்சியின் திட்டங்களுக்கு பெயர் மாற்றி அறிவிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. மகிழத்தான் வேண்டும். பயிர்க்கடன் தள்ளுபடி, தாய்மாமன் தங்க மோதிரம், 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் ஆகியவற்றால் செலவினம் ரூ.12,530 கோடி அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் சொல்லப்படுகிறது. வாக்குறுதிகள் எங்கே? கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு எல்லாம் மேம்பட என்ன புதிய திட்டங்கள்? தனது நிதி ஆரோக்கியத்தை மீட்டெடுக்கத் தேவையான நிறுவனக் கட்டமைப்பை, மனிதவளத்தை தமிழ்நாடு கொண்டுள்ளது என்று சொல்லும் அறிக்கை அந்த மனித வளத்தை பாதுகாக்க, மேம்படுத்த என்ன செய்யப் போகிறது? உரிமைத் தொகை ரூ.2500 ஆகவில்லை. இளைஞர்களுக்கு வேலையில்லா காலப்படி ரூ.4000 பற்றி பேச்சு இல்லை. சமையல் எரிவாயு உருளை ஆண்டுக்கு ஆறு என்னவாயிற்று என்று தெரியவில்லை. ஆனாலும் ஆரவாரத்துக்குப் பஞ்சம் இல்லை.

  சூப்பர் சிஎம், சூப்பர் ஸ்டூடன்ட், சூப்பர் கேம்பஸ்.... அதாவது தூய்மையான, அனைத்து வசதிகளும் கொண்ட பள்ளி வளாகங்கள் அமைக்கப் போர்கிறார்களாம். இதற்கு 10,000 பள்ளிகளுக்கு ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒரு பள்ளிக்கு ஓராண்டுக்கு வெறும் ரூ.13,900. விஜய்ணா, அந்தப் பள்ளிகளை சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கு என்ன சம்பளம் தருவீர்கள்? 10,000 பள்ளிகளை தூய்மைப்படுத்தி விட்டு மற்ற பள்ளிகளை என்ன செய்வீர்கள்?

  நவீனமயமாக்கத்துக்கு பள்ளி நிறைவுத் திட்டம், 3734 பள்ளிகளில் ரூ.2132 கோடியில் நிறைவேற்றப்படும். ஒரு பள்ளிக்கு ஆண்டில் ரூ.57 லட்சம். 13,900அய் விட 57 லட்சம் கொஞ்சம் ஆறுதல்தான். 

    திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு இயங்கி வரும் மாடல் பள்ளித் திட்டத்துக்கு பெயர் மாற்றம் செய்து ரூ.125 கோடி செலவு செய்யப்படுமாம்.

  பள்ளிப் பாடத்திட்டத்தை மறுசீரமைக்க ரூ.25 கோடி. அடிவயிற்றில் புளி கரைக்கிறது. இந்த மறுசீரமைப்பை யாரிடம் ஒப்படைக்கும் இந்த அரசு? ஜோசியம், ஜாதகம், பத்தாவது மாடி நல்லதா, கடல் பார்த்து இருக்க வேண்டுமா போன்ற அம்சங்கள் கொண்டதாக பள்ளிப் பாடத் திட்டம் மாறுமா? நல்ல வேளையாக தமிழ்நாடு ஏற்கனவே வங்கக் கடல் பார்த்துத்தான் இருக்கிறது. இந்த ஆண்டு பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு ஹெல்மெட்டுடன் சைக்கிள். எல்லாம் சேர்த்து பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கப்படுகிறது.

  ரூ.3200 கோடி மதிப்பீட்டில் 200 ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகள் அரசு - தனியார் கூட்டு முயற்சியில் கட்டப்படும். வரும் இரண்டு நிதியாண்டுகளுக்கு 20% கட்டுமான மானியம் ரூ.640 கோடி. இந்த இடத்திலும் மின்கல ஆற்றல் சேமிப்பு, மின்பகிர்மானப் பாதைத் திட்டம் ஆகியவற்றில் தனியார் ஊக்குவிப்பு என்று சொல்லும் போதும் மான்டெக் சிங் அலுவாலியா கண்ணில் தெரிகிறார். 300 மாணவர்களுடன் வருகிற கல்வி ஆண்டில் தொடங்கப்படும் சட்டக் கல்லூ சேர்த்து, உயர்கல்வித் துறைக்கென ரூ.8,393 கோடி ஒதுக்கப்படுகிறது.

  தொழிலாளர் நலன் என்ற தலைப்பில் அடுத்த அய்ந்து ஆண்டுகளில் 12500 வாகன மெக்கானிக்குகள் உட்பட 22500 பேர் பயன் பெறும்விதம், மின்வாகன பழுது, பராமரிப்பு பயிற்சி பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த நிதியாண்டில் இதற்கு ரூ.3 கோடி.ரூ.90 கோடி செலவில் 5 புதிய தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். இதற்காக இந்த அறிக்கையில் ரூ.7.5 கோடி ஒதுக்கீடு. 5 ஆண்டுகளில் 24,000 மாணவர்கள் ஆண்டுக்கு 10 என, 5 ஆண்டுகளில் 50 அய்டிஅய்க்களில் என தொடங்கப்படும் ஏஅய் மற்றும் மெசின் லேர்னிங் தொடர்பான புதிய படிப்பால் பயனடைவார்கள்.

  நம்மை புதிய உலகத்துக்கு தவெக ஆட்சியாளர்கள் அழைத்துச் செல்கிறார்கள் என்றே ஒரு பரவச உணர்வு மேலிடுகிறது. அய்ந்து ஆண்டுகளில் 24,000 மாணவர்கள் என்றால், ஆண்டில் 5,000 பேருக்கும் குறைவானவர்கள் என்று கணக்கு வரும். இந்தக் கணக்கு சரிதான். தெரிந்த கணக்கு கூட தவெக ஆட்சியாளர்கள் சொல்லும் கணக்குகளில் குழம்பி விடுகிறது. 1.67 கோடி இளைஞர்கள் இருக்கும் ஒரு மாநிலத்தில் ஓராண்டில் 5,000 இளைஞர்கள் பற்றி சிந்திக்கும் இந்த சிந்தனை, அதுவும் அய்டிஅய் பயிற்சி தரும் சிந்தனை சிலிர்க்க வைக்கிறது.

  இன்னொரு முத்து. ஒன்றிய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகள் எழுதும் இளைஞர்களுக்கு பயிற்சி தர இந்த நிதியாண்டில் ரூ.3.38 கோடி கூடுதல் நிதி. எத்தனை பேர் அந்தத் தொகையில் பயன் பெறுவார்கள் என்று சொல்லப்படவில்லை. தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள தேர்வுகளில் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்று தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் சொல்கின்றனர்.

  வெற்றித் திறன் பயிற்சித் திட்டம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு அறிவித்த வேலை வாய்ப்பு திட்டத்தின் கூறுகள் கொண்டதாக இருக்கிறது. தனியார் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து 20,000 இளைஞர்களுக்கு பயிற்சி, பயிற்சிக் கால உதவித் தொகை ஆகியவற்றுக்கு ரூ.150 கோடி முதல் கட்டமாக ஒதுக்கப்படுகிறது. இளைஞர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.75,000. மாதக் கணக்கு போட்டுக் கொண்டால், இளைஞர் எதிர்காலம் வளமாக மாறிவிடும் வாய்ப்புகள் கண்ணில் தெரியும்.

  கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள் கவர்ந்திட மாட்டாவோ என்று பாரதி கேட்டான். மாதம் ரூ.6250 கிடைத்தால்....  மாணவர்கள், இளைஞர்கள் என்ற எதிர்கால தமிழ்நாட்டை இப்படித்தான் வளர்த்து எடுக்கப் போகிறார்கள். பெண் தொழிலாளர் நலன் காக்க சிறப்புத் திட்டம் ஏதும்  உள்ளதா? இல்லை. இப்படியாக தொழிலாளர் நலனுக்கும் திறன் மேம்பாட்டுக்கும் ரூ.2,022 கோடி ஒதுக்கிவிட்டார்கள்.

  இன்னுமோர் அடிப்படையான பிரிவான விவசாய சமூகத்துக்கு பெருமாள் அருளுடன் தனி அறிக்கை உள்ளது. விபி கிராம் ஜி செயல்படுத்தப்பட்ட 2026 ஜூலை மாதத்தில் 2025 ஜூலை மாதம் இருந்ததை விட தமிழ் நாட்டில் மட்டும் 74% வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இப்போது ரூ.5,057 கோடி திட்டத்துக்கு ஒதுக்கப்படுகிறது. கருவாடு, ரசம் சோறு கூட யோசித்துதான் இனி அவர்கள் சாப்பிட வேண்டும். இது ஒன்றிய அரசு சுமத்தியுள்ள சுமை. 125 நாட்கள் வேலையை ‘வெற்றி 150’  என்ற பெயரில் 150 நாட்களாக்கி ரூ.100 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்த ரூ.100 கோடி ரூ.5,057 கோடிக்குள் வருகிறதா, அல்லது அதற்கும் கூடுதலாக வருகிறதா என்று அறிக்கையில் இருந்து தெரிந்துகொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு இந்தத் திட்டத்தில் ரூ.3,461 கோடி இன்னும் தர வேண்டுமாம். கேட்டு வாங்கி மக்களுக்குச் சேர வேண்டியதை தந்துவிடுவார்கள் என்று நம்புவோம்.பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாயக் கடன் தள்ளுபடி, குறுவை தொகுப்புத் திட்டம் என எதுவும் எங்கள் மீதான அக்கறையை காட்டவில்லை என்று சொல்லும் தமிழ்நாட்டு விவசாயிகள் போராடத் தயாராகிறார்கள்.

   பெண்கள், குழந்தைகள், முதியோர் என்ற மற்ற பிரிவினர் மக்கள் நல்வாழ்வுத் துறையால் கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள். ஸ்ரீதேவி, பாரதிராஜா எல்லாம் போன பின்னும் ஆத்தா ஆடு வளர்த்துச்சு என்று  சொல்லிக் கொண்டே இருக்கலாம். கிராமப்புற பெண்கள் இன்னும் எத்தனை நாட்கள் ஆடு மேய்க்க வேண்டும்? மற்ற செயலில் உள்ள திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்துள்ளார்கள்.

   பழைய, புதிய, நடுவில் வந்த ஓய்வூதியத் திட்டங்கள் பற்றி ஒன்றிய அரசு நிதி ஒதுக்கிய பிறகு சொல்கிறோம் என்று சட்டமன்றத்தில் சொல்லிவிட்டார்கள். ஒன்றிய அரசு என்ன நிதி, எப்போது தரும்? போனால் போகட்டும் போடா என்று மக்கள் சொல்லிவிட முடியாது.

  கசிவுகளைத் தடுத்து ரூ.1500 கோடி வந்து விட்டது என்று அறிக்கையில் சொல்லப்படும் போது, சட்டமன்றத்தில் ரூ.15,000 கோடி என சொல்லப்பட்டது. அறிக்கையில் எழுத்துப் பிழையா, சொன்னதில் சொற்பிழையா, அல்லது ஆயிரத்து அய்நூறு கோடி என்று சொல்லத் தெரியாத பிழையா என்று நமக்கு உண்மை தெரிந்தாக வேண்டும். என்ன வகை வருகை என்று முன்னாள் நிதியமைச்சர் கேட்டபோது, வந்து கொண்டே இருக்கிறது என்றார்கள். கூடுதல் வருவாய் ஈட்ட எடுக்கப்படும் முயற்சிகளில் ரூ.15,000 கோடி வரும் என்று அறிக்கை சொல்கிறது. இதுவும் அதுவும் ஒன்றா? என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டன? எதையும் தெளிவாகச் சொல்ல மாட்டார்கள். எல்லாம் ஒரு குத்துமதிப்பாக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டு ஜென்சி எளிதாகப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புவோம்.

   சொந்த வரிவருவாய் ரூ.2,839 கோடி அளவுக்கு குறையும் என்று சொல்லப்படும் வரியில் தொடங்கும் பத்தி, சொந்த வரிவருவாய் 9.78% வளர்ச்சி அடையும் என்ற வரியுடன் முடிகிறது. தேவனே, என்னுடைய அறியாமையை பொறுத்தருளும்.

  தொழில் வளர வேண்டும் என்று இந்த ஆட்சியாளர்களுக்குத் தெரிந்திருக்கிறது. பல திட்டங்கள் சொல்லியிருக்கிறார்கள். பெரிய தொழில்கள், சிறுகுறு தொழில்கள் என எல்லாம் சேர்ந்து 20 லட்சத்துக்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் ஏற்கனவே இருப்பதாகவும், வேலைவாய்ப்பு தரும் இந்தத் தொழில்களை ஊக்குவிக்க பல முயற்சிகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். (கடந்த ஆட்சியில் தயாராக வைத்திருந்த), 14,790 வேலைவாய்ப்புகள் இந்த இரண்டு மாத கால ஆட்சியில் உருவாகிவிட்டதாகவும், பத்து ஆண்டுகளில் தமிழ்நாடு 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறிவிடும் என்றும் ஒரு கணக்கு போட்டார்களே, அங்குதான் விஜய்ணா நிற்கிறார். வாழ்க விஜய்ணா. வாழ்க விஜய்ணா கொற்றம்.

 

 

31 August, 2026