இந் நாட்டை இளைஞர்களாகிய நாம் ஆள்வோம்! பாசிசம் வேரோடு வேரடி மண்ணோடு தூக்கியெறியப்படும் –

(‘ஜந்தர்மந்தர் போராட்டத்தின் முடிவு மோடி ஆட்சியின் வீழ்ச்சியின் துவக்கம்’ கருத்தரங்கில் தோழர் நேகா பேசியதன் சுருக்கம்)

$articleData->title

(‘ஜந்தர்மந்தர் போராட்டத்தின் முடிவு மோடி ஆட்சியின் வீழ்ச்சியின் துவக்கம்’ கருத்தரங்கில் தோழர் நேகா பேசியதன் சுருக்கம்)

  எனக்கு தமிழ் தெரியாது. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தெரிந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் உங்களுடன் பேசுவதற்கு.

     இன்று 20ஆம் தேதி. கடந்த மாதம் 20-ஆம் தேதி பட்டினிப் போராட்டத்தின் 23ம் நாள். அன்று எங்களுடைய பட்டினிப்போராட்டத்தை கலைத்தெறிந்தார்கள். சரியாக ஒரு மாதம் கழித்து நான் இங்கு உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்.

     இங்கு நீட் தேர்வுக்கு எதிராக பட்டினிப் போராட்டம் நடத்திய தோழர்கள் மணி, மோகன், தனசேகர், ஆகியோருடன் இங்கு இருப்பதில் மகிழ்ச்சி.

     இந்த நேரத்தில் அனிதாவுக்கு உண்மையில், அவருடைய சகோதரர் மணியின் போராட்டத்திற்கு என்னுடைய மரியாதையைச் செலுத்துகிறேன். எனக்கும் ஒரு தம்பி இருக்கிறான், அந்த தம்பிக்கு ஏதாவது நடந்தால் நான் என்னுடைய போராட்டத்தை எப்படித் தொடர்வேன் என்று எனக்குத் தெரியாது.    உங்கள் அனைவருக்கும் எனது புரட்சிகர வணக்கங்கள், ஜெய்பீம், செவ்வணக்கம்.

     கல்வி அமைப்பு பற்றி பேசும் போது அதை மேம்படுத்துவதைப் பற்றிப் பேசுகிறோம். ஒரு பாசிஸ்ட்டிற்குப் பதிலாக இன்னொரு பாசிஸ்ட்டை மாற்றுவதல்ல. ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்க வேண்டும். எந்த பாசிஸ்ட் வந்து கல்வித்துறைக்கு அமைச்சராக வந்தாலும் நம்முடைய எதிர்காலம், இந்த நாட்டின் எளிய மாணவர்களின் எதிர்காலம் அங்கு பணயமாக வைக்கப்படுகிறது. நம்முடைய வாழ்க்கைதான் ஒவ்வொரு நாளும் பறிக்கப்படுகிறது.

     2017-2018லிருந்து, இருந்து கொண்டிருக்கிற தேசிய தேர்வு முகமை, சட்டவிரோத வினாத் தாள் கசிவை சட்டபூர்வமானதாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

     நம் நாட்டில், நம்முடைய கல்வி மொத்தமாக விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. வினாத் தாள் கசிவிற்கு யாரெல்லாம் பொறுப்போ அவர்களையே அது பற்றி விசாரணை செய்யும் குழுக்களில் என்.டி.ஏ. சேர்த்துக் கொண்டுள்ளது.  அந்த நபர்கள் எல்லாம் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவைச் சேர்ந்தவர்கள். என்.டி.ஏ  24 நிரந்தர ஊழியர்களை வைத்துக் கொண்டு  2 கோடி மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்துகிறது. அவர்கள் தனியார் ஏஜென்சிகளுக்கு காண்ட்ராக்ட் கொடுத்து, திட்டமிட்டு முறைகேடுகளும் தொழில்நுட்பக் கோளாறுகளும் நடக்கின்றன.  

     அடுத்து, புதிய கல்விக் கொள்கை. கல்வி மாணவர்களின் அடிப்படை உரிமை என்ற நிலையிலிருந்து மாற்றி, கல்வியை வியாபாரமாக, லாபத்திற்கானதாக ஒரு சரக்காக மாற்றியுள்ளது. கல்வி கொடுக்கும் கடமை அரசுக்கு கிடையாது என்கிறது.

      என்.டி.ஏவும் என்.இ.பியும் மாணவர்களுக்கு கல்வியை கேள்விக்குள்ளாக்கி விட்டது. மாணவர்கள் சி.பி.எஸ்.இ அல்லது தனியார் பள்ளிகளில் சேர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகளுக்கு எந்த மதிப்பும் இல்லை.

      பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்குத் தேவையான நிதியை அரசு வழங்காமல், கடன் வாங்கி நடத்தச் சொல்கிறார்கள். அந்தக் கடனை அடைக்க கட்டணத்தை உயர்த்துகிறார்கள், உட்கட்டமைப்புச் செலவுகளைக் குறைக்கிறார்கள், மாணவர்களுக்கு அதிக அபராதம் விதிக்கிறார்கள், கல்வி உதவித்தொகையை ரத்து செய்கிறார்கள்.

      நீட் போன்ற கட்டாயத் தேர்வுகளால் தனியார் பயிற்சித் தொழிற்சாலைகள் பல கோடி ரூபாய் லாபம் பார்க்கின்றன. நம்முடைய பணத்தில். தனியார் பள்ளி முதலாளிகளும், தனியார் பயிற்சி மய்ய மாஃபியாக்களும் கொழுக்கிறார்கள்.

      இந்திய அரசியல் வழிமுறைகளிலும் இதே கொள்கைதான். இந்த நாடு யாருக்காக உள்ளது? இந்து ராஷ்டிரா என்பது யாருக்காக? சில ஆதிக்க சாதியைச் சேர்ந்த, சில ஆதிக்க சாதி இந்துக்களுக்காக உள்ளது. சாதி அமைப்பை ஏற்காதவர்கள், சாதியை விட்டு, மதத்தை விட்டு தங்களுக்கான வழியைத் தேர்ந்தெடுத்திட முடியுமா? பார்ப்பனிய ஆணாதிக்கக் கட்டமைப்பை எதிர்க்கும் பெண்கள், மாற்றுப் பாலினத்தவர் என ஒடுக்கப்பட்டவர்களின் நிலைமைகள் மோசமாக உள்ளன.

      நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடி உயிர் நீத்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் தொடர்ந்து குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள். ஆதிவாசி மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு, வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்குத்  தாரைவார்க்கப்படுகின்றன.

     ஆஷா பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நோய்டா, மானேசர், குர்கானில் போராடிய ‘கிக்’ தொழிலாளர் போராடியதற்காக சிறை வைக்கப்பட்டார்கள். அந்நிய நேரடி முதலீட்டிற்காகவும், சிறப்புச் சுரண்டல் மண்டலங்களுக்காகவும் தொழிலாளரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

      தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான மக்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்களாக,  குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராளிகள் பாகிஸ்தானியர்களாக, விவசாயிகள் போராட்டத்தில் உயிரை விட்ட 700 பேரும் காலிஸ்தானியர்களாக முத்திரை குத்தப்படுகிறார்கள்.

      மோடியின் இந்தியாவில் ஒரு சிலர் லாபமடைய, நாட்டு மக்களாகிய நாம் எல்லாம் உரிமைகளையும் கவுரவத்தையும் இழக்க வேண்டும்.  இதை ஜென் ஸீ தலைமுறையினர் கேள்விக்குட்படுத்துகிறார்கள்.

      எங்களுடைய போராட்டம் உங்களை சங்கடப்படுத்தியது, எங்களுடைய போராட்டமும் வார்த்தைகளும் உங்களை இரண்டு முறை சிந்திக்க வைத்துள்ளது, எங்கள் பட்டினிப் போராட்டம், நாட்டு மக்கள் மீது நீங்கள் அக்கறையின்றி இருக்கிறீர்கள் என்பதை அம்பலப்படுத்தியது. இந்நாட்டின் வரலாற்றில் மிக மோசமான அரசாங்கம் உங்களுடையதுதான் என்பதை வெளிக் கொணர்ந்த பெருமை எங்களையே சாரும்.

       தர்மேந்திர பிரதான் பதவி விலகியபோது, ‘இந்தப் போராட்டம் பாசிச ஆட்சியின் முடிவின் துவக்கமாக நினைவு கூரப்பட வேண்டும்’ என்று என்னிடம் கேள்வி கேட்ட ஊடக நண்பரிடம் சொன்னதையே  இன்று இங்கேயும் சொல்கிறேன்.

  அவர்கள் நம்மை எல்லா வழிகளிலும் பிளவுபடுத்துகிறார்கள். நம்மை தென்னிந்தியா, வட இந்தியா என்று பிளவுபடுத்துகிறார்கள். ‘நீட்’க்கு எதிரான போராட்டத்தில் மட்டுமின்றி,  கூட்டாட்சியைப் பாதுகாக்க, ஒரே கலாச்சாரம், ஒரே மொழிக்கு எதிராக, தென் மாநிலங்கள் மீது திணிக்கப்படும் தொகுதி மறுவரையறைக்கு எதிராக நீங்கள் நடத்தும்  போராட்டங்களில் நாங்கள் உங்களுடன் நிற்போம்.

   வடக்கு,தெற்கு,கிழக்கு,மேற்கு என்ற வேறுபாடின்றி, இந்திய இளைஞர்களாகிய நாம் சாம்பலில் இருந்து ஒரு புதிய இந்தியாவைக் கட்டமைப்போம். இந் நாட்டை இளைஞர்களாகிய நாம் ஆள்வோம்! பாசிசம் வேரோடு வேரடி மண்ணோடு தூக்கியெறியப்படும். மிக்க நன்றி!

 

நரேந்திர மோடி அரசு வீழ்ச்சியினுடைய துவக்கம் ஆரம்பமாயிடுச்சு.

( ஏஐசிசிடியு-உழைப்போர் உரிமை இயக்கம் மாநிலத் தலைவர் கு. பாரதி பேசியதிலிருந்து)

முதலாளித்துவ சமூகத்தினுடைய கட்டமைப்பில் இளைய சமூகம் எல்லாம் இன்ஸ்டாகிராம்ல இருப்பாங்க, அதில் நிறைய நேரம் செலவு பண்ணுவாங்க, நிறைய புத்தகம் படிக்க மாட்டாங்க, களத்துக்கு வர மாட்டாங்க, போராட மாட்டாங்க, எல்லாம் முடிஞ்சிருச்சு. அந்தக் கால நக்சல்கள், அந்தக் கால கம்யூனிஸ்டுகள், அந்தப் பாரம்பரியம் எல்லாம் முடிஞ்சு போச்சு, திருப்பி வந்து நியூ ஜெனரேஷன் எதுவும் பண்ணாது என்று இருந்தபோது-அதற்கெல்லாம் பதிலடியாகத்தான் டெல்லியில ஜந்தர் மந்தர்ல மாணவர் சமூகம், இளைஞர் சமூகம், "நாங்கள்தான் நாளைய இந்தியா! மோடி அரசுக்கான வீழ்ச்சி துவங்கி இருக்கிறது!" என்று ஒரு மிகப்பெரிய எழுச்சி. Gen-Z தலைமுறையினுடைய எழுச்சி நாடு முழுக்க... நாடு முழுக்க மாணவர்களுடைய நம்பிக்கை. அங்க ஒலிச்சது 'ஜெய் பீம்' என்ற குரலும், 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்ற குரலும் இயல்பாகவே சேர்ந்து ஒலிச்சுது. "இது ஒட்டுமொத்த மாணவர் இளைஞர்களுடைய போராட்டம்" என்று அறிவித்தது. அதுதான் அந்த போராட்டத்தினுடைய வெற்றியாக இருந்தது. அச்சம், பயம் நரேந்திர மோடிக்கே துவங்கி இருக்கு. போராடுபவர் மீது 'நக்சல்' என்று முத்திரை குத்துறான்னு சொன்னா, இன்னைக்கும் டெல்லியினுடைய போராட்டத்துல இருந்து அவர் வெளிய வரல. உலகம் முழுக்க கம்யூனிஸ்டுகள் இருக்காங்கன்னா, இது உலக முழுமைக்கான சித்தாந்தம்.

இன்னைக்கு ட்ரம்ப், "உலகத்துல நடக்குற போர்களை விட, பயங்கரவாதத்தை விட ஆபத்தானது கம்யூனிசம்" என்று பேசுறார். ஏன்னா, உலகம் முழுக்க போருக்கு எதிராக, ட்ரம்புக்கு எதிராக, சர்வாதிகாரத்திற்கு எதிராக இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகள் எழுந்து, களத்துலயும் நிக்கிறாங்க. இது இந்தக் கட்சி, அந்தக் கட்சி சம்பந்தப்பட்டது இல்ல, சித்தாந்தம் சம்பந்தப்பட்டது. அதனாலதான் ட்ரம்புக்கு அச்சம் இருக்கு. ட்ரம்புக்கு அச்சம் இருக்குன்ற மாதிரி, மோடி கூட்டத்துக்கும் அச்சம் இருக்கு. மோடி கூட்டத்துக்கு அச்சம் இருக்குன்ற மாதிரி, தமிழ்நாட்டில் ஜோசப் விஜய் கூட்டத்துக்கும் அச்சம் இருக்கு!

நரேந்திர மோடி அரசு வீழ்ச்சியினுடைய துவக்கம் ஆரம்பமாயிடுச்சு. விவசாயிகள் தொடங்கி வச்சாங்க. இன்னைக்கு சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் தயவுல மட்டும்தான்... அவங்க தயவுலதான் இன்னைக்கு தொங்கிட்டு அப்படியே நிக்குது. அடுத்த முறை நிச்சயமாக மோடி, அமித் ஷா கூட்டத்தை மாணவர், இளைஞர் கூட்டம் நிச்சயமாக வீதிக்கு அனுப்பும். அதில் டெல்லி ஜந்தர் மந்தரினுடைய போராட்டமும் இருக்கும் 

 

தோழர் நேஹாவைத் தூக்க முடியவில்லை. அவர் உறுதியாக போராட்டத்தைத் தொடர்ந்தார். 

(சிபிஐ(எம்எல்) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி உரையிலிருந்து)

இன்றைக்கு நம்மை சூழ்ந்திருக்கிற மிகப்பெரிய ஆபத்து பாசிசம். இந்தப் பாசிசம் உலகத்தில் உருவானபோது, முதலில் கண்டறிந்தவர்கள் இடதுசாரிகள், கம்யூனிஸ்ட்டுகள். அதற்கு முடிவுரையை எழுதியவர்களும் கம்யூனிஸ்டுகள்தான்.

சிபிஐ(எம்எல்) கட்சியின் மறைந்த பொதுச்செயலாளர் அன்புத் தோழர் விநோத் மிஸ்ரா அவர்கள் 'பாசிசத்தின் காலடிச் சத்தம் காதுகளில் கேட்கிறது’ என்று 90களிலிலேயே சொன்னார். இன்று பாசிசம் ஆட்சியில் அரியணையில் அமர்ந்துகொண்டு, கோலோச்சியிருக்கிறது.

இந்த அரங்கத்தில் இன்றைய மாணவர் இளைஞர் மட்டுமல்ல. முன்னாள் மாணவர், இளைஞர்களும் அமர்ந்திருக்கிறார்கள்.  அவர்கள் அன்றிலிருந்து இன்று வரை போராடிக் கொண்டே இருப்பவர்கள். டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கான இடம். பல போராட்டங்கள் அங்கே நடந்துள்ளன. ஆனால், இந்தப் போராட்டம் அதிலிருந்து கொஞ்சம் வினோதமானது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எல்லாம் ஒரே அமைப்பைச் சார்ந்தவர்கள் அல்ல. இந்த நாட்டின் இளையவர்களும் புதியவர்களும் இந்த ஆட்சியாளர்கள் மீது கொண்ட மிகப்பெரிய கோபத்தால், பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்தார்கள். போராட்டத்தை கொண்டாட்டமாக்கினார்கள்.

பல சர்வாதிகாரிகளுடைய மணிமகுடங்களை மண்ணில் உருட்டியவர்கள், புரட்டியவர்கள், வீழ்த்தியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக, பாசிச ஆட்சிக்கு எதிராக, மக்களைப் பிளவுபடுத்துகிற பிளவுவாத அரசியலுக்கு எதிராக எங்கு போராட்டம் நடந்தாலும் அங்கு கம்யூனிஸ்ட்டுகள் நிற்பார்கள்.

இன்றைக்கு அந்தப் போராட்டத்திலே 23 நாட்கள் பட்டினிப் போராட்டத்தை தொடர்ந்த அன்புத்தோழர் நேஹா இங்கே வந்திருக்கிறார். சோனம் வாங்சுக்கை தூக்கிக் கொண்டு போனார்கள். ஆனால், தோழர் நேஹாவைத் தூக்க முடியவில்லை. அவர் உறுதியாக போராட்டத்தைத் தொடர்ந்தார். ஏனென்றால் அவர் கம்யூனிஸ்ட். அவர் அய்சாவின் தலைவர்.

இடதுசாரிகள் ஒன்று சேர்வோம், பாசிசத்தை வீழ்த்துவோம். அதற்கான ஒரு முன்னறிவிப்பாக இந்தக் கூட்டம் இருக்கட்டும்.

 

 


 


31 August, 2026