கட்சி மத்திய கமிட்டி விடுத்துள்ள ஜூலை 28 உறுதி ஏற்பை மாநிலம் முழுவதுமுள்ள கட்சி அமைப்புகள் வாசித்து ஆகஸ்ட் இயக்கம் பற்றி முடிவுகள் எடுத்துள்ளன. அவற்றிலிருந்து சில..
ஜூலை 12 அன்று கூடிய மதுரை மாவட்டக் கமிட்டி ஜூலை 28 உறுதி ஏற்பு அறைகூவலை படித்து விவாதித்தது.
கட்சிக்குள் உறுதிப்பாட்டைக் கொண்டுவர, ஜூலை 28 அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள, கம்யூனிஸ்ட்களுக்குரிய மூன்று பண்புகளான “துணிச்சல், பொறுமை, வைராக்கியம்” இவற்றின் மீது கருத்துப் பகிர்வு நடைபெற்றது. கட்சி ஒற்றுமைக்கு எதிரான குழுவாதப் போக்கு, வேலைக்கு பொறுப்பேற்காத வெற்று முழக்கங்கள், புதியவளர்ச்சியை பற்றி கவலைப்படாத மேலோட்டமான வேலை, அமைப்பு ஒழுங்குகளை மதிக்காமல் சுற்றி அலையும் வேலை, தலைமை தாங்கும் அமைப்பில் இருந்து கொண்டே கூட்டங்களை புறக்கணிக்கும் தவறு இவைகளை விரட்டி, கட்சி ஒற்றுமையையும், வெகுமக்கள் வேலையில் புதிய வளர்ச்சியையும் கொண்டுவருவது அவசியமென கூட்டம் உணர்ந்தது. இதன் தொடர்ச்சியாக நான்கு மய்யங்களில் ஒவ்வொன்றிலும் 500 இலக்காகக் கொண்ட ஆகஸ்ட் அணிதிரட்டலுக்கு திட்டமிடப்பட்டது. அவிகிதொச உறுப்பினர் சேர்ப்பு, மேலூர், மதுரை மய்யங்களில் மாணவர் வேலைக்கு முதன்மைக் கவனம் செலுத்துவதென்றும் முடிவானது.
இதன் தொடர்ச்சியாக, ஜூலை 28 அன்று, வாடிப்பட்டி ஒன்றிய கூட்டத்தில் அறிக்கை விவாதிக்கப்பட்டது. ஒன்றிய அலுவலகத்தை மாவட்டச் செயலாளர் மெய்யர் திறந்து வைத்தார்.
வெகுமக்கள் அமைப்பை செயலூக்கப்படுத்துவோம்!
ஜூலை 27 அன்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களின் முன்னணி ஊழியர்கள் 30 பேர் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், தோழர்கள் வீ.சங்கர், சங்கரபாண்டியன் மாநிலச் செயலாளர் ஆசைத்தம்பி கலந்து கொண்டனர். ஆகஸ்ட் அணிதிரட்டல் பற்றி திட்டமிடப்பட்டது. ஜூலை 28 அன்று தூத்துக்குடி ஊழியர் கூட்டம் நடைபெற்றது. தூய்மைப் பணியாளர் அமைப்பை செயலூக்கப்படுத்தி விரிவாக்கி ஆகஸ்ட் அணிதிரட்டல் நடத்துவதென முடிவானது. மாவட்டச் செயலாளர் முருகன், தோழர்கள் சகாயம், பொன்ராஜ் இவர்களுடன் தோழர் சங்கர் கலந்து கொண்டார்.
ஜூலை 28 அன்று, குமரி மாவட்டக் கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சுசீலா, கார்மல், அந்தோணிமுத்து கலந்து கொண்ட இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஆசைத்தம்பி கலந்து கொண்டு ஜூலை அறிக்கை பற்றி விளக்கிப் பேசினார். ஆகஸ்ட் 11, அணிதிரட்டல், விதொச உறுப்பினர் சேர்ப்பு கூட்டம் பற்றி திட்டமிடப்பட்டது.
அரசியல் பேசுவோம்; அரசியல் கற்போம்!
ஜூலை 28, சென்னை மாநகர சிறப்பு மாவட்டக் கமிட்டிக் கூட்டம் அம்பத்தூர் தோழர் கூடத்தில் மாநகரச் செயலாளர் ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது. பெரும்பாலும் இளைஞர்களையும் தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட தொழிலாளர் கமிட்டி உறுப்பினர்களையும் கொண்ட கூட்டத்தில் ஜூலை 28 அறிக்கையை அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் குமாரசாமி விரிவாக விளக்கிப் பேசினார்.
வரலாற்றுச்சிறப்புமிக்க ஜந்தர் மந்தர் போராட்டம் பற்றி கருத்து கேட்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஊக்கமாக கருத்து தெரிவித்தனர். பெண்கள் போராட்டம், இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆட்சியாளர்கள் அடிபணிந்தே தீர வேண்டும் என்பதை ஜந்தர் மந்தர் போராட்டம் நிருபித்துள்ளது. “அரசியல் நிலைமைகள் வேகமாக மாறி வருகிறது. பிரதானுக்கு அடுத்ததாக பிரதம மந்திரி பதவி விலக வேண்டுமென உரத்து தெரிவித்த தோழர்கள், பிரதமர் பதவியில் தொடரக்கூடாதென்பதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன. அவர் தொடர வேண்டுமென்பதற்கு ஒரு காரணம் கூட இல்லை என்று அடித்துக் கூறினர். வெற்றிகரமான சென்னை தூய்மைப் பணியாளர் போராட்டத்தையும் ஒப்பிட்டு நினைவு கூர்ந்து பேசினர். சென்னையின் 43 டிவிஷன்களில் 25 டிவிஷன்களில் கட்சிக் கிளைகளை அமைப்பாக்குவதென்ற மிக முக்கியமான முடிவு எடுக்கப்பட்டது. தோழர் கு.பாரதி கலந்து கொண்டு கருத்துகள், ஆலோசனைகள் தெரிவித்துப் பேசினார்.
அதே நாளில், திருவள்ளூர் மாவட்ட ஊழியர் கூட்டம் காரணோடையில் நடைபெற்றது. 5 பெண்கள் உள்ளிட்ட 30 பேர் கலந்து கொண்டனர். ஜூலை 28 உறுதி மொழியின் அடிப்படையில் கிளை வரை கட்சி அமைப்பை முறைப்படுத்தி செயலூக்கப்படுத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது. நடந்து கொண்டிருக்கும் அவிகிதொச உறுப்பினர் இயக்கத்தில் 20,000 உறுப்பினர்களை சேர்ப்பதென்றும் ஆகஸ்ட் அணிதிரட்டலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி கெடிலத்தில் கட்சிக் கிளைச் செயலாளர் கூட்டம் மாவட்டச் செயலாளர் டி.கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. பெரும்பகுதி கட்சி கிளைச் செயலாளர்களைக் கொண்ட 30 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆகஸ்ட் 11 அணிதிரட்டலில் ஆயிரத்தை நோக்கிய அணிதிரட்டலுக்கு திட்டமிடப்பட்டது. இளைஞர், மாணவர், பெண்கள் அரங்க வேலைகளை தொடங்குவதற்கும் செப் 1 அன்று கட்டுமான அரங்க மாவட்ட முன்னணிகள் கூட்டம் நடத்தி வேலைகளை துவங்குவது, நவம்பரில், ‘கடனிலிருந்து விடுதலை; வேலை இல்லா திண்டாட்டத்திலிருந்து விடுதலை’ பெருந்திரள் மாநாடு நடத்துவதென்றும் விதொச உறுப்பினர் சேர்ப்பின்போதே தூய்மைக் காவலர்களையும் அமைப்பாக்க முடிவு செய்யப்பட்டது. கட்சி உறுப்பினர் எண்ணிக்கையை இவ்வாண்டுக்குள் ஆயிரத்தை நோக்கிய வேலை செய்வதென்றும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் தோழர் பாலசுந்தரம், கடலூர் மாவட்டச் செயலாளர் சி. ராஜசங்கர் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டத்தில், பனைமரத்துப்பட்டி ஒன்றிய கமிட்டி, அம்மா பேட்டை உள்ளூர் கமிட்டிகள் கூடின. தோழர். சந்திரமோகன், மாவட்டச் செயலாளர் வேல்முருகன் கலந்து கொண்டு ஜூலை 28 அறிக்கை படித்து விவாதிக்கப்பட்டது. ஆகஸ்ட் 11 அன்று சேலத்தில் அணிதிரட்டல் செய்வதென்று முடிவெடுக்கப்பட்டது. ஆறு கிளைகளிலும் ‘ஜூலை அறிக்கை’ படித்து விவாதிக்கப்பட்டது.
மாணவர்கள், இளைஞர்களை அமைப்பாக்குவோம்!
ஆகஸ்ட் 2 அன்று இணையவழியில் இளைஞர், மாணவர் அமைப்புகளின் மாநிலக் கூட்டம் நடைபெற்றது. 12 மாவட்டங்களிலிருந்து தோழர்கள் கலந்து கொண்டனர்.
ஜந்தர் மந்தர் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நாட்டின் அரசியல் நிகழ்ச்சி நிரலையே மாற்றியுள்ளது. அரசியல் கட்சிகளும் நாடாளுமன்றமும் ஜந்தர் மந்தரைச் சுற்றியே சுழன்று வந்தன. மோடி நாள்தோறும் இளைஞர்கள், மாணவர்களை குறிவைத்து வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்தப் பின்னணியில் அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளைஞர் கழகம் அமைப்புகளை செயலூக்கப்படுத்தி மாணவர், இளைஞர் அரசியலில் செயலூக்கமாகத் தலையீடு செய்வது பற்றி விவாதிக்கப்பட்டது. அகில இந்திய மாணவர் கழகத் தேசிய தலைவர் நேகா, நாடு தழுவிய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்தப் பயணத்தின் போது, ஆகஸ்ட் 21 அன்று சென்னையில் அறுநூறு பேர் வரை கலந்து கொள்ளும் மாணவர்-இளைஞர் மாநில கருத்தரங்கம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் கல்விமுறை, ஜனநாயகம் குறித்து இக்கருத்தரங்கு நடைபெறும்.
