தலையங்கம்

மக்கள் நலன் காக்கும் அரசா? கண்காணிக்கும் அரசா?

$articleData->title

மக்கள் நலன் காக்கும் அரசா? கண்காணிக்கும் அரசா?

லஞ்சம், ஊழல் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் முழுமையான சுதந்திரம், முதன்மையானது, மேலும் போதைப் புழக்கம் இல்லாத தமிழ்நாடு, பெண்கள் பாதுகாப்பு, சமூக நீதி, வெளிப்படையான நேர்மையான நிர்வாகம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு தனது அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தனது முதல் சுதந்திர நாள் உரையில் முதல்வர் விஜய் பேசினார். பொது வாழ்வில் சமரசம் இருக்கக் கூடாது. மக்கள் நலன்தான் முக்கியமானது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில், மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்புடன் இருக்கிறோம், அதேவேளையில், மாநில உரிமைகளுக்கும் தமிழகத்திற்கும் எதிரான கொள்கை முடிவுகளை தவெக அரசு கடுமையாக எதிர்க்கும் என்றார். 


இவ்வாறு பேசிய இரண்டே நாளில் திருவொற்றியூரில்,  போதைப் பொருள் நடமாட்டத்தைத் தெரியப்படுத்தியதற்காக மாணவர் தனுஷ் முப்பது பேர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அமைச்சர் ராஜ்மோகனோ அது கோஷ்டி மோதல் என்று திசை திருப்புகிறார். போதைப் பொருள் ஒழிப்புக்காக 65 சிறப்பு அதிரடிப்படை அமைத்த பின்தான் இது நடந்துள்ளது. அமைச்சர் ஆதவ்வோ, திமுக அரசு போதைப் புழக்கத்தை கடந்த ஆண்டுகளில் கட்டுப்படுத்தாததால்தான் இது நடக்கிறது என்று பழி போட்டுத் தப்பிக்கப் பார்க்கிறார். தவெக அரசின் நூறு நாள் ஆட்சியில், முந்நூறுக்கும் மேல் படுகொலைகள். சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை வந்த பின்னரும், பாலியல் குற்றங்கள் இன்னும் அதிகரித்துள்ளன. சிங்கப் பெண்களோ, பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு, பார்த்து நடந்து கொள்வது பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். போதை, பாலியல் குற்றங்களைத் தடுக்க குற்றவாளிகளைக் கைது செய்வதில் காட்டும் அக்கறையைக் காட்டிலும் அரசின் செயல்பாட்டைக் கேள்வி கேட்பவர்களை, தங்கள் கோரிக்கைகாகப் போராடுபவர்களை, எதிர்க்கட்சியினரைக் கைது செய்வதில்தான் அதிக அக்கறை காட்டுகிறது விஜய் அரசு. மூடப்பட்டதாகச் சொல்லும் 717 மதுபானக் கடைகளின் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. மாறாக, குடியிருப்புப் பகுதியில் புதிய கடைகள் திறப்பதற்கு எதிராகப்  போராடும் மக்களை போலீஸ் அடித்து கைது செய்கிறது. 

புதுப் புது சுற்றறிக்கைகள்  விடப்படுகின்றன.குஜிலியம்பாறை வட்டாட்சியர், கம்யூனிஸ்ட்டுகளைக் கணக்கெடுக்கச் சொல்கிறார். கல்லூரிக் கல்வித்துறை கம்யூனிஸ்ட்டுகள், கரப்பான்பூச்சிக் கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு மாணவர்கள் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்புகிறது. அமைச்சரோ அதிகாரிகள் செய்துவிட்டதாகச் சொல்கிறார். இன்னொரு சுற்றறிக்கை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் கடிதம் எண் 12/A2/2026 நாள் 17.08.2026 மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் வட்டார இயக்க மேலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் அல்லது வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பது கண்டறியப்பட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்கிறது.  இவையெல்லாம் கீழுள்ள அதிகாரிகள் தலைமைச் செயலாளருக்குக் கூடத் தெரியாமல் தாங்களே செய்ய முடியுமா? தலைமைச் செயலாளர் முதல்வரிடம் சொல்லாமலா இதைச் செய்கிறார்? அப்படியென்றால் ஆட்சியை யார் நடத்துகிறார்கள். தனது அரசு மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்புடன் இருக்கும் என்று விஜய் சொன்னதன் பொருள் இதுதானா?


மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றார் விஜய். தென் முதல்வர்கள் மாநாட்டில், தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு நேர்மாறாக, மாநிலத்தின் விகிதாச்சாரம் பாதிக்காமல் சட்டரீதியான நடவடிக்கைக்கு தான் ஆதரவு அளிப்பேன் என்கிறார். இது மாநில உரிமையைப் பாதிக்கும் விசயமில்லையா? மேகதாட்டு அணை பிரச்சினையில் தான் அவமானப்பட்டாலும் பரவாயில்லை (மாநில முதல்வர் அவமானப்பட்டால் அது மாநிலத்துக்கே அவமானம்) நான் பெங்களூரு சென்று கர்நாடக முதல்வரைச் சந்திக்கப் போகிறேன் என்று சொன்ன விஜய், தமிழ்நாட்டிற்கு வந்திந்திருந்த கர்நாடக முதல்வர் சிவக்குமாரிடம் பேசினாரா? ஒன்றிய உள்துறை அமைச்சரிடம் ஒன்றிய அரசின் கடமை பற்றி பேசினாரா? அப்படிப் பேசியிருந்தால், சட்டமன்றத்தில், தமிழ்நாட்டு மக்களிடத்தில் அதை தமிழ்நாட்டு முதல்வர்  தெரிவிக்க வேண்டுமல்லவா? வெறும் மௌனம்தான் மாநில உரிமைக்கான குரல் போலும். ஆனால், அமித் ஷா வந்து போகும் வரை சிவப்பு எச்சரிக்கை விடப்படுகிறது. ஜந்தர் மந்தர் போராளி நேகாவின் கூட்டத்திற்கு யாரும் போகாமல் இருக்க சுற்றறிக்கை போடப்படுகிறது.


தமிழக மக்கள் நலனே முதன்மையானது என்ற விஜய் ஆட்சியில், சென்னை மாநகரப் பேருந்துகளில் தொழிலாளரை பணியமர்த்த, உத்தரப் பிரதேச தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்படுகிறது. அந்த நிறுவனம் தமிழர்களைத் தான் வேலைக்கமர்த்துமா? இது தற்காலிக நியமனம்தான் என்கிறார் அமைச்சர் ஒருவர். ஏதோ, அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல், 5 ஆண்டுகள் பணி செய்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்துவிட்டதுபோல. பணி நிரந்தம் கேட்டு டாஸ்மாக் தொழிலாளர்களும், தூய்மைப் பணியாளர்களும் நாள்தோறும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சந்தித்துப் பேசக் கூட விஜய் அவர்களுக்கு விருப்பமில்லை. நாங்கள் மக்கள் பணி செய்யவே வந்துள்ளோம் என்றவர்கள் கார் வேண்டும் என்கிறார்கள். நூறு கோடி சம்பளத்தை விட்டுவிட்டு வந்தவர் அரசாங்கப் பணத்தில் அள்ளிக் கொடுக்கப் போகிறாராம். சத்தமில்லாமல் சர்க்கரை விலையை உயர்த்திவிட்டார்கள். அரிசி விலையும் உயர்கிறது. நூறு நாளில் என்ன மாற்றம் செய்துவிட முடியும் என்று அறநிலையத் துறை அமைச்சர் கேட்கிறார். அப்படியென்றால் மக்களுக்கு மக்களுக்கு எதிரானவற்றை, அடக்குமுறையை மட்டும் உங்களால் எப்படிச் செய்ய முடிகிறது? அதனால்தான் கேட்கிறார்கள் இது மக்கள் நலன் காக்க வந்த அரசா என்று?




31 August, 2026