இந்தியாவின் மாபெரும் சமூகப் புரட்சியாளர்களில் ஒருவரான ஜோதிபா பூலேவின் இருநூறாவது பிறந்தநாளுக்கு இன்னும் ஓராண்டே உள்ளது. பல நூற்றாண்டுகளாக அறிவைத் தங்கள் ஏகபோக உரிமையாக்கி, அதிகாரமும் சலுகைகளும் பெற்றவர்களே, பல நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு சமூகத்தில், சாதியப் படிநிலையையும் ஆணாதிக்கத்தையும் தகர்க்க கல்வியை ஆயுதமாக்கும் ஒரு முன்னெடுப்பைக் கற்பனை செய்து பாருங்கள். பொய்களும் மதவெறியும் கொண்ட மூடத்தன ஆட்சியை எதிர்கொள்ள, உண்மையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக அமைப்பிற்கான தொலைநோக்குப் பார்வையை கற்பனை செய்து பாருங்கள். கடனில் தவிக்கும் லட்சக்கணக்கான ஏழை விவசாயிகளின் துயரத்தை முடிவுக்கு கொண்டுவர, மக்கள் நல அரசால் விவசாயிகளின் உரிமைகள் உறுதி செய்யப்பட்ட, அறிவியல் பூர்வமான நவீன வேளாண்மைக்கான ஒரு தேடலை கற்பனை செய்து பாருங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியா, ஜோதிராவ் பூலேவிடம் இந்தத் தீவிர சிந்தனையின் மலர்ச்சியைக் கண்டது; நிலப்பிரபுத்துவ, காலனித்துவப் பின்னணியில் இது ஒரு சமூகப் புரட்சியின் தொடக்கத்திற்குச் சற்றும் சளைத்ததல்ல.
தனது இருபத்தியொன்றாவது வயதில், ஜோதிராவ் பூலேவும் அவரது மனைவி சாவித்ரிபாயும் நண்பர்களான பாத்திமா, உஸ்மான் ஷேக் ஆகியோரது உதவியுடன் சூத்திர, ஆதிசூத்திர சிறுமிகளுக்கான இந்தியாவின் முதல் பள்ளியை 1848 இல் பூனாவில் நிறுவினர். அதைத் தொடர்ந்து 1851-ஆம் ஆண்டு அனைத்து சாதியைச் சேர்ந்த சிறுமிகளுக்கான மற்றொரு பள்ளியும் 1855-ஆம் ஆண்டு வேலைசெய்யும் மக்களுக்கான ஒரு இரவுப் பள்ளியும் தொடங்கப்பட்டன. இதை சரியான கண்ணோட்டத்தில் பார்த்தோமானால், முதலாளித்துவச் சுரண்டல், காலனி ஆதிக்கக் கொடுமைகள் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்கான உலகளாவிய எழுச்சிக்கு வித்திட்ட, 'கம்யூனிஸ்ட் அறிக்கை' முதன்முதலில் வெளியான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டு தான் 1848. அதன் பிறகு சிறிது காலத்திலேயே, 1857-இல், இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகள் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தன; இது இந்தியாவின் முதல் சுதந்திரப் போராக அமைந்தது.
1850-களில் இந்தியாவில் கல்விக்காக நடந்த போராட்டம் என்பது வெறும் எழுத்தறிவின்மைக்கு எதிரானதொரு போர் மட்டுமல்ல. பொதுவாகப் பெண்களும், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களும் முறையான கல்வி பெறுவதைத் தடை செய்த சமூக அமைப்புக்கு எதிரான ஒரு நேரடி சவாலாக அது அமைந்தது. ஆகவே இதுவொரு சமூக எழுச்சியின் தொடக்கமாகும். அத்தகையதொரு சமூக எழுச்சி இல்லாமல், காலனி ஆதிக்க இந்தியாவில் உண்மையான அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்க முடியாது. அந்தப் பெரும் சமூக எழுச்சியின் தொடக்கமாகவே இந்தப் போராட்டம் விளங்கியது. வங்கத்தில் வித்யாசாகரைப் போலவே, மகாராஷ்டிராவில் பூலேவும் விதவை மறுமணத்திற்கான ஒரு மாபெரும் போராளியாகத் திகழ்ந்தார். விதவைகளுக்கு வலுக்கட்டாயமாக மொட்டையடிக்கப்படும் கொடுமையை எதிர்ப்பதற்காக, முடிதிருத்துவோரின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றையும் கூட அவர் ஒருங்கிணைத்தார். 'தீண்டத்தகாதவர்கள்' என்று முத்திரை குத்தப்பட்ட மக்கள் குடிநீர் அருந்துவதற்காக, 1868-ஆம் ஆண்டு தமது சொந்த வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியை பூலே திறந்துவிட்டார். பொது வளமான நீரின் மீது அனைவருக்குமான சம உரிமையைக் கோரி, அண்ணல் அம்பேத்கர் 'மகத் சத்தியாகிரகத்தை' முன்னெடுப்பதற்கு ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன்பே இது நிகழ்ந்தது.
இந்தியாவின் சாதிக் கட்டமைப்புக்கு எதிராக 1873-ஆம் ஆண்டு ஜோதிராவ் பூலே தனது மிக முக்கியப் படைப்பான ‘குலாம்கிரி’ (அடிமைத்தனம்) என்ற நூலை வெளியிட்டார். மேலும், அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒழிக்க நடந்த உள்நாட்டுப் போருக்கு அந்தப் புத்தகத்தை அர்ப்பணித்தார். அதே ஆண்டில், அவரும் அவரது மனைவி சாவித்ரிபாய் பூலேவும் இணைந்து, சாதிப் படிநிலைகளைத் தகர்த்தெறியவும் பெண்கள், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களின் கல்வியை ஊக்குவிக்கவும் உண்மையை தேடுவோர் சங்கம் ('சத்யசோதக் சமாஜ்') என்ற அமைப்பை நிறுவினர். தனது சொந்தக் கருத்துகளுக்காக, பழமைவாதத் தரப்பிலிருந்து வந்த தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்த போதிலும் சமூக களங்கத்திற்கும் அவதூறுகளுக்கும் ஆளான மற்ற அறிஞர்களுக்கும் சீர்திருத்தவாதிகளுக்கும் ஆதரவாகவே எப்போதும் பூலே துணை நின்றார். தாராபாய் ஷிண்டேயின் பெண்ணிய எழுத்துக்களுக்காக அவரைப் பாதுகாப்பதானாலும் சரி, அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதற்காகக் கடும் விமர்சனங்களை சந்தித்த பண்டித ரமாபாய்க்கு ஆதரவளிப்பதானாலும் சரி, அவர் எப்போதும் அவர்களுக்காகவே குரல் கொடுத்தார்.
அம்பேத்கர் சாதியை தேச விரோதமானது என்று அடையாளம் கண்டு சாதி ஒழிப்பிற்கு அழைப்பு விடுப்பதற்குப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே, "மகாபலி மன்னனின் தேசத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் - அதாவது சூத்திரர்கள், ஆதிசூத்திரர்கள், பில்கள் (பழங்குடியினர்), மீனவர்கள் போன்றோர் உண்மையாகக் கல்வி பெற்று, தங்களுக்குத் தாங்களே சுதந்திரமாக சிந்திக்க முடிகிற வரையிலும், சீராக ஒன்றிணைந்து உணர்வுபூர்வமாக ஒருங்கிணைக்கப்படும் வரையிலும், இங்கு பெயரளவிற்குக் கூட ஒரு 'தேசம்' உருவாக முடியாது" என பூலே உறுதிப்படுத்தினார். நிச்சயமாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பூலேவால் முன்வைக்கப்பட்ட தேசியவாதம் குறித்த இந்தப் பெரும்பான்மை மக்கள் ('பகுஜன்') தொலைநோக்குப் பார்வை, இருபதாம் நூற்றாண்டின் தொடக்க பத்தாண்டுகளில் சாவர்க்கர் போன்றவர்களால் பரப்பப்பட்ட மதம் சார்ந்த இந்துத்துவ தேசியவாதத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாகும். எனவே, இன்று அதிகாரத்தில் இருக்கும் சாவர்க்கரின் வாரிசுகள், பூலேவை வெறும் ஒரு 'சமூகச் சீர்திருத்தவாதியாக' சுருக்கி, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒரு அடையாளச் சின்னமாக மட்டும் மாற்றி அவரை அபகரிக்கத் துடிப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
பூலே அமைத்துத் தந்த பாதை, இந்தியாவின் விடுதலைப் பயணத்தை, குறிப்பாகச் சாதிய ஒடுக்குமுறை, மூடத்தன கோட்பாடுகளில் இருந்து விடுதலை பெறும் பாதையைத் தொடர்ந்து ஒளிரச் செய்தது. 1890-ஆம் ஆண்டில் பூலே மறைந்து சரியாக ஓராண்டுக்குப் பிறகு பிறந்த அண்ணல் அம்பேத்கர், சாதிய பாகுபாடு, சமூக அநீதிக்கு எதிரான தனது இடைவிடாத போராட்டத்தின் வாயிலாகவும், பெண்களின் கல்வி, அதிகாரம் பெறுதல் மீதான தனது ஒருமித்த கவனத்தின் மூலமாகவும், பூலேவின் அந்த மரபை தனதாக்கி, தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அடிப்படை விழுமியங்களையும் மனிதநேயம், பகுத்தறிவு எனும் தொலைநோக்குப் பார்வையையும் நிலைநாட்டுவதற்கான தனது இலட்சியப் பயணத்தில் புத்தர், கபீர், பூலே ஆகியோர் தனக்கு ஊக்கமளித்த மூன்று மாபெரும் ஆசான்கள் என அம்பேத்கர் அங்கீகரித்தார். பூலேவின் இருநூறாவது பிறந்தநாள் ஆண்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க மகத் சத்தியாகிரகம் (20 மார்ச் 1927), சமூக அடிமைத்தனத்தின் சட்டமான மனுஸ்மிருதியை பொதுவெளியில் தீயிட்டு எரித்த நிகழ்வு (25 டிசம்பர் 1927) ஆகியவற்றின் நூற்றாண்டாகவும் அமைவது மிகவும் பொருத்தமானதொரு வரலாற்று நிகழ்வாகும்.
இன்று பூலேவையும் அம்பேத்கரையும் நினைவுகூர்வது, வெறுமனே இந்திய வரலாற்றின் எழுச்சியூட்டும் அத்தியாயங்களை நினைவுகூருவதாக மட்டுமல்ல; இன்றைய இந்தியாவில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்திற்கான போராட்டத்திற்குப் புத்துயிரளிக்க, பூலே - அம்பேத்கர் மரபின் புரட்சிகரமான உணர்வை மீண்டும் சுடர்விட்டெரியச் செய்வதாகும். பூலே, அம்பேத்கரால் பகுத்தறிவு, சமூக மேம்பாட்டிற்கான ஓர் அடிப்படைக் கருவியாகப் பார்க்கப்பட்ட கல்வி, இன்று பணக்காரர்களின், சலுகை பெற்றவர்களின் ஏகபோக உரிமையாக மீண்டும் காலனித்துவப்படுத்தப்பட்டு வருகிறது; அத்துடன், கருத்தியல் மூளைச்சலவை, ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பு, அரசியல் ஆதிக்கம் ஆகியவற்றுக்கான ஒரு கருவியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாகுபாடற்ற கல்வி வளாகங்கள் அமைய வேண்டும் என்ற கோரிக்கையானது, தங்களை நிரந்தரமாகப் பாதிக்கப்பட்டவர்களாகக் காட்டிக்கொள்ளும் மனநிலைக்கு அடிமையாகிவிட்டதாகக் கேலி செய்யப்படுகிறது. இந்தியாவின் விவசாயிகள், உழைக்கும் மக்களின் உரிமைகளையும் நலன்களையும் உறுதி செய்யும் மக்கள்நல அரசு என்ற பூலே - அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வை, அனைத்து வளங்களையும் மிகச் சிலரின் கைகளில் மட்டுமே குவிக்கும் ஒரு கார்ப்பரேட் அரசால் காலில் போட்டு நசுக்கப்படுகிறது.
சமத்துவத்தின் அரசமைப்புச் சட்ட அடையாளமாக ஒவ்வொரு குடிமகனுக்கும் உறுதி செய்யப்பட்ட வயதுவந்தோர் வாக்குரிமை என்பது இன்று அனைவருக்குமான ஒரு அடிப்படை உரிமையாக இல்லை; திட்டமிட்ட வாக்குரிமைப் பறிப்பிற்கும் முற்றிலும் நிச்சயமற்ற ஒரு வாழ்க்கைக்கும் இலட்சக்கணக்கான மக்கள் ஆளாக்கப்படுகின்றனர். மேலும், சாதி, பாலினம், மதத்தின் அடிப்படையிலான எந்தவொரு பிரிவினைக்கும் பாகுபாட்டிற்கும் இடமளிக்காமல், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தின் அடிப்படையில் பூலே-அம்பேத்கரால் முன்வைக்கப்பட்ட இந்திய தேசிய அடையாளம், இன்று பார்ப்பனிய இந்து மேலாதிக்கம், கலாச்சாரப் பெரும்பான்மைவாதத்தின் அடிப்படையில் திட்டமிட்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டு வருகிறது. பூலேவின் இருநூறாவது பிறந்தநாளையும் மகத் சத்தியாகிரகம், மனுஸ்மிருதி எரிப்பு ஆகியவற்றின் நூற்றாண்டு நிகழ்வுகளையும் கடைப்பிடிக்கும் இத்தருணம், அச்சம், வெறுப்பு, மூடத்தனம் மலிந்த பாசிச ஆட்சிக்கு எதிராக, துணிச்சல், கல்வி, பகுத்தறிவு எனும் பூலே - அம்பேத்கர் மூட்டிய நெருப்பைச் சுடர் விட்டெரியச் செய்வதற்கான ஒரு வாய்ப்பாக அமைய வேண்டும்.
தமிழாக்கம்: விஜி
குறிப்பு: மகத் சத்யாகிரகம்
பம்பாய் மாநிலம் - இப்போது மகாராட்டிரம் மாநிலம் - ராயகடா மாவட்டத்தின் மகத் நகராட்சி பொதுக் குளத்தில் தீண்டத்தகாதோர்-தலித்துகள்- தண்ணீர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து ஆயிரக்கணக்கான தீண்டத்தகாதோருடன் தலைமையேற்று டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஊர்வலமாகச் சென்று முதலில் தண்ணீர் அருந்தினார். அதைத் தொடர்ந்து தீண்டத்தகாதோர் அனைவரும் தண்ணீர் அருந்தினர். இந்த நிகழ்வே மகத் சத்யாகிரகம் என்ற வரலாற்று நிகழ்வாக மாறியது. கோபம் கொண்ட சாதி இந்துக்கள் அந்த குளத்தில் மாட்டு சிறுநீர், சாணத்தை தெளித்து தீட்டுக் கழித்தனர். 1937 ல் மும்பை உயர்நீதிமன்றம், தலித்துகள் அந்த பொதுக் குளத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியது.
