நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டத்திற்கும் பாசிசத்தை தடுத்து நிறுத்துவதற்கும் இடையிலான தொடர்பு

[ 2025 டிசம்பர் 6 – 7 தேதிகளில் ஆந்திரா மாநிலம், கடப்பாவில் நடைபெற்ற சிபிஐ (எம்எல்) லிபரேஷன் கட்சியின் 9-வது மாநில மாநாட்டில், பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் ஆற்றிய துவக்க உரையின் சுருக்கப்பட்ட வடிவம் ]

$articleData->title

[ 2025 டிசம்பர் 6 – 7 தேதிகளில் ஆந்திரா மாநிலம், கடப்பாவில் நடைபெற்ற சிபிஐ (எம்எல்) லிபரேஷன் கட்சியின் 9-வது மாநில மாநாட்டில், பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் ஆற்றிய துவக்க உரையின் சுருக்கப்பட்ட வடிவம் ]

பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசம் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு, தனித்துவமான பகுதி. 1980-களில் நக்சல்பாரிக்குப் பிறகு நமது கட்சி புத்துயிர் பெற்றபோது, பல தலைவர்கள் ஆந்திராவிலிருந்து வந்தனர். ஆந்திர பிரதேசம்- ஒடிசா எல்லையில், தோழர் நாகபூஷண் அவர்களின் பாரம்பரியத்தை நாம் வரித்துக்கொண்டிருக்கிறோம். 1980களில் நமது கட்சியை பீகாரில் பெரிய அளவில் புத்துருவாக்கம் செய்த போது, ஆந்திர பிரதேசத்தில் சிபிஐ(எம்எல்) மக்கள் யுத்தம் என்றும் பீகாரில் சிபிஐ(எம்எல்) லிபரேஷன் என்றும் பொதுவான கண்ணோட்டம் இருந்தது. இப்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இறுதியில், சிபிஐ (மாவோயிஸ்ட்) என மாறிக்கொண்ட சிபிஐ(எம்எல்) மக்கள் யுத்தம் இதுவரை இல்லாத ஒரு பெரிய நெருக்கடியான கட்டத்தை அடைந்துள்ளது.

பலரும் நம்மை மாவோயிஸ்டுகளிடமிருந்து தவறுதலாக வேறுபடுத்தி பார்க்கிறார்கள். நாம் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டதாகவும்,  மாவோயிஸ்டுகள் அதை தொடர்வதாகவும் கூறி வருகிறார்கள். இது மிகவும் மேலோட்டமான பார்வை. நாம் பல ஆண்டு காலமாக நமது அமைப்பு வடிவங்களில், போராட்ட வடிவங்களில், வேலை முறைகளில் நிச்சயமாக நிறைய மாற்றங்களைச்  செய்திருக்கிறோம். நாம் என்னவெல்லாம் செய்தோமோ அவையெல்லாம் நாம் சுதந்திரமாக முடிவெடுத்து செய்தவை. இந்திய அரசுடன் எவ்வித ஒப்பந்தத்தையும் நாம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இந்திய அரசும் நாம் என்ன செய்ய வேண்டும் என நமக்கு கட்டளையிடவில்லை. 

நமது சொந்த அறிவின் அடிப்படையில், இந்திய சமூகம் பற்றிய, இந்தியச் சூழல் குறித்த நமது சொந்த புரிதலில் இருந்து,  நம்முடைய சொந்த வலிமைலிருந்து எடுக்கப்பட்ட முடிவுகளாகும். அந்த முடிவுகளே, போராட்ட வழிமுறைகளின் மாற்றங்களுக்கும் நமது முன் முயற்சிகளின் பல்வகைப்படுத்துதலுக்கும் சீராக நம்மை வழி நடத்தின. எதையெல்லாம் நாம் செய்தோமோ அவையெல்லாம் ஒரு சுதந்திரமான கம்யூனிஸ்ட் கட்சியாக நாம் செய்தோம். ஆனால், மாவோயிஸ்டுகள் இப்பொழுது அரசின் சலுகைகளைச் சார்ந்து நிற்கிறார்கள். அவர்களின் போர் நிறுத்த அறிவிப்பை அரசு ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது. இப்போது பல்வேறு மாவோயிஸ்ட் தலைவர்கள் சரணடைந்து வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் அடிப்படையில் அரசின் மொழியில்  பேசி வருகிறார்கள். அவர்களில் சிலர் வெளிப்படையாகவே பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருவது மிகவும் கெடுவாய்ப்பானது. ஆகவே முக்கியமான கேள்வி, என்ன வகையான போராட்டம் என்பதல்ல, மாறாக, கம்யூனிஸ்ட் கட்சியின் சுதந்திரம் என்பதாகும். 

இரண்டாவது, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டம்தான் கட்சியின் இணைப்புக் கண்ணியாகும். இப்போதும் இந்தியா பரந்த கிராமப்புரப் பகுதியை, பரந்த விவசாய பகுதியைக் கொண்டதாகும். நமது  முக்கிய அடித்தளமான கிராமப்புர, ஒடுக்கப்பட்ட வறிய மக்கள், நிலமற்றவர்கள், விளிம்பு நிலை விவசாயிகளின் அறுதியிடல் தான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கிய செயல்பாட்டுத் தளமாகும். இதைத்தான் நாம் பீகாரில் செய்தோம். ஆந்திர பிரதேசம், தமிழ்நாட்டின் பகுதிகள் உட்பட பல பகுதிகளில் செய்திருக்கிறோம். எங்கெல்லாம், என்னவெல்லாம் வேலைப் பகுதிகள் என்று நமக்கு இருக்கிறதோ, அந்தப் பகுதிகளெல்லாம் அடிப்படையில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களின், நிலத்துக்கான போராட்டங்களின் வாயிலாக வளர்த்தெடுக்கப்பட்டவை ஆகும். அதுதான் நமது கட்சியின் முக்கிய பலத்துக்கான மூலமாகும். சில போராட்டப் பகுதிகள், சில உள்ளூர் வேலைப் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு ஓர் அகில இந்திய கட்சியை நாம் கட்டி எழுப்பினோம் என்பதுதான் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்தப் போராட்டங்களின் பிரதிபலிப்பு வெறும் உள்ளூர் விவகாரமாக இருந்ததில்லை. எத்தனை ஏக்கர் நிலங்களைக் கைப்பற்றினோம் என்பதோ, எத்தனை பேருக்குப் பிரித்துக் கொடுத்தோம் என்பதோ ஒரு விசயம் அல்ல. நிலப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு உள்ளூர் மட்டத்தில் வேலைப்பகுதிகளை, நீடித்த செல்வாக்கை உருவாக்கி இருக்கிறோம். அதை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள், இளைஞர்கள், கலாச்சார அரங்கு, மாநில அரசு ஊழியர்கள், இரயில்வே, அமைப்பாக்கப்பட்ட துறை தொழிலாளர், அமைப்புச்சாரா தொழிலாளர், பெண்கள், பழங்குடி மக்கள், சுயாட்சி கோரிக்கை  இயக்கங்கள், இன்ன பிற அரங்கங்கள் ஆகியவற்றில் பணியாற்றக்கூடிய ஓர் அகில இந்திய கட்சியை கட்டி இருக்கிறோம். அதுதான் சிபிஅய்(எம்எல்) ன் வெற்றிக்கதை. தத்துவத்தையும் நடைமுறையையும், உள்ளூரையும், தேசிய அளவிலானதையும், நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் இணைப்பது என்பதுதான் நமது வெற்றிக் கதை. நமது தத்துவப் புரிதலை மேம்படுத்துகிறோம். தத்துவத்தையும் நடைமுறையையும் இணைப்பது, உள்ளூர் மட்ட போராட்டங்களை வளர்த்தெடுப்பது, மேம்படுத்துவது, அந்த உள்ளூர் மட்ட போராட்டத்தை தேசிய கண்ணோட்டத்தோடு, தேசிய அளவிலான முன்முயற்சியுடன் இணைப்பது ஆகியவை தான் சிபிஐ (எம் எல்) கட்சியின் புத்துருவாக்கத்திற்கான திறவுகோல் ஆகும்.

இன்று நாம் பாசிசத்தை பற்றி பேசும்போது, நம்முடைய நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டமே இன்று பாசிசத்தை தடுத்து நிறுத்துவதற்கான போராட்டமாக வளர்ந்துள்ளது. அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக தோற்கடிக்கப்பட்ட, பின்னுக்குத் தள்ளப்பட்ட நிலப்பிரபுத்துவ சக்திகள் இன்றைய பாசிச காலகட்டத்தில் மீண்டு வர முயற்சிக்கின்றன. புல்டோசர்கள் வீடுகளை இடிப்பதைப் பார்க்கிறோம் இந்த புல்டோசர் நடவடிக்கைக்கு பின்னே உள்ளூர்  நிலப்பிரபுத்துவ சக்திகள் இருக்கின்றன. அந்த நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு நிலம் வேண்டும், வறிய மக்களை அப்புறப்படுத்த வேண்டும், எனவே தான் அவர்கள் புல்டோசர்களை ஏவி விடுகிறார்கள். உள்ளூரிலே தோல்வியை சந்தித்த, ஓரடி பின்னால் செல்லும் அளவிற்கு அடி வாங்கிய நிலப்பிரபுத்துவ சக்திகள், இன்று இரண்டடி முன்னால் வர முயற்சிக்கிறார்கள். அவர்கள், பாசிசத்தின் உதவியுடன் மீண்டும் அதிகாரத்திற்கு வர முயற்சிக்கின்றனர்.

பாசிஸ்டுகள் யார்? ஒன்று அதே நிலப்பிரபுத்துவ சக்திகள் மற்றொன்று அனைத்து வகையான பெரும் தொழில் நிறுவனங்கள், கார்ப்பரேட் குழுமங்கள். அவர்கள் எவ்வித சட்ட ரீதியான கட்டுப்பாட்டையும் விரும்புவதில்லை. அவர்களுக்கு எல்லாமும் வேண்டும். அவர்களுக்கு மாவோயிஸ்டுகள் இல்லாத சட்டீஸ்கர் வேண்டும். ஒவ்வொரு வனமும் வேண்டும், காடும் வேண்டும். அதானிக்கு எல்லாம் வேண்டும். எல்லா ஆற்றல்களும் வேண்டும்; நிலக்கரி, அனல் மின்சாரம், காற்றாலை, சூரிய சக்தி மின்சாரம் அதோடு இப்போது அணு மின் நிறுவனங்களும் வேண்டும். இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்தியாவில் அணுமின் நிலையங்களை தனியாருக்கு கொடுக்கும் மசோதா கொண்டுவரப்பட உள்ளது. ஆகையால் அவர்களுக்கு இது போன்ற ஒரு பாசிச அரசு தேவையாக இருக்கிறது. அரசமைப்புச் சட்டம் இல்லாத, எந்த விதிகளும் இல்லாத, மக்களுக்கு எந்த உரிமையும் இல்லாத ஒரு பாசிச அரசாங்கம் தேவையாக உள்ளது. இது போன்ற சக்திகளுக்கு எதிராக காலமெல்லாம் நாம் போராடி வருகிறோம். நிலப்பிரபுத்துவ சக்திகளுக்கு எதிராக, முதலாளிகளுக்கு எதிராக, தனியார் நிறுவனங்களுக்கு எதிராக, இந்திய அரசுக்கு எதிராக நாம் போராடி வந்திருக்கிறோம். ஆனால், இன்றைய காலகட்டம் என்பது பெரும் ஒடுக்குமுறையுடன் கூடிய வேறு மட்டத்திலான கலவையானது. இது பழைய நிலப்பிரபுத்துவ சக்திகள், எவ்வித கட்டுப்பாடும் இல்லாத கார்ப்பரேட் துறை, அமெரிக்காவின், இஸ்ரேலின், ஏகாதிபத்தியத்தின் ஆசி பெற்ற இந்திய முதலாளித்துவம் ஆகியவற்றுடன் அனைத்து ஜனநாயக வகைப்பட்ட பாசாங்குகளையும் கழற்றி போட்டு விட்ட இந்திய அரசு என்பதாக இருக்கிறது. எஞ்சி இருந்த அரசமைப்புச் சட்ட, நாடாளுமன்ற முகமூடிகளையும் கழற்றி எறிந்து விட்டு இந்தப் பாசிச ஆட்சி அதிகாரம் என்பது தன்னைத் தானே அம்பலப்படுத்திக் கொண்டு நிற்கிறது. அரசு பாசிசமாக மாறிவிட்டது என்று இதுவரை நாம் சொல்லவில்லை. ஒட்டுமொத்தமாக அனைத்தையும் அது எடுத்துக் கொள்ளும் போது அரசு என்பதின் குணாம்சமும் கூட மாற்றமடையும். இப்போதுள்ள நிலையில் பாசிச சக்திகள் அரசை கையகப்படுத்தவும், மறுகட்டமைப்புச் செய்யவும் முயன்று வருகிறார்கள். ஆகவே நமது நிலப்பரபுத்துவ எதிர்ப்புப் போராட்டம், முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டம்தான் இப்போது பாசிச எதிர்ப்புப் போராட்டமாக மாறி இருக்கிறது.

பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை வலுப்படுத்துவதற்காகத்தான், நாம், நமது சொந்தக் கட்சியை வலுப்படுத்த முயற்சிக்கிறோம். அதே வேளையில் பல்வேறு வகைப்பட்ட அய்க்கிய முன்னணி பரிசோதனைகளை வளர்த்தெடுக்கவும் முயற்சிக்கிறோம். விவசாய இயக்கத்தில், சம்யுக்த் கிசான் மோர்ச்சா என்பது ஒரு அய்க்கிய முன்னணி வடிவம். அது பல விவசாய அமைப்புகளின் ஒன்றுபட்ட வடிவம். தொழிற்சங்க அரங்கில், தொழிலாளரின் பல்வேறு பிரச்சனைகளுக்கும், தொழிலாளர் சட்ட தொகுப்புகளுக்கு எதிராகவும் போராடக்கூடிய அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் மேடை என்ற அமைப்பு உள்ளது. நாம் இந்தியா என்ற கூட்டணியிலும் உள்ளோம் அது (தேர்தலில்) இடங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு ஏற்பாடு. அய்க்கிய முன்னணி என்பது பல்வேறு மாநிலங்களில் பல்வகைப்பட்டதாகக் கூட இருக்கலாம். பீகாரில் காங்கிரஸ் மற்றும் ஆர் ஜே டி கட்சிகளுடன் நாம் தொகுதிப் பங்கீடு புரிதலை கொண்டுள்ளோம். மேற்கு வங்கத்தில் அதுபோல் சி பி ஐ (எம்) கட்சியுடன் திட்டமிட்டுள்ளோம். அப்படி என்று சொன்னால், சில நாட்களுக்கு முன்னர் வரை நாம் எதிர்த்து வந்த பல்வேறு கட்சிகளுடன் நாம் கைகோர்க்க வேண்டிய நிலை உள்ளது. எந்த ஒரு அய்க்கிய முன்னணியில் நீங்கள் இருந்தாலும் இது நடக்கும். கருத்தியல் ரீதியாக, அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்து கொண்ட பல்வேறு கட்சிகளுடன் நாம் இணையும் நிர்ப்பந்தம் உருவாகி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சிபிஎம் அதிகாரத்தில் இருக்கும்போது, பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள் அதிகாரத்தில் இருக்கும்போது, அதேபோல் காங்கிரஸை எடுத்துக் கொண்டால்  இந்தியா நெடுக நாம் அவர்களை எதிர்க்க வேண்டியிருந்தது. ஆனால், இப்போது பாசிசத்துக்கு எதிராக ஒரு சக்தி வாய்ந்த அய்க்கிய முன்னணி தேவைப்படுகிறது. மிகப்பெரிய, மிகவும் சக்தி வாய்ந்த எதிர்ப்பு அணி தேவை. நாம் மட்டுமே அப்பணியை செய்ய முடியாது. அனைத்து வகைப்பட்ட சக்திகளுடனும் நாம் கரம் கோர்த்தாக வேண்டும்.

மற்ற கட்சிகளோடு கரம் கோர்ப்பது என்பது ஒற்றுமை மற்றும் போராட்டத்தை அர்த்தப்படுத்துகிறது. சில பிரச்சினைகளில் நாம் ஒன்றுபட்டு இருப்போம். பாசிச எதிர்ப்பு என்ற நோக்கத்திற்காக நாம் ஒன்றுபட்டு இருப்போம். நமக்கு நமது சொந்த திட்டம் இருக்கிறது. எந்த அளவுக்கு உடன்படலாம், எந்த நேரத்தில் உடன்படலாம், எந்த நேரத்தில் உடன்படாமல் இருக்கலாம், எப்போது சிலவற்றை விட்டுத்தர வேண்டும், எப்போது நாம் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் நாம் அறிந்திருக்க வேண்டும். நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல கட்சி எப்போதுமே சுதந்திரமாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட காலகட்டத்திலான இத்தகைய பரந்த ஒற்றுமை, நமது சுதந்திரமான கட்சியினுடைய சுதந்திரமான கொள்கையே. அந்தப் பரந்த ஒற்றுமைக்காக நிச்சயமாக பல்வேறு சரிகட்டுதல்களை நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. குறைந்த இடங்களில் போட்டி போட வேண்டியுள்ளது, நாம் போட்டி போடாத இடங்களில் ஆதரிக்க வேண்டி உள்ளது. இதுவும் கட்சியினுடைய சுதந்திரமான முடிவுதான். இந்தியாவில் பாசிச அச்சுறுத்தலின் தீவிரத்தை கட்சி அங்கீகரிக்கிறது. அதனால்தான், ஒரு பரந்த ஒற்றுமையை நாம் கட்ட முயற்சிக்கிறோம். அப்படி சொல்லும் போது, நாம் மற்ற சக்திகளைச் சார்ந்து இருக்கிறோம் என்பது பொருள் அல்ல. எல்லா இடங்களிலும், எல்லா வழிகளிலும் கட்சி வலுப்பெற வேண்டும். ஏன் என்று சொன்னால், ஒரு வலுக்குறைந்த கம்யூனிஸ்ட் கட்சியால் ஒரு வலுவான பாசிச எதிர்ப்பு முன்னணியை கொண்டிருக்க முடியாது. பாசிச எதிர்ப்பு முன்னணியில் கூட கம்யூனிஸ்டுகள் கருத்தியல் தலைவர்களாக, அரசியல் தலைவர்களாக, வலுவான அமைப்பு சக்தியாக எழுந்து வர வேண்டும். 

எங்கெல்லாம் ஒடுக்குமுறை உள்ளதோ அங்கெல்லாம் எதிர்ப்பும் இருக்கும் என்பதை ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி என்ற வகையில் எப்போதுமே நம்பிக்கை கொண்டிருக்கிறோம். ஒடுக்கப்பட்ட மக்கள் எப்போதுமே திரும்பிப் போராடுவார்கள். அது போல, தோழர் சாரு மஜூம்தாரின் கடைசி வார்த்தைகளான ‘மக்கள் நலனே கட்சியின் நலன்’ என்பதிலும் நாம் எப்போதுமே நம்பிக்கை கொண்டிருக்கிறோம். 

…யாரெல்லாம் குறி வைத்து தாக்கப்படுகிறார்களோ, துன்புறுத்தப்படுகிறார்களோ அவர்கள் பக்கம் நிற்போம். முஸ்லிம்கள் ஒரு சமூகமாக விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுபவர்களாக இருக்கும்போது நாம் அவர்கள் பக்கம் நிற்போம். இன்று டிசம்பர் 6, பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள். நாடு முழுவதும் இன்று புல்டோசர் ராஜ்ஜியத்தை எதிர்கொண்டு வருகிறது என்று சொன்னால் அது அந்த ஒரு மசூதி தகர்க்கப்பட்டதன் விளைவுதான். மக்களுடைய வீடுகள், கடைகள், குடியிருப்புகள் எல்லா இடங்களிலும் தகர்க்கப்படுகின்றன. பாபர் மசூதி என்பது வெறும் முஸ்லிம்கள் பிரச்சனை அல்ல. தகர்ப்பு என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான, கலாச்சாரத்தின் மீதான, சிறுபான்மை சமூகத்தின் மீதான தாக்குதலாகும். அதுபோன்ற தாக்குதலை இன்று பல பிரிவு மக்களும் எதிர்கொண்டு வருகிறார்கள். அதுபோல இன்று மணிப்பூரிலும் அல்லது காஷ்மீரிலும் நடந்து வருகிறது. ஆகவே தாக்குதல்கள் அந்த சில மாநிலங்களுக்குள் மட்டும் நின்று விடுவதில்லை. எல்லா இடங்களிலும் பற்றிப் பரவி வருகிறது. எல்லா மாநிலங்களும் கூட்டாட்சி முறை மீதான தாக்குதலையோ அல்லது அதுபோன்ற பிரச்சனைகளையோ சந்தித்து வருகின்றன. பாசிசத்தால் குறி வைக்கப்படும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்காகவும் நாம் நிற்க வேண்டும். அது மத அடிப்படையிலானதாக இருக்கலாம், சாதி அடிப்படையிலானதாக - தலித்துகளாக, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக - இருக்கலாம், பாலின அடிப்படையிலானதாக - பெண்களாக இருக்கலாம், மொழி சிறுபான்மையினராக இருக்கலாம், இந்தி பிரதேசத்திற்கு வெளியில் உள்ள அனைத்து தென்னிந்திய மாநிலங்களாகவும் இருக்கலாம். எல்லா வகைப்பட்ட சிறுபான்மையினர்கள், எல்லா இடங்களிலுமே சிறுபான்மையினராக இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளராக இருக்கலாம், புலம் பெயர்ந்து எங்கெல்லாம் செல்கிறார்களோ அந்த மாநிலத்தில் அவர்கள் சிறுபான்மையினர், அவர்கள் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும் தொழிலாளர் வர்க்க சிறுபான்மையினர். ஆகவே, நாம் சிறுபான்மையினர் பக்கம் நிற்க வேண்டும். அவர்களுடைய அரசியலமைப்புச் சட்ட உரிமைகளுக்காக நிற்க வேண்டும், அதற்காகப் போராட வேண்டும்.

ஆந்திர பிரதேசத்தில் நமக்கு ஒரு வலுவான கட்சி தேவை. …ஒரு பகுதியில் நீங்கள் நிலங்களை கைப்பற்றி விநியோகம் செய்திருக்கலாம்; அதோடு நம் வேலை முடிந்து விடுவதில்லை. ஒருவேளை அது விவசாய நிலமாக இருக்குமேயானால் அதில் பயிர் செய்வதற்கான பிரச்சனைகள் இருக்கும். ஒரு வேளை  அது குடியிருப்புப் பகுதிக்கான நிலமாக இருக்குமேயானால் குடியிருப்புப் பகுதியின் அடிப்படை வசதிகளுக்கான, வீட்டு உரிமைக்கான, குடிநீருக்கான, மின்சாரத்திற்கான தேவைகள் போன்ற பிரச்சனைகள் இருக்கும். நாம், ஒரு தலைமுறை மக்களுக்காக போராட்டங்களை நடத்தி இருந்தால், இப்போது அவர்களின் குழந்தைகளுக்காக, அடுத்த தலைமுறைக்காகப் போராட வேண்டியிருக்கும். அந்தக் குழந்தைகளின் கல்வி, சுகாதார கோரிக்கைகளுக்காகப் போராட வேண்டியிருக்கும். ஆகவே, ஒரு போராட்டத்திலிருந்து துவங்கி அடுத்த போராட்டத்திற்கு செல்வதென்பது எப்போதும் இருக்கும். எந்த ஒரு போராட்டமும் தன்னிறைவு பெற்றதாக இருக்கமுடியாது. நமது பழைய வேலைப் பகுதிகளில் புதிய பிரச்சனைகளை கண்டறிய வேண்டும். அங்கு இயக்கத்தை, செயல் துடிப்பை உருவாக்க வேண்டும். அதே வேளையில், விரிவாக்கத்திற்கும் சென்றாக வேண்டும்.

இந்த மாநாட்டை மிகவும் பின்தங்கிய பகுதியான, ஆந்திர பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டமான ராயலசீமாவில் நடத்துவதற்காக நீங்கள் தேர்ந்தெடுத்திருப்பது நல்லது. கிரிஜன்பழங்குடி பகுதி, ஏஜென்சி பகுதி என அழைக்கப்படும் மலைவாழ் மக்கள் நிறைந்த இந்தப் பகுதி சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பகுதியாகும். கார்ப்பரேட்டுகள் இந்தப் பகுதியில் நிலங்களை, சுரங்கங்களைக் கைப்பற்றி வருகிறார்கள். இந்தப் பகுதி பெரும் சுற்றுச்சூழல் சிதைவுக்கு, சமூக சிதைவுக்கு உள்ளாகி வருகிறது விசாகப்பட்டினம் எஃகு ஆலை தனியார்மயமாக்கப்படுகிறது. ஆந்திராவில் இது போன்ற பல பிரச்சனைகள் உள்ளன. இந்தப் புதிய பிரச்சனைகளை எல்லாம் நாம் கையில் எடுக்க வேண்டும்.

நமக்கு ஒன்றுபட்ட கட்சி, வலிமையான கட்சி தேவை. வேலை செய்யும் போது தவறுகள் நடப்பது இயல்பு. ஒருவர் வேலை செய்யாமல் இருந்தாரென்றால் அவர் தவறிழைக்க மாட்டார். வேலை செய்யும்போது நமக்குள் மாறுபட்ட கருத்துகள் இருக்கும். உள்ளூர்  மாறுபாடுகள் உட்பட  பல்வேறு மாறுபாடுகள் இருக்கும். மாறுபாடுகள் சம்பந்தமாக சில கோட்பாடுகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். நம்முடைய மாறுபாடுகள் எல்லாமே கட்சிக்குள், தோழர்களுக்கிடையே உள்ள மாறுபாடுகளே. அவை நம் எதிரிகளுடனான மாறுபாடுகள் அல்ல. அல்லது அவை இரண்டு எதிரி வர்க்கங்களுக்கு இடையிலான மாறுபாடுகள் அல்ல. ஒரே வர்க்கத்துக்குள்ளேயே, ஒரே கட்சிக்குள்ளேயே சில தோழர்களுக்கிடையில் ஏதாவது மாறுபாடு இருக்குமானால் அவையெல்லாம் விவாதிக்கப்பட்டு தீர்க்கப்படமுடியும் என்றே நம்புகிறேன்.

கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பது வாழ்நாள் கடமை. நாம் கட்சியில் சேரும்போது இரண்டு வருடங்களுக்கு, மூன்று வருடங்களுக்கு அல்லது அய்ந்து வருடங்களுக்கு கட்சியில் இருப்போம் என்று சேர்வதில்லை. நம் வாழ்நாள் இலக்காக கருதி கட்சியில் சேருகிறோம். கம்யூனிஸ்ட் கட்சி மூலமாக மக்களுக்கு சேவை செய்ய  நம் வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்பியே சேர்கிறோம். இப்படிப்பட்ட ஒரு வாழ்நாள் கடப்பாடு, ஏன் ஒரு குறுகிய காலத்திலானதாக மாறுகிறது? ஒட்டுமொத்தக் கட்சியும் இது பற்றி யோசிக்க வேண்டும். நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பணியாற்றக்கூடிய, ஒன்றாக போராடக்கூடிய, ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்திருக்கக் கூடிய, ஒருவருக்கொருவர் உதவக்கூடிய, ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்றுக் கொள்ளக்கூடிய, ஒவ்வொருவரும் மற்றவருடன்  ஒத்துழைக்கக் கூடிய ஒரு சூழலை, ஒரு புரிதலை ஒட்டுமொத்தக் கட்சியும் கொண்டிருக்க வேண்டும். கட்சி என்பது ஒற்றை மனிதனைப் போல செயல்பட வேண்டும். அப்படிப்பட்ட ஒற்றுமைதான் இப்போது கட்சிக்கு மிகவும் தேவையாக உள்ளது. 

நமது கட்சிக்கு அதிக அளவிலான புதியவர்கள் தேவை. புதிய தலைமுறையினர், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் தேவை. நம் கட்சிக்கு கூடுதலாக தலித்துகள், ஆதிவாசிகள் தேவை. நம் கட்சிக்கு அனைத்து சிறுபான்மை சமூகங்களிலிருந்தும், அது முஸ்லிமாக இருக்கலாம், கிறிஸ்தவர்களாக இருக்கலாம் அவர்களிடமிருந்து அதிகளவில் ஆட்கள் தேவை. கட்சி பரந்த சமூக மக்களிடம் சென்று சேர வேண்டும். நமக்கு அதிக அளவிலான தொழிலாளர், அதிக அளவிலான விவசாயிகளும் தேவை. இது விரிவாக்கத்திற்கான, செயலாற்றலுக்கான நேரம். இது ஆகப்பெரிய ஒற்றுமைக்கான, ஆகப்பெரிய போராட்டங்களுக்கான நேரம். உங்கள் மாநாடு அனைத்து வகைகளிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இன்குலாப் ஜிந்தாபாத்!

 

 

 


18 January, 2026